Saturday, February 26, 2011

சிவனே நினை தொழுது !



உன்னை நினத்து உருகிநின்றோம் -என்றும்
உன்னைக் கரங்கள் தொழுது நின்றோம்
தென்னை நிறை திருக்கேதீஸ்வரம் -கோவில்
தன்னில் உறையு மெம தீசனே

எம்மைப் படைத்தனை ஏன் இறைவா -நீயும்
எட்டி உதைத்து மிதித்திடவோ
அம்மை உமைமீது கோபம்கொண்டால் - சினந்
தாடிமிதித் தெம்மில் கூத்திடவோ

செம்மை மொழிஎன்று கூறுகிறார் -பலர்
சொல்லரும் பழமை பேசுகிறார்
உண்மையெனில் வயதாகிவிட்ட மொழி
ஏன் இனியென்று வெறுத்தனையோ

சிங்களப் பேச்சில் மயங்கினையோ -நல்ல
செந்தமிழ் பேசிச் சலித்தனையோ
தங்கிலீசு பேச இல்லையென -உனக்
கெம்தமி ழீழம் கசந்ததுவோ

காத்தல் படைத்தல் அழித்தலென -அவை
காணும் தொழில் இவை மூன்றினிலும்
காப்பவன்தானும் படைப்பவனும் -நல்ல
கண்ணுறங்க நீ விழித்தனையோ

ஆடுவது சுடுகாடு என்றார் -உந்தன்
அன்புமீறித் தமிழ்ஈழம் வந்து
ஆடவென்று சுடுகாடு செய்து -பின்னை
அங்குநடமிட்டு தூங்கினையோ


அன்றொருவன் பெரு வேள்விசெய்து அதில்
ஆக்கி ஒருபுலி ஏவிவிட்டான்
கொன்று உடுத்ததில் கண்டசுகம் -நின்று
இன்று அதைச்செய்யத் தூண்டியதோ

பாதி மேனிதனைப் பார்வதி -அம்மைக்கு
பாகமளித் தவா,ஈசுவரா
நீதியோ நம்மையும் பாதிப்பாதி -என
நீசர் கிழித்திடக் காணுவது

செங்குருதி பட்டுச் செம்மையாக -இங்கு
செந்தமிழ் என்றொரு பேர் வந்ததோ
பொங்கி குருதி வழிகையிலே -இது
பொங்குதமிழ் ஆகிப் போனதுவோ

சங்ககாலம் சொல்கதைக ளெல்லாம் -ஏது
சாய்ந்து வீரமைந்தர் தூங்கவென
பைந்தமிழ் அன்னைஅருகிருந்து -இசை
பாடிக் கண்வளர்த்த பாட்டுகளோ

செல்லமகன் வீழ்ந்தபோர்முனையில் -உடன்
சென்றுமுதுகினில் வேல்விழுந்து
கொல்ல விழுந்தவன் ஆகிவிடில்  உண்ணக்
கொண்ட இடமினி இல்லையென்று

மங்கை ஒருத்தியும் சென்றாளென -ஒரு
மாண்புமிகு கதை கூறிவைத்தார்
எங்கள் மைந்தர்எதிர் நிற்கையிலே அந்த
எத்தர்பெரு நஞ்சுவைத் தழித்தார்

வஞ்சகம் செய்தவர் அன்னையொருவ-ளாம்
நெஞ்சினில்  கொண்டது நஞ்சல்லவோ
நஞ்சு கொண்டவரை வாழவைத்தாய் நீயும்
நஞ்சுண்ட தால் எழும் நேசமதோ

புண்ணைக் கிளறிய வேதனையில் -நாமும்
கொன்றிடக் கொல்லக்கத றுகின்றோம்
கண்ணைத் திறதிருக் கேதீஸ்வரம் தன்னில்
காணும் எமதருட் காவலனே!

Tuesday, February 22, 2011

வீரமகனின் தாயே, செல்வதெங்கே?


வேகும் வெய்யோன் பகை தீய்த்திட எங்கள்
   வானுக்கோர் சூரியன் தந்தவள்
வேகப் புயலொன்றைப் பெற்றவள்  இன்று
   விண்ணி லெழுந்து மறைந்ததேன்?
தாகத்தின் ஊற்றினை தந்தவள்  நல்ல
   தங்கத்தமிழ் காவல் ஈந்தவள்
யாகத்தின் தீயாய் எரிந்தவள் இன்று
     யாவும் அணைந்திட சென்றதேன்?

வீரத்தின் சின்னம் விரைந்ததோ- ஒரு
 வெள்ளியென விண்ணில் நின்றதோ
சேரத் தலைவனைத் தந்தவர் -பெரும்
  சேனை படைகளை கண்டவர்
நேர்மை தன்மானத்தை சொன்னவர் -இன்று
   நித்திரை கொண்டனள்- நெஞ்சிலே
பாரத்தை தந்துமே சென்றதேன் --இந்தப்
    பாவ உலகம் வெறுத்ததோ

பேரை உலககெங்கும் சொன்னவன் -பெரும்
  போரில் பகைதனை வென்றவன்
நாரைஉரித்தது போலவே -இந்த
  நாட்டின் கொடுமை உரித்தவன்
ஊரையே வெட்டிப் பிரித்திடும் -அந்த
  உண்மையில் பூமி  பயந்தது
வேரை அழித்திட வந்துமே -புவி
   வஞ்சகம செய்தினம் கொன்றது

வீரத்தாயும் இதைக் கண்டனள் -உளம்
  விம்மி வெடித்துக் கிடந்தனள்
நேர்மைத் திறமையைப் பெற்றவள் -இந்த
   நீசச் செயல்களும் கண்டனள்
தீரத்தைபெற்ற வயிற்றிலே -ஒரு
   தீயைக் கட்டிவருந்தினள்
கோரத்தை எப்படிநெஞ்சிலே -ஐயோ
  கொண்டு நடந்தனள் தெய்வமே
தேகம் அழிந்திடப் போயிடும் -அந்த
  தெய்வமெமை விட்டுப் போகுமோ
ஏகும்வழியிலே நின்றுமே -எங்கள்
   ஈர்கரம் கொண்டு வணங்கினோம்
தாயே தலைவனின் அன்னையே- நீயும்
   தந்ததுவோ பொற்கலசமே
நாமோ நந்திவன ஆண்டியாய் -என்ன
  நாடகமாடி உடைத்தமோ

போனதுதான் திரும்புமோ -அந்த
 பொன்னெழில் காலமும் மீளுமோ
நானும் பிழைத்து இருப்பனோ- இந்த
 நாடும் நமதென ஆகுமோ
தேனைத்திருநாட்டை ஆளவே ஒரு
   தீரமகன் தந்த அன்னையே
தனைதலைவனின் பாதையில் நாம்
    தாயகம் கண்டிடவேண்டுமே

நின்னை மனதினில் போற்றினோம் உன்
நிம்மதிக்கு இறை வேண்டினோம்
அன்னை விடைதந்தோம் வானிலே ஒரு
ஆழ்ந்த அமைதியை கொள்ளம்மா
இன்னுமொரு நாளில் எங்களின் தமிழ்
ஈழம் மலர்ந்திடும் நிச்ச்யம
விண்ணி லிருந்தெமை வாழ்த்தியே எமை
வீரமெடுத்திட செய்யம்மா

Monday, February 21, 2011

கரைகாணா ஓடங்கள்!

வானெழுந்த கோபுரங்கள் எங்கே?
வளையலற்ற பனைமரங்கள் எங்கே?
கானெழுந்தபேர் விருட்சம் எங்கே?
கருமை போக்க சூரியனுமெங்கே?
தானெழுந்த பேரலைகள் எங்கே?
தட்டியெழும் முரசங்களுமெங்கே?
மானமென்று ஆர்பரித்த வீரம்
மறமெடுத்த வீரபடை எங்கே?
மீனெழுந்த நீள்விழித்த மங்கை
மேனிதொட்ட வன்அழித்த தெங்கே?
ஏனெழுந்து நீசிதைத்த தெம்மை
ஈவிரக்கமின்றி சுற்றும முலகே!
தேனெழுந்த மழலை தானு மிங்கே
செய்தபாவம் என்ன சொல்லு நீயே?
மீனெழுந்து ஆடும் கடல்மேலே
மீள்தலின்றி ஓடும் படகானோம்
ஆனகையெடுத்த துடுப்பாகும்
ஆயுதங்கள் நீரில் விட்ட பின்னே
ஊனமுற்ற படகிலாடுகின்றோம்
ஓடிக் கரை சேரும்விதி அற்றோம்


ஊரைவிட்டு ஊனைவிட்டு எங்கள்
உயிரும் விட்டு நாமிருப்ப தேனோ
தாரைவார்த்து நாமிழக்க ஈழம்
தானெமக்கு தோள்வலித்தல் பொய்யோ
மோனமிட்டு நீகிடத்தல் விட்டு-
மூச்செடுத்து நீ எழுந்துவாடா
மானமிட்ட மங்கை வாழ்வு காக்க
மாதர்கை பிடித்த மன்னர் சேனை
ஊனமிட்டு ஓடவைத்து வென்றே
ஓசையின்றிப் பாய்படுக்க வைப்போம்
வானமெட்டி மீண்டும்புகழ் பாட
வாய்த்த தென்ன வழியுமொன்று பார்ப்போம்

மன்னனின் அன்னை மறைந்தனள்



மாமலையை தோள்களிலே சுமந்தவரும் -ஈழ
மன்னவனைத் தன் மடியில் கண்டவரும்
தேமதுர குரலெடுத்து தாலாட்டி -அந்தத்
தெய்வமகன் கையணைத்து சீராட்டி
போமகனே பள்ளிஎன்று விட்டவரும் -பின்பு
போர்முடிக்க செல்லவிடை தந்தவரும்
பூமியிலே சோர்ந்து துயில் கொள்ளுவதேன் -ஒரு
பூமரத்தைபோல் ஒடிந்து வீழ்ந்ததுமேன்

நானிலத்தை நடுநடுங்க வைத்தவனாம் -பல
நாடுகளைப் பீதியுறச் செய்தவனாம்
தான் நிலத்தை காத்து மண்ணை ஆண்டவனும்- ஒரு
தலைவனெனில் என்னவென்று காட்டியவன்
மாநிலத்து மன்னனுக்கு தாயுமிவள் -ஒரு
மணிமுடிக்கு அருகில்நிற்கும் அன்னையவள்
ஆ..!நிலத்தில் வீழ்ந்திருக்க அழுகிறதே- மனம்
ஆற்றவழி யின்றி நெஞ்சு துடிக்கிறதே

ஐந்துவிரல் அமுது ஊட்ட வளர்த்தவனாம்- இந்த
அகிலமெங்கும் கிடுகிடுக்க வைத்தவனாம்
செந்தமிழை பூமியிலே கேட்டவர்கள் -இது
சீறி வரும் வேங்கையென்று அஞ்சிடவே
சொந்தபடை நாடு மக்கள் கொண்டவராம் -ஒரு
சொல்லினிலே மக்கள் மனம் வென்றவராம்
விந்தைதனைப் பெற்றவரே வீரமகள் -இன்று
விழிகள் மூடித்துங்குகிறார் வேதனையே

பட்டதுயர் எத்தனைதான் பாருமம்மா -உன்
பக்குவமோ எங்களுக்கு இல்லையம்மா
சுட்டழிக்கும் சிங்களதின் பார்வையிலே- பெரும்
சொல்லரிய துன்பமுற்றும் ஈழததிலே
விட்டுவிடு இந்தமண்ணில் விதையாவேன் -நான்
வீழ்ந்திடினும் எம்மண்ணில் தலைசாய்ப்பேன்
சொட்டு நீரை விட்டுமுயிர் போகையிலே -என்
சொந்த மண்ணின் நீர் குடித்து செல்லவென

கட்டிலிலே நீபடுத்துக் கலங்கியதும்- ஒரு
கன்றிழந்த தாயெனவே கதறியதும்
விட்டு மறந்தெங்கள் வாழ்வு இல்லையம்மா -நின்
வீரமகன் காட்டும்வழி நாம்நடப்போம்
தட்டியினி நீதிகேட்கும் காலமிது -இனி
தலையெடுத்து நாம்நடந்து ஈழமதை
கட்டியொரு நாளமைத்து காத்திடுவோம் -அன்று
கையெடுத்து உனைவணங்கி தொடர்ந்திடுவோம்

Saturday, February 19, 2011

இன்னுமொரு தூது வேண்டுமா?

(புலம் பெயர்ந்த தமிழீழ மக்களுக்கும் இலங்கை அரசாங்கத்துக்குமிடையே தான் மத்தியஸ்தம் வகித்து ஒற்றுமையை ஏற்படுத்தத் தயார் என்று ஒரு நாட்டின் பிரதிநிதியின் அறிவிப்பை எண்ணி இக் கவி பிறந்தது)


ராமபிரான் ஒரு தூது கொண்டான் விண்ணில்
நீந்தி அனுமன்சென்றான்
யாமறிவோம் பெருந்தீயெழுந்து முழு
நாடும் அழிந்ததுவாம்
நாமதுபோ லொரு தூது கொண்டோம் அது
ஈழ மெரித்ததுவும்
பூமியிலே தமிழிழ மறவர்கள்
போனதும் நாடறியும்

ஏதுஇனியொரு மீதி இருப்பவர்
தீயில் எரித்திடவா
தூதுஎழுந்து வருகிறது ஒரு
தோற்றம் எடுக்கிறது
நாதியற்றோர் இவர் நல்லவரேஎன
நாட்டு அரசரெல்லாம்
காதுமுறுக்கிட நாம்கிடைத்தோம் அதன்
காரணமென்ன கண்டோம்

பாதி தமிழரும் பாதியில்சிங்களம்
பச்சைஇரத்தமென
ஊதிக் கொளுத்தவர் போதும்கொளுத்திட
எங்கள் தமிழ் அழியும்
நீதிவகுத்திட நான் வருவேன் என
நெஞ்சை நிமிர்த்தியொரு
தூதுவன் வந்திடமுன்னே எமதுயிர்
தூரப் பறந்துவிடும்

கைகுகுலுக்கி எமைகட்டி யணைத்தவர்
கத்தியை எம்முதுகில்
பைய செலுத்திடப் பார்ப்பர் தருணமும்
பக்குவம் கொள்மனதில்
மெய்யைப் பூசிமேலே மின்ன வைத்து உள்ளே
பொய்யை மறைத்திடுவர்
வையம் முழுவதும் வஞ்சகப் புன்னகை
வைத்துக் குழிபறிப்பர்

ஒன்றுதிரண்டிடு ஒற்றுமையில் வழி
கண்டிடு இவ்வுலகில்
நன்று இது இல்லை என்று இருந்திடில்
நாடு அழிந்துவிடும்
வென்றுவிட நாமும் வீரமுடன் வரும்
தீதை எதிர்த்திடுவோம்
கொன்றுவிட வரும் தூதை மறுத்தொரு
யாகம் நடத்திடுவோம்

சுதந்திரம் தேடி..!

காற்றோட, காற்றோடு மூச்சோட, மூச்சோடு
  காணும்நம் வாழ்வோடவே
நேற்றோடிப் போச்சேஎம் நினைவோடு வாழ்வென்னும்
     நிகழ்வான தோர் காலமே
தோற்றோடும் வாழ்வோடு தீயோடிக் கரியாக்கத்
      தீந்தமிழ் எமதீழமே
சேற்றோடு புதைகின்ற சிறுகால்கள் போல்மீளா
      சிறுமைக்கு பலியானதே

மாற்றாக ஆற்றுநீர் மேலோடிக் காக்குமோர்    
   மாபெருங் கட்டுமரமாய்
ஊற்றாக தமிழ்ஈழ அரசொன்று உருவகி 
  ஒளிர்கின்ற தெமக்காகவே
காற்றோடும் அதுபோல கடுவேகம் கொண்டதாய்
   காலத்தை வெல்லுமிதுவே
நூற்றோடு ஒன்றென்னும் நிலையன்றி இதுஉண்மை
     நிறைவுள்ள அரசானதே

’காற்றாடி’ காற்றோடும் திசையோடும் நாமிங்கு
    ஆற்றோடு எதிர்நீந்தியே
வேற்றோடு தீமைகள் விளைந்திடச் செய்வோர்க்கு
     வேர்த்தோடச் செய்வோமின்றே
கூற்றோடு உண்மைகள் கொண்டோடி வெளிவந்து
     குடிமக்கள் தெளிவாகவே
மாற்றோடு மக்களின் மாபெரும் சக்தியால்
     மலர்ந்திடும் தமிழ் ஈழமே

முள்ளோடிக் கடிகார முகத்தோடு உருண்டோடி
     மணி நேரம் தினம்போகவே
உள்ளோடி விரிகின்ற உணர்வோடு நாமோடி
    உரிமைகள் தனைக்கேட்டுமே
கள்ளோடு விரிகின்ற கவின்பூக்கள் தனைப்போல
     காலத்தில் ஒர்நாளிலே
மெள்ளவே தமிழீழம்லமலர்ந்திடச் செய்குவோம்
     மனதிலே திடம் கொண்டுமே

என்றோடி நம்வாழ்வு இருள்நின்று வெளிவந்து
    இறைமைகொள் தனிநாட்டையே
சென்றோடிக் கைபெற்று சீராகும்விடுதலையின்
    சிறப்பென்ற தனைநாமுமே
கொன்றோடி இனம்கொல்லும் கொடுமைக்கு எதிராகக்
    குரலோடிப் பெரிதாகவே
நின்றோடி நாம்வெல்வோம்  நிறைவாய்சு தந்திரம்
    நேரும்வரை ஓயோமே

Thursday, February 17, 2011

தாய் நிலம் காத்திடு!

வெண்ணிலா வானத்தில் காயுது ஆயினும்
வீட்டில் இருள் நிலைதான்
தண்ணலை கொண்டு தளும்புது பொய்கையும்
தாகத்தில் நம்மினம்தான்
கண்களில் நீர்வழிந் தோடுது எங்கணும்
காற்றில் பெருங் குரலாம்
மண்ணில் விடுதலை வேண்டிய மானிடர்
மாளுவ தும்விதியாம்

பொன்னொளி யொன்று சுடர்கொண் டெழுந்தது
பூமி ஒளிர்ந் ததுவாம்
மின்னிவெடித்திட எம்பகை வென்றதும்
முற்றும் சரித்திர மாம்
கன்னியர் கற்புடன் கண்டுமகிழ்ந்ததும்
காதல் கொண்டாடியதும்
இன்னும் மனதினில் உள்ள நினைவுகள்
இன்றது போனதடா

பெண்ணைப் பிடித்தவர் கற்பைக் கெடுத்துமே
பெண்ணவள் நாணவுடல்
கண்களும் கூசிட கற்பனை கொவ்வாத
காட்சியென் றாக்குகிறார்
எண்ணக் கொதித்திடும் இச்சைகள் செய்தவர்
ஏங்கித் தவிக்கையிலே
பண்ணு மிசைத்தவர் பாடல் படித்துமே
போதையி லாடுகிறார்

எத்தனை கொடுமை சித்திரவதைகள்
நித்தம் நடந்திடினும்
ரத்தம் துடித்திட நித்திரை யின்றியே
நெஞ்சு துடித்திடினும்
சத்தியம் கண்ணைவி ழிப்பதில்லை அதைக்
கட்டி மறைத்தனரோ
நித்தம் விடிவது மற்றவர்க்கே எங்கள்
நேசநிலத் துக்கில்லை

பட்டாசுபோல வெடித்தெழடா வெறும்
மத்தாப்பூ வாணமில்லை
தொட்டால்கை கொள்ளத் துணிந்திடடா பின்னர்
தொட்டிட ஏதுமில்லை
விட்டால் நம்மீழமே புத்த மகனவர்
சத்திரம் ஆகிவிடும்
தட்டிநிமித்தி தென் பக்கமெறிந்திடு
தாய்நிலம் காத்திடடா!

மனம் காணும் துயர் மாற்று!

நிலவுகாயுது தனிமையிலே -அந்த
   நீலவிண் ணோரத்திலே
நெஞ்சம் காய்ந்திடவோ மகளே -அந்த
  நிலவினைப் போலவுமே
உலவுதென்றலும் காயம்வர- என்றும்
   உரசியும் வீசுவதோ
உள்ளம் காயமென்றான தெனில் -அதன் 
    உணர்வுக்கு தீயெதுவோ?

கனவு பலவிதம் காண்பதெல்லாம் -அது
   கற்பனையாம் மனமே
கவலை வாழ்வினில் நிலைப்பதில்லை -அது
  காற்றென ஓடிடுமே
மனமும் வானத்தில் பறந்துவிடும் -ஒரு
   மாபெரும் வேகத்திலே
மாறிவருவது துன்பமென்றால் -அதை
   மறந்திடு விரைவினிலே

தீயில் கைகளை வைக்கமுன்பு -அதை
     தெரிந்திடு பொன்மகளே
தீய்ந்ததாயினில் யார்தவறு -அந்த
      தீயது வெறும் சடமே
கோயில் புஷ்பங்கள் நீமகளே -அந்த
     குலதெய்வம் கால்களிலே
கூடியிருந்திட நீபிறந்தாய் -இது
      குடிசையின் வெறுந் தரையே

காய்ந்த மலர்பின்னர் மலர்வதில்லை -மனம்
   காயினும் சாவதில்லை
காணும் காட்சிகள் மாற்றிவிடும் -புது
   கனவெழும் களித்திடுமே
தேய்ந்த நிலவது வளர்வதுண்டு -அந்த
      திங்களும் முழுமைகொளும்
தேனில் இனிய நல்லொளிபரவ -அது
     தினம்தினம் உலவிடுமே!

சேர்ந்த உறவுகளோடுதினம் -நீ
   சிரித்திடு பழகிவிடு
சிந்தை பழகட்டும் தாமரையின் -இலை
     சிந்திடும் நீருறவு
நேர்ந்த நினவுகள் பள்ளியிலே -எந்த
     நாளுமே சொல்வதில்லை
நீயே கற்றிடவேணுமடா -இந்த
     நிஜமெனும் வாழ்க்கையதே!

வானத்தொலைவிலே நீயிருந்தா- லென்ன?
     வண்ணஒளிவருதே
கான நெடுமரக் கூடலிலே -நான்
    காணும் பெரி தொளியே
நானுமிருப்பது காட்டுக்குளே -எனை
      நாடி விலங்குகளே
ஊனைவிரும்பியே சூழ்கையிலே -உனைக்
    காணவும் முடியலையே

என்ன செய்வேன்?

மெல்லிய புன்னகை மேவி இதழ்களில் சென்றது பூமலரில்
மல்லிகை முல்லையும் மங்கலபூக்கள் மலர்ந்தன என்னருகில்
துல்லியமாய்க் குளிர் நீரும்கிடந்தது தோட்டத்து நீர்க்குளத்தில்
கல்லைஎடுத்து எறிந்திடுமோ இந்தக் கைகளும் இந்நிலையில்?

வெள்ளிடைமேகம் விரிந்து பரந்தது வானக்கருங் குளத்தில்
தெள்ளென வானில் நிலவு எறித்தது தேனொளிதான் புவியில்
துள்ளி இசைகொண்டு ஆடினள்தேவியும் தோன்றி எனதருகில்
அள்ளி அழகைப் பருகுவதோ யன்றி ஆத்திரம் கொள்ளுவதோ?

சின்னக் குழந்தைகள் கூடிநின்றே சிலசெய்தன சில்மிசங்கள்
என்னவென்று சொல்ல என்னைப்பிடித்து இழுத்தன ஈர்கரங்கள்
முன்னே யிருந்துமே துள்ளி என் தோள்களில் தொங்கின பூங்கிளிகள்
பின்னிய கைகளை மெல்லத் திறப்பனோ பேசிஅடித்திடவோ?

காதலர் சேர்ந்து களித்தனர் அச்சமே காணவில்லை மனதில்
ஆதவன் மேலைக் கடல்மறை வேளையில் ஆசையுடன் கரையில்
மாதவள் வெட்கியே என்னயல் கண்டனள் மாறிடவே உணர்வில்
ஏதுநான் பின்னு மயல்நிற்கவோ இல்லை ஏகிவிட்டேன் தொலைவில்

ஆலயம் நோக்கி அசைந்தனர் அங்கங்கு ஆடவரும் மகளிர்
கோலமணி யொலித்தாடின அந்தணர் கூறும் இசையிடையில்
பாலில்குளித்து அக்கோவிற் சிலைதனும் பூசைபெறும் நிலையில்
நாலைந்து பூக்களை நானுமிடுவனோ? நாத்திகம் பேசுவதோ?

மரணத்தின் மடி.

தேவன் கோவில்மணி ஒலிக்கின்றது- ஒரு
தீபம் அசைவதங்கு தெரிகிறது
பாவம் கணக்கெழுதி முடிக்கிறது= ஒரு
பாலம் விழி எதிரில் பிறக்கிறது

வாவென்றிரு கரங்கள் அழைக்கிறது- ஒரு
வாசல் திறப்பதங்கு தெரிகிறது
போவென் றெனைவாழ்வு சினக்கிறது- நான்
போகும் பாதை விளக் கொளிர்கிறது

பாசம் விழிகளினை மறைகிறது- ஒரு
பாரம் மனதில் சுமை கனக்கிறது
நேசம் இருந்துவிடக் கேட்கிறது- என்
நெஞ்சம் போராடித் தோற்கிறது

கூடி இருந்த உடல் துடிக்கிறது -அதன்
கோலம் எதை நினைத்து சிரிகிறது
ஏடும் கதை தொடரும் எழுதியதை- புள்ளி
இட்டே முழுதும் என முடிக்கிறது

ஓடும்நதி கடலில் கலக்கிறது- அதன்
ஓசைஅடங் கமைதி பிறக்கிறது
வாடும் மனது இனி வசந்தம்மென- தனை
வாட்டும் கடும்துயரைப் பழிக்கிறது

சேரத் திரிந்தநிழல் பிரிகிறது- தினம்
செய்யும் மணியொலியும் சிதைகிறது
தேரும் வழியில் தடம் புரள்கிறது- சென்ற
திக்கில் தெருமுடிந்து கிடக்கிறது

தை பிறந்தது, வழி பிறந்ததா ? இன்னொன்று (2வது)

எத்`தை` வந்துவழிபிறக்கு மென்பரோ
அத்`தை` வந்து ஆனதென்ன வாழ்விலே
சொத்தை வாழ்வும் சூழும் துன்பமாகியே
நித்தங் கண்ணில் நீரும் கொட்டக்காணுதே!

எத்தனைதான் செய்தபாவம் வாழ்விலே!
சுத்திச்சுத்தித் துன்பம்வந்து  சூழ்ந்துமே
சொத்து சுகம் அத்தனையும் அள்ளியே
நிர்க்கதியாய் நிற்கவிட்டுப் போகுதே

கொத்துகொத்தாய் செத்து இனம் மண்ணிலே
வித்துக்களாய் போயழிந்து மாளுதே
இத்`தை` வந்துஎன்ன பயன் பாரிலே
சத்தியமாய் எவ்வழியும் தோன்றலே

வைத்தகுறி எம்பகைவர் ஈழமே
அத்தனையும் கொள்ளைகொண்டு நம்மையே
சுத்தியுள்ள தீவின்கடல் தள்ளியே
புத்தமதத் தீவென்றாக்கத் எண்ணமே

ஒத்து ஊதிக் காலமகள் கூடவே
கத்திப் பெருஞ்சூறைகாற்றும் வெள்ளமே
சுத்தி வரும்சூழலை சுனாமியே
அத்தனையும்வந்து எம்மைகொல்லுதே

நர்த்தமிடும் எம்சிவனே நங்கைகொள்
அர்ததநாரி ஈஸ்வரனே ஆண்டவா
வைத்த முடிகங்கையோடு சண்டையா
வந்தவளோ எம்மைகொல்வதேனடா

தை பிறந்து இவ்வுலகம் ஆடியே
தெய்வமெனச் சூரியனைப் பாடியே
நெய்யும்மிட்டுத் தேன்சுவைத்த பொங்கலை
கையழைந்து உண்ண நாமோ மண்ணிலே

மெய்கிழித்து ரத்தம்வரப் பாவியாய்
பொய்த்து உடை இன்றியேநிர் வாணமாய்
கைபிணைத்துக் கட்டிபெரும் பேய்களால்
கொய்துஉயிர் கொள்ளச் சேற்றில் சாகுறோம்

வழிபிறக்க வில்லை என்பதொன்றடா
விழிதிறக்கக்கூடச் சக்தி இல்லைடா
மொழி கதைத்த தமிழனென்ற தானதால்
குழிபறித்து வாழ்வு மண்ணுள்போகுதே

ஒளித்தலைவன் ஒருவன் எங்கள் சூரியன்
வழித்தடத்தில் கால்பதித்து வாழ்வையே
அழித்த பகை கையிருந்து ஈழமாம்
விழித்துஎழ மீட்டிடுவோம் வாருமின்!

செழித்துஈழம் மீண்டுமாட்சி கொள்ளட்டும்
பழித்தவர்கள் பாவி மண்ணுள் போகட்டும்
வெளித்து வானம் கருமுகில்கள் ஓடட்டும்
வழிபிறந்து தையும் வந்து சேரட்டும்

அதுவரையில் வருவதொன்றும் தையல்ல
பொதுவுலகின் கதையுமெங்கள் கதையல்ல
புதுவழியில் விடுதலை நாம் பெறும்வரை
இது புரியாவிடுக`தை` எம்துயர்க`தை`

Thursday, February 3, 2011

தமிழுக்கு துயர் என்று பேர்


தமிழுக்கு எழில் என்று பேர் அந்தத்
தமிழ் எங்கள் ஈழத்தில் தவிப்பதும் ஏன்?
தமிழுக்கு இனிதென்று பேர் அந்த
தமிழ் எங்கள் தேசத்தில் அகதிக்குப் பேர்
தமிழுக்கு கதிர் என்று பேர் ஈழத்
தமிழ் இன்று ஒளிகுன்றிச் சிறை கொண்ட போர்
தமிழ் கொஞ்சும் கலை கொண்ட தேர் அந்த
தமிழ் இன்று ஈழத்தில் அழியுது பார்!

தமிழ் எங்கள் உரிமைக்கு வேர் அந்த
தமிழ் கொண்ட நிலமின்று எதிரிக்குப் பாய்
தமிழ் எங்கள் விழி போன்ற தோர் அந்தத்
தமிழ் இன்று விழிதேங்கி வழிகின்ற நீர்
தமிழ் எங்கள் எழில் கொண்ட தேர் இங்கு
தமிழ் சொல்லும் இனம் கொல்ல அழுமெங்கள் ஊர்
தமிழ் எங்கள் மதுவென்னும் தேன் இன்று
தமிழ் கொல்ல வருவோர்க்கு வெறியூட்டும் தேன்

அவனுக்குக் கரன் என்றுபேர் அந்த
மலைஎன்ற திடங்கொண்ட தலைமைக்குப் பேர்
அவனுக்குப் புகழ் என்றுபேர் இந்த
அகிலத்தில் இனம் காக்க இவனன்றி யார்?
அவனுக்கும் அனல் என்று பேர் வந்து
அயல்நின்ற எதிரிக்கு உயிர் கொள்ளும் தீ
அவனுக்குக் கனல் என்றுபேர் நெஞ்சில்
அவன் கொண்ட கனவுக்கு வழியொன்று தேர்

தமிழ் எங்கள் கைகொண்ட வாள் அன்று
தமிழ் சொல்லின் பகைவர்க்கு கிலிகொண்ட நாள்
தமிழ் ஈழப்படை கொண்டு தான் வென்ற
தவைப்பேசப் பலதாகும் கதை கூறும்நாள்
தமிழ் எங்கள் பசி தீரப் பால் அந்தத்
தமிழ் எங்கள் வானத்தின் விடிவெள்ளிபோல்
மகிழ் விக்கு மோர் நாளில்நாம் அன்று
தமிழன்னை முடிசூடும் திருநாளும் பார்




குறிப்பு>
பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகளை நேசிக்கும் அனைவரும் இந்த
கவிதையை மாற்றி எழுதி அதன் தரத்தை கெடுத்துவைத்திருக்கிறேனே என்று
கோபப்படாமல் குறை நீக்கி பொருள் கொள்க. நன்றி!