Thursday, July 19, 2012

கிளியும் நானும் - 5


5. கிளியின் பதில்

என்னைப் புரியவில்லை என்றரற்றும் மனிதா
நின்னைப் புரிந்தனையோ நீவந்ததே உலகில்
என்னபயன்? வாழ்ந்து இறுதியிலே போம்வரையும்
உன் வாழ்வில் துன்பங்கள் இன்பங்கள் எண்ணிப்பார்

மண்ணைப் புரிந்தனையோ மாதினைப் புரிந்தனையோ
எண்ணம் புரிந்தனையோ இரவுபகல் தான் ஏனோ
கண்ணால் காணுகின்ற காட்சி புரிந்தனையோ
விண்ணில் சுழல்கோள விந்தையும் புரிந்ததுவோ

பிறப்பும் இறப்புமதன் பெரிதாம் பயன் என்ன
உறவும் பிரிவுமதி லுள்ள துயரின்பங்கள்
மறதி மனஎண்ணம் மற்றுமுள ஞாபகமும்
அறமும்நீதியதில் அந்நியம் இவையெல்லாம்

என்னபயன் வாழ்வை இறைவன் படைத்ததெனில்
அன்னதொரு வாழ்வால் அவனுக்கு என்னபயன்
உன்னதவோர் வாழ்வாம் உயர் வாழ்வு என்றெல்லாம்
என்னபயன் இத்தரையில் இருந்துபோய் என்னபயன்?

எண்ணமே உலகாய் இருந்தும் அதன்வழியே
வண்ணக் கலவையாய் வாழ்ந்தும் இறுதியிலே
மண்ணும் எமைத்தின்ன மண்ணாக போஎன்று
கண்ணைக் குருடாக்கி காண்வாழ்வுச் சூட்சுமமென்

கண்ணில் காணாக் கனவுகளும் கற்பனையும்
எண்ணப் பிசாசாய் இருந்தெம்மை ஆளுவதும்
உண்மையிலா மாயை ஒன்றே வாழ்வென்றான
தன்மைதனைப் புரிந்தபின் தானெனைப் புரிந்திடுவாய்

வேதங்கள் விதிமுறைகள் வினைகள் கிரியைகளும்
ஆகமங்கள் வாழ்வின் அறநெறிகள் சாத்திரங்கள்
யூகங்கள் வாக்குகள் யுக்திகள் வித்தைகளும்
ஆகும் விதியுரைக்க அந்நியமாய் மாவுலகு

மாதங்கள் ஆண்டோடு மதியுரைகள் பொன்மொழிகள்
வாதங்கள் வார்த்தைகள் வாழ்வின் அறநெறிகள்
யாதும் நம்வாழ்வில் நல்வழியை போதிக்க
போதுமெனப் புரண்டு பூமி எதிர் சுற்றுவதேன்

செங்கோல் பிடித்தகரம் செய்வதும் நீதியெனச்
சிங்காசனம் குடையும் சீலமெனக் காணுவையோ
தங்கள் குடிமக்கள் தாம்வாழ எவ்வினமும்
பொங்கக் குருதி விழப் பிணமாக்கும் மற்றினமேன்

பொய்யும் புனைகதையும் புழுகும் புரட்டெழுந்து
வையம்முழுதாழும் வலிமிகுந்த காலமுமேன்
செய்யும் களவுகளும் சீரழித்துப் பெண்ணினத்தை
நையப் புடைத்தழிக்க நாடாளும் உலகமிது

தெய்வம் கண்பார்த்து சிரித்தபடி நிற்பதென்ன
பெய்யும்மழை ஒறுக்கா பூமிவளம் கொடுப்பதென்ன
வெய்யோன் குடையாள விளைபொன் கொழிப்பதென்ன
மெய்யும் அறம்நீதி மிரண்டலறி ஒடலென்ன

கொல்லும்காலமதில் கூத்தாடு மென்மனதை
நில்லும் புரிந்துகொள்ள நெஞ்சங்கள் முடியாது
கல்லும் மண் கொண்டேயிக் காற்றிலா வெளியோடி
செல்லும் பூமிக்கு சிறப்பென்ன சீரழிவைச்

செய்தவரார் ஆதிச் சிறப்பார்ந்த செந் தமிழை
உய்யும்குலம் தன்னை உலகிருந்து சுவடொழிக்க
கையிணைந்து போடும் கயமை விதிமுறைகள்;
செய்ய ஒரு பகுதி திசைமாறிக் கூடலென்ன

என்னை புரிவதென்ன இதயமிதோ காணுலகில்
நின்னை புரிந்தனையோ நிலையற்ற உலகமதில்
சொன்னவிதிமுறைகள் சுடுகாட்டில் போய்மறைய
புன்மை தனைப் புரியாப் பொழுதுவரை கிளியானும்

எண்ணம் பிழைத்திங்கே இழிந்துவிட ஆடுகிறேன்
பெண்ணைப் புகழ்ந்துபின் பேயெனவே சாடுகிறேன்
மண்ணை மாந்தர்தமை மகிழ்வென்று கூறுகிறேன்
வண்ணம் உடன்மாறி வானவில்லு மாகுகிறேன்

உலகே அலைந்தோடி உண்மை தனைச் சீரழித்து
பலமும் பணம் கொண்டார் பக்கம் உருள்கையிலே
வலமும் இடம் தெரியா வாழ்மக்கள் தவித்திருக்க
நலமும் சிதைந்தவெறும் நாடகத்து நடிகன்போல்

கண்டால் சிரிக்கின்றேன் கணம் பின்னே அழுகின்றேன்
கொண்டாட்டம் போடுகிறேன் குணம் மாறித் தவிக்கின்றேன்
மண்ணில் விதியழித்த மாந்தரினை கேட்பதற்கு
கண்ணைத் திறந்து இறை காணும்வரை பைத்தியம் நான்!

மறு கணமோ கிளியை மரத்தைக் கிளைகளதை
குறுகிய தோர் தென்னையும் குளத்தைக் குருவிகளை
கருகலிற் கண்டஇளம் காற்றைக் கடும் வெயிலை
அருகினிலே காணோம் அட என்ன மாயமிதோ ?

(முடிந்தது)

No comments:

Post a Comment