Monday, July 23, 2012

அன்பு காட்டு !


நீறுசெய் தேவிவன்மை நிர்மல மாக்கு உள்ளம்
ஊறுசெய் வாழ்வு கொண்டேன் உள்ளமோ பேய்பிடித்து
தாறுமா றென்று நஞ்சும் தலையிடை ஏறியாட்டும்
பேறுதான் கொண்ட என்னைப் பின்னரும் பேரஞ்ஞானம்
கூறியே அன்பு கொன்று குற்றமென்றாக்க செய்யா
ஆறிட முன்னே எந்தன் ஆணவம்  நீக்கிக் காப்பாய்
தேறிட ஏதும்சொல்ல தீமைகொள் பேச்சென்றாகி
மாறிடும் வினோதமென்ன மாதேவி மாற்றி வைப்பாய்


ஏனது நெஞ்சில்நீயும் இல்லெனும் சொல்லைத் தந்து
நானது என்று ஆகி நகைத்திடச் செய்தல்விட்டு
வானது உள்ளம்கொண்ட வகையினன்  ஆக எந்தன்
ஊனது உடலினோடு உள்ளமும் கொள்ளளின்றி
தேனது ஓடும்நாட்டில் தேவையின் புருசனாக்கு !
கூனியேஓடும் மந்திக் கோலமும் தந்துவாழ்வில்
நானினி என்னசெய்ய நடுவினில் ஏதுமற்று
தீனிடு என்பர்போல திகழவும் செய்தல் வேண்டா !



சாவினி காண்வரைக்குஞ் சஞ்சலம் கொள்ளவைத்து
பூவினில் நல்ல உள்ளம் புண்பட என்னைக் கொண்டு
நாவினில் வாக்கு தந்து நல்கிடு மாறு செய்து
பாவினில்  பச்சை வண்ணம் பாடிடச்செய்தலின்றி
ஓவென அழுதும் உண்மைஉள்ளமும் கெட்டுவாடி
ஏவிநீ யென்னைக் கொண்டு இயக்கிடும் வேலைதன்னை
காவிஞான் செய்யவல்ல கவிஞனாய் ஆக்கி வல்ல
தேவியே என்னிலென்றும் தென்புற அன்பு காட்டு

******

No comments:

Post a Comment