Saturday, October 23, 2010

அழுது புலம்பி !

 

எத்தனை நாளிந்த பொன்னெழிற் கட்டிலில்
         நித்திரை கொள்ளுவனோ
கத்தும் எருதேறும் காலன் வாசல்தனை
         தட்டும் வரைதானே
நித்தம் எழுந்து நான் நிற்பது பூமியா
       நிச்சயமா என்று கண்
கொட்டி விழித்து ஓர் பார்வை விட்டுபின்னர்
       கட்டிலை விட்டெழுவேன்

எப்ப எழுந்து  விழி திறக்க இது
    சொர்க்கம் என்றாகுதுவோ
சுற்றி நீள்பல்லொடு சூலம்பிடித்தோர் கை
      பற்றி இழுப்பனரோ
செய்த பிழையாவும் பட்டியலிட்டு எனை
   சுட்ட எண்ணெய் குளியல்
கத்தையான தொரு பாம்புகிடங்கினில்
     கட்டி இறக்கல் என

அத்தனையும் செய்து ஆனந்தமாய் ஆகா
    அற்புதம் என்று எமன்
கத்திக் குலுங்கி சிரிக்கும் நாளது
    பட்டென்று வந்திடுமோ
என்று மறுகி மனம் சலித்து இந்த
     மண்ணில் இருந்துவந்தேன்
எத்தனை நாள் இங்கு விட்டுவைப்பானென
      ஏதும் புரியவில்லை     

சத்தியமாக என் செத்திடும்நாள் குறி
  கேட்டும் தெரியவில்லை
சாத்திரம் சாதகம் ஜோதிடம் என்று
    பார்த்தும் பயனொன்றில்லை
இப்படியே பல எண்ணங்களோடு
    இங்கிவன் நான் இருக்க
குன்றுமலையென தோள் நிமிர்ந்த ஒரு
     மல்லன் என் தோழனவன்

நேற்றைக்குமுன்தினம் நீண்டுபடுத்தவன்
    மூச்சை நிறுத்திவிட்டான்
சொத்து பணம் வீடு கட்டியவள் பிள்ளை
     அத்தனையும் மறந்தான்
நித்திலம் விட்டுமறைவதுமானிடர்
   நிச்சயம் என்பதனால்
செத்த சினேகிதன் எண்ணி ஒருசொட்டு
  கண்ணீர் விழவேயில்லை

கண்டவரோ இவன் கல்நெஞ்சனென்று
   கணக்கிடலாம் அறியேன்
என் மனதோ நீ முந்திவிட்டாய்
    நான் பிந்திவருவேன் என்குது  
போவது ஓர் இடம் போவதும் திண்ணம்
    பார்ப்பது ஓர்படம்தான்
ரிக்கட் வரிசையில்நீ முந்தி நான்பிந்தி
    நிற்பதுபோல் இதுதான்

ஏனழுது புலம்பிக் கதறணும்
    வேடிக்கை யாகுமடா
போனவரை பார்த்து போக இருப்பவர்
    புலம்பி அழுவதோடா
ஆண்டவன் தந்ததை மீண்டுமெடுக்கிறான்
      என்றான் கவியரசன்
மீண்டும்தா என்று மிஞ்சியும் கெஞ்சியும்
      மீள்வது  அல்ல உயிர்

நீசம் மலிந்திட்ட பூமியை விட்டவர்
   செல்லும் இடம் தெரியா
ஆயினும் நிச்சயம் அங்கவர் காண்பது
     இவ்வுலகைவிட்டமேல்
போயின கண்டு புலம்பிஅழு தவர்
    மேனி விழுதல் விட்டு
ஆம் இவன் மீளா அமைதி கண்டான் என
     அஞ்சலி செய்து விடை கொடுப்போம்

Thursday, October 21, 2010

எழுந்து நில்லு! ஈழம் வெல்லு!

கொட்டியடி மேளம் கூவி எழுந்திடு
   தட்டடா கைகளிங்கு
பட்டவினைபோதும் பற்றியெழுந்தது
   நெஞ்சில் பெருந்தீயென்று
சுட்டவன்கொன்றவன் சுற்றித்திரிகிறான்
   வெட்டவெளியிலின்று
சொல்லு சுதந்திரம்கேட்டவன் வாழ்வதோ
   கூட்டில் குருவிஎன்று

வெட்டிக்குருதியைக் கொட்டச் சிரித்தவன்
   பட்டுத் துணியுடுத்து
கட்டிமாடிமனை காசு,பணமென
   கன்னியர் சூழ நின்று
பட்டம்பதவியைப் பார்த்திடநாமுமோ
   குட்டக்குட்டக் குனிந்து
சட்டியில் ஊற்றிய கஞ்சியை ஏந்திட 
   வெட்கமோ இல்லைச்சொல்லு

தட்டியெழுப்பிடு நீதிதேவன்தனை
   தூங்குவதேனோ என்று
கொட்டாவி விட்டுமே கூனிக்கிடந்தது
   இத்துடன் போதுமென்று
குட்டகுட்டக் குனிந்துவிட்டேனினிக்
    குப்புற வீழ்வேனென்று
எட்டஇருந்துபோதும் எமக்கொரு
   உற்றநீதி சொல்லென்று

வட்டக்குளநீரில் வாரிக்கல்லைஎறி
    சுற்றும் அலைகளங்கு
விட்டு இருந்திட நீரலை தூங்கிடும் 
    வையகம்போல இன்று
எட்டுதிசையிலும் எங்கள் நீதியெங்கே
    கத்து குழறு நின்று
சட்டக்கதவுகள் சற்றுதிறந்திடும்
   தட்டநம் கைகள் கொண்டு
 
வெஞ்சமர் விட்டால் விடிவு வருமென
    சொன்னவ ரெங்கேயின்று
கஞ்சர்கயவரை நம்பிஉலகமும்
     கைவிட்ட தெம்மையன்று
கொஞ்சிக்குலவிடும் சிங்களமும் தமிழ்
    ஒன்றாயிருங்கள் என்று
கூறியவர்தம்மை கூப்பிட்டுகேளடா
    எங்கே நடக்குதென்று
 
கன்னி உடலைக் கதறக்கிழித்தவன்
     கட்டிலில் தூங்குகிறான்
காக்கநினைத்தவன் யாக்கைவிடுத்துமே
    காற்றினில் நீந்துகிறான்
வன்னியழித்திட வந்தபடைமுழு
     மண்ணு மழிக்குமென்றோம்
வாயிலடித்து வயிற்றிலே குத்தி
     வா எம்மை காக்க என்றோம்
 
வெந்தபுண்ணில்சுடு வேலினைப் பாய்ச்சியே
     வேடிக்கை பார்த்தவரின்
வீட்டுகதவினைத் தட்டுவோம் இங்குதான்
     விட்ட பிழைகள் என்று
கந்தலுடுத்துமோர் கண்ணியம் காத்தவர்
    எங்கள் தமிழர் என்று
கட்டிய `ரை`யுடன் கோட்டுமணிந்தவர்
    சத்தியம் கெட்டாரென்று

சேற்றையள்ளி நறுஞ்சந்தணம் பூசென்று
     சொன்னவர் கையிலின்று
நாற்றமெடுத்திட மூக்கைப் பிடிக்கையில்
    நாம்விடக் கூடாதங்கு
காற்றில் எழுந்திடக் கத்திக் கதறியே
    கூத்திடு நீதிகேட்டு
ஈற்றில் வருவது எங்களீழம் என்று
     மாற்றி எழுதச்சொல்லு

Wednesday, October 20, 2010

புன்னகை மறந்த பூக்கள்!

சின்னப் பெண்ணே சித்திர நிலவே
சிரிப்பை மறந்தாயோ
சிந்தும் விழிகள் சொல்வது என்ன?
சோகம் சொல்லாயோ!
கன்ன மிரண்டும் கன்னிச் சிவந்தே
காணுவ தேனம்மா?
கயவர் செய்யும் கொடுமை கண்டு
கண்களின் தீயெரிதோ!

எத்தனை கொடுமை ஈழமண் மீது
இளைய மனங்களிலே
குத்திடும் ஈட்டிகள் கூரெழும் வாள்கள்
கீறும் வலி கொடிதே
முத்தம ளித்திடும் அன்னை யழித்து
மூர்க்கர் குதித்ததுவும்
ரத்தமி ழந்தவள் வெற்றுட லாகிய
வேளையும் மறப்பாளோ

கத்தி கிழித்தவர் கதறிய குரலும்
காணும் கிலே சங்களும்
பொத்தென வீழும் குண்டுகளு மதில்
பிய்த்திடும் தேகங்களும்
சித்தம் கலங்கிட திக்கது கெட்டு
சிதறிடும் மாந்தர்களும்
சத்தமெடுதவர் வெட்டிய வெறியும்
கக்கிய நஞ்சுகளும்

எத்தனை கண்டாள் இத்தனை யுமவள்
இதயம் தாங்கிடுமோ
சத்தியம் தோற்றபின் மிச்சமிருப்பது
சித்திரவதை விடுமோ
நித்திரையின்றியே நெஞ்சு துடித்திட
நீர்க்கதியாயிருந்து
எத்தனை இரவுகள் உத்தரித்தாளிந்த
சித்திரப் பொன்விளக்கு

இரத்தமும் கொலையும் இளையவள் நெஞ்சில்
இட்டவலி பெரிது
முத்தமும் அன்பும் முழுவதுமின்றி
முகமலர் வாடிடுது
கத்தியும் கேளாக் கடவுளின் இதயம்
காய்ந்து கடுத்திடுது
சத்திய அன்னையின் சற்று மிரங்காப்
செந்தமிழ்ப் பூக்களது

எண்ணெய் விடுத்துக் கண்ணீர் கொண்டு
ஏற்றிய தீபமது
கண்ணை இழந்தொரு ஓவியன் தீட்டிய
காரிருள் மேகமது
பொன்னை ஒதுக்கிப் புழுதியிற் செய்த
புதுவகை சிற்பமது
என்ன இருந்தும் இறைவனின் நெஞ்சு
இரும்பில் ஆக்கியது

என்று எழுந்துநல் லொளிபரவும் இந்த
இரவும் விடிவதற்கு
சென்றவர் வந்தே சினமெடுத்துப் பகை
வென்று முடிப்பதற்கு
அன்றுவரை நீ அழுதிட வேண்டும்
ஆகும் ஒருகணக்கு
தென்றல் வரும் ஒருசேதி சொல்லும் கதிர்
தீப்பிழம் பெழுவதற்கு!

Tuesday, October 19, 2010

ஏன் படைத்தான் எமை?


கண் படைத்தா னேன் அழுவதற்கா
கால் படைத்தா னதைத் தொழுவதற்கா
மண் படைத்தான் கீழ் விழுவதற்கா
.மனம்படைத்தான் அஞ்சி ஒழிவதற்கா

விண் படைத்தான் ஒளி வருவதற்கா
வீசுந் தென்றல்உயிர் தருவதற்கா
கண்கள் மின்னும் பெரு இடியிடித்தே
கடும்புயலாய் எம்மை வருத்திடவா
 
பூக்கள் செய்தானதைப் பறித்திடவா
பூவித ழேன்கைகள் பிரித்திடவா
..பூக்கள் வைத்தான்வண்டு குடித்திடவா
போதை கொண்டேமலர் வருத்திடவா
 
பாவை கொண்டாலெழில் பலிகொள்ளவா
பருவ உடல்தினம் வதைசெய்யவா
தேவை என்றாலின்பம் துய்த்திடவா
தேடியதும் அதைத் தீயிடவா
 
நாடு என்றால்அது நரகமதா
நரபலி தானவர் அறநெறியா
தேடு என்றால்ஒரு திரவியமா
தீதுசெய்தே வரும் பாவங்களா
 
அரசன் என்றால் அவன் அறிவுளனா
.ஆளைக்கொல்லும் ஒரு எமன்மகனா
சிரசு கொய்தே அவன் சிரிப்பதற்கா
சேவை என்றாலுயிர் குடிப்பதுவா
 
இனமழித்தால் அது இறைமை என்றா
இரத்தம் பட்டே செம்மைஅடைந்திடுமா
தினம்படுபொய் சொல்லத் திறமைஎன்றா
திருகு தாளம் சன நாயகமா
 
உலகமென்றால் அது உழலுவதா
உயிர்கள் என்றால்ஆடும் ஊஞ்சல்களா
கலகமென்றால் பெருங்காவியமா
கண்களில் நீரிடல் அரசாங்கமா
 
வெட்டுகிறான் எம்மை விரட்டுகிறான்
வேடிக்கை பார்ப்பது விரிஉலகா
கட்டுகிறான் கடல் வீசுகிறான்
கையறு நிலைகொண்ட கவினுலகா
 
எத்துணைநீசரை எதிர்த்து நின்றோம்
எடுத்தடி வைத்தவர் திகைக்க வைத்தோம்
நித்திலம்மீதினில்நேர்மைவெல்ல
நெஞ்சினை முன்னே நிமிர்த்திவந்தோம்

பூக்களைக் கொய்தனர் இடியிடிக்க
புதுவிஷம் வைத்தனர் துடிதுடிக்க
தீக்களை வைத்தனர் தெருமுழுக்க
தீய்ந்தது ஈழம் தேம்பியழ

ஒருவனை எதிர்த்தது உலகமெல்லாம்
ஒருநிரைசேர்ந்தது உண்மை கொல்ல
பெருகி யதோ பேரவலமல்ல
பேய்களின் பிடியின் ஆழங்களே

இறந்தது ஈழ தமிழனல்ல
இயற்கையின் தர்மதிருவுளமே
எரிந்தது தீயில் ஊர்களல்ல
இறையவன் கோவில் வாசல்களே

உயிருக்கு விலை என்ன?

 
உயிருக்கு என்னவிலை முருகா - இந்த
 உலகத்தில் தமிழுக்கு விலையுண்டோ பொதுவா
தயிருக்கும் கீரைக்கும் விலையா -நம்
 தமிழ்சிந்தும் ஈழத்தின் உதிரத்துக் கில்லையா?
வயிரத்தின் திடம் கொண்ட தமிழன் - அவன்
 விலையற்று வெறுமைக்கு உயிர்விட்ட விதமா!
துயரத்தின் மடி தூங்க விதியா அவன்
 தோல் கொண்ட சதையென்ன இலவசப் பொருளா?

பயிருக்கு செடியுக்கும் நிலமாம்,- பற்றிப்
 படர்கின்ற கொடியுக்கும் இடமீந்த இறைவா!
பெயருக்கு தமிழ்மட்டு முயர்வாம் அது
 பிறந்திட்ட மண்ணிலே ஓரிடம் இல்லையா
கயிறுக்கு உயிர் கொள்ளும் எமனும் - ஓர்
 கணக்கின்றி உயிர்கொள்ள தரமற்ற பொருளா?
;`அயலுக்கு வாழ்கின்ற மொழிகள் - அவர்
 அனைவர்க்கும் பெருவாழ்வு அகதிக்கு நாமா?
`
வயிறுக்கு சோறற்ற வாழ்வா நாம்
 வழியற்று நிலமற்று திரியென்ற கேடா?
பெயருக்கு தமிழ் பென்னம் பெரிதா அதை
 பேசும்மெம் தமிழர்க்கு கதியற்ற நிலையா?
முயலுக்கும் ஒருவீடு இதமாய் -தமிழ்
 மூச்சுக்கு விரிகாடு வெறும்வெளி தானா?
செயலுக்கு என்னவோ முருகா - நாம்
 செய்ததோ பெரும்பாவம் தவறென்ன இறைவா!

புயலுக்கும் மழையுக்கும் நடுவே - மின்னும்
 பேரிடிக் காற்றுக்கும் தலைதந்த நிலையாய்
துயிலுக்கு ஓருவீடு இன்றி - அவன்
 துணிபோட்டு மரம்கீழே தூங்குதல் சரியா?
வயலுக்கும் பெருங்காணி தோட்டம் - சொந்த
 வாழ்வென் றிருந்தவர் வறுமைக்கு இரையா
 துயருக்கு முடிவேதும் இலையா நாம்
தூசாக தரம்கெட்டு அலைகின்ற விதியா ?

சுழல் பெரும் பந்தொன்று செய்தாய் - அதை
   சுற்றிடவைத்தேநீ உலகென்று தந்தாய்
 வளரென்று மானிடம்செய்தாய் - பல
    [வகையாக்கி அவர்பேச மொழீயீந்து நின்றாய்
பழம் பெரும்தமிழென்று சொன்னாய் -பெரும்
படை கொண்டு அசுரரை வென்றுதான் நின்றாய்
 அழகென்றே தமிழென்று பேசி தமிழ்
அளவற்ற வீரத்தின் அடையாளம்என்றாய்

நிலையின்று பாரடா முருகா உன்
  நீள்விழி பன்னிரண்டில்லையா இறைவா
சிலையென்று நின்றிடல் செய்யா - தெம்
 சிறுமைக்கு வரமீந்து செழித்திட உரம்தா
தலையிலே தமிழ்மீதுஏறிப் - பலர்
 தரணியில் சுகமாகச்செய் யும்சவாரி
நிலைமாறி நாமுயர வேண்டும் - அந்த
 நீசர் எம் அடிமீது தலைசாய்க்க வேண்டும்

கண்டோம், ஆயின் கண்டிலோம்

வானம் பொழிந்து விளைந்துமென்ன -பூவின்
  வாசமெழுந்து மலர்ந்துமென்ன -குயில்
கானம் இசைத்துமே கண்டதென்ன -நம்
  காயும் நிலம் ஈரம் காணலையே
 
விண்ணில் நிலவு எறித்துமென்ன -குளிர்
  வீசுந் தென்றல் உடல் நீவியென்ன -சிறு
தண்ணொளி பூமி தழுவியென்ன - எங்கள்
  தர்மம் பிழைத்திடக் காணலியே


தேனைக் கடித்து இனித்துமென்ன -நல்ல
   தீந்தமிழில்கவி சொல்லியென்ன -வட்டப்
பானை பிடிக்குமெம் மங்கையர்கள் அவர்
   பாவம் விமோசனம் காணலையே

கோவிலைச் சுற்றி நடந்துமென்ன ஒரு
  கோபுரம் கட்டி வணங்கியென்ன சிறு
பூவிலே மாலைகள் இட்டுமென்ன மண்ணுள்
  போனவர் எண்ணம் பலிக்கலையே

ஆயுதம் தூக்கி எறிந்துமென்ன -பெரும்
  ஆள்படை சேனைய ழிந்துமென்ன -ஒரு
காகிதம் சட்டம் கடும்விதிகள் -சொல்லி
  காட்டியவர் நீதி காக்க வில்லை
 
வாழ்வைஅழித்தவர் கண்டதென்ன - எண்ணி
  வஞ்சம் இழைத்தவர் கொண்டதென்ன -அவர்
ஆயுள் முடிந்து நடக்கையிலே - அள்ளி
  அத்தனையும் கொண்டு போவதுண்டோ
 
கொண்ட உடையதும் சொந்தமில்லை அவர்
  கூட உடலுமே செல்வதில்லை புகழ்
கண்ட பதவியும் காசுகளும், அவர்
   கையிலெடுத்து விரைவதில்லை
 
கொன்று குவித்து உயிரெடுத்துத் - தம்
  கூட்டம் பிழைத்திட ஆடுகிறார் அதில்
வென்று குவிப்பது சாபங்களும் அவர்
  வீடு நிறைந்திடப் பாவங்களே!

மண்ணில் ஈதெங்கும் நடப்பதென்ன -ஒரு
  மண்ணும் புரியல்லை மாதேவனே- இங்கு
கண்ணியம் காப்போர் கருகிவிட வெறும்
   காதகர் வாழ்வதன் காரணம் ஏன்?

Saturday, October 16, 2010

தங்கைக்காக ஒரு பாடல்

கண்களில் நீரிடவைத்தவன் யாரோ
காதகனோ அவன் பேரெதுவோ
பெண்ணின் மனம்தனை பிய்த்து எறிந்தவன்
நீதியனோ அன்றி பாவிதானோ
மண்ணில் பெண்ணின் மனம்மெல்லக் கருகிடும்
பஞ்சளவே யதன் வன்மையதோ
எண்ணி மனம் கொள்ளும்வேதனை பாதையில்
கம்பளமோ இன்றிச் செந்தணலோ

தாமரை பூப்பது தண்ணீரிலே அது
தாழு மெழும் மதைத் தாங்குதம்மா
பூமரம்நிற்பது மண்மீதிலே அதை
மேவிஅலை வந்து தாங்காதம்மா
நாமும் நினத்துப் பிறக்கவில்லை இந்த
நாடுமெண்ணி நடந்ததில்லை
யாவும் நடப்பது நம்செயலா அது
யாரோ நடத்தும் வினோதமம்மா

பூவும் அழிந்திடும் வேளைவரை அது
புன்னகை பூக்கத் தவறவில்லை
யாவும் முடிந்தென ஆகும்வரை இங்கு
நாமும் சிரித்திட வேண்டுமம்மா
ஏன்மனம் வாடுது இன்பமுடன்கதை
சொல்லிமகிழ்ந்திட வேணுமடா
மானெனத் துள்ளி மயிலென ஆடியே
மாது நீ புன்னகை பூத்திடம்மா

மெல்லிளம் பூவாக நானிருந்தேன் எந்தன்
மேலே மிதித்தவர் ஆயிரமாம்\
கல்லெனவே மனம் ஆகியபின்னரே
காக்க முடிந்தது வாழ்விலம்மா
மென்மை யினிமையென் றாயிடினும் அது
மேதினியின் வெம்மை தாங்காதம்மா
வன்மை கலந்திட வாழ்ந்திடணும் இது
வையகம் கொண்ட விதியொன்றம்மா

ஈயைப் பிடித்திடும் பல்லியொன்று அதை
எட்டி மிதித்திடும் பூனையொன்று
நாயோ கலைத்திடும் பூனை என்று எங்கும்
நாட்டில் வல்ல இனம் வாழுதல்பார்
காயமே கொண்டு மனமழுது இந்தக்
காலத்தில் ஏதும் நடக்காதம்மா
பாயப் பதுங்கிட தேர்ந்திடு நீ ஆயின்
பாசம் மறந்திடக் கூடாதம்மா

கோழியின் குஞ்செழில் மென்மையென்றால் அதைக்
கொத்திட ஆயிரம் காகமுண்டு
வாழி புலியென தீரம்கொண்டே அந்த
வாழ்வில் பெரும்பங்கு மீதியுண்டு
நாளில் மனதுகள் தேறுவதேயில்லை
நாட்கள் கடந்திட வேண்டுமம்மா
வாழி நலமென வாழ்த்தலன்றி வேறு
வண்ணமறியாத ஏழையம்மா

Tuesday, October 12, 2010

கண் விழித்துக் கண்ட கனவு

மாலைப் பொழுதினில் ஓர்நாள் - மன
     தில் பல எண்ணங்கள் கொண்டு
சாலை வழிதனிற் சென்றேன் - நல்ல
     சங்கீதம் கொண்டு குருவிகள் பாட
சோலைமலர் மணம்வீச - நல்ல
     சுந்தரத் தென்றல் அதைஅள்ளிப் போக
வேலைமுடிந் தெங்கும் வீடு - செல்லும்
    வீறுகொண் டேகும் மனிதர்கள் கண்டேன்.

சீறிச் சினத்தவள் கன்னம் = போல
    சிவ்வென்று வண்ணம் எடுத் தடிவானம்
மாறிக் கிடந்தது வெய்யோன் - இந்த
     மண்ணில் கொடுமைகள் தன்கதிர் மீறி
தேறிக் கிடக்குதே யென்று - நொந்து
     மேலைக் கடலில் உயிர்விடும் நேரம்
பூரிப்பு டன்மனம் துள்ளி - புள்ளி
       மானைப் போலக் குதித்தது கண்டேன்.

அந்தி கருகிடும் நேரம் - இருள்
      ஆடி, அசைந்து புவி கொள்ளும் நேரம்
மந்த மயங்கியோர் இன்பம் - கள்ளை
       உண்டவன்போல உணர்வதைக் கண்டேன்
செந்தமிழில் இசைபாடி - பல
       தெய்வத் திருத்தலம் எங்கும் பண்ணோசை
முந்திஎழ, அந்தமேகம், - அதை
        முட்ட எழுந்தநற் கோபுரம் கண்டேன்

இத்தனையும் கொண்டு இன்பம் - நெஞ்சில்
          எட்டி அலைமோத என்வழி சென்றேன்
எத்தனையோ அழகாக - இந்த
          ஊரை உலகைப் படைத்தவன் செய்தான்
வித்தைகள் அன்றோ புரிந்தான் - என்று
           வீறுநடை கொண்டு ஏகிடும்போது
பத்தைசிறு மரக்காடு - அதன்
           பக்கத்தி லோர்சுடு காட்டினைக் கண்டேன்

நட்ட நடுவினில் வேகும் - மரக்
        கட்டையி னுள்ளே கிடந்தது தேகம்
சுட்டெரியும் தீயின் வாயில் - அந்த
        சுந்தர தேகம் எரிவது கண்டேன்
இந்த மனிதனும் நேற்று - இந்த
        இன்ப உலகினைக் கண்டுகளித்தான்.
இன்று அவன் வெறும் கூடு - அது
        மண்ணில் கலந்து மறைந்திடப் போகுது

அத்தனையும் வெறும் மாயை - இங்கு
      ஆடும் களிப்பு நடனங்கள் யாவும்
வித்தகன் ஆண்டன் மேடை - தனில்
       வேடிக்கைக்காக விளையாடும் பொம்மை
நித்திலம் என்பது இல்லை - இங்கு
       நிரந்தரம் என்பதுசற்றேனும் இல்லை
செத்து மடிந்திட சூழும் - இருள்
        மட்டும் நிரந்தரம் என்றெண்ணி நொந்தேன்

பொன்னென பூத்த இவ்வானம், - அதில்
         போகும்வெள்ளி மலைபோன்ற வெண்மேகம்,
விண்ணில் பறக்கும் குருவி, - இந்த
          வீதி,மரம், ஓடிச்செல்லும் மனிதர்
தண்ணீர்க் குளத்தின் அலைகள்,- ஆடும்
           அல்லி மலர், கயல்மீன்கள் இவைகள்
கண்மூடும் மட்டுமே தோன்றும் - வெறும்
          ஞாலக்கனவுகள் என்பதை கண்டேன்

மாலை முடிந்திருள் கவ்வ - நாம்
       பாயிற்படுத்து தூங்கிடக் காண்போம்
காலையில்மீண்டும் எழுந்து - நாம்
      கண்ணை விழித்திட இன்னொன்று காண்போம்
யாவும்கனவுகள் கண்டீர் - கண்
        மூடித்திறந்தென காண்பது ரண்டு.
 ஒன்று விழித்திடப் போகும் - இன்
        னொன்று விழிகளை மூடிடப்போகும்

Monday, October 11, 2010

நீல வானில் நீந்துவேன் !

நீலமேகமதில் ஆயிரம்தாரகை
     நீந்திட எங்குமொளிப் பிழம்பு
காலவெளி விண்ணின் மாயகுழம்பினில்
    காணும் சிவப்பொளி மஞ்சளுடன்
ஊதாக் கடும்நீலம் உள்ளதொரு அண்டம்
    உள்ளே வெளிதாண்டி ஓடுகிறேன்
காது ஓம் என்னுமோர் ரீங்கார ஓசையில்
   காற்றில்லா ஆழத்தில் நீந்துகிறேன்

சட்டென்று சத்தமோர் நட்சத்திரம் வெடித்
     தெங்கும் ஒளிச் சீற்ற மூடுருவ
வட்டக்குழம்பிலே பற்பலவண்ணத்
     துகள்கள் பரந்தென்னைச் சுற்றிவர
வெப்ப மெழுந்தென்னைச் சுட்டுவிடஒரு
    நீலக்கரும்குழி தானுறிஞ்ச
குப்புற வீழ்ந்து சுழன்றுதொலைகின்றேன்
    சட்டென்று கண்ணை விழித்துவிட்டேன்

காணும்பகற்கன வாலெழுந்து ஒரு
    கட்டிலில் சாய்ந்து முகில்களினை
வானில் குரங்காக வண்ணத்துப் பூச்சியாய்
    வட்ட முகமாய் வடிவெடுக்கும்
மீளப் பரந்து உருக்குலைந்துபஞ்சாய்
    மெல்லிய மேகம் பறந்துசெல்லும்
கோலம் ரசித்துகிடந்தேன் அடஆங்கே
    தேவதையொன் றெழில் வானில்வந்தாள்

அந்தோஅழகிய தேவதையே வெண்மை
    ஆடைகள் பூண்ட எழிலரசி
எந்தன் மனதினில் கேள்வி யொன்றுஇந்த
    மண்ணில் வந்து நானும் ஏன்பிறந்தேன்
எங்கேயிருந்து பிறந்து வந்தேன் மீண்டும்
    எங்குசென்றே அமைதி கொள்வேன்
அங்கே யிருப்பது என்ன இந்தப்பெரும்
    ஆழவிண்ணின் வெளிகண்டதென்ன

வானோ பிரபஞ்சமா யாக்கி விரித்ததில்
    வண்ணக் குழம்புகள் வைத்தது யார்
ஏனோ இதுமர்மமென்று இருப்பதன்
    காரணமென்ன அறிந்துளயோ
ஆவி துறந்ததும் அண்ட வெளியினில்
    நாம்போகு பாதையோர் பால்வெளியோ
தாவிப் பறந்துவான் கல்லிற் படாமலே
    தூரம் சென்றேநாம் உறங்குவமோ

சூரியன்கள் பலதாண்டி வெறுமையில்
    காற்றுமில்லாப் பெரும் சூனியத்தில்
சீறிவரும் ஒளிச் சீற்றங்கள் மத்தியில்
    செல்லும் இடம்வெகு தூரமாசொல்
நெல்லை விதைத்து கதிர்வளர்ப்போமது
    முற்றியதும் அன்னம் உண்பதற்கு
கல்லை யுடைத் தில்லம் கட்டுகிறோம்குளிர்
    காற்றும் விலங்கும் தவிர்ப்பதற்கு

ஆனசெய லெல்லாம்காரணத் தோடுதான்
    ஆயின் பிறந்திட்ட காரணமென்
மேனி எடுத்திந்தப் பூமியில் வந்ததால்
    யாருக்கென்ன பயன் என்று கேட்டேன்
வானில் தெரிந்திட்ட தேவதையோஒரு
    வண்ணத்தடியினைக் கையெடுத்தாள்
தேனில் குழைத்திட்ட மென்குரலாலொரு
    சேதி சொல்லியொரு கோடுபோட்டாள்

சின்ன மனிதனே உன்னைப் படைத்தவன்
    விண்ணில் பரந்தெங்கும் வாழுகிறான்
பொன்னில் நதியினில் பூவில் குழந்தையில்
    பூமியெங்கும் அவன் ஆளுகின்றான்
மின்னு மிடியையும் மேகத்து நீரையும்
    அள்ளி யெடுத்துப் பொழியவைத்தான்
இன்பமிழைத்து மகிழவைத்தான் பின்பு
    துன்ப மெதுவென்று கொள்ளவைத்தான்

கண்ணைவிழித்து கிடக்குமட்டுமொரு
    காரணமேதும் பெரிது இல்லை
கண்ணைமூடி உயிர் சென்றுவிட்டால் இந்தக்
    காயமழிந்திட ஆவது என்?
விண்ணின் திருமகள் வேடிக்கையாய்
    நகைசெய்து சுடரெழும் பூவிழிகள்
எண்ணிச்சிரித்திட ஈதுசொன்னள்அந்த
    இன்பக் குரல்மணிநாதமெழ

மண்ணில் விளைந்திட்ட உன்னுடல் மீண்டும்
    மண்ணுக்கென விட்டுஏகிடுவாய்
விண்ணில் பறந்து, உலவி விளையாடி
    வேண்டும்வரை சுகம் காணுகிறாய்
கண்ணில் தெரிகின்றகாட்சியெல்லாம் கடு
    வண்ணமலரின் வடிவங்களாம்
விண்ணின் பெரு வாண வேடிக்கை என்பது
    வேண்டும்வரை காணும் இன்பங்களாம்

மண்ணில் கொடுமைகள் செய்தவரோ பெரு
    மாயக் குழம்பினில் சிக்கவைத்து
கன்னிச் சிவந்திட வெப்பமிட்டுஅவர்
    காது கிழிந்திடச் சத்தமிட்டு
பொன்னைப் புடமிடச் செய்வது போலவர்
    பொல்லா மனதைப் புடமிடுவோம்
முன்னர் இழைத்திட்ட பாவங்கள் தீர்ந்திட
    மீண்டும்பிறந்திட செய்துகொள்வோம்

என்ன இழைத்துமே ஏது பயனவர்
    இத்தரை மீண்டதும் செய்வதெல்லாம்
கன்னமிடுதலும் பொய்கொலையும்ஓர்
    காரணமின்றிக் கொடுமைகளே
சொல்லச் சிறுதடி மீதிருந்துஒரு
    சின்னப்பொறி எழுந்தேபரவ
இல்லையென அவள் ஆகியிருந்தது
    வெள்ளைமுகிலும் விண்நீலமுமே!

மெல்லவிழிகளைமூடிநின்றேன் இந்த
    மேதினி மீது நடப்பதென்ன
சொல்லிய தேவதை உண்மையிலோ அல்ல
    சொப்பனமோ புரியவில்லை
தொல்லையிலா வாழ்வுக் கென்றேபல சில
    விஞ்ஞான ஆய்வில் கருவி கண்டோம்
செல்லை கணனியை சின்னத்திரை கண்டு
    இன்பமாக வாழ்வை மாற்றிவிட்டோம்

ஆயினும் எத்தனை பெற்றும் மனிதர்கள்
    அன்பினை மட்டு மிழந்துவிட்டார்
நாயினும் கேவல மாகச்சண்டை யிட்டு
    நாட்டைப் பிடித்திடக் கொல்லுகிறார்
யுத்தம் அரசுகள் செய்யும் கொலைகளை
    கேட்பதற்கு இங்கு யாருமில்லை
ரத்தம்துடித்து அடங்கும்வரை கையில்
    கத்தி எடுப்பவன் தானே இறை

எத்தனை நல்லவன் நேர்மைகொள்வோன்தமக்
    கிவ்வுலகில் நீண்ட ஆயுளில்லை
மொத்தத்தில் ஏது நடக்குது மானிட
    வாழ்வுதனில் என்று தோன்றவில்லை
நேர்மை நீதியற்ற வாழ்விதை விட்டுஅந்த
    நீண்ட வெளிதன்னில் நீந்துகிறேன்
மீளப்பிறந்திங்கு வாழப்பிடிப்பில்லை
    தேவதையே கொஞ்சம் நில்லுஎன்றேன்

சுற்றும் உலகே நின்று ஒருபதில் சொல்லு

நெடுந்தூரம் நாம்நடந்து வந்தோம் வழியில்
படுந்துயரோ கொஞ்சமல்ல பட்டோம்
வரும்தடைகள் அத்தனையும் வென்றோம் - எந்தப்
பெரும்புயலும் கொண்டுஎதிர் நின்றோம்

கடும்வெயிலில் வெந்துஉடல் நொந்தோம்- காலடியில்
கற்களும்கூர் முட்கள்பல கண்டோம்
நெடும்வழியின் முடிவுவரும் போது - அதில்
நேருமுயர் வாழ்வையெண்ணி நின்றோம்

வானில்வரும் சூரியனின் ஒளியில் நல்ல
வழியறிந்து வீறுநடை கொண்டோம்
மானிடத்துக் கானஅறம் நீதி - வாழ்வுரிமை
தானெடுக்க ஆசைமனம் கொண்டோம்

சேருமிடம் வந்தடைய இன்னும்- ஒரு
தூரமில்லைஎன் றிருந்த போதே
நூறுஇடி மேல்விழுந்த தென்ன-உலகே
பாதைமாறி நீ சுழன்றதென்ன/

வன்னியை பண் டாரவன்யன் ஆண்டான் - ஒரு
வடக்கினிலே சங்கிலியன் ஆண்டான்
இன்றுமொரு மன்னன்மண்ணை ஆண்டான் - இதை
ஏன் அழித்து மீண்டும் பழி கொண்டாய்

வைத்த குறை வானசோற்றுக் குள்ளே முழு
மொத்த பெரும் பூசணியை வைத்து
ஒன்றுமில்லை .மந்ரம் மகாவம்சம் தமிழ்
ஈழமில்லை அத்தனை நம்சொந்தம்

என்றொருவன் ஏய்க்கக் கண்ணைமூடி- ஆம்
இருண்டுவிட்டதென்றுலகே நீயும்
தந்தனத்தோம் என்று அவன் பாட - அந்த
தாளத்துக்கு சுற்றியதேன் உலகே

சிங்கம்வாழும் காட்டின் குகைகுள்ளே நீ
சேர்ந்துவாழு என்றுகுட்டி ஆட்டை
கட்டிவைத்து, ஒற்றையாட்சி தர்மம் பேசி
கற்பனையை காணச்சொல்லும் உலகே

தடிகரத்தில் ஏன்எடுத்தாய் என்பாய் எங்கள்
தலையெடுக்க வந்தவனின் கையில்
குடியிருக்கும் கொடியவாளைக் கண்டு நாமும்
குனிந்திருத்தல் ஆகுமா நீசொல்லு

கொடியகரம் கொண்டகொலை வாளை- நாங்கள்
கூர்மழுங்க வைக்கஎதிர் நின்றோம்
அடிஎடுத்து தீயர்களை வென்றோம் - ஆனால்
அகிலமே நீ நீதியல்லோ கொன்றாய்

கடிக்கவந்த பாம்பை ஒருகம்பால் அடித்து
விரட்டுவது பாவமென கூறி உயிர்
குடிப்பவனின் பக்கத்திலே நின்று - எங்கள்
குலமறுத்த தேன்உலகே கூறு

இடியிடித்து மின்னல் புயலாக- வானில்
இயந்திரங்கள் கொண்டு வெடி போட்டு
தலையறுத்து சிங்கம் வெறிஆட -அவர்க்கு
பரிசளித்து தங்கம் அள்ளித் தந்தாய்

குஞ்சு,குமர் கூனியகிழம் எல்லாம் -வரும்
குருத்தொடிய வெட்டிஅடி சாய்த்து
செங்குருதி குளம்குளித்து ஆடும் -அவர்
சிங்களத்துக் கென்றுஒரு நீதி

வெஞ்சமருக் கென்றுபுவி செய்த ஒரு
விதிமுறைக்கு மீறிஒரு பாதம்
கொஞ்சமும்பிள றாமல்வழி சென்ற - நம்
செந்தமிழுக் கோர்விதி இதுசரியா?


நாடுஉனக் கில்லைஎனச் சொல்லி - ஒருவன்
நாற்திசையும் கேட்கமுர சொலித்தான்
கூடுவிட்டு உயிர்பிரித்து கொன்றான் - அவன்
கூறியதன் அர்த்தமென்ன கூறு

உடலெடுத்து தமிழ்நிலத்தில் வாழும் ஓர்
உரிமை நமக் கில்லையா நீசொல்லு
கடல்கருத்த வானில்வெறும் காற்றில் ஆவியென
கலந்து வாழும் உரிமையே என்றாச்சு

அறமெடுத்து போர்புரிந்து நாமும் - தனியே
அரசமைத்து வாழுகின்ற வேளை
கரமெடுத்து கைக்குலுக்கி வேண்டாம் - போரை
இனிநிறுத்து கொலைகள் பாவம் என்றாய்

படுபொய்யை பாலைஅருந் தென்று -'கள்'ளை
பாத்திரத்தி லிட்டெமக்கு தந்தாய்
பருகுதல்போல் தலைகுனிந்த போது நீ
பாவிஎதிரி கையில்வாளைத் தந்தாய்

கொடியஎமன் கூட்டம் எம்மைக்கொன்று -நம்
குலத்தவரைக் கழுத்தறுக்கும் போதும்
குழிபறித்து இனம்புதைக்கும் போதும் உலகே
படம்பிடித்து பார்த்தும்மௌன மானாய்

பெரியபாவம் என்னசெய்து வந்தோம் - எமது
பேரவல சாவை படம் செய்து
அரும்பெருங்கண் காட்சி செய்ய,ஐ.நா -சுவரில்
அழகுக்கென்று அடுக்கவாஉள் வைத்தாய்?

கைஎடுத்த வாளும்உடல் கவசம்- தானும்
கடலின்மீது வீசிஎறிந் தாச்சு நம்
மெய்யிலுயிர் காக்கஇந்த மண்ணில் -நமக்
கென்னவழி மேதினியே கூறு

கவிபாட மறவேன்!

நானெழுந்து நடந்தாலுந் தமிழன்னை
      தாள்பணிந்தே நடப்பேன்
 கூன்விழுந்து கிடந்தாலும் இன்பத்தமிழ்க்
     கொஞ்சுகவி படிப்பேன்
வானெழுந்த வெயில்போயும் காலையிலே
      வந்து விடுவதைப்போல்
போனதுபோ லிருப்பேன் பின்னால்வந்து
    போற்றித் தமிழ்படிப்பேன்

தேனொழுகும் கனிக்காய் பெற்றவரைச்
        சுற்றிய ஐங்கரன்போல்
நானிலம் சுற்றுவதாய் சொல்லியிங்கே
       நல்லோரைச் சுற்றிடுவேன்
வானுறை தெய்வவலம் செய்யவெண்ணி
      கோவிலைத்தான் சுழல்வேன்
தேன்மலரைச் சுழன்றாடும் வண்டெனவே
      தீந்தமிழ் சுற்றிநிற்பேன்

மீனெழுந்து துள்ளும்மேலே மீண்டுமது
      நீரினில் தானேவிழும்
மின்னலிடு மேகம்செல்லும் மழைமீண்டும்
      மெல்லத் திரும்பிவரும்
என்னமன மெடுத்தாயினும் இன்தமிழ்
      சொல்லமறந் தொருகால்
மென்தமிழில் பணிசெய்ய மறந்திந்த
     மேனி கிடந்திடுமோ

கற்றிடுவேன் தமிழ்ச்சொல்லை எடுத்தெங்கு
       வைப்பதென அறிய
சொற்றமிழைக் கட்டும் வித்தகனாயொரு
      சுந்தரப் பாட்டிசைக்க
பெற்றவளை விட்டுப்போவ துவோபுத்தி
      கெட்டு மறுகுவனோ
சற்றும்அயரேன் சத்தம்செய்யே னென்று
     கத்திக்கத்திச் சொல்லுவேன்