Monday, July 9, 2012

பரம்பொருளே ! வரம்தா !


திங்கள் முடிசூடும் உந்தன்தலைமீது
தங்க எழில் கங்கை வைத்தவா
சங்கும் மழுஏந்தும் உந்தன் கரங்கொண்டு
சொந்தமென் துன்பம் நீக்கிடு
மங்கும் வாழ்வழிய முன்னர் நலங்கூட்டு
மங்கை தனில்பாதி தந்தவா
செங்கண்ணாற் சிரித்துத் தேவர்பகை தீய்த்த
செய்கைபோல் துயரும் தீய்த்திடு

தங்கும் வடபூமி தாழக் குறுமுனியை
தன்னந்தனி தெற்கில் வைத்தவா
கங்கை எழுந்தோடக் காகம் வடிவாக
கண்ட ஐங்கரனின் தந்தையாய்
பங்கமாம் மனதில் பாவநிலை தாழ்ந்து
பொங்குமன்பு உயர்வாக்கிட
சங்கின் வெண்மை உளம் எங்கும் கொள்ள அனல்
செய்து என்பாவம் சுட்டிடு

எங்கும் தமிழ்காக்க, வென்றே உயர்வாக்க
எண்ணி ஆறுமலர் தொட்டிலாய்
பொங்கும் அழகோடு கந்தரூபன் உரு
பங்கு சேர்த்து லகுக்கீந்தவா
தொங்கும் சடைமாதின் தூயமலர் வாசம்
தங்கும்செயல் கூறி தீய்த்தவா
எங்கும் உனதுபெருஞ் சந்தநடம்காண
இன்பமெழும் பாவம் கொண்டிடு

மங்கும் ஒளிபோயும் மாலைஇருள்சூழும்
மந்தம்போற் துன்பம் போக்கவே
தங்க ஒளிவீசும் திங்கள் வளர் என்று
தந்து வரம் காத்த தூயவா
இங்கும் வரமீந்து இயற்கை யோடன்பு
எட்ட வழிசெய்யா நிற்பதேன்
பங்கு சரிபாதி மங்கை கொளமீதி
பாதி பலம் கொண்டதால் ஈதா?

*************************

No comments:

Post a Comment