Tuesday, May 29, 2012

தேர் கொண்டு வந்தான் தேவன்


தேரில் ஏறென்றான் தேவன் - ஏதும்
தெரியாத வன்போலும் திரும்பிநான் நின்றேன்
வாரியே பூக்கொண்டு வீசி - நீயும்
வாழ்ந்தது போதும்வா வந்தேறு என்றான்
பாரங்கு என்றனன் வானில் - அங்கு
பார்த்தேன்ஓர் வெள்ளியோ பொன்னாக மின்ன
ஏதது தாரகை என்றேன் - ஆகா
இன்பமாம் மேலுல கிதுவென்று சொன்னான்

நீரூறும் கண்களைக் கொண்டு - நானும்
நெஞ்சினில் அன்பினைக் காட்டாயோ என்றால்
வேரறுத் தென்னையும் வீழ்த்தி - அவன்
வேடிக்கை செய்துமே விளையாடி நின்றான்
நோயுறு தேகமும் கொண்டு - இங்கு
நிற்கவும் ஆகாது நொந்தனே என்றால்
காயமே பொய்யடா என்று - கையும்
காட்டியவ் வானிடை ஏறுநீ என்றான்

பாரடா தோள் மீதுபாரம் - என்னில்
பாசமாய் உள்ளவர் எத்தனை காணாய்
ஊரடா முற்றிலும் அன்பே - கொண்டு
உள்ளது காணென்று உற்றதைக் கூறும்
போதிலென் னெதிர் நின்ற தேவன் - என்னைப்
பின்னும் நலிந்திடப் பண்ணியே துன்பம்
ஈரமென் றில்லாத உள்ளம் -கொண்டு
இம்சித்த வேதனை எப்படிச் சொல்வேன்

பாயில் கிடஎன்று  தள்ளி  - எனைப்
பாடாய் படுத்தியே பொல்லாப்புச் செய்தான்
தாயிலும் நல்லவ னன்றோ - நீயும்
தந்ததை கொண்டிட ஏனிந்த வம்போ
வாயில் சினம்கொண்டு சொன்னேன் அவன்
வாழ்ந்த உன் மேனியில் காதல்கொண்டாயோ
பேயிலும் இழிவான  பிறவி - இன்னும்
பேராசை கொண்டிடப் போனதேன் புத்தி

நாளொன்றில் மானிடா செத்தால் - பிணம்
நாற்றமும் வீசிட நாய் கொண்டுபோகும்
தோளிலே நாலுபேர் தூக்கி - மேனி
தீயில் எறிந்திடச் சாம்பலென்றாகும்
ஊழியோ உன்வினை தானோ - உன்
உள்ளமேன் ஏங்குது மோகத்தில் நீயோ
கேளிதை வானம்நீ வந்தால் - அங்கு
தீயாக மாறியே திகழலாம் என்றான்

சொல்வதைக் கேட்கவோ அன்றி -அது
சொர்க்கமோ நரகமோ சுத்தமாய் அறியேன்
கொல்வது என்றுதான் வந்தான் - பின்
கொள்வதற் காயவன் என்னவும் சொல்வான்
”அல்லன எண்ணுதல் வேண்டா - அட
அற்பனே நீ நிற்ப தென்னென்று கொண்டாய்
இல்லையாம் இன்னொரு நரகம் - காண்
இப்புவி தானுந்தன் சொல்லினில் நகரம்

கொள்வது எல்லாமும் துன்பம் - வானில்
கொட்டும் மழைகாணும் மின்னல்போல் இன்பம்
அள்ளிவீ சும்புயற் காற்று - அது
ஆக்கும் துயர்விடப் பெரிதாமுன் துன்பம்
கள்ளனும் காதகன் மூடன் - உயிர்
கொல்பவன் வன்காம லோலன் அநேகர்
உள்ளவர் ஊடு நீவாழும் -இந்த
உற்றுழல் வாழ்வினை இன்பமென்றாயோ

நில் இன்னும் ஓர்சொற்ப காலம் - வாழ
நெஞ்சினில் ஆசையும் கொண்டனன் என்றேன்
நல்லதென் கூற்றினைக் கேளாய் -பின்பு
நாளை யக்கூற்றுவன் கொள்ளவென் செய்வாய்
நல்லதோர் ஞாலம் செய்தீந்தேன் - அதை
நாளும் நரகமென் றாக்கிக் களித்தீர்
பொல்லாத புழுவென்று சேற்றில் - வாழும்
புத்தியுடைத்தனை போவென்று விட்டான்

என் வாழ்க்கைப் பாதையில் சில அடிகள்

*********
வானத்தில்மேடை யிட்டு வடிவத்தில் பூவிரித்து
மோனத்தில் ஓம் என்னும் மூலத்து ஓசையிட்டு
ஞானத்தைப் படைத்தவளே நானிங்கு சொல்வதுண்மை
தேனைத் துளிகளிட்டு தீம்பாவைத் தந்திடுவாய்
********************
பிறந்தேன் வளர்ந்தே னொரு பேதைக்கு மகனானேன்
அறந்தேன் எனக்கொண்டு  அழகுற என்தாய் மடியில்
திறந்தே விழிகண்டேன் திருவூராம் பூங்கொடியின்
நிறங்கொள் ஓரூரில் நிமிர்ந்து நடைகொண்டேன்

வளர்ந்தேன் வகையென்ன வளஞ்செழித்த ஊரழகில்
குளம், தேர் கோவில் சிறு குடிசை மலர்க்காடென்று
உளம்தேனுண்ணத் தனி ஊரெல்லாம் சுற்றிடுவேன்
களம்போர் எனக் காட்சி கருமைகொண்டெழ முன்னே

மலரும் மலர்த்தேனும் மயக்குமெழில் வாவியுடன்
பலரும் வழிபட்டே பயனடையும் ஆலயமாம்
குலவுமினி கல்வளைப் பிள்ளையார்கோவிலதை
நிலவுமென் வாழ்நாளில் நெஞ்சம் மறக்காது

ஆனைமுகத் தானை அன்னையவள் துதித்திருக்க
தேனைத் தேடுமொரு சில்வண்டாய் கோவிலதை
நானே சுற்றிடுவேன் நறுந்தேன் உடை பூவும்
வான்தொட்ட வரைவிரியும் வயல்வெளியும் கண்டிருப்பேன்

உச்சிவெயில் மின்ன உள்ளதொரு காட்சியெனும்
பச்சைவயல் பரப்பும் பறந்துசெலும் குருவிகளும்
இச்சை உணர்வெடுத்த ஏகாந்தச் சூழ்நிலையும்
அச்சோ அச்சச்சோ அதுமீண்டும் வாராதோ

கோவில் மணியடிக்க கோபுரத்தே தூங்குமணி
தாவிப் பிடித்தெம்பி தரைவிட்டுத் தொங்கிடவே
மேவி ஊர்முழுதும்  மெல்லப் பரவிடுமாம்
தேவஇசையும் ‘டாண்’  தேனோசை சேர்ந்தெழுமே

பூசை முடிந்தவுடன் போகும் வழிதிரும்ப
ஆசையுடன் நெல்வயலில் ஆடி அயல் திரிந்து
ஓசையெழப் பாடி ஓங்குகதிர் தலைநீவி
நேசப்பறவைகளின் நெஞ்சினித்த கூவல்களால்

காது இனித்திருக்கக் கடும் வெயிலும் திசைமாறி
போதுமெனத் தந்த பொல்லாப்பு நிறுத்துகையில்
ஏதுகவலை யவ்விளம் பிஞ்சுக்  கால்களினால்
ஊதுவிசை காற்றுக் குயர்வரம்பி லோடிடுவோம்

விரிந்தகுளம் வயலில் வீறெழுந்த தாமரைகள்
எரிந்தநிலை தீபமென இயல்பாக மலர்ந்திருக்க
சரிந்தவயற் கதிருள் சட்டென்றோர் தவளையது
இருந்தேஒரு தாவில் எம்பிக் காலூன்றி

துள்ளிநீர்க் குளம்வீழ தோன்றுமலைஅற்புதமாம்
வெள்ளி யலைவிரிய வட்டநிரை யெனமலர்ந்து
தள்ளியது தாமரையைத் தண்குமுதம் அல்லியென
உள்ள முவகையுற ஊர்வசியோ ரம்பையென

ஆடும்நீர்மேடை அழகுமலர் நாட்டியங்கள்
பாடும்சிறு குருவி பண்ணிசைக்கும் ஒருவண்டு
போடும்தவளை இடை புதுத்தாளம் பொன்வயலின்
கூடும் கதிர்நாணிக் கிளுகிளுக்கும் எழில்அழகே


செல்லுகின்ற நாட்களிடை சிலநாள் கதிரறுத்து
இல்லைப் பசுமையென இருக்கின்ற வயல் கண்டு
பொல்லுக் கிழவியுடை பொக்குவாய்ப் பல்லழகாய்
நெற்பயிர்கள் அற்றநிலை நேர்காண நெஞ்சழியும்

கொல்லும் வெயிலிடையும் குடுகுடென நடந்தோடிப்
பொல்லாக் காட்டிடையே போய்மகிழ்வு தேடிடுவோம்
நல்ல தமிழ்கேட்கவென நாவிலினி குளிர் கனியை
சொல்லால் சுடவைத்த சுந்தரனைப் போலேறி

நாவல் மரக்கிளையில் நல்லிணைந்து கீழுறைவோர்
ஆவலெழ வைத்து அருஞ் சுவையும் கண்டிடுவோம்
தாவல் முடிந்தில்லம் தகிப்பில் படுத்திருந்தால்
ஏவல்பேய் பற்றியதாய் என்அம்மை சுற்றிவைப்பாள்

ஈச்சம் காய் பழமாய்ந்து இனிப்பாய் உவர்ப்பென்றும்
கூச்சலிட்டுத் தின்றே குதித்தாடி மகிழ்வதெலாம்
காய்ச்சலெனக் காயுதே கரம்மாறி நிலமயலோன்
ஆட்சியிலே உள்ளதய்யா அன்னியமாய்ப் போய் விடுமோ?

முயலோட முயலின்பின் நானோடி கல்லிடித்து
சுயமாய் விழுந்தெழுந்து  சொரிகின்ற செந்நிறநீர்
பயமின்றி மணல் பற்றிப்  பட்டஇடம் அப்பிவிட்டு
தயங்கி நடை நொண்டி தாவிக்கால் வைத்தேக

குரங்கும் தாவிமரக் கொப்பிடையே தொங்கியெமை
இரங்கும் நிலையாகி இல்லையொரு வாலிவர்க்கு
தரங்கெட்ட இனமோ தடக்கிமண் வீழ்வரென
மரந் தாவும் மன்னவர்கள் மதமெடுத்துக் கூச்சலிட

நடந்தும் திரிந்தோடி நாள்போய் வளர்ந்தவனாய்
விடலை வயதாகி விருப்புடனே கல்விதனை
கடமை உயிர்வாழ்வுக் கானதென்று எண்ணுவதாய்
கடந்த இளவயதில் கற்றவைகள் அற்புதமாம்

இளம்பருவம் ஏடுகளில் ஏற்றறிவு கொள்வதெனில்
களம்நூ லகமென்றே கற்றிடவென் றேகிடுவோம்
அளவையுடன் கணிதமென அவர்கொள்ள என்மனது
நளவெண்பா குறுந்தொகையும் நற்றிணையும் நாடியது

கூட்டலும் கழித்தல்களும் கோணங்களும் பௌதிகமும்
நாட்டின் அரசியலும் நண்பரினம் கற்றிருக்க
பாட்டும் கவிதைகளும் பலநிறைந்த இலக்கியத்தின்
காட்சிக் கனவுகளில் கற்பனையில் நானிருந்தேன்

தமிழே தருவாயா?


தமிழோடு விளையாடித் தரநூறு கவிபாடித்
தவழ்கின்ற பெருவாழ்வு வேண்டும்
இமைமீது விழிகொண்ட உறவாகக் கணமேனும்
உனையென்றும் பிரியாமை வேண்டும்
கமழ்வாச மினிதான கனிகாணுந் தருவாக
கனம்கொண்டு இவன்சோலை யெங்கும்
திகழின்பத் தமிழான தென்றும்நற்பொலிவாகி
தினமொன்று கனிந்தாக வேண்டும்

சுவையான தெனஅன்னை தமிழோடு பயில்கின்ற
சுகமான உணர்வென்றும் வேண்டும்
அவைகூற அவையேறின் அழகென்பதென யாரும்
அதுகண்டு புகழ்கூற வேண்டும்
எவைமீதி இருந்தாலும் எதுமீறி நடந்தாலும்
உனதன்பு அதைமேவ வேண்டும்
இவைபோதும் எனவல்ல இகமீது தமிழ்போதை
எழுந்தின்ப நதிபாய வேண்டும்

குவை தங்கம் கொடிஆட்சி, குடிவாழும் ஊரென்று
எது தந்தும் பரிசாகக் கேட்டும்
அவையொன்று நிகரில்லை அரசாளத் தமிழேடும்
அதிகாரம் அதில் உண்டுபோதும்
குவிகின்ற மலர்மீது கொள்கின்ற துயில்போலும்
கலையன்னை மடிமீது சாயும்
கவினின்பக் கணம்போதும் கருதேனே பிறிதேதும்
காணென்று மனம்கூற வேண்டும்

ரவிவானில் வரும்போதி லெழுவான ஒளியாக
என்றென்றும் பிரகாசம் வேண்டும்
இரவில்வந்த நிலவாலே எழுகின்ற மனபோதை
இதனோடு இழைந்தோட வேண்டும்
சரமாலை யணியாகத் தமிழன்னை புகழேந்தி
தருகின்ற கவியாவும் என்றும்
வரமான தரவேண்டும் வளர்வொன்று தானின்றி
வழுவாத நிலைகொள்ள வேண்டும்

Friday, May 25, 2012

தமிழும் என் கவியும்
கவி என்ற தேரேறித் தமிழென்னும் உலகோடி
களிகாண மனமாகினேன்
செவி கொள்ள இனிதாகச் சிறிதேனும் பதமாக
செந்தமிழ் கவிபாடுவேன்
புவிவாழும் தமிழன்னை பொழுதேனும் மனம்கோணிப்
போகாமல் மொழி போற்றுவேன்
குவி வண்ண மலர்கொண்டு திருஅன்னை அடிபோற்றித்
தினம்தினம் துதி பாடுவேன்

கவிஎன்னும் சுவைவீணை உணர்வென்ற இழைதொட்டுக்
களிகொள்ள இசைமீட்டுவேன்
புவிமீது தமிழன்னை இருபாதம் அடிமீதில்
போயெந்தன் தலை சாத்தினேன்
குவி வானம் பொழிகின்ற மழைபோல இவன்நானும்
குளிர்கொண்ட கவி கொட்டுவேன்
செவிதானும் இனிதென்று செந்தமிழ் அன்னையவள்
சிலிர்த்தின்ப உணர்வேற்றுவேன்

பழம்தேனும்,வெல்லமுடன் பாகும் கலந்து ஒரு
பாலிட்ட மதுரசுவையில்
விழைந்தோர் கவிசெய்து வீரமகள் தேவியவள்
வேண்டுவரை ஊட்டி நிற்பேன்
குழைந்தமுது உண்டவளை கொண்டைமலர்சூட்டி
குமுத மலர்க் கால்களுக்கு
தளை சந்தமணி சிலம்பு தான்கொண்டுஎழில்கூட்டி
சாமரையும் வீசிநிற்பேன்

துள்ளியவள் ஓடிவரச் சுந்தரப் பாட்டினிலே
சொல்லாலே தாளமிட்டுத்
தெள்ளிசை தென்றலென தேகம்வருடியவள்
தாகமதைத் தீர்த்து வைப்பேன்
புள்ளினம் இசைபாடப் பூவண்டு சுதிசேர்க்கப்
பொன்மாலை இளவேனிலில்
அள்ளி ஓராயிரம் அழகான கவிசொல்லி
அழகுத்தமிழ் மகிழ்வாக்குவேன்

Thursday, May 17, 2012

முதிர்ந்தேன்!


படித்தேன் குடித்தேன் பழமாய்  சுவைத்தேன்
பழகும் விதத்தில் பூவாய்தேன்
வடித்தேன் அளித்தேன் வகையில் இன்பம்
வளர்த்தேன் அன்பில் வளைந்திட்டேன்
அடித்தேன் உடைத்தேன் அறமும் உறவும்
எனத்தான் இல்லா இளமைத்தேன்

குடித்தேன் கவலைகொள்ளா தேனோ 
குறும்பில் வாழ்வை குலைத்தேன், ஏன்

எடுத்தேன் தமிழை இனித்தேன் சொரியும்
எனத்தான் எண்ணி அளித்தேன் சொல்
விடுத்தேன் எதிலும் விளைத்தேன் அன்பை

விரித்தேன் நாளும் வழங்கித்தான்
கெடுத்தே கொள்ளா இயல்பென் கவிதை
குறைத்தேன் எனவும் குறைதோன்றா
கொடுப்பேன் கிடப்பேன் குலவும்தமிழில்
கடப்பேன் துயரம் கனியும்தேன்

இடம்தேன் தமிழின் எழில் தேன்காவென்
றுணர்ந்தேன் எதைநான் மலர்வித்தேன்
விடம்தேன் என்று வெளிவைத்தேனா
விருந்தேன் விரும்பா விளைவும் ஏன்
குடம்தேன்கொட்டக் குழவிக் கொடுக்காய்
குடைந்தே னாயின் குறைவேண்டேன்
கடந்தேன் கனலும் கடலும் குளித்தேன்
கவிதை மழையும் காணுந்தேன்


படர்ந்தேன் ஆயின் பந்தல்மீது
பிணைந்தேன் எனவே கொடியாவேன்
அடர்ந்தே மாவின் அழிகுருவிச்சை
ஆகேன் அகந்தை அகம்கொள்ளேன்
நடந்தேன் எனிலும் நல்லோர் பாதை
நடப்பேன் அன்பே நிலைகொண்டேன்
புடந்தான் இட்டோர் பொன்னாவேன் மண்
போகா இருப்பேன் பிறிதாகேன்
************


    Reply     Reply to author      Forward  

நிலவு சுட்டதோ?

நீதந்த நிலவென்ன சுடுகின்றதே - ஓ
 நீலத்து வான்மதியே - என்
நிழலென்ன தரைமீது விழவில்லையே -அது
 நெஞ்சத்தில் ஓர் சுமையே
பூ தந்த மணமென்ன எரிகின்றதே -ஒரு
  பொல்லாத வாசம் கொண்டே -இந்த
பூமியும் வானமும் சுழல்கின்றதே ஆகா
  பொழுதோபார் இருள்கின்றதே

நா தந்த பேச்சென்ன நடுவீட்டிலே ஒரு
  நாகம் போல் ஆடுவதோ
நல்லோரின் கைமீது பட்டிடவோ அதை
  நன்றென்றும் யார்சொன்னதோ
ஏதிந்த பாராமை என் இறைவா இன்னும்
  எத்தனை தான் உள்ளதோ
தீதென்ற எண்ணமோர் தன்மைகொண்டே -இதைத்
  தீர் என்று முன்னிற்குதோ

தீகொண்ட திக்கிலே தென்றல் எழின் அது
  தேகத்தைச் சுட்டிடுமோ
திரைகொண்ட ஆழியைத் தொட்டேகிடின் அது
 தண்மைகொண் டாகிடுமோ
மா தந்த காயும் கனியாகுமோ - என்ன
 மந்திரம் கூறுவதோ
மலரின்ம ணம்வீச யந்திரத்தை கொண்டு
   புதுவாசம் தூவுவதோ

தீவெந்த காட்டிடைத் தென்றல்தனும் ஏனோ
  தீஊத வீசுவதேன்
தேன் தமிழ் பேசிடும் சொற் கனியை கைகள்
  தீண்டாது காய்கொள்வதேன்
ஆவொன்று நின்றிடப் போவதில்லை கன்று
  அம்மா என்றே யழுதால்
போயன்பு கொண்டிடப் பார்ப்பதுண்டோ அல்ல
  பின்னின்று கொள்வதுண்டோ

Wednesday, May 16, 2012

யார் பக்கம் குற்றம்?

தெள்ளெனும்நீரில் கல்லை எறிந்தால்
தொலையும் பிம்பங்கள் - ஏன்
கள்ளின் நிறமும் பாலும் ஒன்றாய்
காணும் வண்ணங்கள்
உள்ளம்மீது இல்லைகுற்றம்
எழுதும்  வார்த்தைகள் அவை
கொள்ளும் உயிரைத் குறையில் என்றால்
குற்றம் யார் கையில்?

காலச் சக்கரம் உருள்கிறது சில
காட்சிகள் மாறுவது - அந்த
நீலத்து வானிடை மேகங்களாய் அவை
நீங்கிட ஒளிதெரிது
கோலத்தைப் பார்த்தேன் தோற்றியது வான்
கதிரொளி காணுமென்று - இந்த
ஞாலத்தின் ஓட்டத்தில் நடப்பது எதுவென
நாளைக்குப் புரியும்விடு

பாலத்தைப் போடுவதாகவும் உறவினுள்
பரவசம் தெரிகிறது - மனம்
ஆலத்தைக் கொண்டவர் ஆக்கினைசெய்வது
அவசிய மற்ற தொன்று
சீலத்தை ஞாலமும் கொண்டிட பின்னொரு
சோதியு மெழுந்துகொள்ளும் - அட
ஏலத்தில் கொள்கையை விட்டவர்பாடினி
எப்படியாகும் விடு

உள்ளத்தை ஆண்டவன் உண்மை விளக்கிடும்
ஓர்கணம் தெரிகிறது-  இன்ப
வெள்ளத்தைப் போலொரு வேகம் புறப்படும்
வேலைகள் நடக்கிறது
வள்ளமும் போலொன்று வாழுயிர் காத்திட
வந்தெமை சுமந்திடுமோ - அதை
தள்ளியும்  கரை வந்து சேர்வதெப்போ மனம்
தவிப்பது தெரிகிறதே

நல்லதை எண்ணிடு நடப்பதெலாமினி
நல்ல தென்றாகிவிடும் - இனி
செல்வது நேர் நீ சென்றிடு பாதைகள்
சொர்க்கமென் றாகிவிடும்
அல்லது போய் விட ஆதவனும் பார்
அடிவான் கிழக்கிலெழும் - இனி
வல்லதென எம் வாழ்வுகிடைத்தொரு
வானம் கையில்வரும்

சின்ன ஆசை


பிறந்த பின்பு இருந்த வாழ்வு பெரிய கனவது - இன்று
மறந்து போன தெனிலும் காண மனது விழையுது
கறந்த பாலைக் காய்ச்சி வெல்லம் கலந்த பின்பது - ஆவின்
பிறந்த மடியில் ஏறு என்கில் போகுமோ அது?

வளர்ந்த வாழ்வில் வகைகள் நூறு வந்து போகுது - மனது
குழந்தை கண்ட உலகம்மாறிக் கொள்ள விரும்புது
இழந்த நாட்கள் திரும்பக் காண இதயம் ஏங்குது - நல்ல
பழம் கனிந்து வீழ்ந்த பின்பு கிளைக்கு ஏங்குது

எழுந்து மீண்டும் பறக்க விரும்பும் இளைத்த பறவையாய் -இன்று
ஒதுங்கி வாழும்போதும் வந்த உள்ளம் தீண்டுது
அழுங்கு கொண்ட பிடியென்றாக அற்றை நாளதின் -எண்ணம்
விழுங்கி யெங்கள் உணர்வில் மூச்சை விரையவைக்குது

செய்த தவறும் திருத்தி வாழ சிந்தை கொள்ளுது ஆயின்
சேர்ந்து போன ஆண்டு வயதை  தின்றுபோனது
நேர்ந்த துன்பம் நினைவில் வந்து போதும் என்குது .தெளிந்த
நீர்க்குளத்தில் எழுதி வைத்த நிகழ்ச்சி நிரலிது
*****************************

தெரியவில்லை புரியவில்லை


தெத்தத் தெத்தத் தெரிதெரி தெரிதெரி
தெரியவேதெரியாது
எத்தெத் திசைதனில் இருளும் விடியும்
எதுவுமே தெரியாது
தத்தத் தருதரு தருதரு தரணியில்
தருவது எவர் பாடு
தலைகால் புரியா ஆடும் உயிர்கள்
தவறிடும் நிலைகூறு

சித்தம் மறுகிச் சிதைவுறும் மனதும்
சேர்வது எதனூடு
சத்தம்குன்றிச் சலனமும் அற்றே
சரிவதின் நிழலூடு
உத்தம நிலையில் உயிரின் கீதம்
உடைபடும் நிலையாது
அத்தம் கொள்ளும் அறிவின் மந்தம்
அனைத்தும் அதனூடு

சுற்றுசூழல் எதுவும் காணச்
சோர்வுறும் நிலையேது
அற்றும் வாழ்வில் அந்தம் என்னில்
அதனின் பொருள் ஈது
முற்றும் போனால் முடிவின் எல்லை
முன்வரும் போலுணர்வு
கற்கள் வைத்த பாதையின் முடிவை
காணும் நிலைப்பாடு

சொற்கள் கூறும் மனதில் வெறுமை
தோன்றுவ தெதனூடு
சற்றும் குறையா விதியும் உடலை
சித்திர வதைசெய்து
நிற்கும் போது கற்பனை என்ன
நினவெழும் ஒருகாடு
விற்றல் வாங்கும் உலகும் ஏனோ
வினைகள் புறப்பாடு

என்ன இன்னும் இருந்தாய் போதும்
எழுநட எனும்போது
பின்னும்வார்த்தை பேசும்பொருளும்
பிதற்றிடும் நிலைப்பாடு
மின்னும் உயிரும் மேலா கீழா
மயங்கிடும் நினைவோடு
இன்னுமின்னும் எகிறும் வார்த்தை
இதைவிடப் பொருளேது

தெள்ளெனும்நீரில் கல்லை எறிந்தால்
தொலையும் பிம்பங்கள்;
கள்ளின் நிறமும் பாலும் ஒன்றாய்
காணும் மாயைகள்
உள்ளம்மீது இல்லைக் குற்றம்
எழுதும்  வார்த்தைகள்
தள்ளும் போது மலையில் உருளத்
தலைகீழ் தெரியும் கொள்


காலச் சக்கரம் உருளும் போது
காட்சிகள் மாறுவதும்
நீலக் கருமை  மேகம் மறைத்து
நிற்கும் நிலைமாறி
கோலம் மாற்றம் கொண்டே விண்ணின்
கோடி ஒளிதெரியும்
ஞால வாழ்வின் முடிவும்காண
நாளை புரிந்துவிடும்!

தமிழின் சுவை


 

எண்ணக் கடலிடை மின்னலடிக்குது
எத்தனை மின்பொறிகள் -அவை
எண்ண மனக்கடல் வந்து விழுகுது
இன்ப மணித் துகள்கள்
கண்ணைப் பறித்திட வீழும்பொறிகளும்
கற்பனை சொல்வளங்கள் - அதை
வண்ணமகள் தமிழன்னை அணிகொள்ள
மின்னிடும்பொன்னொளிகள்

செந்தமிழா மிந்த செம்மொழித் தோட்டத்தில்
எத்தனை வாசமலர் -அவை
எந்தநிறத்தொடும் மஞ்சள் சிவப்பென
எண்ணிச்சுகம் தருங்கள்
சந்தமுடன் கவிசொல்லிப் பழகிட
சிந்தனை கொள்வளங்கள் -அவை
எந்தவிதமென வாயினும் இன்பத்தின்
எல்லை யிலே ஒருகல்

விந்தை குளத்தினில் செந்தமிழ்தாமரை
வீறுகொண்டே சிரிக்கும் - எங்கள்
சிந்தையிலே நல்ல கிண்கிணிநாதமும்
சேரக் கிளுகிளுக்கும்
சந்தமுடன் கவி சிந்திடச் சிந்திட
சின்ன இதழ்விரியும் - இதை
எந்த மனமதும் கண்டுமலர்ந்திட
இன்பத்தமிழ் சொரியும்

இன்பத்தமிழ் அது ஈழநிலத்தினில்
எண்ணத்தில் செய்வலிகள்- தினம்
இன்னும்தமிழிசை கொண்டமனங்களில்
ஏற்றும் பெருங் கிலிகள்
சொன்னதென்ன தமிழ் சொல்வதும் குற்றமோ
செய்தவர் உயிர்கள்- விட
என்ன பிழை தமிழ் சொல்லப்பயங்கொண்டு
இன்னலில் வாழ்ந்து கெட

சினம் விடு!


சுந்தரத் தமிழ்கொடுத்த சீரெடுத்து வானிலே
அந்தரத்தி லாடுதுள்ளம்  ஆனதென்ன வாழ்விலே
சிந்தனைக் குடம் வெடித்து  சீறும் நீரினூடிலே
வந்துமென் கவிக்குழந்தை வாழ்வுகொள்ளக் காணீரோ

சொந்தமோ சிவந்தரத்தம் சூடளிக்கும் யாக்கையில்
எந்திரம் எடுத்த உள்ளம் என்றி ருப்பின் ஆனதோ
மந்திரப் பொடிஉதிர்த்து மாயமென்ன செய்யவோ
இந்தலோக வாழ்விலேது இன்பம் பொய்த்த லாகுமோ

சந்தியிற் சிரிக்கும்வாழ்வில் சிந்தனை பொறித்திடா
விந்தைதூண் நிறுத்தி அன்புவீட்டில் கல்லடுக்குவோம்
சந்தோசக் கதிர்எறிக்கு மின்பச் சேற்றின் பங்கயம்
அந்திவா னெழுந்த சந்திர னல்லியென்ப தாகுவோம்

கர்வமோ டெழுத்து வாளைக் கைசுழற்றி ருத்திரன்
பர்வதச் சிவன்சினந்து  பண்ணுகின்ற நாட்டியம்
தர்மமென் றெழுந்துநாமும் தக்கதோமென் றாடிடா
மர்மவானைச் சுற்றும்பந்தில் மானிடத்தைக் காணுவோம்


*********************

உள்ளத்தில் உயர்ந்தவர்
ஒளியோ விழியோ நிலவோ சுடரோ
.  உதயச் சூரியனோ
நெளியும் அலைகள் நீந்தும்கடலின்
.  நிகரோ நெடுமலையோ
உளியோ பொழிவோ உருவில்சிலைதான்
.  உருவாக்கு மிவரோ
தெளிவோ அழகோ திரையிற் கலையைத்
.  தீட்டும் ஓவியனோ!

மழையோ முகிலோ பொழிவான் புனலாய்
.  பூமிக்கோர் வரமோ
தழையோ கொடியோ பயிரோ மனமும்
.  தளிரின் பசுமையதோ
களையோ களையும் கையோ பயிரின்
.  காவல் தெய்வமதோ
விளைவோ இயல்பாய் வேண்டும் அன்பை
.  வழங்குஞ் சுரபியென்றோ!

எழவோ விழவோ அழவோ தழுவும்
.  அன்னைக் கிணையிவரோ
நிழலோ நினைவோ நெகிழும் நெஞ்சில்
.  நிகழும் கனவிதுவோ
தழலோ அனலோ தருமம் பிழையென்
.  தகிக்கும் சூரியனோ
குழலோ இசையோ குயிலோ  கீதம்
.  கொள்ளப் பெருமையன்றோ

Tuesday, May 15, 2012

மௌனம் , அமைதி, ஞானம்


மௌனம் அதிசுக ராகம் அதுவொரு
மந்திரம் மனதின்சு கந்தம்
மௌனம் உள்மதி ரூபம் இறையின்சன்
மானம் தூயநல் மார்க்கம்
மௌனம் அகமிடை தியானம் இருளது
மாற்றும் இறைமையைக் கூட்டும்
மௌனம் ஆயுத மாகும் நலிவுறு
மனதை தைரிய மேற்றும்


அமைதி அலைகடல் தூக்கம் அகமிடை  
ஆற்றல் தனைதினம் தோற்றும்
அமைதி அநுபவ இன்பம் தனிமையின்
ஆக்கம் புதுசுகம் சேர்க்கும்
அமைதி அழகினைக் கூட்டும் அதிபகை
ஓட்டும் உயர் சுகம் காட்டும்
அமைதி பெருகிட ஆள்மை யுடன்மன
அறியா மையின்முடி வாகும்.


நிசப்தம்  நினைவெழ நீசம் மடிந்திடும்
நீக்கும் கறை சுவை சேர்க்கும்
நிசப்தம் நினைவுடல் போர்க்கும் நிம்மதி
நிகழ்வில் நேர்கொளும் பார்வை
நிசப்தம் ஊற்றிடும் தேனை உலகினில்
நிலவும் இனிமையை காக்கும்
நிசப்தம் காற்றின்சங் கீதம் இசைப்பதும்
நிகரில் பிரபஞ்ச தோற்றம்


ஞானம் பெரிதெனக் காணும் உளமதும்
ஞாலம் மிடை உயர்வாகும்
ஞானம் அறிவிலை யாகும் மனதெழு
ரோகம் போக்குங் கஷாயம்
ஞானம் இதுவரை காணா துயருடை
நீளும் வானெழு மேகம்
யானும் இருந்தனன் போதும் உலகினை
ஆளும் தீயெனைக் காப்பாய் !


*****************

Monday, May 7, 2012

வீணில் பகைத்தேன்- தலைவியின் ஏக்கம்

கண்ணில் பெருங்கனவு தங்கமே தங்கம்
கண்டுமனங் களித்திருந்தேன் தங்கமே தங்கம்
எண்ணி மனத் திடையே தங்கமே தங்கம்
ஏதும்பிழை செய்தேனோடி தங்கமே தங்கம்
முன்ன ரிரிந்தபகை தங்கமே தங்கம்
முற்று மழிந்ததோடி தங்கமே தங்கம்
என்னைப் புரிந்துகொள்ள என்ன உரைத்தும்
ஏனோ தெரியாரடி தங்கமே தங்கம்

மெல்ல முகம் மறைத்த முன்னிருள் எல்லாம்
மேகமென ஓடியதோ தங்கமே தங்கம்
சொல்லி உரைத்தகதை தங்கமே தங்கம்
சொர்க்கமென்று ஆகவில்லை தங்கமே தங்கம்
பொல்லாத பூமியடி புன்னகை செய்தால்
பொய்யி தென்று பேசுதடி தங்கமே தங்கம்
மெல்ல நடப்பதென்ன மேதினி தன்னில்
மர்மா யிருக்குதடி தங்கமே தங்கம்

பொய்யை நினைத்தில்லை பேதையின்மனம்
பூட்டியும் மறைக்கவில்லை போதிலெதையும்
கையை விரித்தபின்பும் தங்கமே தங்கம்
காணுவது பொய்மை என்றார் ஏனடி இன்னும்?
செய்யத் தெரிந்ததில்லை சொல்லடி தங்கம்
சேர்த்து வைத்தேதுமில்லை சிந்தையில் எங்கும்
உய்யநினைத்து இல்லம் ஓங்க விழைந்தேன்
ஒன்றும் நடக்கவில்லை தங்கமே தங்கம்

நானும் அவரிடத்தில் தங்கமே தங்கம்
நாணும் வகை செய்தேனோடி தங்கமே தங்கம்
வானில் இருக்கும் ஒளி வெய்யவன் கண்ணை
வந்தமுகில் மறைத்திடலாம் தங்கமே தங்கம்
மாண்புதனை மாசுசெய்ய மனம் நினைத்தால்
மாண்டு விடநேருமடி தங்கமே தங்கம்
வீணில்சுடர் பகைத்து வெய்யிலொறுத்தால்
வையம்பிழைக்குமோடி தங்கமே தங்கம்

கவிதைக்குப் பொய்யழகு

கலையாம் மலர்கொள் சோலைகளில் - இலை
காற்றில் சலசலக்கும்
கவிதை பூக்கும் மனச்சோலை - அதில்
காட்சி சிலுசிலுக்கும்
வலையில் மீனும் சேர்ந்தாலே - அதன்
வாழ்வோ முடிந்துவிடும்
வாழ்வில் துன்பம் கொண்டாலோ - உளம்
வேதனை இசைபடிக்கும்

நிலையிக் கணமோ நிலவதனும் - ஒளி
நெருப்பாய் சுட்டெரிக்கும்
நீர்கொள் சுனையில் நிற்கும் பூ - அதன்
நிலையும் எழில்போகும்
சிலையைக் காணும் கண்கள் தான் - உளம்
சேர்ந்தே கற்பனையும்
அலையாய் எழும்போ தின்பந்தான் - அது
இருந்தால் அழகாகும்

கற்பனைக் கோட்டை இளவரசி - தமிழ்
கூறும் கவிதைகளாம்
அற்புத மரபாம் அணிகலன்கள் - அணிந்
தழகில் ஜொலித்திருப்பாள்
சொற்சுவை தேனுடன் செங்கரும்பாய் - தமிழ்
சேர்ந்தே பருகிடுவாள்
முற்றிலு மினிமை கொண்டிடுவாள் - தமிழ்
முக்கனிச் சாறுண்பாள்

சுந்தர வானின் வெண்மதியும் - அங்கு
சொட்டும் நிலவொளியாம்
மந்தநல் மாருதம் வீசிடவும் - அங்கு
மலர்கள் சிரித்திருக்கும்
செந்தமிழ் மாலைகள் சரம் தூங்கும் - ஒர்
சிலிர்ப்பை தரும் கானம்
வந்து எம்காதினில் தேன்வார்க்கும் - ஒரு
வசந்தம் மோகமிடும்

உணர்வுகள் தீட்டும் ஓவியனே - ஒரு
ஏழைக் கவிஞன் காண்
கணமே கிளரும் நினைவுகளில் - பல
கற்பனை வளம் சேர்ப்பான்
மணம்கொள் சிறிதோர் மலரொன்று- அவன்
முன்னே தெரிகிறது
வணங்கிக் கைகொள் தூரிகையால் - அவன்
வண்ணம் தீட்டுகிறான்

மலரின் இதழ்கள் செழுமையிலை - அதில்
மதுகொள் வண்டில்லை
அலர்ந்தே தெரியும் இதழ்கள்தாம் - அதில்
ஐந்தில் ஒன்றில்லை
உலரும் வண்ணம் நீர்குழைத்து - அவன்
எழுதும் போதினிலோ
பலதும் கற்பனை வளம்சேர்த்தான்- அதில்
புதிதாய் எழில் செய்தான்

செழித்துப் பெருத்த இதழ் கண்டான் - அதில்
சிந்தத் தேன் கண்டான்
வழியும் பனிநீர் துளியிருக்க - சுழல்
வண்டை மனம்கொண்டான்
நெளித்து வளையும் இதழில் தேன் - அது
நிரம்பித் துளிசிந்த
குளித்தே அழகில் கொள் செழுமை - மனம்
கொள்ளை கொண்டதுகாண்

கண்டோர் காட்சி ஓவியமாய்க் - கலை
காணும் தூரிகையால்
வேண்டுமென்றெ வண்ணங்கள் - பல
விரும்பிச் சேர்கின்றான்
தூண்டும் உணர்வை கொள்வதற்கு- அவன்
செழுமை செழுமையென
மீண்டும்மஞ்சள் பச்சை யெனத் - தொட
மிகையாய் வண்ணங்கள்

அழகுகாட்சி தெரிகிறது - அதில்
ஆகா எனவியந்து
பழகும் மாந்தர் வியந்திடினும் - அவர்
பார்க்கும் மலரெங்கும்
சுழலும் புவியில் உண்டோசொல் - அச்
சுந்தரம் பொய்யென்பேன்
நிழலாய் காணும் மெய்யின்பொய் - அவன்
நினைவின் பொய்யின் மெய்

வளம் தாராயோ (துதி)

வெண்பனி தூறலின் விதமென
நெஞ்சும் விழலின்றி
வீறுநினைவெழு விதமென
நடையும் விளையாயோ
புண்ணொடுசீழும் புரையுடை
நீரும் புறங்கூறும்
புன்மை பயம்கொள் பிணியுறு
வாழ்வும் வேண்டாமே

கண்ணில் விழிப்புடன் கனலுறு
விடியற் கதிரொளியின்
காணும் வெளிச்சமென் றன்புடை
வளமும் தாராயோ
உண்மை கனிந்தொரு இயல்பொடு
உள்ளம் உயர்மேவ
ஓர்மை கொடுத்துயிர் உலகிடை
வாழச் செய்யாயோ

துள்ளும் துதித்திடத் துன்பமனம்
விடத் தொலைவாகும்
தொல்லை யகன்றிடத் தொகையென
மகிழ்வும் தருவாயோ
கிள்ளி முறுக்கியே கேளழு இன்பக்
காண் சுகமும்
கொள்ளும் மனக்கிடை கொடிதெனும்
நோயைப்போக்காயோ

உள்ளி மனத்தெடு உயர்வுடை
வாழ்வும் ஒளிபொங்கும்
உத்தம மானதென் றெக்கணம்
போற்றிடும் இயல்பாக்கி
தெள்ளெனும் ஓடைதிகழ் புன
லென்னத் தன்மையுறும்
தென்பொடு நல்லுள முடையொரு
விளைவைத் தாராயோ

தகவுறு நெஞ்சும் தணிவுறு
சினமும் தாழ்மையுடன்
அக மொருஇன்பம் அணிகொள
வரமும் அருள்வாயே
புக மனதிடையே புரிவுட
னெதையும் பொறுத்தாள
முகமதை மூடும் மெதுவெனும்
இருளும் மாற்றிவிடு

மிகமன உறுதி மிதமுடன்
திறமை மகிழ்ந்தாடும்
சுகமெனும் உணர்வும் சுடுவெயி
லெனவே தீமைதனை
அகலென விலகும் அதிசிறந்
துணரும் ஆற்றலதும்
தகமையும் தந்து தரையினில்
வாழத் தா வரமே!