Wednesday, July 11, 2012

தேடிப் பொருள் கண்டான்


புனையும் கவிதை ஊற்றில்லை - ஒரு
பொருளில் தோற்கின்றான்
வினையும் முனைவில் பிழையென்றே - அவன்
விழியிற் துயர் கண்டான்
தனையும் தொடரும் நிழலின்றிஅவன்
தனியே நிற்கின்றான்
உனையும் இழந்தேன் கதிகொள்ளேன்- என
இடையில் எழுகின்றான்

நினைவுச் சாலையில் நடக்கின்றான் -தன்
நிழலைதேடித்தான்
நனையும் பனியில் கிடக்கின்றான் - குளிர்
நடுவே இரவில்தான்
கனையும் எண்ணக் புரவிகளை - ஓர்
கற்பனை ரதம் பூட்டி
கனவில் ஏறி வலம் வந்தான் - அக்
காற்றில் தேடுகிறான்

வெயிலுமில்லை விரிவானில் - ஒரு
வெறுமை தெரிகிறது
பயிலுமின்பத் தமிழேடு - அது
பனியில் நனைகிறது
துயிலும்விழிகள் இமைமூடா - நீர்த்
துளிகள் உதிர்கிறது
ஒயிலாம் பொங்கும் உணர்வெல்லாம் - ஏன்
உள்ளே ஒழிகிறது

மலர்கள் தீயில் எரிகிறது - அவன்
மனதோ துடிக்கிறது
பலதும் கருகத் தெரிகிறது - அதில்
பயமும் எழுகிறது
நிலமும் நடுங்கி அதிர்கிறது - ஆ..
நீளப் பிரிகிறது
உலகம் முடிவை அணுகிறது - உடல்
உள்ளே விழுகிறது

கலங்கும் இதயம் வெடிக்கும்போல் - ஓர்
கனமும் கொள்கிறது
விலகும்கணமும் வேதனையா -  இலை
விளையும் விதிதானோ
சிலதீப்பொறிகள் சிந்தையெழ மா
சக்தி சக்தி யென்று
நலந் தா என்றே கதறுகிறான் கணம்
நிற்றே உயருகிறான்

கலங்கி உதிர்ந்து சேர்வதுபோல் அவன்
கண்முன் தீவெள்ளம்
இலங்கு மொளியிற் கதிரல்ல  அது
ஏதோ பெரிதொன்று
உலங்கு முயிரில் தெளிவாக ஓர்
உண்மை ஒளிதரவே
வலமும் இடமும் வளைந்தோடும் நிழல்
வளரக் காண்கின்றான்

அயலில் நிற்கும் ஒளிதீபம் அதில்
அழகைப்பெறுகின்றான்
புயலும் தீயும் உருமாறி - மென்
பூவை தொடும் தென்றல்
அலரும் இதழ்கள் தீயொளியில் வெகு
அழகைப் பெறக் கண்டான்
சலனம் இன்றித் தீகுளிரச் - சே
சட்டென விழிக்கின்றான்

அயலில் சத்தம் கேட்கிறது அவன்
அருகில் காண்கின்றான்
வெயிலும் நிழலும் தெரிகிறது - பெரும்
வெளியும் பசும்புல்லும்
கயலும் துள்ளும் நீரோடை - கனி
கொள்ளும் மரங் கண்டான்
வயலும் கூவும் குயிலோசை - ஆ
வாழ்வை அவன் கண்டான்

முயலொன்றோடிப் பசும்புல்லின்- நுனி
மெல்லத் தின்கிறது
மயக்கு மின்ப மலர் தூவும் - பெரு
மரங்கள் சலசலப்பு
தயங்கும் மனதில் தமிழோடிப் - பெருந்
தாகம் எடுக்கிறது
புயங்கள் நீளவிரிகிறது  - கவி
புனையப் பொருள் கண்டான்

No comments:

Post a Comment