Saturday, July 7, 2012

என் மனத் தீதே! எழுந்தோடு!!

     

கலையும் விலையும் இலதாம் பெரிதோர்
நிலையும் அறிவாய் நீயே
தலையும்  பிறழக் கலையும் நிலையோ
உலையும் மனதின் சிதைவே
சிலையும் பொழியும் கலைஞன் உளியோ
கலையும் சொல்லும் அழகே
கொலையும் செய்வோன் கையில் காணில்
புலையும் கீறும் பொருளே

எதையும் நானே எனதென் றெண்ணச்
சிதையும் இதயக் கருவே
புதையும் இன்பம் சதையும்பெறுமாம்
வதையும் வலியும் நிதமே
விதையும் ஊன்றும் வகையாய் அன்பாம்
அதையும் ஊன்றிக் கொள்மின்
கதையும் வேறே விதமாம்  பெரிதோர்
புதையல் பெறுதற் கிணையே

மதமும் நானென் விதமும் எண்ணின்
சதமும் பெருமை இலதே
இதமும் பரிவும் இல்லா உள்ளம்
நிதமும் காணும் அழிவே
மிதமும் கர்வம் மிகினும் உன்னை
வதமும் செய்யும் இறையே
உதவும் கருணை இறைவன் பதமும்
தொழுநீ இன்பம் வருமே

நகையும் இழிவை செய்யும் வகையில்
பகையும் கண்டே வாழ்ந்தால்
மிகையும் துன்பம் கொள்ளும் வகையில்
புகையும் தீயும் மனமே
குகையில் மிருகம் போலும் வன்மை,
முகையிற் கருகும் மலரே
தகைமை பெருமை பெறுமே அன்பை
சிகையில் முடியாய் கொளவே
*************************

No comments:

Post a Comment