Sunday, September 30, 2012

கூவாத குயில்!

(மனதில் சிறுகவலை! கவிதை எழுத உள்ளம் மறுக்கிறது. அந்த உள்ளே கூவும் குயிலை நோக்கி)

கூவிக் களித்திடும் கோகிலமே உனைக்
கூட்டி லடைத்தவர் யார்
ஆவியிழந்தவன் போற்துடித்தேன் துயர்
ஆகிடச் செய்தவர் யார்
நாவிலிருக் கும்நற் தேன்மொழியை தினம்
நீயும் தர மகிழ்ந்தேன்
ஈவிரக்கம் அறியார் எவர்தான் உன்னை
இன்னல் செய்தாருளதோ

காவிவரும் இசைத் தென்றல்நிதம் இன்றோ
காணு மினிமை யில்லை
மேவி உலகினில் கேட்குமொலி  இன்று
மிச்சமெதுவு மில்லை
பா விதுவோ நறும் பூமலர்வோ எனப்
பார்த்து களித்திருந்தேன்
நாவினோத மொழி நல்கவில்லை ஏது
நாளில் நடந்ததென்ன?

தூவிக் களித்திடும் பூக்களுன்மேல் மரம்
தூவ மறுத்ததுவோ
தாவித் திரிந்திடும் மந்திகளும் கண்டு
தம்முள் நகைத்தனவோ
ஏவிவிட்டே வரும் அம்பென உள்ளமும்
ஏதும் துயர் பட்டதோ
கேவியழும் வகை திண்மை குலைந்திடக்
கூவலை ஏன்மறந்தாய்

மாவிலிருந் திளங்காலை யிற்கூவிட
மா சுகம் கொண்டிருந்தேன்
பூவிலிருந்த மதுவிது வோவென
புத்தின்பம் கொண்டிருந்தேன்
கூவுமிளங்குரல் வேண்டியே மாமரக்
கூடலை நோக்கிநின்றேன்
காவிப் பெருந்துன்பம் கொண்டனையோ
எனக் காணத் துடிப்பிலுள்ளேன்

நீதியில்லை மலர் நித்தம் மலர்ந்திடும்
நின்றிடப் பார்த்ததில்லை
பாதியிலே வருஞ்சூரியனும் விட்டுப்
பாதை விலகவில்லை
ஏதிளங் காற்றுக்கும் என்னநடப்பினும்
இல்லை யென்றாவதில்லை
வா தினம் கூவுங் குயிலே மறந்தொரு
காலமிருப்ப துண்டோ?

Saturday, September 29, 2012

அறம் சொல்ல வருவீர்!

முல்லைக் கொடிவாழத் தேர்கொடுத்த மன்னா
மீண்டும் பிறந்து வந்தே - இங்கே
கல்லில் கடிதாம் மனங்களுண்டு மென்மை
கற்றுத் தெளிய வைப்பீர் -நல்ல
சொல்லைப் புறந்தள்ளிப் பொய்யுரைத்துப் பல
செய்கையில் வஞ்சங்கொண்டும் - இங்கே
அல்லுற வைத்து ஆள்பவர்க்கோர் என்ன
அன்பென் றுணர்த்திடுவீர்

நெல்வளர் நீர்கொள்ளு நீள்வரம்போங்கியே
நல்வளம் கொள்ளுமென்றே -சிறு
சொல்லில் குடிவாழக் கோமகன் வாழுவன்
கொள்ளென்ற ஔவைப்பாட்டி - இங்கு
நல்ல அறநெறி குன்றியது வந்து
நாடு நலம் பெறவும் - சொல்லில்
அல்லுற மக்கள் ஆளும் மன்னர்தம்மின்
ஆசைக்கு எல்லையிடு

எல்லை மணியடித் தென்மகன் கொன்றனை 
ஏந்தலே என்றழுது - ஒரு
நல்லபசுக் கொண்ட வேதனையை கொண்டு
நீதி வகுத்தவரே -இங்கே
எல்லை யில்லாதுயிர் கொல்வது வேலையென்
றெத்தனை பேர்களுள்ளார் - இவர்
புல்லையுண்ணும் பசு அல்ல மனிதர்கள்
புத்தி உரைத்துவிடும்

நெல்லிக்கனிகொண்டு நீடுவாழவென
நல்வழி கொன்றைவேந்தன் -இவை
சொல்லிய பாட்டியாம் ஔவையிடம் தந்து
செந்தமிழ் வாழவைத்தார் - இந்த
வல்ல அதியமான் கொண்ட தமிழன்பை
வாருக்கள் தீங்கிழைப்போர்  - அவர்
நல்ல தமிழ்மீது அன்புகொள்ளக் காட்டி
நானிலம் மாற்றிடுவோம்

தொல்லை யிழைப்பவர் தொன்மைத் தமிழினைத்
தூய தெங்கள் வளத்தை - அது
இல்லையென தாக்கி முற்று மழித்திடும்
இற்றைப் பொழுதினிலே - வளர்
நெல்லுக் கிடையினில் நீசக் களைகளை
நின்று விளைத்திடுவோர் - தமை
இல்லை என்றாக்குவோம் எம்வழிகாட்டிய
அன்புடைத் தெய்வங்களே

வல்லதிறம் கொண்டீர் வாழ்வின் புன்மைகளை
வானின் றழித்திடுங்கள் - மன
அல்லதெனும் எண்ணம், கொள்கை யுடையோரை
அன்பு வழிக்கெடுங்கள்
சொல்லிக் கொடுங்கள் தெரிந்திடுவர் விட்டுத்
தன்சுகந் தான் பெரிதாய் - உள்ள
கல்லின் மனங்கொண்ட இவ்வுலகோரன்பு
காண ஒளிகொடுங்கள்!

Wednesday, September 26, 2012

அன்னிய மண்

ஏரிக் கரையுலவும் இங்கிலீசுக் காற்றினிலே
ஏபீசீப் பாட்டுக் கேட்குது
வேரில் நிமிர்ந்தமரம் வெள்ளை நிறப் பஞ்சுகளை
வீசிவருங் காற்றில் தள்ளுது
மாரிமழை உறைந்து மல்லிகைப்பூ போற்பனியை
மண்,மரத்தில் கொட்டக்காணுது
வாரி இறைத்தபனி வந்ததோ பா லாறு வென
வழிமுழுதும் வெண்மை கொள்ளுது

நீரில்மிதந்த கயல் நீலவிழி போற்துடித்து
நீந்தும் பனிக் குள்நடுங்குது
சேரில் சிறந்ததெனச் சின்னஞ்சிறு புள்ளினங்கள்
செல்லமாகக் கொஞ்சிப்பேசுது
ஊரிமணற் கரையில் ஓங்கியெழும் ஆழியலை
ஓவென் றெழுந்  துள்ளிவீழுது
பாரில் வளங்கொழித்த பாடெனவே வாழ்விருந்தும்
பறிகொடுத்த துயரெடுக்குது

ஊரில்சிரிக்கும் நிலா ஓடும்முகில் பின்னிருந்தே
எட்டிப்பார்த்து நாணங் கொண்டது
நேரில்தெரியுதொன்று நின்றவளின் தங்கையிதோ
நாணம்விட்டு வானில்காயுது
மேரி, சோ சாரி யென மாரிகால ஈசல்களாய்
மனிதஇனம் முணுமுணுக்குது
தூரில்ஒர் பாம்பிருந்து சீறியதாய் செல்லுமிடம்
தஸ்ப்புஷ் சென்ற பேச்சுகேட்குது

வாரியடித்த கொடும் வெய்யில் பட்ட தால்வயலில்
வைக்கோல் சுட்டுப் பியர்மணக்குது
கூரில் உயர்ந்த பெருஞ் சிலுவையினை சுமந்ததிருக்
கோவில்மணிஒசை கேட்குது
தேரின் அசைவுமிலைத் தென்றலிலைத் திங்களிலைத்
தேவதைகள் ஆடிச் செல்லுது
ஊரின் வயற்கரையில் ஓடிநடை கொண்டவளை
உள்ளமெண்ணி ஒத்துப்பார்க்குது

தோலைஉரித்ததெனத்  தோன்றுவரின் முன்னிலையில்
தேகம்சற்றுக் கூனிநிற்குது
ஆலை பெருந்தோட்ட வேலைஉழைத் துண்டிருந்தும்
அவமான உணர்வெடுக்குது
சாலை தெருக்களிலும் பந்தடிக்கும்,பிள்ளைகளும்
சரளமாயிங் லீசுபேசுது
நாலை நடந்துமிந்த நானிலத்தில் கற்றுவந்தும்
நாமொழியைக் விட்டுத்தள்ளுது

காலை விடிந்தவுடன் கண்நிறைந்த கதிரெழுந்தும்
காணுமிந்த வாழ்விருண்டது
சோலைமலர் பொலிந்தும் சுந்தரமென் வாசமில்லை
செண்டின் மணம் முந்தி வீசுது
காலை மிதித்து நடை ,கன்னித்தமிழ் சொல்லுரைத்துக்
கர்வத்தோடு நின்றமண்ணது
மூலை மடங்கியொரு மூச்சுவிட இன்னலுற்றே
மேதினியில் வாழும்வாழ்விது

Tuesday, September 25, 2012

கண்ணிழந்தோம் காத்திருப்போம்

காணக் கண்ணிழந்தோம் காலிழந்தோம் கையிழந்தோம்
நாணச் சொல்லிழந்தோம் நாடிழந்தோம் நல்லவரைப்
பேணப் பலமிழந்தோம் பேசுமொரு துணிவிழந்தோம்
கோணல் நிலை கொண்டோம் கொண்டவிதி எதனாலே?

வாழக் கதியிழந்தோம் வாழும் மனை வீடிழந்தோம்
கூழைக் குடித்த பசி கொண்டபாய் துயில் விட்டோம்
தாழக் குழிவிழுந்தோம் தலமுடியும் தரமிழந்தோம்
பாழுங் கிணற்றுள்ளே பாய்ந்தவராய்  பார்த்தழுதோம்

ஆடக் காலிழந்தோம் ஆறோடும்விழி சொரிந்தோம்
தேடத் துணிவிழந்தோம் தேடிவழி நாம்தொலைந்தோம்
பாடப் பொருளிழந்தோம் பாடுங்குரல் கெட்டழுதோம்
மாடப் பெருமனைகள் மாசபைகள் தாமிழந்தோம்

ஓடி நிலம் வீழ்ந்தோம்  உயர்விழந்தோம் உரிமையுடன்
வாடிகலங்குஎன வாய்த்த சுகம் வனப்பிழந்தோம்
நாடி யெம்கரம்நீட்ட நாடேதும் காக்குமென்று
வாடிக்கருகி விழி வழிபார்த்து வாழ்விழந்தோம்

ஓடிப் பிரிந்தழுதோம் உற்றவர்கள் உடலெரித்தோம்
பாடிப் பழக்கியநற் பண்புடையோர் பற்றிழந்தோம்
தேடித் திரட்டியதோர் செல்வமெலாம் தொலைத்துவிழி
மூடித் துயில்வதற்கும்  மீறி நிலை கெட்டழுதோம்

ஆணைப் பலர்இழந்தோம் அண்டியவர் துணையிழந்தோம்
வீணை குரலிழந்தோம் வெய்யில்பட்ட  புழுவாகி
தூணைப் பெருந் தமிழின்  சுகத்தை இழந்தும் நாம்
ஆணையிடும் விதியின் அன்புக்காய் காத்திருந்தோம்


Friday, September 21, 2012

உள்ளம் கொள்ளை கொண்டது !


மென்மலர்கள்  தூங்கும்போது மின்னல்வெட்டுது - மழை
மேகம்வந்து சோவெனவே தூறிக்கொட்டுது
புன்னகையில் காணும்மனம் பொங்கி முட்டுது -ஆழி
போகும் ஆறுபோலப் பொங்கி மண்ணைத் தொட்டது
என்நினைவில் என்னவந்து மெல்லத் தட்டுது - எண்ணம்
எத்தனையோ காலம்பின்னென் றென்னைத் தள்ளுது
அன்னைகையில் தூங்கியெழும் ஆசைபொங்குது - அவள்
அள்ளி யென்னைக் கட்டிக்கொஞ்சும் பாசம் வேண்டுது

இன்னி சைக்கும் தெய்வ ராகம் இச்சைகூட்டுது - கோவில்
ஏற்றும் தீபத்தோடு காட்சி  உள்ளே தோன்றுது
சின்னக்குருவி குஞ்சின் கொஞ்சல் கிளையில் கேட்குது - அன்று
சேர்ந்துநின்ற கோழி, குஞ்சின் மென்மை எண்ணுது
பின்னி வைத்தகூந்தல் வண்ணம் மேகம் பூசுது - போகப்
பின்னிருந்து மின்னித்தார கைகண் காட்டுது
அன்னம்  ஓடைநீரில் நீந்த லாகவெண்ணிலா - காண
அன்னை கையில் தந்த அன்ன கவளம் தோன்றுது

தென்னை பின் னிருந்து திங்கள் தேய்ந்து காயுது - அது
தென்றலுக்குக் கண்சிமிட்டித் தேனை வார்க்குது
முன்னிருந்த கோலமென்னைக் கண்டதாமது - இன்று
மேனியெங்கும் ஞாபகத்தை ஊற்றிவேகுது
வன்மையென்று வாசல்வந்த வாழ்வின் எல்லையும் - அன்று
வானிருந்து கண்டவெண்ணி லாவின் கண்ணிது
என்ன வாழ்வு இன்பமோ என்றென்னைக் கேட்குது - என்றும்
இல்லமில்லமாக வந்து  எட்டிப் பார்த்தது


சில்லென்றூதி ஓடுமிளங் காற்றில் சேர்ந்ததாய் - விதி
செல்லென் றென்னை தள்ளிச் சேற்றில் வீழ்த்த நின்றது
இல்லையென்று போனதென்ன ஏனோ என்குது - வாழ்வில்
இருந்திருக்க வேண்டுமென்று  தீயை மூட்டுது
கல்லெடுத்து என்திசைக்குக் காற்றில் போட்டது - அது
காலடியில் பூக்களாக்கிக் காலம் வென்றது
நல்லதென்று கொள்ளும் வாழ்வில் நாலும்செய்தது - அங்கு
நன்மை யென்று சக்திரூப  நாதம் கேட்குது


சின்னப்பூக்கள் கண்மலர்ந்து நின்றதோஅங்கு. - காலை
செம்மைவானச் சுடர் எழுந்த போதுளம் கொண்டு
என்நினைந்தோ வெய்யில் தன்னை வேண்டிநின்றது - சூடு
என்பதென்ன சுட்டபோது வாடி நின்றது
அந்திநேரமாகித் தென்றல் ஆடிவந்தது - நின்று
ஆடும்பூவின் வாசம்தன்னை யள்ளிச் சென்றது
செந்தணலென் றானவானம் சில்லென்றானது - கதிர்
சின்னப்பூக்கள் மீதுமஞ்சள் வண்ணம் போர்த்தது

Thursday, September 20, 2012

என்னமோ எண்ணமோ அறியேன்


 என்னமோ கேட்டு எழுந்தது  வானில்
இயற்கையின் விளையாட்டு -அது
இன்னமும்  ஏனோ தொடர்வது காண
ஏங்குது பெருமூஞ்சு
சொன்னவை ஏனோ வண்ண நிலாவாய்
சிரிக்குது எதைப் பார்த்து - அட
கண்மணி போதும் காலையில் எழலாம்
கவலையில்லைத் தூங்கு

நல்லதோர் வாழ்வும் நடிப்பதென்றாகும்
நானிலம் பெரு மேடை - அதில்
செல்பவன் எல்லாம் சீரிய நடிகர்
சிறப்பினில் குறையில்லை
அல்லவோ புவியும் ஆண்டவன்ஆடும்
அழகுக் காற்பந்து - துயர்
இல்லைநீ கண்ணே எல்லையில் வானம்
இருண்டது கண்தூங்கு

கல்லையும் எறிந்தால் காயங்கள் வருமோ
கடவுளின் திருமேனி-  அது
வில்லையும் வைத்து வீசுவதாலே
விளைவுகள்  பெறும் சக்தி
சொல்லதனாலே உரைத்திட சங்கு
சுடுவது போல் மிளிரும்-   அட
நல்லவளேநீ நித்திரைகொள்ளு
நன்மைகள் கூடிவரும்

தோட்டத்திலாடும் சுந்தரப் பூக்கள்
சொல்லியும் மலர்வதில்லை -அவை
கேட்டெதுவண்ணம் கொள்வதென்றேயக்
காற்றிடம் கேட்பதில்லை
ஏட்டினில் பூக்கும் பாட்டுக்கள் தானும்
இங்கது போலும் நிலை -  தன்
பாட்டினில் வளரும் பக்குவம் உண்டு
பார் விழி தூங்கவில்லை

வெட்டி வளர்த்தனர் ரோஜாநின்றது
வீட்டின் முற்றத்திலே - அது
மொட்டென விட்டு முகிழ்ந்தன பூக்கள்
முற்றும் பெரு அழகே
கட்டவிழ் மலரோ அற்புத அழகு
கண்டவர் போற்றும் நிலை - காண்
கட்டழகே நீ கண்ணுறங்காய் - இது
காட்டினுள் பூத்தவகை

***************

புதிர்க் கவிதை


பரவும்காற்றில் சுனையொன்றருகே
பாதம் பதிய நடை கொண்டேன்
வரவை அறியா தவளை ஒன்றும்
வடிவில் மலராய் கண்டே “பார்
அருகும்வாழ்வில் அழகின்பக்கம்
அறியாதெல்லாம் முன்வைத்து
திருவெண்முகமோ திங்கள் ஆகத்
தோன்றக் கண்டேன் திருமகளே!”

மதியோ விதியோ மலரோ அறியேன்
மனமும் வாடிக் காண்கிறேன்
மதியும் சுடருமொன்றானால் பின்
மறையும் ஒளியும் இருளென்றாள்
மதியும் சோராதிருப்பாய் பெண்ணே
மாற்றம் கொள்ளக் கேட்கின்றேன்
புதிரின் விடையைக்கூறு உன்னைப்
புதிதாய் ஆக்கி வைக்கின்றேன்

இரவியின் ஒளியில் தருவில் இருளாய்
இருந்தே கரையும் பொருளைக்காண்
உருகும் பனியின் நிறமும்கொண்டோர்
உறவுக் கெதிராம் வண்ணத்தாள்
கருதும்சொல்லில் ’காதால்’ கொள்மின்
கடிதோர் துயரை இவன்கொண்டான்
புரிந்தே துன்பம் போகசெய்தால்
புவியில் பெரிதாய் புகழ் சொல்வேன்

திறமை கொண்டாள் திரும்பிக்கண்டு
தெய்வக் கோவிற் சிலையென்றே
வருமோர் மாதம்நாளும் ஒன்றாம்
வந்தால் மறுநாள் தன்னில்கொள்
இருந்தோர் நகையை என்மேல்வீசி
இதனைக்கொள்வீர் நீர் என்றாள்
சரியாய் விடையும் பகர்ந்தாள் அவளை
சிறிதே புகழ்ந்து பார்பெண்ணே

பழமைப் புகழ்கொள் மூவர் முதல்வன்
பெயரில் சிறியோன் பெரியவனாம்
சுழலும்புவியில் ஒருதரம் சொன்னால்
சுவையாய் உண்ணப் பொருளீவான்
பழகும் வகையில் இருமுறை சொன்னால்
இனிதாய் வாழ்வுக் குயிர் தருவான்
அழகும் மெய்யை பின்னவன் சேர்த்தான்
அதிலே முன்னோன் மெய்யழித்தான்

ஆவின் கன்று அவனை அறியும்
ஆனால் பதிலும் அதுவல்ல
தாவென் றேதும்கேளா தருவான்
தருமோர் பதிலும் அதுவென்றேன்
நாவின் நுனியில் விடையைக்கொண்டேன்
நவின்றால் பயனென் நவிலென்றாள்
பூவின் தோழன் பிரித்தே கொள்ளும்
பொருளைத்தருவேன் நானென்றேன்

தாவரம் நீரில் வளரும் இவளோ
தனியே கண்ணீர் மரமாமோ
பூவரசம் பூப்போன்றே மெதுவாய்ப்
புன்னகை பூக்கக்கண்டேநான்
தாவரமென்று கேட்டால் நானும்
தர மாட்டேனோ ஏனென்றேன்
பாவின் புதிரை நீயும் சொல்லு
பார்ப்போம் எழிலார் பெண்ணென்றேன்

வேங்கை யன்ன வீரம்கொண்டும்
வேகம் முன்னால் விழிகொள்ளும்
விதியில் காணும் பொதுவை வைத்து
அதையும் கொள்ளும் திருவுருவே
மதியென் றெந்தன் வதனம்கண்டீர்
மாவின் கனிபோல் கன்னங்கள்
அதிலேகாணும் இனிமை கொள்வீர்
என்னைத் தந்தேன் கொள் என்றாள்

விளைந்தாய் அழகாய் வளர்ந்தாயன்றி
வலிந்தாய் மனமும் பொலிந்தாயில்
விளைவாய் என்னக் கலந்தாய் அன்பில்
குழைந்தாய் இனிமேல் குழந்தாய் என்
எழுந்தே வானில்  இரவியும்காண
பொழுதே விடிந்துபோம் நாளில்
குளத்தின் நீரில் நாலில் ஒன்றைக்
கொண்டாள் கன்னி அஞ்சும்மான்

ஆறும் குணமும் இன்றிக் கடலில்
அலையில் கயலைக் காண்பேனாம்
மாறிக் கயலில் கடலைக் கண்டேன்
மாதே இசைந்தேன் மனதில் கொள்
எட்டும் விழியின் இறைநீர் குன்ற
தட்டும் கொண்டு வருவோம் காண்
தாவென் றுன்னை அன்னை கேட்பாள்
சரியா என்றேன் மலர்ந்திட்டாள்


********************

புதிர் கவிதை (விடையும் விளக்கமும்)புதிருக்கு விடை


மூன்றாவது அடி

வரவை அறியாதவளை ’வடிவில் ஒன்றும்
மலராய் கண்டே’ எனப் பொருள் கொள்கமதியும் சுடருமொன்றானால் பின்
மறையும் ஒளியும் இருளென்றாள்

சூரியனும் சந்திரனும் சேர்ந்தால் (நேர்கோட்டில்)அமாவாசை . அது போல் என்மதிமுகமும்  சிந்தனை அறிவும் சேர்ந்ததால் இருள் வந்ததோ என்று  ஒரு பொருள் படப் பேசுகிறாள்


.  முதற் கேள்வி

1. தாகம் கொண்டான். தண்ணீர் கேட்கிறான்  அவள் நீர் அள்ளிக் கொடுகிறாள்.


இரவியின் ஒளியில் தருவில் இருளாய்
இருந்தே கரையும் பொருளைக்காண்
உருகும் பனியின் நிறமும்கொண்டோர்
உறவுக் கெதிராம் வண்ணத்தாள்
//காகம்// கரையும்    


கருதும்சொல்லில் ’காதால்’ கொள்மின்
கடிதோர் துயரை இவன்கொண்டான்
புரிந்தே துன்பம் போகசெய்தால்
புவியில் பெரிதாய் புகழ் சொல்வேன்
முதல் நான்குவரியிலிம்சொல்லப்படுவது காகம்
’கா’’தா’ல் கொள்மின் என்றதால் கா எழுத்து தா வாக மாறுகிறது.அதனால் தாகம்

தாகத்துக்குக் தண்ணீர் கேட்கிறான்.

விடை

விடை
வருமோர் மாதம்நாளும் ஒன்றாம்
வந்தால் மறுநாள் தன்னில்கொள்
இருந்தோர் நகையை என்மேல்வீசி
இதனைக்கொள்வீர் நீர் என்றாள்
மாதம் நாளும் ஒன்றாம்--// திங்கள்/ மாதத்தின் பொதுபெயர் நாளுக்கும் உண்டு
வந்தால் மறுநாள்--//செவ்வாய்’//
இருந்தோர் நகை //புன்னகை// (சிவந்த வாயிலிருந்து ஒரு புனகையை வீசி

பின்னர்
இதனைக்கொள்வீர் ”நீர்” என்றாள்-- //நீர். தண்ணீர்//
***************************
இரண்டாவது புதிர்க் கேள்வி

பழமைப் புகழ்கொள் மூவர் முதல்வன்
பெயரில் சிறியோன் பெரியவனாம்
சுழலும்புவியில் ஒருதரம் சொன்னால்
சுவையாய் உண்ணப் பொருளீவான்
விடை மா (கனி ஈயும்)
பழகும் வகையில் இருமுறை சொன்னால்
இனிதாய் வாழ்வுக் குயிர் தருவான்
விடை
மாமா (மாமன் பெண்)- கன்னி

/அழகும் மெய்யை பின்னவன் சேர்த்தான்
அதிலே முன்னோன் மெய்யழித்தான்/
(கனி - கன்னி) விடை
மெய்யெழுத்து வித்தியாசம்
கன்று மா என்று கத்தும் விடையல்ல

அவள் கூற்று
வேங்கை யன்ன வீரம்கொண்டும்
வேகம் முன்னால் விழிகொள்ளும்
விதியில் காணும் பொதுவை வைத்து
அதையும் கொள்ளும் திருவுருவே

வேகம் முன்னால் விழிகொள்ளும்
விதியில் காணும் பொதுவை வைத்து
இதுவும் வழக்கமாக நான்செய்வதுதான்

’விழி’ கொள்ளும்
’விதியில்’ காணும் பொது //வி//
வேகம் முன் வைத்தால் //விவேகம்//
***
விடை கூறுகிறாள்
மாவின் கனிபோல் கன்னங்கள்
அதிலேகாணும் இனிமை கொள்வீர்
என்னைத் தந்தேன் கொள் என்றாள்
அவள் என்னை என்று கன்னி யை குறிக்கிறாள்.
*****************
நாவின் நுனியில் விடையைக்கொண்டேன்
நவின்றால் பயனென் நவிலென்றாள்
பூவின் தோழன் பிரித்தே கொள்ளும்
பொருளைத்தருவேன் நானென்றேன்

பூவின் தோழன் காற்று. பிரிக்கும் பொருள் பூவிலிருந்து மணம் எடுத்துகொள்ளும். அதன்படி உன்னை மணம் செய்து கொள்வேன் என்கிறான்
***
குளத்தின் நீரில் நாலில் ஒன்றைக்
கொண்டாள் கன்னி அஞ்சும்மான்
நாலில் ஒன்று ( கால்) குளத்தில் கால்வைத்து நிற்கிறாள்

சுதந்திரம்


காற்றுவானில் ஓடி ஓடிக் கண்டதே சுதந்திரம்
ஊற்றும் மேகம் ஓடும்வானில் உள்ளதே சுதந்திரம்
ஏற்றமுற்ற ஆற்றுநீரும் ஓடும் கீழ் சுதந்திரம்
இற்றை நாளில் ஏழைகொள்ள இல்லையே சுதந்திரம்

ஆற்றில் நீந்தும் மீன்கள் துள்ளும் ஆனந்தம் சுதந்திரம்
காற்றின் போக்கில் சுற்றும்பட்டம் காண்பதும் சுதந்திரம்
ஊற்றும் மேகநீர் கலக்கும் ஒங்கும் சாகரத்தலை
ஏற்றங் கண்டு வீழ்ந்தும் ஓடி இன்பங்கொள் சுதந்திரம்

காட்டில் பூத்த தேன்மலர்கொள் கள்ளையுண்ட வண்டதும்
தோட்ட மா மரத்தில் தொங்கும் தேன்பழத்தை தின்றதும்
கூட்டி வான்பறக்கும் சின்னக் குருவி காண் சுதந்திரம்
நாட்டில் வாழும் நம்மவர்க்கு நல்கவில்லை ஏனின்னும்

பாட்டி சொன்ன பைந்தமிழ்க்கு  பாடிஆடும் நாட்டியம்
காட்டி அன்புக் கோட்டையென்று காவல்கொண்ட சொந்தமும்
தேட்டமிட்டுச் சேர்த்தபொன்னும் சொத்தும் கொள்ளை போய்விட
வீட்டின் பின்புறத்தில் ஓடிவீழ்வதோ சுதந்திரம்

தோட்ட மீது நீரிறைத்து துள்ளியோடிக் கத்தரி
நீட்டு வாழையோடு வெண்டி நீத்து பூசணிக்கென
பாட்டுபாடி காவல்காத்துப் பட்சியோட்டி வானிலே
கேட்டொலிக்க அச்சமின்றிக் காணுதல் சுதந்திரம்

சூட்டில் தேகம் விட்டொழிந்து சோர்வதோ சுதந்திரம்
பூட்டிவைத்து போட்டடிக்க ஆவதோ சுதந்திரம்
வாட்டிபெண்கள் வாய்கிழிக்க வாழ்வதோ சுதந்திரம்
ஓட்டியெம்மை பூமி மேய்க்க உள்ளதோ சுதந்திரம்

ஒன்றோடு ஒன்று !


கூட்டுக்குள்ளே வைத்துபூட்டி வளர்த்தனன் 
சிட்டுகுருவிஒன்று - தன்
பாட்டில் பறக்குது கூட்டைவிட்டு வானம்
பார்த்திடக் கண்மறைந்து
ஏட்டில் எழுதிப் படித்தறிந்தேன் அன்பு
இன்பத்தை ஊற்றுமென்று - அது
வாட்டி வதைத்திடும் என்றறிந்தேன் உள்ள
வண்ணமிழந்து இன்று

கோட்டைக் கிழித்தொரு சொல்லுரைத்தேன் அன்பு
கட்டியுள் வைக்குமென்று  - அது
போட்டிவைத் தேனென்று புன்னகைத்தே வானில்
போகுதெனை மறந்து
காட்டினுள் வாழ்ந்திடக் கற்கவில்லை யது
காணுமோ துன்பமென்று -மனம்
வாட்டிவதைத்திட நோக்குகின்றேன் எண்ணம்
வார்த்த அனல்குளித்து

நாட்டினிலே நூறு செய்தி சொல்வர் அதை
நானும் நினத்துழன்றேன் - அயற்
காட்டினிலே கள்ளர் காத்திருப்பர் வலை
கண்ணை மறைத்து வைத்து
மேட்டினிலே மழை மின்னல்வரும் அதில்
மேனி துடிக்கும் என்றார் - ஒரு
சீட்டில் எழுதியத் தெய்வத்தின் முன்றலில்
சாத்திரம் பார்க்கச்சொன்னார்

வாட்டமுடன் நானும் வட்ட விளக்கேற்றி
வார்த்தைகள் துண்டெழுதி - அங்கு
போட்டெடுத்தேன் கோவிற் தெய்வம் முன்னால்
விட்டுப்போன குருவிஎண்ணி
பாட்டினிலே வரம் கேட்டுநின்றேன் அங்கு
பக்கத்தில் ஓர்சிறுவன் -ஐய
கூட்டல்கழித்தலில் கொஞ்சம் பிழை = மனம்
கொண்ட கணக்கிதென்றான்

ஒன்றில் இரண்டையும் ஒன்றுடன் ஒன்றென
ஒன்றிடில் மூன்றெனவும் - மனம்
ஒன்றியென்னில் அவர் உள்ளிணைந்தால் துயர்
ஒன்றில்லை யென்பதையும்
ஒன்றுமில்லை என்று உள்ளவனை தரம்
ஒன்றென ஆக்குவதும் - வரும்
ஒன்றையும் மெண்ணா நடப்பவனை உல
கொன்றில்லை ஆக்குவதும்

ஒன்றெனதே தொழில் ஒன்றைவிட்டு ஒன்றை
தேடிடும் மானிட கேள் - நீ
ஒன்று பட்டால் உண்டுவாழ்வென உள்ளதை
ஒன்றும் நினைப்பதில்லை
கொன்று மகிழ்ந்திடும் கோலமெடுப்பதில்
ஒன்றும் குறைவுமில்லை - அவன்
ஒன்றுதனும் துயர் இல்லையெனில் விதி
ஒன்றை நினைப்பதில்லை

வந்த குரல்களின் சொந்தமுகமெண்ணி
வார்த்தைவந்தோர் திசையில் - ஏது
எந்தன் விழி கொள்ள அங்கெவருமில்லை
என்ன அதிசயமோ?
சொந்தநிலை யெண்ணித் துண்டிலொன்றைக் கையும்
சுற்றி வளைத்தெடுக்க - அதில்
வந்ததென்ன ’ஒன்றில் ஒன்றியிரு’ எனும்
வார்த்தை கண்டே சிலிர்த்தேன்

அஞ்சலி

இடிவிழுந்தும் தாங்குமனம்
..  எதையிழந்தும் ஓங்கும் இனம்
.. உமையிழந்து துடிதுடிக்கிறோம்
அடிவிழுந்து நொந்த தென
.. அறிவிழந்து நெஞ்சமழ
.. அகமழிந்து துயரெடுக்கிறோம்
வெடி பரந்து வானுடைந்து
.. விதியெனஎம் தலைவிழவும்
.. வலியெடுத்த சேதி யாகவே
கொடியதுன்பக் கனவிதுவோ
.. கொண்ட சேதி பொய்யிலையோ
.. கூடுமாஎன் றுடல்நடுங்கிறோம்.

மடி முழுக்க அனல் கொதித்து
.. மாபெருந்தீ கொட்டியதாய்
.. மதிமயங்கி துடிதுடிக்கிறோம்
குடி மறந்து ஊர் நடுவே
.. குரல்பரந்து அழுதுகத்தி
.. கொண்டதில்நாம் விழிசிவக்கிறோம்
நெடிதுயர்ந்த ஆலெனவே
.. நிமிர்ந்து நின்ற உரமென்னவோ
.. நிர்க்கதியென் றாகிநிற்கிறோம்
கடிதெனவே புயலெழவும்
.. கண்களில் மண் தூவியதாய்
  காரிருளில் பார்வை கெட்டுள்ளோம்

விடிவரும் என்றுளமே
..  விரும்பியநல் வாழ்வுகாக
...  வேண்டியெழ விதி முடித்ததேன்
படியளந்து கல்லிடையில்
..   பசியெடுத்த எறும்பினுக்கும்
 ..  பார்த்து நல்ல அமுதமீந்தவா
கொடியமனம்,  நல்லவரைக்
.. குவலயங்கண் வாழவிடா
.. கொண்டுசென்ற நீதியென்னவோ
மடியிருந்த பொன்னிழந்து
.. மனமழிந்து உயிர் நலிந்தோம்
.. மறந்தும் மனம் சாந்தி கொள்ளுமோ?

Wednesday, September 19, 2012

சக்தி தந்தாள்

தேனைகுழைத்தவள் தின்னுஎன்றாள் - எனைத்
 தேடிமது உண்ணு பூவிதென்றாள்
வானில் குழைத்து நல் வண்ணமிட்டாள் - இந்த
  வாழ்வில் களித்திட எண்ண மிட்டாள்
நானிக்கவி செய்தேன் என்றெழுதி - இவன்
  நாளும் புழுகிடும் வேளையெல்லாம்
வானிற் கிடந்து சிரித்திடுவாள் - அவள்
  வாழ்த்தித் தமிழ்செய்து வண்ணமிட்டேன்

மானைத் துள்ளு என மாயமிட்டாள் - அந்த
   மாலைக் கிறக்கத்தில் மையலிட்டாள்
வானின் கிழக்கிடை செம்மையிட்டாள் - காலை
  வந்து உதித்திட வெய்யில் செய்தாள்
ஊனைப் படைத்தென்னில் வாழ்வளித்தாள் - இந்த
  உள்ளமதில்  தமிழ் ஊற விட்டாள்
ஏனோ எனைக் கவி சொல்லவிட்டாள் - தமிழ்
 ஓடும் உதிரத்தில் தூவி விட்டாள்

நானெனும் போதினில் நானுமில்லை - ஒரு
 நல்ல கவிசொல்ல ஞானைமில்லை
தேனும் வழிக்கின்ற பூவிதழின் - வாசம்
  தென்றல் கொள்ளுமது சொந்தமில்லை
வீணில் வீம்பு  கொள்ளும் நெஞ்சமில்லை - இவன்
  வேண்டி அழுதிடும் தெய்வம் தன்னை
காணில் உயிர்தன்னை காலில் வைத்து - நானும்
   காணும் ஒளியுடன் கூடிடுவேன்

பிரபஞ்சப் பயணம்


கலைவான முகிலேறிக்
. காற்றூதும் வெளிதாவக்
. கனவுரதம் ஒன்றுதா தேவி !
நிலையற்ற புவிநின்று
. நீலவான்வெளி செல்லும்
. நெடும்பயணம் கொள்ளவும் செய்நீ !
தொலைவானில் வண்ணமெழும்
. தீப்புயலின் சூடுதனில்
. தொட்டபடி தூர விழுந்தேகும்
இலையென்வி நோதமெழும்
. இன்பங்கள் அதிசயங்கள்
. எழில்காணும் ஓருலா வேண்டும்

ஒரு பயணம் புதுமைபெற
. ஒருகோடி ஒளியாண்டு
. ஓடித் தனி உலகொன்று கண்டே
பெருமகிழ்வு பொலியவதில்
. பிறப்பிறப்பு இல்லாத
. பெருமைகொளும் நிலைகாண வேண்டும்.
கருவானில் எழுமதியும்
. காணுமொளி போல்வானக்
. குளுமையுடன் சூரியன்கள் வேண்டும்
பெருமலர்கள் ஆளுயரம்
. பொலியுதெனப் பூப்பூத்து
. புதுஅருவி தேன்வழிய வேண்டும்

மலர்களொளி வீச அதில்
. மத்தாப்பின் வண்ணவகை
. மணித்துகள்க ளாய்த் தெறிக்க வேண்டும்
கலகமின்றிக் கனிமொழியக்
. காணுருவம் ஒளியெனவும்
. கதைபேசிக் குலவும் வகைவேண்டும்
சில நதிகள் வாசமெழச்
. சென்றதனில் மூழ்கியுடல்
. சிலுசிலென குளுமைகொள வேண்டும்
தொலைவில்விண் மீதுபறந்
. துலவியெரி தீயருகில்
. தொட்டவிதமாய் திரும்பவேண்டும்

தெருவெங்கும் சிறுரதங்கள்
. திருமகளி னழகுடனும்
. திகழுமெழிற் தேவதைஉட் செல்ல
வருமிளைய தென்றலதில்
. வண்ணநிறப் புகையெழுந்து
. விழிகளின்முன் விளையாடவேண்டும்
பருகிடவெண்மலர்த் தேனும்
. பாவெழுதும் போதைதனும்
. பெருகுஎன கவிநூறு தந்து
உருகி மனம் வழிந்தோட
. உணர்வுதனில் தீபரவ
. உயிர்கள்மகிழ் வடையுந்தமிழ் வேண்டும்

நெளிவுகளும், வளைவுகளும்
. நீரோடை மலைகளென
. நீந்திவிண் வெளிகாண வேண்டும்
பொழியமுதத் தூறலென
. புதுவிளக்கினொளி வெள்ளம்
. புகுந்தேகும் விளையாட்டு வேண்டும்
மொழியெதுவும் பிறிதின்றி
. மதுவென்சுவைத் தமிழுடனே
. மனிதரெனும் பதுமைகளின் உலகம்
ஒளியழகுத் திருநாடும்
. உணர்வதனில் திறனோடும்
. ஒருமையுட னாயிருக்க வேண்டும்

கருவயலில் உறைகுளிரில்
. கண்கவரும் தோரணங்கள்
. காணுமொரு எழிற்கோலம் வேண்டும்
பெருகும் செறிகயமையுடன்
. நெறிதவறும் நிகழ்வுமின்றிப்
. பசுமையுணர் வானநிலை வேண்டும்
உருகி மனம் வழிந்தோட
. உயரிசையில் நடமாடும்
. உருவங்கள் உலவிவரவேண்டும்
தருணமதில் காற்றோடு
. தலைநிமிரப் படபடத்து
. தமிழன்கொடி உயர்பறக்கவேண்டும்

நீலமலை உயர்ந்தநெடு
. முச்சிதனில் நின்றண்டம்
. நிலைமைதனைப் பார்வையிட வேண்டும்
கோலமிடு வாசலெனக்
. கோளங்களும் சுற்றுமெழில்
. குழிவானை விழிகாண வேண்டும்
வாலெரியும் நட்சத்திரம்
. வளர்பிறையும் ஒளிவீச்சும்
. வடிவுற்ற அசைவும் விழிகாண
காலம்சில நாள்களென
. காணுமெழில் மனமகிழ்ந்து
. காயும் இந்த பூமிவரவேண்டும்

மேன்மை கொடு!


எத்தனை எத்தனை காலமதா யிந்த
   எத்தனும் சித்த முருகி யுனைப்
பத்தியுடன் கரம் கூப்பிநின்றேன் என்னில்
   பாசமும் கொள்ள மறுப்பதென்ன?
நித்தமும் உன்னடிபோற்றி யிவன் நிதம்
   நெஞ்சில்வைத்துப் புகழ் கூறிடினும்
சுத்தமென்னும் மனம் கொண்டிவனை வெற்றி
   சூழவென் றாக்கத்  தயக்கமென்ன ?

சித்தமெங்கு முனை யெண்ணி மகிழ்வுறச்
   சேவித்து நாவிற் புகழ்ந்துரைத்தும்
கத்தியழுது கை கும்பிடினும் உன்றன்
  காதிரண் டிலிவை கொள்வ தில்லை
புத்தி பெறப் பொருள் இன்னதென்று நீயும்
   போதனை செய்துமறி வளித்தே
உத்தமனாய் வாழச் செய்வதனால் துயர்
    ஏதுமிலாச் சுகம் ஈவதெப்போ

செத்து மடியென்று சிந்தைதனிற் கடும்
   சீற்றமுற்றே கொண்ட செய்கைதனும்
அத்தனையும் விட்டு ஆதிசக்தி யெனை
    அன்பு விழி கொண்டு கண்டுவிடு
பித்துப் பிடித்தவ னாகியுனைத் தினம்
    போற்றி மனம் கொண்டு வாழ்த்துகிறேன்
வைத்து மன்புகொண்டு வாழ்வினிலே மேன்மை
   வையகத்தில் கொள்ளச் செய்வதெப்போ

மத்தினைக் கொண்டு கடைவதன்ன உயர்
   மாபெருஞ் சக்தி மனங் கடைந்து
சித்திகொள் ளும்வரை சுற்றிநின்றே இன்பஞ்
    சேர்த்துவிடு  புகழ் செய்துவிடு
உத்தியதைத் தர வேண்டுகிறே னுள்ளே
   ஊதி எரிந்திடும் செந்தணலை
மெத்த சுடும் வகை செய்வதென்ன வலி
  மீதமெனக் கொள்ள மோகமென்ன

முத்தை மணிப் பலஇரத்தினங்கள் தமை
   மோசம் என்றே மண்ணில் வீசலென்ன
சொத்தைப் பணங் காசு பொற்குடத்தை நீயும்,
   சொத்தையெனக்  குப்பை போட்டதென்ன
எத்தகை வன்மனங் கொண்டதினால் கையை
   எத்தி எறிந்திடும் நீர்துளியாய்
புத்தம்புது வாழ்வு வேண்டுவனை உள்ளம்
    பேதலித்தே விழச் செய்வதென்ன

வித்தையது ஒன்று கண்டுவிட்டேன் உனை
    வேண்டி மனம் கொண்டு பூசிப்பதாய்
சத்தியமும் கொண்டு செந்தமிழில் பல
   சந்தமுடன்கவி செய்தளித்து
நித்தியமும் கலை போற்றித் தமிழ்ச் சுவை
    நெஞ்சில் எழத் தந்து தேன்தமிழால்
எத்திசையில் விழிகண்டினும் நின்னை
  என்திசையில் விழி கொள்ளவைப்பேன்

Tuesday, September 18, 2012

நான் காண வேண்டும்..!

கலைவான முகிலோடிக்
.  காற்றூதும் வெளிதாண்டிக்
.  கடந்து நான் பறந்திடவேண்டும்
வலைபோலும் விளைந்தாடும்
.  வானத்துச் சோதிக்குள்
.  வகையென்ன புரிந்தாக வேண்டும்
நிலையான தவையேது
.  நிலையற்ற பொருளேது
.  நிகழ்வான நான்காண வேண்டும்
தொலைவான மதிகண்டு
.  தூரத்துச் சுடர்தாண்டித்
.  தொலந்தின்னும் முடிவேக வேண்டும்

குலைந்தோடும் அனல்வாகு
.  குளிர்ந்துபின் புவிபோலும்
.  குடம்செய்யும் தொழில்தானும் கல்லில்
சிலைசெய்யும் கலைஞானி
.  செயலொத்த தொழில்தன்னை
.  செயும்சக்தி திறன்காண வேண்டும்
அலைந்தெங்கும் புதிர்கண்டு
.  அதன்பயன் அறிந்தங்கு
.  எழில்கொண்ட வானத்தில் நின்றே
உலைகொண்ட தீயோடு
.  உருவஞ்செய் பிரம்மனின்
.  உயர்சக்தி எவைகாண வேண்டும்

அலைமீது விழிதூங்கும்
.  அருஞ்செல்வம் தருமன்னை
.  அவள்கொண்ட மணவாளன் காணும்
நிலையென்ன காப்பவன்
.  எதையிங்கு காத்தனன்
.  நலம்கண்டு நான் கொள்ள வேண்டும்
தலைகொய்தே உயிர்வாங்கி
.  தருமத்தின் தேவனாம்
.  எமனுக்கு இடம்காட்டும் தேவன்
விலைகொண்ட உயிருக்கு
.  வகையுண்டோ வாழ்வுக்கு
.  வழியென்ன என வார்த்தை கேட்டும்

ஒலிவானில் ’ஓம்’மெனும்
.  ஓங்கார இசையோடு
.  உருண்டிடும் கோளங்கள்மீது
கிலிகொள்ளும் வெடியென்ன
.  கிளம்பிடும் புகையென்ன
.  கிழக்கென்ன மேற்கென்ன கண்டும்
வலிகொண்டு இழுத்தோடும்
.  வகையென்ன காந்தங்கள்
.  வரிசைக்கு வைத்தென்ன சக்தி
மலிவென்று இத்தனை
.  மாபெரும் அண்டத்தில்
.  மனம்கொண்டு இயல் செய்ததெல்லாம்

குலைந்திடா வண்ணமோர்
.  குறையின்றிச் செய்துமிக்
.  கோளமாம் புவிதன்னை மட்டும்
இலையொன்றும் விதியென
.  இவரெண்ணி அவரெண்ணி
.  இட்டதே சட்டமென்றாக்கி
புலைஉண்டு  பெண்தொட்டு
.  புலன்கெட்டுப் பகைகொண்டு
.  பித்தனென்றாடி அழிக்கும்
நிலைகொள்ள விட்டவள்
.  நிம்மதிகண்டதென்
.  நினைவென்ன நான் காணவேண்டும்

Saturday, September 15, 2012

எரித்தாயோ

நிலையழிந்து குலமழிந்து நெஞ்சம்தீய்ந்து
நில்லென்று விட்டதென் நிமலா இன்னும்
கலையழிந்து கல்வியொடு கனவும்தேய
கருணையினைக் காட்டாது நின்றதேனோ
குலையழிந்து வாழைகளின் கூட்டம் வீழ்ந்து
கொள்ளென்றும் வாழையடி வாழையாக
தலையழிந்து தலைமுறையும் தனயனோடு
தங்கைகுலம் அழியவரம் தந்ததேனோ

மலை விழுந்து மரம்விழுந்து மண்ணும்போக
மதியணிபொன் மேனியரே செய்ததேனோ
இலைவிழுந்து கனிவிழுந்து இருந்த பிஞ்சும்
இல்லையெனச் செய்தனையே எதனைவிட்டாய்
உலை வைத்து அரிசியதில் வேகும்பொது
உடைத்தென்ன கலயத்தை உண்மைகூறும்
சிலையெழுந்த சேகரனே சிரிக்க வேண்டாம்
சினந்தெழ நம்நாடு திரி புரமா சொல்லாய்

வலையெறிந்து மீன்பிடிக்க வந்ததேவே
வாரிஇழுத் தெடுக்க  உடன் வந்ததென்ன
விலையுமிலா முத்தோடு வெள்ளிதங்கம்
விளை சங்கு வைரமென வேண்டுமாமோ
கொலை பழியினோடு நீ செய்ததென்ன
கொடிய மழை புயலழிவா இல்லையில்லை
தலைபிளறத் தரைதணலென் றாக்கியன்றோ
தரணியழி சங்காரத் தாண்டவம் காண்

நிலை தவறி ஓடுமிவ் வுலகினின்று
நீசெய்த தென்னவோ நிறுத்துமய்யா
குலை நடுங்க உடல்துடிக்கக் குரலும்கத்தி
கோலமதைக் கொண்டீந்து சென்றதேனோ
தலை வெடித்து சிதறென்று தந்தசாபம்
தமிழருக்கு இன்னமுண்டு தணியவில்லை
மலை மகளுக் கரை மேனி இழந்த பாகா
மர்மத்தைசொல் செய்தகுற்றமென்ன

கண்கள்தனும் பிடுங்கி நாம் களித்ததில்லை
கன்னியரை கீழ்மைகொண் டழித்தைல்லை
பெண்கெடுத்தும் பாவங்கள் புரிந்ததில்லை
பிறன்மனையைச் சீரழித்து மகிழ்ந்ததில்லை
கண்மணிகள் கடுந்துன்பம் கொள்ளவென்று
கரம்கொண்ட சாட்டையால் முதுகுவீங்க
எண்ணியடி தரவில்லை ஏன் இறைவா
இத்தனையும் எம்மிடத்தில் நடப்பதேனோ

விண்ணிருந்து செய்வதென்ன வினைகள்தானோ
வெள்ளைமனம் கொல்லும்செயல் வீணேயேனோ
எண்ணமதில் கொண்டதென்ன இன்னுமெங்கள்
இருள்சூழும் வாழ்வுக்கு மன்னிப்பில்லை
தண்ணிலவில் தீகொட்டித் தகிக்கவைத்தாய்
தலைமாறிச் சூரியனைத் தணிய வைத்தாய்
வெண்ணையிலே நஞ்செழுந்த விருந்தும் கண்டு
விமலா என்விழி மூன்றும் மூடிக்கொண்டாய்?
 

நான் இல்லைஅவள்

சலங்கையொலி நாதமெழும்
...சலசலென ஓசையிடும்
...சத்தமெழக் கால்கள் துள்ளிடும்
இலங்குமொரு திங்களொளி
...இரவிலெழில் போதைதரும்
...இரவல் தரச் சுடர் இருந்திடும்
நலங்கொழித்து மேனியதும்
...நகையணியும் மெருகுறவும்
...நடை பழக உயிர் நயந்திடும்
துலங்குகவி மாலைகளும்
...தோரணங்கள் ஆகுமெழில்
...தேவியவள் அருளேயன்றோ

குலம் செழித்து வளருமதில்
...குழந்தைகளின் சலசலப்பு
...கொடுத்ததெது தாயவள் உதரம்
நிலம்கொழித்தவயல்நிறைந்து
...நிற்கும்கதிர் தலைகுனிந்து
...நிலையேது வரம்பதனாலும்
பலம்மெடுத்து படைநடத்தி
...பகை யழித்த அரசன்புகழ்
...பாதை கண்ட வீரன் பங்கே
புலம்புதமிழ் பொலியுதெனில்
...புகழ்மலர்கள் சொரியுதெனில்
...பூஜை அவள் திருவடிக்கன்றோ

சிலசமயம் ஒளி இலங்க
...சிலசமயம்புயல் முழங்க
...சிலசமயம் மதி மயங்கிடும்
உலகமெனும் கோள்சுழலும் 
...உதயமொடு மாலைவரும்
...உவகையொடு உள்ளம் துள்ளிடும்
கலகம்வரும் காட்சிகளில்
...கனவும்வரும் களிப்புமெழும்
...காலமது வானவில்லெனும்
வலமுளது இடதுஎனும்
...வழமை விதி மாற்றமிடும்
...வாழ்வதவள் விதிவகுத்ததே!

அலைகளெழும் மனதுகொளும்
...அழகுணர்வு மழைபொழியும்
...அதில் நனையும் வேளைஇன்பமே!
கலையொளியும் மதுமதியும்
...கருமிருளில் வரும் பொழுதும்
...கனவுகளில் மகிழ்வு கொள்ளுமே
தலைவி யவள்:தருவதிலே
...தளிரெழுமோர் தருவளரும்
...தர்மமெனத் தகுதி உயரினும்
விலையிலதோர் பொருளெனவும்
...வேண்டியுளம் கொள்பெருமை
.. விளைத்தவளே முழுதுமல்லவோ
******************

ஞாபகங்கள்

சுனையொன்றில் கயல்துள்ளி சுழன்றுவீழும்
சிறு அலையில் வீழ்ந்தஇலை சேர்ந்துபோகும்
பனைவிம்பம் நீரலையில் பாம்பென்றாடும்
படர்காற்றும் பனிக்கூதல் பெற்றுவீசும்
வனைந்தகழி மண்பானை வரிசைகாணும்
வந்திருந்து குருவியிசை வாழ்த்துப்பாடும்
நனைந்த மழைக்கிலவமரம் நின்றபஞ்சும்
நடுவானில் உலர்ந்தபின் எழுந்துபோகும்

மனையிருந்து பெண்ணின்குரல் மகனைத்தேட
மடியிருந்து வளர்ந்தவனும் மறுத்தும் ஓட
சினை முதிர்ந்த பசுஒன்று சினந்து கத்தும்
சின்னதொரு காகம்முது கிருந்து கோதும்
முனை எழுதும் ஏர்கொண்டு முதுகில்வைத்தே
முழுவயலும் உழுமெருது மெல்லச்செல்லும்
புனைந்தெழிலை பூண்டமகள் கஞ்சிவைத்து
புகை மணக்கும் அழகினொடு போகக்காண்பாள்

கனி விழவும் காலுதைக்கும் கழுதையொன்றால்
கடுமணலும் சிதற ஒருகல் லெழுந்து
தனியிருந்த குருவியயல் தவரிவீழ
தலை போனதென்றலறி திமிறியெழுந்து
நிலமகளை முத்தமிட  நெருங்கும் வான
நீலமதில் கூச்சலிட்டு  நெடுக ஓடும்
இனியென்ன செய்வதென இழந்தவாழ்வை
எண்ணியொரு இரந்துண்ணும் உருவம்போகும்


வரியெழுந்த குதிரை யொன்றுவயலில் காணும்
வரும் மழைக்கு முகில் கூடி வானில்நிற்கும்
சரிந்த பனைஒன்றில் குயிலிருந்து பாடும்
சந்தமென நடை போடும்வண்டிமாடும்
எரிந்த உடல் சுடலையொன்று இருந்தமௌனம்
இதனருகே போகுமிளம் பெண்ணின்நெஞ்சம்
விரித்த விழி வேண்டாத விளைவுக் கஞ்சும்
விரைந்த கால் நிறுத்த அயல் குரங்குபாயும்

நரி துரத்தமுயலொன்று நடுவில் ஓடும்
நாகமொன்று வளைந்தோட ஆந்தைகத்தும்
பருந்தொன்று குஞ்சைக் குறி வைத்து வீழும்
பறந்து தாய்க் கோழிபயம் விட்டுத்தாக்கும்
கறந்தபசு கன்றினுக்கு கிடந்தபாலைக்
கொள்ளென்று கூட்டிமனம் கசந்து கத்தும்
மறந்த தமிழ்ப்பாடல்தனை மனனம் செய்யும்
மரத்தடியில் மாணவனு மருகில் குருவும்

துணிவிழந்து பயந்துமொரு துரத்தும் நாயும்
தொல்லையிது என்றோடும் தனித்தமாடும்
பணிவிழந்து பெற்றவனைப் பழித்த மகனும்
பக்கத்தி லறிவுரைகள் பகரும் பெண்ணும்
மணியொலிக்க வேதஒலி மந்திரங்கள்
மாசற்ற இறை கூட்டும் மனிதர் வேண்டல்
புனித ஒளி புண்ணியங்கள் பொலிந்துவாழும்
பொறிகளென எழும் நினைவு புதுமை யன்றொ

Tuesday, September 11, 2012

விடுதலைப் பாடல்

பொங்கி யெழுங்கடி பொங்கிஎழு  இனிப்
போதும் பொறுத்தது பொங்கியெழு
எங்களினம் மொழி காக்க இனித் தமிழ்
ஏற்ற மடைந்திடப் பொங்கியெழு

சங்குமுழங்கிடக் கேட்குது பார் அங்கு
சந்தியிலே கொடி ஏற்றினர் காண்
பொங்க முழக்கிய ஓசை முரசமொலி
பின்னே யெழுந்தது பொங்கியெழு !

இல்லமெங்கும் உணர்வோடிக் கொதிக்குது
எத்தனை வேகம் இதை வந்து பார்
வெல்லவென ஒளி வானில் எழுந்தது
வீரியம் கொண்டனர் பொங்கியெழு

சொல்லப் பெருந்தொகை மாந்தரெனப்  பல
செந்தமிழர் குலம் வந்தது காண்
வல்லவராய்த் திரண்டோடி எதிர்கொள்ளும்
வாழ்வில் துயர்நீக்கப் பொங்கியெழு

மெல்லத் திரும்புது எங்கள் இனித்தமிழ்
மேன்மைக் குலத்துடை வாழ்வதுகாண்
கல்லை கரைத்தனை கச்சிதமாய் இனிக்
காலமெமதடி பொங்கியெழு

அல்ல லிழைத்த அரண்மனையில் அவர்
ஆட்டம் ஒழிந்திடக் கொள்ளையரும்
பல்லுல கும்பழி செய்தவரு மெங்கள்
பைந்தமி ழர்முன்னே மண்டி யிட்டார்

சொல்லை யிழந்தவர் பேச்சிழந்து பணி
செய்தலெனப் பல பொய்யுரைத்து
நல்லவர் கண்களை ஏய்த்தவர்கள் இன்று
நாணிக் குனிந்தனர் பொங்கியெழு

நெல்லைவிதைத்தவர் நெல்லறுப்பர் -கடும்
சொல்லை விதைப்பவர் சீரழிவர்
நல்ல விதைத்தவர் நாமல்லவோ - இதை
நானிலம் கண்டிடப் பொங்கியெழு

வீரத்தமிழே !

பொங்கிஎழு தமிழேநீ பொய்கையெழில் அலையாக
புரண்டது போதும் இன்றே
தொங்கிவிழும் பேரருவி தூவும்மழை வெள்ளமெனத்
துடித்தெழு பொங்கிஓடு
கங்குல் இருள் கண் மறையக் காற்றோடப் பூமலரக்
காணும்சுகம் தந்ததமிழே
செந்தணலைச் சிந்து,மலர் தேன்தமிழின் தாழ்வெண்ணிச்
சிவந்ததுநீ கொட்டுஅனலே

தங்கமென மின்னுமெழிற் தமிழேயுன் அழகெல்லாம்
தணி கொஞ்சம் இறக்கி வைத்து
பொங்கியெழு சூரியனின்  பொன்வெள்ளி கதிராகு
புன்மைகளை எரிக்கவென்று
மங்குமொளி மாலைசுகம் மந்த மாருதம் வீசி
மயக்கியது போதும் தமிழே
பங்குஎடு கொண்டதனை வென்றதிவன் இன்றுஎன
பாடுதோள் வாகை சூடு!

வென்றுவிட நீ நடக்கும்  பாதைகளில் எங்கணுமே
வீரமழை தூறல்வேண்டும்
தென்றல் புயலாகிவிடத் திடுதிடென் றதிர்ந்து மலை
தீ உமிழ்ந் தாடவேண்டும்
நின்ற இடம் ஓளிதோன்றி நெஞ்சினனல் பந்தாகி
நீசமதில் தீயவேண்டும்
இன்று விடு உன்விசும்பல் எழுஇடியும் வீழ இடர்
இல்லையென ஆகவேண்டும்

மந்திசில மரந்தாவ மாவிற் கிளி இருந்தாட
மயில்கள் கீழ் நடனமாட
நந்தவனத் தென்றலெழ நறுமணமு மெங்கும்வர
நங்கையர்கள் கூடிஆட
சந்திரனும் வீசஒளி சுந்தரர் கள்ளிசைபாடி
சோதிஎன வாழ்வு மோங்க
சிந்தைகளித் தின்பமென செந்தமிழர் குதிபோட
செய்தமிழே செய்தல்வேண்டும்

****************************

Sunday, September 9, 2012

யாருக்கு யார்?

பூவுக்கு வாசமும் பொன்னுக்கு மின்னலும்
பொய்கையில் தண்ணலையும்
ஆவுக்கு சாந்தமும் அன்னைக்கு அன்பதும்
ஆதவன் வெம்மையதும் 
நாவுக்கு இன்சுவை நாட்டுக்கு நல்லவன்
நாளுக்கு காலையென
பாவுக்கு சந்தமும் பாட்டுக்கு ராகமும்
பார்ப்பது இன்பமன்றோ

தேவிக்குப் பூசையும் தேன்மதி ஓடிடத்
தெள்ளெனும் வானமதும்
ஆவிக்குத் தீயதும் ஆடைக்கு நூலதும்
ஆற்றுக்கு கீழ்நிலமும்
கூவும் குயிலோசை கொண்டிடச் சோலையும்
கோவிலில் தெய்வமதும்
தூவி மழைபெய்யத் தூரத்து மேகமும்
தேவைகள் ஆகுமன்றோ!

மாவிற் கனியதும் மாலைக்குத்  தென்றலும்
மாதர்க்கு புன்னகையும்
ஓவியம் வண்ணமும் ஒலைக்குச் செந்தமிழ்
உண்ண அறுசுவைகள்
வாவிக்கு நீரதும் வந்த அலைகளும்
வாழ்ந்திடும் மீனினமும்
பூவிற்கு தேனதும் புன்னகை கொள்முகம்
போன்ற  இனிமை யன்றோ

பாவைக்குக் காமுகன் பண்புக்குப் பாதகன்
பார்க்க இழிசெயலும்
தேவைக்கு சூனியம் தீவில் புயலதும்
தேகத்தில் ரோகமதும்
சேவைக்கு  ஆணவம் சிந்தைக்கு வஞ்சனை
செய்கைக்கு சோம்பல்குணம்
யாவையும் கொள்ளவோர் பேராசை யாம்குணம்
வாழ்வுக்கு தீமையன்றோ

Thursday, September 6, 2012

கேட்டேன் கேட்டேன்

இது சில ஆண்டுகளுக்கு முன்நடந்த சம்பவம் ஒன்றைக் குறித்து!

(முழுநிலவு வானெழுந்த நேரம் மரக்கிளையில்
கிளையிருந்து பாடும் ஒரு குருவி)

மின்னும் வானப் பேரொலி கேட்டேன்
வீழும் எரிகல் சீறல் கேட்டேன்
அன்னை மண்ணில் அதிர்வும் கேட்டேன்
அண்டம் ஆளூம் ஓம் ஒலி கேட்டேன்
இன்பச்சோலை சலனம் கேட்டேன்
இனிதாம் இருளில் வண்டொலி கேட்டேன்
அன்னம் நீந்திட அலைகள் சத்தம்
அசையும் காற்றின் அரவம் கேட்டேன்

தென்னம் ஒலை பின்னால் சத்தம்
திசையில் பெரிதாய் வெடியும் கேட்டேன்
என்னை தாங்கும் தருவின் மண்ணில்
எங்குங் கதறல் அழுகை கேட்டேன்
தன்னை அழிக்கும் தருணம் முன்னால்
தமிழில் கோடி கூக்குரல் கேட்டேன்
தின்னும் தீயில்நாக்கின் வெம்மை
தேகம் கொல்ல தேய்குரல்கேட்டேன்

முன்னும் பின்னும் படபட சத்தம்
மூளும் மரணம் முனகொலி கேட்டேன்
பின்னிக் கால்கள் வீழொலி கேட்டேன்
பேதைகள் கூவிக் கதறக் கேட்டேன்
மின்னல் புகையாய் வானில் ஓடும்
மேகத் தூர்தி தூரக் கேட்டேன்
சின்னா பின்னம் சிதறும் மரங்கள்
செல்லும் வழியில் வீழக் கேட்டேன்

தன்னந்தனியே தவழும் குழநதை
தாயின் உடலைத்தட்டி யெழுப்பி
என்ன நிகழக் கொண்டது அறியா
எழுநீ யம்மா என்றிடக் கேட்டேன்
தென்னை முறியும் சத்தம் கேட்டேன்
தெருவில் பிணங்கள் அனுங்கல் கேட்டேன்
பின்னே ஓலைக் குடிசைகள் எரியும்
பெரிதாய் தீயின் பரவல் கேட்டேன்

கொஞ்சும் தமிழைப் பேசக் கேட்டேன்
குற்றம் கொல்லெனும் கூக்குரல் கேட்டேன்
கெஞ்சும் அலறும் தமிழைக் கேட்டேன்
கேவி அழுவது யாரோ கேட்டேன்
பிஞ்சும் பழுத்த கனிகளை வேழம்
பெருங்கால் நசுக்கும் பிளிறல் கேட்டேன்
நெஞ்சின் அதிரும் துடிப்பும் கேட்டேன்
நேர்வது நிசமா இறைவனைக் கேட்டேன்

அஞ்சும் கெட்டே அறிவும் சோர
அழுதேன்  அழுதே அறிவும் கெட்டேன்
வெட்டிக் கொல்வோர் சட்டைகிழித்து
வீழத் துடிக்க ஆழ ரசித்து
கட்டி சுட்டவர் கண்களைக்குத்தி
கத்திப் போடும் கூச்சலும் கேட்டேன்
தட்டிக் கேட்போர் யாரும் இல்லை
தர்மம் எங்கே இறைவா கேட்டேன்

கேட்டேன் கேட்டேன் அழுதே கேட்டேன்
கிளையில் நின்றே கூவிக் கேட்டேன்
வாட்டம் கொண்டு மண்ணில் வீழ்ந்து
வாராய் தெய்வம்என்றும் கேட்டேன்
நாட்டில் எங்கும் இல்லாக் கோரம்
நடக்கும் வகையேன் நவிலாய் என்றேன்
கேட்கும்கேள்வி குருவிக் குரல்தான்
காற்றில் கரையக் கண்ணீர் விட்டேன்