Wednesday, July 11, 2012

மாந்தர் துயர் மாறாதா ?

        

பொன்னிழைத்த நீலவண்ணப் பட்டுவான்வி ரிப்பினூடு
போவதெங்கு நீயும் சொல்நி லாவே
முன்னிழைத்த பாவம் மென்ன  மேகமூட்ட மாய் குவிந்து
முற்றும் தங்கள் வாழ்விருண்ட போலும்
தன்னலத் திலாடி இன்பம் தானெனக்கு நீ ஒழிந்து
தொல்லை யின்றி போவென் றங்கே தள்ள
வன்மம்கொள் செய் குற்றமென்ன வாயடைத்து நிற்கவிட்டு
வாழ்வையே பந்தாடும் கோலம் காணீர்

நன்மை செய்வ ரென்று யாரை நம்பலாமோ காணும்உள்ளம்
நீலவான் எடுத்த ஆழம் அன்றோ
சொன்ன சொல் லதும்பிழைக்கும் சுற்றும் காண்ப வைமயக்கும்
சற்றேஆய்ந்து பார்க்க வேண்டு மன்றோ
தென்னைகீ ழிருந்து பாலில் தேன் கலந்து உண்டபோதும்
தீய'கள்' குடித்ததென்று சொல்லும்
தன்மையாம்  மனம்படைத்த தாகும்மாந்தர்‌ கோடிகோடி
தாங்குமிந்த பூமி கண்டு கொள்ளு

சின்னதோர்‌ தமிழ் பயின்று செல்வமும் கொழித்த எங்கள்
சீருடை நல் தேசமொன்றில் இன்றோ
நன்நெறிக் கிணங்க நீதி நல்லவர் தம்மாட்சி ஒன்று
நாளெதில்  கிடைக்குமென்று வாடி
வன்முறைக் குள்ளாகி வாடும் வாழ்வினைப் பெற்றானவர்க்கு
வானமும் வெளிப்பதென்று  கூறு
சென்மமும் எடுத்ததேனோ சீருடல் அழிப்பதேனோ
சிந்தையில் கிடக்கும் கேள்வி நூறு

துன்பமும் துயர் நிறைந்த தோல்விதான் என் றானவாழ்வில்
தூயஉள்ளம் கொண்ட தேச மக்கள்
வன்மையும் கைவாள் பிடிக்க வாயினில் பொய் ரத்த தாகம்
வாய்த்தவர் இருப்பின் வையம் மீது
என்னதான் உரைத்து நீதி எப்படிக் கரங்கள் கொண்டு
ஏங்கியும் இரந்தும் வாழ்வு இன்றி
துன்புறும் நம்சொந்தம் மண்ணில் தூய நல்லுணர்வு கொண்டு
தன்உயிர்கள் காத்து வாழ்வதெப்போ ?

*****************************

No comments:

Post a Comment