Tuesday, November 30, 2010

மைந்தரே தாருங்கள்!

கடல் குளித்து முத்தெடுத்து கையிலிட்டோமே -அதைக்
    காலமெல்லாம் காத்துமனம் களித்திருந்தோமே
உடல் பறித்து உதிரமிட்டு உலகமெல்லாமே -எம்மை
     உரிமையற்ற இனமுமென்று ஒதுக்கிவைப்பதேன்
விடல் எடுத்த பருவமதில் விடுதலைக்கென்றே - நீங்கள்
      விரைந்துசெல்ல விதிமறித்து விலைகொடுத்ததோ
தடல் எடுத்து அடியடித்து மின்னும்வேளையில் - அந்த
      தருமத்துக்கும் பயமெடுத்து தவறு செய்ததோ

கரமெடுத்த தடியடிக்கு அழிவுகண்டதும் -அந்த
   கடவுளுக்கும் மனமெடுத்த அச்சம் பீதியோ
உரம்விடுத்து உண்மைகெட்டு உலகில் நீதியும் -ஒரு
   ஓரமாக நின்று எம்மை அழியவிட்டதோ
மரமறுத்து வீழுவதாய் மண்ணில் உம்மையே - பெரும்
   மலையறுத்து வீழ்த்தியன்றோ மடமை செய்தனர்
குரல்வளைக்கு கீறி எம்மைக் குரலெடுக்கவும் ஒரு
   கூவியழும் வலிமைகெட்டுக் கொன்றதேனையா

அருமை இந்தஉலகு வெறியும் கொண்டு ஆடுது - பல
   அரக்கமரம் விதைகளெல்லாம் வேரைஊன்றுது
செருக்கெடுத்து சிங்களமும் சேர்ந்துஆடுது -அங்கு
    சீனமண்ணும் இந்தியாவும் பங்குகேட்குது
பருத்துவரும் ஆசை ஈழம் பகிரலாகுது - இதைப்
    பார்த்துலகம் இருப்பதில்லை பகைமைகூடுது
சரித்திரமும் இருப்பதில்லை மாற்றம்கொண்டது -இனிச்
    சாதிப்பதோ எமதுகையில் சற்று விழித்திடு

உரமெனவே ஆனவரே உமது வீரமும் - இனி
  உறங்கியது போதுமதை உறவுக் கீந்திடும்
வரமெனவே தந்து எங்கள் வறுமை போக்கிடும் - எமது
   வாழ்வை வென்று ஓங்கிடணும் வழியை காட்டவும்
சரமெடுத்த வெடிவெடித்துத் தருமம் ஓங்கட்டும் -அது
   தலையெடுத்து மீண்டும்பாதை சரியென்றாகட்டும்
புறமெடுத்து எதிரிவந்த வழியிலோடட்டும் -இனிப்
   போதுமென்றே யெண்ணி நல்லபுத்தி சேரட்டும்

புன்னகைத்து ஈழஅன்னை பொலிவு காணட்டும் -அவள்
   புன்சிரிப்பில் எமது இனம் பொங்கிவளரட்டும்
என்னவைத்து உறுதிதன்னை மனமெடுத்தீரோ -அதை
    உள்ளமெங்கள் கொள்வதற்கு ஒருவழிசெய்வீர்
அன்னைதேசம் காக்கவேண்டும் அவசரம் கண்ணே -நீங்கள்
   ஆவதெல்லாம் உறுதி மனஆற்றல் நேர்மையும்
வன்மை கொண்டு நெஞ்சங்கண்ட வெற்றிதன்னையும் -எங்கள்
   வாழ்வில்காணும் வழியைச்சொல்லி தூங்கப்போங்களேன்
    

மைந்தர் புகழ் பாடுவேன்!

வெள்ளிமலை போலுயர்ந்தோர் வீரத் திருவுருவும்
விளை முரசமொடு சங்கதும்
துள்ளியெழு யென்றூதத் துடித்தேயெழும் சூறை
சுழல்வேகம் கொண்ட மைந்தர்
அள்ளியெடுஎன்றவனும் ஆணையிடஅள்ளுமவர்
அலைகடலின் ஆழிநடமாய்
கொள்ளியிட குறைவிரலும் மில்லையெனக் கதறியே
கூடியழசெய்த குலத்தீர்

வன்னியை அழித்ததோர் வஞ்சனையின் பேய்களெம்
வாழ்வதனைச் சீரழித்தும்
கன்னியர் பெண்கொடுமைக் கொலைவெறிஞர் கயவர்படை
காதகர் கள்ளர்தாமும்
இன்னும் எழில்கொண்டுநல் இன்பவாழ் வெய்தும்நிலை
இருந்திடக் கண்கள்மூடி
சின்னவரென் றேதும்வழி தெரியோமே அறியோமாய்
சிலையாகி நிற்பதாமோ?

சிறுமனது பெருங்கயமை சேர்ந்த குறுஞ்சிங்களத்தர்
செய்தமிழ் கொடுமையாவும்
பொறுக்குமோ என வெகுளப் புரண்ட மாகடலாகி
பிழைகொண்டோர் களமாடியும்
வெறுத்தவரை வீடேக வைத்தவரும் வெஞ்சினமே
விளையாடிப் பந்துமடித்து
குறுகுறெனப் படைகொண்டு குலைநடுங்க வைத்தவர்தம்
கூறுபுகழ் என்னுரைப்பேன்

மலைபோன்ற மைந்தர்திடம் மாமலைகள் கண்டிழிந்து
முகில் கொண்டு தனைமூடிடும்

கலைந்து பெரும் பகைஓடும் கார்த்திகையின் மைந்தர்தம்
கண்ணசைவில் மின்னல் பறக்கும்
அலைந்துவரு தென்றலொரு கணமிருந்து அதிசயித்து
அடஎன்று மருண் டோடிடும்
வளைந்தோடும் நதி நெஞ்சு நிமிர்ந்த இவர்நிலைகண்டு
வழிதிருத்தி நேர்ஓடிடும்


செழித்த திமிர்கண்டு சிறுகாளைபயந் தயல் ஒதுங்க
செல்வழியின் அதிர்வுகண்டு
வழிதன்னில் நின்ற மயில் வானமிடி யோசையென
வரும் மழைக்கு நடனமாடும்
பழித்ததொரு குரங்கோடி பார் இதுவே வீரமென
சிறுத்தை தனைக் கேலிபுரியும்
அழித்தபகை காணச்சுடர் ஆதவனும் நள்ளிரவில்
உதித்தவிதம் ஊரும்பசப்பும்

கொதித்தபால் தமிழ் பொங்கும் கோலமதில் நாணிவிட
குளிர்ந்திடும் காலத்தேவன்
விதித்தவிதி வீரரவர் நேர்மைகண்டு எதிரி தலை
விதி உந்தன்கையில் என்கும்
உதித்தகதிர் தலைவனின் ஒளிகண்டு தம்பியிவ
னென்று தன்கதிர்கள் என்னும்
கொதித்தகரம் கொண்டன்பில் அரவணைக்க புவியோடி
குளிர்வேண்டி சுழன்றுதப்பும்

இளையமல ராய்ஒடிந்த தெமதீர மைந்தர் துயில்
இல்லமாம் இனியசோலை
விளைவீரத் தவச்செல்வர் வீடுகளை தொட்டழித்து
வீரமென தட்டிமார்பும்
கோழைமனங் கொண்டவரை குறுநிலத்து களைநீக்கி
கொண்டாடி ஈழமமைக்கும்
நாளை எதிர்பார்த்திங்கு நாமெழுந்து வழிகண்டு
நடந்தோமே விடிவுபிறக்கும்

கண்டிடுவோம் ஒன்றாகக் காலமதின் கனிபழுக்கும்
காற்றெழழுந் தெங்கள் திசையில்
கொண்டோடும் ஈழரசின் கொள்கைதனை கூறஅதில்
கொண்டநிலை உலகமேற்கும்
அண்டமும் அகிலமதும் அதிசயிக்கும் ஓராட்சி
அமைந்திடும் மீண்டும் பிறக்கும்
வென்றிடும் தமிழீழத் தனியரசு விரைவாக
மைந்தரே நின்றுபாரும்.

Monday, November 29, 2010

நேரம் ஓடமுன் நீயோடு!

கொட்டும் விழிகளில் சொட்டும் கண்ணீர்
விட்டுப் போவது எப்போது
தட்டும் கைகளும் சட்டக் கதவினை
தட்டித் திறப்பது எப்போது
கட்டிக் காத்தோம் மண்ணைப் பகைவனும்
விட்டுப் போவது எப்போது
சொட்டும் குருதியும் நெஞ்சக் குழியினுள்
சுட்டுக் குமுறுது என்செய்வேன்

நெட்டுக் கிடையென நீயுங் குப்புற
நித்திரை கொள்வது முடிவாகி
விட்டுச் சடரென வேகம் கொண்டிட
விழிகள்திறப்பது எப்போது
தொட்டுப் படபட வென்று முடித்திடச்
தொகையா யுள்ளது பலவேலை
முட்டித் தலைவழி வெள்ளம் பரவியுன்
மூச்சுத் திணறிட முன்னோடு

கட்டிக் கல்லொடு கடலில் தள்ளிடக்
கயவனெழுந்திட முன்னாலே
எட்டிப் படபட என்று கொடுத்தவன்
எண்ணம் பொடிபடச் செய்யாயோ
வெட்டிக்கதைகளும் வீணில்பேச்சுகள்
விட்டே சேர்ந்திடு ஒன்றாக
விட்டுதமிழனும் வேற்றுக் கொள்கையில்
வினையாய் அழிவது வேண்டாமே

டக்டக் டக்கென நேரம் ஓடுது
தாவி விரைந்திடு, நீயோடு
திக்திக் திக்கென அன்பில் நெஞ்சமும்
சேர்ந்து துடித்திட விரைவோடு
தம்மம் சரணமும் கச்சாமித்தலை
தட்டிக் குதிபட பயந்தோட
இம்மை எல்லையில் மறுமைகாண்பது
இவனுக் கெப்படி காட்டாயோ


 

Sunday, November 28, 2010

வராத வசந்தங்கள்

வரமொன்று வேண்டினேன் பெண்ணே -நல்
வடிவே நல்வாடாத மலரே செந்தமிழே
உரம்கொண்டு நான்பாடி உயிரே - உன்னை
உலகெங்கும் இல்லாத உயர்வாழ்வு தந்து
பரவிடும் உயர்வான மங்கு -நீள்
பரந்தோடும் மேகமாம் பஞ்சென்ற தேரில்
விரைந்தோடி விளையாடச் செய்யும் -அந்த
விதமான உயரின்பம் விளைந்தாக வேண்டும்

மணம் கொண்டமலராகும் உந்தன் -மீது
மாறாத அன்பெனும் சுவைகொண்டுநானும்
குணம் கொண்ட வண்டாகக் கூடி - ஒரு
குறைவற்ற இன்பங்கள் பெறவேண்டும் ஆடி
பணமென்று பின்னோடும் பூமி - இதில்
பண்பான உள்ளங்கள் குறைவென்று ஆகி
வனம் கொண்ட விலங்கான வாழ்வில் - வேறு
வகையாக நான் மாறும் வாழ்நிலை வேண்டும்

திசையெங்கும் சுழன்றோடும் காற்றில் -நீயும்
திருமேனி சிறகுகள் கொண்டே பறந்து
அசைந்தோடி வலம்வந்து புவியில் - கண்ணே
அயர்வாக குளிரோடும் ஆற்றோரம் நிற்க
பிசைந்தாசை ருசியோடுஅமுதம் - நான்
பேசுந்தமிழ்கொண்டு பாவென்று ஊட்ட
இசைகொண்டு நீபாட நானும் - மாலை
இரவாகும்வரை நின்று இன்பங்கள்கண்டு

ஒளிந்தோடிப் பொழில்தன்னில் ஆடிஓர்
உணர்வோடு களித்தேநல் எழில் தன்னைநாடி
களிகொண்டு திரிந்தாட வேண்டும் - வாழ்வு
கனவாகிப் போகாமல் விடிந்தே எழுந்தால்
அழிகின்றவாழ்வாக வேலை - அடிமை
ஆகின்ற நிலைவீடு பிள்ளைகள், நூறு
பழி சொல்லும் மனையாட்டி கோவம் -இன்னும்
பக்கத்து அயல்விட்டுப் பாவங்களாக

கிலிகொண்டு வாழ்ந்திடும் கோலம் - ஒரு
கீழெண்ணம் பணம்வேட்டை கூடாதகூட்டம்
பலிகொண்டும் எவரையும் பார்க்கும் -ஓர்
பரிதாப நிலைகொண்ட வாழ்வதும் வேண்டாம்
நிலைமாற்ற வேண்டினேன் விதியே -அதை
நிச்சயம்மாற்றிடு நினையன்று கேட்டும்
வலிகொண்டுவாழ்கிறேன் இன்றும்- ஏன்
வாரா வசந்தங்கள் வாழ்வில் நிறைத்தாய்?

Thursday, November 25, 2010

தாகம் தீர்த்திடு!

கண்ணைக் கட்டி காட்டிலிட்டு காலடி மண்பறித்தார்
எண்ணச் சொல்லி சிறையினிலிட்டு இடத்தைக் கொள்ளுகிறார்
உண்ணச் சொல்லி நஞ்சைத் தொட்டு உதட்டில் பூசுகிறார்
அண்ணன்தானே அன்பாய்வாழென் றகிலம் சொல்லுதடா

பெண்ணைக் கொண்டு பிள்ளைகள்கொன்று பேயாய் ஆடுகையில்
மண்ணைக் கண்டு மௌனம் என்று மடமை கொள்ளுவதோ
விண்ணைக் கிழித்து வேகம் கொண்டு விரைந்த கதிரவனும்
உண்மை ஒளிர்ந்து உலகம் காண ஊன்றிநீ உழைக்காயோ

ஆடிய காலும் அமைதியென்றாகி ஆறிடும் மைந்தர்களே
தேடியஎண்ணம் சீர்பெறமுன்னே வேர் என ஆனவரே
வாடிய நாமும் வாழ்ந்திட இன்னும் விடுதலை கைகளிலே
கூடிடவில்லை கோவில் நம்ஈழம் கூத்திடுவோர் கையிலே

வானில் ஒளிர்ந்தே சூரியன் நின்றான் வந்தோர் இருள்முகிலோ
தானிலை கொண்டு தரணிமறைத்து தமிழும்அழித்ததடா!
ஏனிலை கெட்டு இதயமும்வாடி இறுகினர் மாந்தரிவர்
சூனியமில்லை சுடரெனும் ஆதவன்தேய்ந்து சிறுப்பதில்லை

மூடிய மேகமும் ஓடியபோது முன்னிலை கொண்டிடுமே
தேடி எழுந்தால் பகைமையும்  இலவம் பஞ்சென பறந்திடுமே
வாடியகண்ணும் மூடிய இருளும் வாழ்வில் நிலைத்திடுமா
ஓடி நடந்திடு உயர்தமிழ் ஈழம் ஏற்றிட உழைத்துவிடு

நாடு கடந்த ஈழப்பெரும் அர சாட்சியும் எழுகின்றது
தேடும் வழிசரி நேரென ஆகிட தீரமுடன்  நடந்து
கூடுஇழந்தொரு கோவிலெனும் நிலவீடுகளில் உறங்கும்
வாடுமலர்களின் வல்லமனம்கொண்ட  தாகம்நீ தீர்த்துவிடு

Wednesday, November 24, 2010

அழும்வரை சிரிப்பேன்!

மனம்கொண்ட துன்பங்கள் மனமேதா னறிந்தாலும்
      மகிழ்வென்ற நிறம்பூசிடும்
தினம்என்றும் துயர்கூடித் துன்பங்கள் மலிந்தாலும்
       தித்திப்பை விழிகாட்டிடும்
வனமெங்கும் முள்போல வாழ்வில்பல் லெண்ணங்கள்
       வலிதந்து ரணமாக்கிடும்
இனம்காட்ட முடியாது இன்பத்தை முகம்பூசி
       எழில்போல உருமாற்றிடும்

பணமொன்றும் தீர்க்காது பட்டாடை,பல்லக்கு
     தலைதூக்கி எவராடினும்
பிணமென்று விதிசொல்லிப் பின்வாசல் வழிவந்தால்
     பேசாது உயிரோடிடும்
மணமென்றும் மனையென்றும் மக்கள்மற் றுறவென்று
       மறந்தேநம் விழிமூடிடும்
கணந்தன்னில் கரியாகிக் காற்றோடு புகையாகிக்
     கனவென்ற நிலையாகிடும்

களவாக எமன்வந்து கயிறானதெறிகின்ற
    கணந்தன்னில் எதுகூறினும்
விளையாது பயனேதும் விரைந்தோடி உயிர்சென்று
     விளையாட்டு முடிவாகிடும்
களையாது தினம்தோறும் கனவோடு உயிர்கொண்டு
    புவிமீது நடந்தோடினேன்
வளமான வாழ்வென்று வருந்தாமல் திமிரோடு
     பலநூறு பிழை யாற்றினேன்

எனையாளும் இறைவா நீ இதுகால வரைதானு
       மிரு என்றாய் புவிமீதிலே
வினைகொண்டு அழுதாலும் வியந்தேபின் சிரித்தாலும்
     வாழ்ந்தேனே அதுபோதுமே
சுனையோடு மீன்துள்ளும் சுழன்றோடும், வலைவீச
     தெரியாமல் அதில்மாண்டிடும்
நினையாது ஒருநாளில் நிகழ்கின்ற வாழ்வீது
      நிழலாக்கி உயிரோடிடும்

அதுபோலும் விதி சொல்லி அகல்கின்றவரை நானும்
       மகிழ்வோடு கூத்தாடுவேன்
புதுநாளில் எந்நாளும் புலர்கின்ற வெயிலோனைப்
      போலாகி ஒளிவீசுவேன்
மதுவுண்ணும் வண்ணத்து மென்தும்பி எனநானும்
       அழகாகப் பறந்தோடுவேன்
பொதுவாக இன்பங்கள் இன்பங்கள் எனபாடிப்
        போகும்வரை ஆடுவேன்.

Friday, November 19, 2010

ஏனிந்த வஞ்சனை?

சுற்றிவந்து தொட்டுப்போகும் காலைத் தென்றலே - உன்னை
கட்டிவைத்து கால்விலங்கு போட்டவர் உண்டோ
நெற்றிமீது பொட்டுபோன்ற வட்ட நிலாவே - உன்னை
நிற்கவைத்து வேலிபோட்டு விட்டதும் உண்டோ

சுற்றிமுள்ளுக் கம்பிபோட்டு கூடுகட்டியே - எம்மை
வைத்திருப்ப தென்ன வென்று தெரியவில்லையே
விட்டுஇதை வெளியில் சென்று கத்திகூவியே
நாமும்பெற்று விட்டோம் ஈழமென்று பாடவேண்டுமே

வண்ணப் பூவில் வந்திருக்கும் வண்டுமாமாவே
வாழ்க்கைஎன்ன வென்றுசற்று சொல்லி போங்களே
விண்ணின்மீது ஓடிச்செல்லும் வெள்ளி மேகமே
விட்டது யார் வெளியிலென்று சொல்லிதாங்களே

எட்டஉயர் வான்பறக்கும் சிட்டுக்குருவியே - உங்கள்
செட்டைதன்னை எங்குபெற்றீர் எனக்கும் தாங்களே
நட்டநடுவானில் நானும் பறந்து சுற்றுவேன் - இந்த
நரகவாழ்வை விட்டுநானும் மகிழ்ச்சி யாகுவேன்

கண்ணில்நீரைத் தள்ளிஏதும் கண்டது மில்லை
காலில்போட்ட சங்கிலியாய் விடுதலை இல்லை
மண்ணில்ஏது பாவம்செய்தேன் மனசு நோகுது
மாறிவேறு ஜென்மம் கொள்ள ஆசைபொங்குது

இடியிடித்து மழைபொழிந்தால் பூமிக்கு இன்பம்
இரவுமாறி பகல் எழுந்தால் பூக்களுக் கின்பம்
குடிகெடுத்து பார்ப்பதிந்த கயவருக் கின்பம்
விதிபிழைத்த எனக்குமட்டும் ஏன்இந்த துன்பம்

மதிசிறுத்த விலங்கைக்கூட அடைத்து வைப்பவர்
மாலைகாலை என்றுவெளியில் மேயச் செய்கிறார்
கதிசிறுத்த தமிழர்எம்மை அடைத்து வைத்ததும் அன்றி
காக்கிஉடை காவல்கொண்டு சுற்றி நிற்கிறார்

அழகுமலர் வாசம்கொண்டு ஆடி வந்திடும்
அச்சமின்றி வீசிவந்து அணையும் தென்றலே
பழகிவந்த உலகிலெங்கும் இறைவன் கண்டீரேல்
பார்த்துஇந்த பாலன்தந்த சேதி சொல்லுவீர்

கொடுமைபாவம் குற்றம்கொள்ளை செய்யும் கொடியவர்
கூடிஆடி இன்பவாழ்வு கொண்டு மகிழ்கிறார்
வறுமைநீதி தருமம்உண்மை பேசும் நல்லவர்
வாழ்வுமட்டும் நரகமாகிப் போனதென்னவோ?

விதியைஎழுதும் உனதுகைகள் எமது தலையினில்
விடை தெரியா கணக்கெழுதி விட்டதும் ஏனோ
பொதுமுறைமை மனிதம் நீதி விதிகள்இன்றியே
போனபோக்கில் உலகைசெய்து சுழலவிட்டாயோ

தமிழன்மேனி மற்றினங்கள் ஏறி மிதிக்கவே - வெகு
சொகுசுஎன்று எழுதிவைத்த தேனோ ஆண்டவா
அமிழ்துஎடுத்த போதுகண்டம் நின்ற நஞ்சுதான் - உன்
உடல்முழுக்க பரவிஇந்த மோசம் செய்ததோ

உதிர வைத்த மலர்களின் வேதனை!

காலை மலர்ந்திடும் பூவை மணந்தொரு
காற்றுஎழுந் தோடிப்போகும்
நீல வானவெளி நீந்துமொளிச்சிறு
தாரகைகள் விடைகூறும்
வேல்விழி மாதரோ வாசலிருந்து கை
கொண்டவளையல்குலுங்க
கோல வண்ணமிட்ட தானஅழகைப்
பொறாமைவிழி கொண்டுநோக்கி

கீழத்திசைஅடி வானும் சிவந்திட்ட
ஜாலவண்ணங் களைப்பூசி
கோலமென்றே சிறுபிள்ளையைப் போலேதோ
கீறியழித்து கிடந்தான்
ஆழச்சிவந்திட்ட கோபத் திசையினில்
புள்ளியென்றோர் பட்சிக் கூட்டம்
நீலம் சிவந்தது எப்படி என்றுதான்
காணப் பறந்ததைக் கண்டேன்

காரிருள் கட்டியணைக்கப் புவிமகள்
வாழ்விருண்டு போனதென்று
பேரொளி வான்சுடர் பொல்லாச் சினமெடுத்
தே யொளி கொண்டதைத்தேட
வாரியடித் தெழுந்தோடி இருள்வாசல்
மூலைக் கதவடி சந்து
ஆலமரத்தடி சோலை நிழலெங்கும்
நாடி அடைக்கலம்கோர

மெல்லஒளி விரிந்தேகும் பொழுதினில்
உள்ளம் களித்திட நானும்
செல்லுமிடம் அறியாமல் பசும் புல்லில்
சின்ன நடை கொண்டு சென்றேன்
வெள்ளை மலர்களின் கூட்டம் பசுந்தரை
வீழும் பனித்துளி தூங்கி
துள்ளும் கயல்விழி மங்கையின் புன்னகை
போல எழில் தரக்கண்டேன்

மாடுகள் பூட்டிய வண்டி மெல்லஅசைந்
தோடின தாளங்கள்தட்டி
பேடுகளைக் கிளைசேர்ந்து கொஞ்சிப்பேசிக்
கொள்ளும்குருவிகள் சுற்றி
ஆடுமிலைகளின் சத்தம் அணைந்திடும்
காலைக்குளிர் காற்றின் முத்தம்
கூவிடும் சேவலும்பின்னே குரைத்தோடும்
நாயதும்கண்டு நடந்தேன்

ஆகப் புதுமைக ளேதுமற்றஒரு
காலைவிடிய லைக்கண்டு
தேகம்சிலிர்த்து மண்மீது அடிபதித்
தோடிநடந் திட்டபோது
மேகம்மறை நிலவாக ஒளிகுன்றிக்
காணும் முகங்களைக் கொண்ட
சோகமலர்கள் செறிந்து குவிந்திட்ட
ஏதிலிகள்இல்லம்கண்டேன்

கண்களில் நீருடன்காய்ந்த முகங்களில்
வாழ்வையிழந்த துயரம்
மண்களில்மூடிய உண்மைகளை இன்னும்
சீரணிக்காத பருவம்
பெண்கள்நின் றாடிடும்பக்கம் நெருங்கிப்
பிள்ளைகளே இங்கு வாரீர்
வண்ணத்துப்பூச்சிகாள் வைத்தபெயர்உம
தென்னென்றுகூறுவீ ரென்றேன்


2..பறித்துப் போட்ட மலர்கள்

தமிழினி பேரெனதென்றாள் - தமிழ்
வாணி என்றோர் குரல் பின்னால்
கயல்விழி என்றாள் ஒருத்தி - வேறு
கனிமொழி தேன்மொழி குமரி
அழகு தமிழ்ப்பெயர் கொண்டு- அவர்
அன்புமுகமோ மருண்டு
மொழிபேசித் தோற்றதோர் கூட்டம் - என்
முன்னே இருந்திடக் கண்டேன்

பழியிங்கு யாரிடம் சொல்வேன் -சொல்லப்
பலகதை நூறென உண்டு
விழிமீது வழிகின்ற நீரைத் - தம்
விதியெனக் கொண்டவர் நோக்கி
அழகிய செல்லங்காள் உங்கள் - இரு
அன்புக்கரம் நீட்டிக் கொள்ளும்
பழமின்சுவை கொண்டு வந்தேன் - இனி
பண்டமுண்டுஉண்ண என்றேன்

குழல்சீவிப் பின்னலுமிட்டு - விழி
கொண்டநீர் முட்டி வழிந்து
அழுத கன்னக்கள் துடைத்து -ஊடே
அங்கொரு சின்னவள் சொன்னாள்
பழமோ இனிப்பதுமில்லை -ஓர்
பசியென்ற எண்ணமுமில்லை
வளமான வாழ்வழிந்தோமே -இனி
அழவேண்டும் அதுபோதும் என்றாள்

பேச்சின்றி நான் சிலையாக- அந்தப்
பேதையோ இன்னமும் சொன்னாள்
போர்ச்சினம் கொண்டவர் ஈந்த -பல
பொன்போல் பரிசுகள் பெற்றோம்
ஆட்சிக் கொடுமைகளாலே - செத்தே
ஆடும் பிணமென்று ஆனோம்
வாழ்க்கையே போனபின்னாலே - உயிர்
வாழுதல் வேதனை என்றாள்


3. துயரின் கொடுமை...

நீர்த்திரை பாய்ந்து விழிவழிய சிறு
நெஞ்சிலே ஆற்றமை பொங்கிவர
ஆத்திரம்மீற அமைதியுடன் அங்கே
வார்த்தை கனல்கொள்ள வாயுரைத்தாள்
பார்த்தவர் போற்றும்நல் வாழ்வுதனும் ஒரு
பாசமுடன் அன்னை தந்தையென
கோர்த்தமணியாரம் போலிருந்த எங்கள்
கோபுர வாழ்வு குலைந்த தய்யோ

அன்னைபோன தெங்கு நானறியேன் வாடும்
அன்புதந்தை சிறைக் கூடறியேன்
பின்னை பிறந்திட்ட தங்கையவள் எங்கும்
உள்ளனளோ செத்துபோயினளோ?
என்ன செய்தோம் பிழை நாமும் இங்கே இன்று
ஏன் பிரிந்தே தனிவாடுகின்றோம்
பென்னம்பெரியது இவ்வுலகம் இந்தப்
பிஞ்சுமனம்காக்க யாருமில்லை

வீதியில் கொல்ல ஒருவன் வந்தால் அங்கு
வெட்டுவோன் கத்தியை ஓங்கிஒரு
காதுவரை கொண்டு போகும்வரை அதைக்
கண்டும் பொறுத்திரு என்பதுவோ?
நீதியாமோ கொலை நேருமென்று உண்மை
நெஞ்சம் அறிந்தும் பொறுப்பதுவோ
பாதி கழுத்தினை வெட்டும்வரை ஒரு
பாவமில்லையென்று பேசுவதோ

எத்தனைபேர் ஒன்றாய் கத்திநின்றோம்- மனம்
ஏங்கிக்கதறி அலறி நின்றோம்
செத்துஅழிந்து சிதறவிட்டு வெறும்
சிற்பமென சிலையாகி நின்றார்
மொத்தமும் அழிந்து போனதய்யோ அவர்
மௌனம்கொலை துணைஆனதன்றோ
உத்தமரை கொடுங்கோலரசு பல
ஒன்றாயிணைந்து அழித்ததன்றோ

கீறி கழுத்து சிதையவெட்டி இனம்
கீழேகிடந்து துடிக்கையிலே
ஆநீதி செத்து அழிந்ததென்று இன்று
ஆர்ப்பரித்து இனி என்னபலன்?
போன அன்னைஉயிர் வந்திடுமோ ஒரு
புத்துடல் தந்தை எடுப்பதுண்டோ
ஆனதெல்லாம் எழுந்து வந்து எங்கள்
அன்பெனும் வாழ்வு திரும்பிடுமோ

ஏன் உலகெங்களின் கண்ணீரையும் பல
ஏழைகதறிய கூக்குரலும்
வானில் கரைந்து அழியவிட்டு அன்று
வாளாதிருந்து மனம் பொறுத்தார்
கானலென் நீரினைக் கண்டதொரு புள்ளி
மானுமுயிர்தப்ப எண்ணியதாய்
வீணில் கரம்கூப்பி நின்றோமன்றோ புவி
வேடிக்கையல்வோ பார்த்துநின்றார்

கூறி அழுதிட்டு நின்றவளாம் - அவள்
கோலமதைக் கண்டு சொல்லறியா
ஆறிமனம்கொள்ளு மட்டுமவள் -சிறு
பூமுகம்கண்டு பொறுமைகொண்டேன்
மாறும் விதிஒருநாளிலம்மா- நல்ல
மங்கலமானதோர் வாழ்வுவரும்
தேறித்திடம் மனம் கொள்ளுஇனி -அந்த
தெய்வம் இருக்குது கேட்குமென்றேன்

நீசர்கள் ஆட்சி நொருங்கிடணும் அந்த
நேர்மையற்றோர் முடி சாய்ந்திடணும்
தேசமனைத்திலும் நீதி நெறி அன்பு
தேர்ந்தவர் ஆட்சி புரிந்திடணும்
நாசமிழைபவர் கையில் இந்த முழு
நானிலமும் உள்ளமட்டிலொரு
பூமியல்லஇது வேறு ஒன்று, வெறும்
பேய்கள் விளையாடும் பந்து என்றாள்

கூறிவிடை பெற்று நான்திரும்பி கனம்
கொண்ட மனதுடன் வீதிவந்தேன்
மாறித்தெரிந்தது இவ்வுலகம் பெரும்
மாமரங்கள் தலையாட்டி நிற்க
பேயெனசீறிடும் சாலைவண்டி பெரும்
பீதியெழும் சுழல்காற்றின் சத்தம்
காயுமுடல்சுட்டுவேகும்வெயில் இவை
கண்டுவிரைந்து நடந்து சென்றேன்

Thursday, November 18, 2010

ஏங்கவைத்த பொற்காலம் (நகைச்சுவையாக)

ஏங்கவைத்த பொற்காலம்  தலைப்பில் வேடிக்கை எண்ணி மாற்றி எழுதிப்பார்த்தது

பொன்னு வனத்திலோர் பாண்டி -அவன்
போயொரு நண்பனின் வீட்டினில் தேடி
நன்கவிநூல் ஒன்றைவாங்கி -அதை
நாலுநாள் என்றே இரவலும் கூறி
தன்னுடை இல்லமும் வந்தான் -அதைத்
தேடியோர் பக்கத்தில் பத்திரமாக்கி
பின்னர் படித்திட எண்ணி விட்டு
போய் முகம்நீரில் கழுவிடச்சென்றான்

கட்டிய வள் அதைக் கண்டாள் -எண்ணிக்
காரணமேது மறைத்திட வென்றே
எட்டி அதைக் கையில் தூக்கி -அதன்
இட்டபெயர் கண்டாள் பொற்காலமென்று
குட்டிக் கவிதைகள் கண்டே- அதைக்
கொண்டுபோய்த் திண்ணையில் நின்றுபடித்தாள்
சற்று மணித்துளி செல்ல பாண்டி
சத்தமிட்டே கூவ பொற்கவிநூலை

வைத்துவிட்டு உள்ளே சென்றாள் =அங்கு
வந்த பழம்நூலை விற்றிடும் பையன்
சத்தமில்லாமல் கைக்கொண்டு -கணம்
சந்து தெருவில் மறைந்தவ னானான்
பித்துப் பிடித்துக் கணவன் - கோபம்
பேச்சில் எழுந்திடக் கண்டு சிலிர்த்தாள்
வைத்தநூல் எங்கேடி போச்சு என்ற
வார்த்தை கேட்டுத் திரும்பி நடந்தாள்

அள்ளி வீசும் சினம் கண்டு -அவள்
ஆடிப் பயந்து திண்ணை திரும்ப
கொள்ளி அனல் சுட்டதாக வாய்
கொஞ்சமலறித் திகைத்துமே நின்றாள்
அஞ்சிக் கலங்கிட நின்றாள்- நெஞ்சை
ஏங்க வைத்த பொற்காலம் ஈதெங்கே
கொஞ்சம் அலறலைக் கேட்டு -அயல்
கூடி வந்தவனை ஏக்கத்தில் பார்த்து

அஞ்சுகம் நெஞ்சு துடிக்க -- ஏங்க, (என்னங்க)
வைத்த பொற்காலம தெங்கேதான்போச்சு
மிஞ்சி ஒருமுறைதாண்டி நம்மை
ஏங்க வைத்தபொற் காலம் வந்தேகும்
கெஞ்சி கூத்தாடியே வாங்கி நானும்
கொண்டு வந்தேன் பாரு உன்னையும்நம்பி
அஞ்சு வயதினில் இல்லை -இன்று
வந்த பொற்காலமும் போச்சடி என்றான்

Wednesday, November 17, 2010

கவலை மாற்று கண்ணா!

மொட்டாய் பூத்து மெல்லத்தோன்றி மண்ணில் வந்த கண்ணேயுன்
வட்டக்கண்கள் பார்த்தேன் அங்கு வாழும் சோகம் ஏனையா
தெட்டத் தெளியும்வானத் திங்கள் தோற்றும் வதனம் தீயாலே
பட்டுக்கருகும் பூவாய் சோர்ந்தாய் பாட்டுச் சொல்வேன் கேளாயோ!

பட்டும் பாயில் மெத்தை என்று பாரில்வந்தாய் கண்ணே கேள்
கொட்டிப்பனியும் கூதல் உண்டு கொஞ்சம் எண்ணிக் கொள்ளடா
மொட்டும் மலரும் பூக்கள் உள்ள மேதினியில் மெல்லவே
தொட்டுப்பேசும் தென்றல் உண்டு வெட்டும் வண்டும் உண்டடா!

கட்டில் மட்டும் வாழ்வு இல்லைக் காதல் கொண்ட நெஞ்சங்கள்
மட்டுமல்ல மண்ணில் இன்னும் மாயம் உண்டு மைந்தனே
சிட்டுக்குருவி பாடல் கேட்டுச்சிந்தை மயக்கம் கொள்ளாதே
முட்டிக் குதறும் காளை பின்னால் மெல்லச்சேரும் தள்ளாதே

வெட்டும் வாழும் குத்தும் ஈட்டி வைத்தே பலரும் நிற்பாரே
பொட்டும் வைத்து பூவைக்காதில் சுற்றி செல்வார் காண்பாயே
எட்டும் ரண்டும்பத்து என்று எண்ணிப் பாடம் சொன்னாலும்
வட்டம் ரண்டாய் எட்டைமாற்றி வார்த்தை பொய்யாய் செய்வாரே!

சொட்டுக் கண்ணீர் விட்டுக்கொள்ளச் சேர்த்துவை நீ பின்னாலே
விட்டுக்கொள்ளும் வேளை நூறு வாழ்வில்தோன்றும் வையமே
பட்டும் எண்ணம் சோராதே நீ பாதைகண்டு முன்னேறு
தட்டித்தூசாய் எண்ணித் துன்பம் தன்னை விட்டு ஈடேறு

சட்டம் உண்டு சதிகள் உண்டு சங்கதிகள் நூறுண்டு
திட்டமிட்டு வாழ்வை கொண்டு தீரத்துடன் முன்னேறு
வெட்டும் மின்னல் வீழுந்தலையில் வேண்டாமச்சம் என்றேயோர்
சுட்டிக் கவிதை சொன்னார் அங்கே சொல்லும் தீரம்கொள்வாயே

ஏன்? என்ன? ஏது?

வானம் பொழிந்து விளைந்துமென்ன -பூவின்
வாசமெழுந்து மலர்ந்துமென்ன -குயில்
கானம் இசைத்துமே கண்டதென்ன- நம்
காயும் நிலம் ஈரம் காணலையே

விண்ணில் நிலவு எறித்துமென்ன -குளிர்
வீசுந் தென்றல் உடல் நீவியென்ன -சிறு
தண்ணொளி பூமி தழுவியென்ன - எங்கள்
தர்மம் பிழைத்திடக் காணலியே

தேனைக் கடித்து இனித்துமென்ன -நல்ல
தீந்தமிழில்கவி சொல்லியென்ன -வட்டப்
பானை பிடிக்குமெம் மங்கையர்கள் அவர்
பாவம் விமோசனம் காணலையே

கோவிலைச் சுற்றி நடந்துமென்ன ஒரு
கோபுரம் கட்டி வணங்கியென்ன சிறு
பூவிலே மாலைகள் இட்டுமென்ன மண்ணுள்
போனவர் எண்ணம் பலிக்கலையே

ஆயுதம் தூக்கி எறிந்துமென்ன -பெரும்
ஆள்படை சேனைய ழிந்துமென்ன -ஒரு
காகிதம் சட்டம் கடும்விதிகள் -சொல்லி
காட்டியவர் நீதி காக்க வில்லை

வாழ்வைஅழித்தவர் கண்டதென்ன - எண்ணி
வஞ்சம் இழைத்தவர் கொண்டதென்ன -அவர்
ஆயுள் முடிந்து நடக்கையிலே - அள்ளி
அத்தனையும் கொண்டு போவதுண்டோ

கொண்ட உடையதும் சொந்தமில்லை அவர்
கூட உடலுமே செல்வதில்லை புகழ்
கண்ட பதவியும் காசுகளும், அவர்
கையிலெடுத்து விரைவதில்லை

கொன்று குவித்து உயிரெடுத்துத் - தம்
கூட்டம் பிழைத்திட ஆடுகிறார் அதில்
வென்று குவிப்பது சாபங்களும் அவர்
வீடு நிறைந்திடப் பாவங்களே!

மண்ணில் ஈதெங்கும் நடப்பதென்ன -ஒரு
மண்ணும் புரியல்லை மாதேவனே- இங்கு
கண்ணியம் காப்போர் கருகிவிட வெறும்
காதகர் வாழ்வதன் காரணம் ஏன்?

நிலவு தாங்குமா?

அந்த வானத்திலே ஓர் வெண்ணிலவு -அது
தேனொளி கொட்டியது-
அதன் வாழ்க்கையிலே ஒரு சோகமுண்டு
அது மேகத்தில் மூடியது
கண்மூடிநின்றேன் அதுமுட்டியது
என் மூச்சிலும் சுட்டதது
கலி காலத்திலே சில கட்டளைகள்
அதைத் தேயவும் வைக்கிறது


அது கோலத்திலே முழுவட்டநிலா மனம்
குழந்தையின் மென்மையது
ஒளி கொட்டுவதில் பெரு முழுநிலவு அது
கொண்டதுஇருள் உலகு
சில நேரத்திலே அது குறைநிலவு அது
தெய்வத்தின் கொடுமையது
எந்தக் காலத்திலே ஒருவிடிவுவரும் தீங்
கனவுகள் மறைவதற்கு

மன சோகத்திலும் ஒருஇன்பமுண்டு எனச்
சொல்பவர் பலருமுண்டு
வான் மேகத்திலே கார்முகிலெழுந்தால் இடி
மின்னலும் முழக்கமுண்டு
எம் தேகத்திலே ஓர்கிலியெழுந்து மனம்
திக்கென ஆவதுண்டு
அந்த தேன்நிலவானது தாங்கிடுமா -அது
மேகத்தின் பக்கமுண்டு

Tuesday, November 16, 2010

விதியே உன் விதி(முறை) என்ன?

விழிகள் நீரைவழியச் செய்த விதியே ஓடாதே - பல
மொழிகளுண்டு முடிவும்சொல்லு பதிலே கூறாயோ
அழியும் ஈழக்கதைகள் யாவும் ஆக்கும் விதி யாரே! -ஓர்
வழியைச் சொல்லி, நழுவிச் செல்லு! விதியே கூறாயோ!

தமிழைக் கொல்ல எவனும் சொன்னால் தகுமோ நீதானே -இவர்
உமிழக்குருதி உயிரைக் கொன்று ஓடிப் போனாயோ
வழமைக்கான விதிகள் போருக் கிலையே எதனாலே - பெரும்
அழிவைத்தந்தாய் அவருக்கேனோ அடிமை யானாயே

திமிரைக்கண்ட சிங்கத்தலையோன் செருக்கில் நின்றானே - நல்
அமிர்தப் பெண்ணாள் தமிழர்க் கன்னை துயரைச் செய்தானே
நிமிரத்தானே எண்ணிக்கொண்டோம் நிகழப்பெரிதான-  ஓர்
சமரைத்தந்து தமிழன் தலையைச் சரியச் செய்தாயே

எவரைக் கொன்று இன்பம் கண்டாய் இளையப் பருவத்தே - வெறும்
குமரைச் சின்னக் குழந்தை, பெண்கள், கிழவர் இவைதாமே
தவறைச்செய்தாய் தமிழர்க்கென்று காவல் கொண்டாரே -இவர்
மறையச்செய்ய மனமேகொண்டாய் மதுகொள் வெறியோனே

உயிரைகொல்ல ஒருநாள் நீயும் வருந்திக்கொள்வாயே -இவை
பயிரைவெட்டி களையைவிட்ட பாவச் செயலாமே
தயிரைக் கொட்டிப் பாலைகாண தானும் முயலாதே - எம்
தலையைவெட்டி போட்டாய் பின்னர் உயிரைத்தேடாதே

நிலையைப்பாரு வலையைபோட்டுமீனைகொண்டானோ - அவன்
குவளைக்குள்ளே போட்டேஅன்பில் கொண்டேன் என்பானே
உலையில்போட்டு குளிரைபோக்க உதவும் என்பானோ --பின்னே
உண்ணும் போது உண்மை கண்டு ஏது பயனாமோ?

மனுவுக் கொருநாள் மகனைக்கொல்ல விதியே சொன்னாயே தமிழ்
மகளோ டொருநாள் மனதில் நின்று மதுரை எரித்தாயே!
அனுமன் வாலில்தீயை வைத்து இலங்கை எரித்தாயே இந்த
அழகுத்தமிழர் ஊயிரைக் கொல்ல ஆசைஎதனாலே?

எழுதிக்கொள்ளு இடரைத்தாண்டி எழுவோம் முன்னாலே - சாவைத்
தழுவிக்கொண்ட வீரர் இன்னும் தரணிக் குரம்தானே
புழுதி குள்ளே விதைகள் மழையைக் கண்டே எழுமாமே நாம்
விழுவோம் எழுவோம் விழுந்தோ மிப்போஎழுமோர் முறைதானே!

Monday, November 15, 2010

உன்னை நீ மாற்று!


அன்பான உள்ளங்கள் கண்ணாடிபோலெதிர்
ஆழம் புரிந்துகொள்ளும்
முன்னாலிருப்பதை காட்டிவிடும்
முகத் திரைக்குள் ஊடுருவும்
பின்னால் நடப்பது ஏதறியோம் -சிலர்
பேச்சு மயக்கிவிடும்
தன்னால் நடப்பது யார் நிறுத்த இந்த
தாரணியில் முடியும்

கால்வைத்துப் போன திசையினிலே சில
கல்லுமிடித்துவிடும்
ஜில்லென்று மேனி துடிதுடித்து ஒரு
சொல்லும் பிறந்துவரும்
அல்லலுற்று மன மேடையிலே சில
ஆட்டங்கள் கண்டுவிடும்
வல்லென வாழும் அவ் வாழ்வுக்கல்லால்
பல நெஞ்சங்கள் ஏனோஅழும்?

வில்லைவளைத்தவன்முல்லை மலர்கணை
விட்டிடும் மன்மதனால்
எல்லையற்ற சுகம் எண்ணி மனதினில்
இன்பக் கனவுவரும்
கல்லும் கரைந்து கணம் தடுமாறிட
காட்டினில் தீஎரியும்
இல்லையென வாழ்வு ஆகி உயிர் துடித்
தேங்கிடும் நாளும்வரும்

தொல்லை தரும் இந்தவாழ்வு கசந்தொரு
தூர நினைவுவரும்
எல்லைகடந் தந்த வானில் கலந்திட
ஏனோமனம் இசைக்கும்
கல்லை இணைத்தொரு கடல்குதித்திட
காணும் இதயம் சொல்லும்
நல்லவர் நட்புமில்லாத மனம்தன்னை
நாடி இருள்மயக்கும்.

சொல்லும் இனியதோர் சுந்தரத்தேனிசை
செவியில் கேட்டுவிடு
செல்லசிறுவர் மழைலையிலே உந்தன்
சிந்தனையைச் சிதறு
நல்லதமிழ்கவி நாளும்படித்து ஒர்
வல்லமனது கொள்ளு
வாழ்வின் கசப்பினை மாற்று திடமுடன்
மற்றொரு பாதை செல்லு

Saturday, November 13, 2010

தமிழ் தந்த கவிமலர்!

மலரோடு மலர்மோதும் இதழ் நோவு பெறுமோ
மலர்கொண்ட இதழ்தன்னில் ஒருகாயம் வருமோ
அலர்கொள்ளு மிதழ்மென்மை அதுபோலு முள்ளம்
கலைவானில் எதிர்மோதும் களிப்பானதன்றோ

மதுவான தனையேந்தும் மலர்கொண்ட மென்மை
அதுபோல கலைதேர்ந்த உளம் கொண்ட தன்மை
எதுவாக இருந்தாலும் இவர்கொள்ளும்மேன்மை
அதுதானே  தமிழ்என்னும் மொழி கொண்ட பெருமை

கவியென்ப தழகான கலைவண்ணப் பூக்கள்
புவிமீது எழுகின்ற பொழில்நீரின் அலைகள்
குவிந்தாடும் மலர்போலக் கொண்டேபல்வண்ணம்
அவிழ்ந்தோடும் அலையாக அழகாக வளரும்

இரும்பான தழல்சேர எழிலான தொன்றாய்
கரும்பான நெரிந்தாலே கனிபோன்ற இனிதாய்
வருமாதல் போலெம்மை வளமாக்கும் கவியாய்
உருவாக்கும் தமிழன்னை உளம்வாழ்த்துகின்றேன்

ஏங்க வைத்த பொற்காலம்!

தூங்க மரநிழலும் தோய்ந்தோட மாமழையும்
தாங்கும் வாழ்வுதன்னில் தாமரையில் நீரெனவே
ஆங்கும் ஈங்கும் என அலைந்துதிரிந்து வாழ்வுக்
கேங்கவைத்த பொற்காலம் இதுவன்றோ!

பூங்கொத்துவிரியும் புள்ளினம் வான் பறக்கும்
ஓங்கும் எழில்கண்டு உள்ளம் தவித்துஅழும்
பூவாய்சிரித்திடவும் போய்வானில் பறந்திடவும்
ஏங்கவைத்த பொற்காலம் இதுவன்றோ

மாங்காய் கடித்தோடி மல்லிகையை கூந்தலிட்டு
தேங்காய்குரும்பைகட்டி தேரிழுத்து வாழ்ந்தஎம்மை
நான்காய் சுவரடைத்து நடுவீட்டில் சிறையிருத்தி
ஏங்கவைத்த பொற்காலம் இதுவன்றோ !

தங்கை தனியிடத்தில் தாயோ மறு சிறையில்
நாங்க இருளறையில் நடுஅண்ணன் கல்லறையில்
தேங்கி அழுதுமென்ன தெய்வம் வருவதில்லை
ஏங்கவைத்த பொற்காலம் இதுவன்றோ!

தென்னம்ர நிழலில் தென்றல் உரசிவர
வன்னிவயல்ஓரம் வளர்ந்தமுதிர் கதிரறுத்து
அன்னையுடன்சேர்ந்து அகமகிழ்ந்த நினைவெண்ணி
ஏங்கவைத்த பொற்காலம் இதுவன்றோ

கண்ணில்நீர்வழியக் கதறுகிறோம் சிறையிட்டு
பெண்மைஅழித்தெம்மை  பேயினங்கள் ருசிக்காணும்
மன்னன் கொடும்ஆட்சி மறைந்தெங்கள் வாழ்வுபெற
ஏங்கவைத்த பொற்காலம் இதுவன்றோ!

Friday, November 12, 2010

மன்னவனோ இவன்!

கோவிலோ கூடமோ மாளிகையோ -இது
 கொற்றவன் நிற்கவே மாடமதோ
மாவிலை கட்டிய தோரணமோ -இம்
 மன்னவன் சாயச் சிம் மாசனமோ
தேரிலே சுற்றிடும் ஆனந்தமோ -அது
  தென்றலேறி விளையாடிடுதோ
பூவிலே தொங்கும்பல் மாலைகளோ -இடை
  பூத்ததும் வானத்துத் தாரகையோ

ஏறியே ஓடத்தான் மேகங்களோ -இந்த
   ஏழையை சுற்றிநல் தேவர்களோ
கூறியே கொட்டினர் பூமழையோ -இவன்
    கொண்டது வாழ்வில்அரி தல்லவோ
பேறிலே நல்லதோர் பேறிதுவோ -அவன்
   பிரம்மனும் எண்ணாப் பெருங்கொடையோ
மாறியே கொள்ளும் பகலிரவோ -இம்
   மாற்றம்மென் வாழ்வில் பெருங்கனவோ

அன்பினில் இனிய செந்தமிழே -என்
   ஆவி கலந்திட்ட பொன்மகளே
என்பிலும் ஊடேஓர் தீஎரிதே -இதில்
     இன்ப நினைவும் பெருகிடுதே
பொன்னெனும் வெண்ணிலா பூத்திருக்க -அயல்
    பொய்கையில் நீரலை ஆர்ப்பரிக்க
சின்னஇசை பாடித் தென்றல்வர -அதில்
    செவ்விதழ் பூமணம் சேர்ந்துவர

மின்னும் வண்ணவெடி மத்தாப்பென என்
   மேனியும் இன்பமாம் பூச்சொரிய
கண்ணிலே ஆனந்த நீர் பெருக -இது
   கனவேயென் றென்மனம் கேலி செய்ய
தன்னிலே சொர்க்கம் தரைநழுவி..வந்து
   தாழுதே காலடி தாங்கிடுமோ
என்னிலேஅன்பு கொள் செந்தமிழே இனி
   இங்கிவன் உன்மடிப் பிள்ளையன்றோ!

Thursday, November 11, 2010

கவியும் தமிழும் நானும்

கவி என்ற தேரேறித் தமிழென்னும் உலகோடி
களிகாண மனமாகினேன்
செவி கொள்ள இனிதாகச் சிறிதேனும் பதமாக
செந்தமிழ் இசைபாடுவேன்
புவிவாழும் தமிழன்னை பொழுதேனும் மனம்கோணிப்
போகாமல் மொழி போற்றுவேன்
குவி வண்ண மலர்கொண்டு திருஅன்னை அடிபோற்றித்
தினம்தினம் துதி பாடுவேன்

கவிஎன்னும் சுவைவீணை உணர்வென்ற இழைதொட்டுக்
களிகொள்ள இசைமீட்டுவேன்
புவிமீது தமிழன்னை இருபாதம் அடிமீதில்
போயெந்தன் தலை சாத்தினேன்
குவி வானம் பொழிகின்ற மழைபோல இவன்நானும்
குளிர்கொண்ட கவி கொட்டுவேன்
செவிதன்னில் இனிதென்று செந்தமிழ்ச் செல்வியும்
சிலிர்த்திட உணர்வேற்றுவேன்

பழம்தேனும்,வெல்லமும் பாகும் கலந்து ஒரு
பாலிட்ட இன்ப சுவையில்
விழைந்தோர் கவிசெய்து வீரமகள் தேவியவள்
வேண்டுவரை ஊட்டி நிற்பேன்
குழைந்தமுது உண்டவளை கொண்டைக்கு மலர்சூட்டி
குமுத மலர்ப் பாதம்தன்னில்
தளை சந்தமணி சிலம்பு தான்கொண்டுஎழில்கூட்டி
சாமரையும் வீசியே நிற்பேன்

துள்ளியுமே ஓடிவரச் சுந்தரமாய் பாட்டினிலே
சொல்லாலே தாளமுமிட்டுத்
தெள்ளிசையைத் தென்றலென தேகம்தனை வருடியவள்
தீந்தமிழின் தாகம் தீர்ப்பேன்
புள்ளினமும் இசைபாடப் பூவண்டு சுதிசேர்க்கப்
பொன்மாலை இளவேனிலில்
அள்ளியொரு ஆயிரமாம் அழகான கவிசொல்லி
அழகென்றே தமிழ் பாடுவேன்

Wednesday, November 10, 2010

பிரிவென்னும் துயரம்!

நீ அழுதால் நான் வருவேன் அன்பெனும் தேரில் -என்
நினைவழுதால் யார்வருவார் நீயில்லை யாயின்
பூ அழுதால் தேன் வடியும் பூஇதழ் தன்னில் பகற்
பொழுதழுதால் இருள் பரவும் பூமியின்கண்ணில்

மீனழுதால் நீரறியு மாழ்கடல்தன்னில் அந்த
மேகமழை தான்முகிலின் ஊற்றிடும் கண்ணீர்
நானழுதால் நீயறிவாய் நாளதுதன்னில் -இன்று
நாளிலுயிர் வாடுகிறேன் நீயின்றி வீணில்

தாயழுது நான் பிறந்தேன் பூமியில் ஓர்நாள்- ஒரு
தரமழுது நிலம்விழுந்தேன் தரணியில் சேயாய்
வாயழுது சோர்ந்துவிட்டேன் வாழ்வினில் பூவாய் இனி
வார்த்தையின்றி அழுவது என் விதியடி பாவாய்

சேயழுதால் தாயெடுப்பாள் தீர்த்திடச் சோகம் அதை
சேர்த்தணைத்து கொஞ்சிடுவாள் சென்றிடும் கோபம்
நோய்பிடித்தால் தேகம்அழும் நொந்திடும் பாவம் - என்
நினைவழுது நேர்வது உன் நெஞ்சமே கூறும்

பாய்படுத்தால் ஊரழுது பார்க்குமே, காகம்- மாண்ட
பறவைக்காக சேர்ந்துஅழும் பெரிதொரு கூட்டம்
பாய் அலைகள் ஓடியழும் புரள்வது கடலில் - கரை
போயழுது திரும்பிவரும் தனிமையென் தவிப்பில்

தாமரைப்பூ நீரிலாடும் போலது நானும் - இங்கு
தவித்துமனம் ஆடுகிறேன் தாங்கியே நாளும்
நீமறைந்து நிற்பதென்ன நெஞ்சமே இன்னும் என்
நினைவிருக்க வந்துவிடு நிறம்கொள்ள வாழ்வும்

விறகடுக்கி தீயிலிட்டால் வேகுமே தேகம் -சிறு
விரல் நகமும் மிச்சமில்லை சாம்பலே ஆகும்
உறவிருக்கும் போதிலெனில் ஒன்றெனக் கூடு -இந்த
உலகமதில் எதுவும் இல்லை உயிர் சென்றபோது

நிறமழிந்து வெளிறிவிட்டால் உடலது வீணே அந்த
நினைவழிந்து பிரிந்துவிடும் உலகமே போமே
மறந்து உனைவாழ்த லுண்டோ மனமழ நிதமும் -நல்ல
மாற்றத்துக்கு வழியுமுண்டு மாறிடு மனமும்


 

Tuesday, November 2, 2010

உலகம் யாவும் அவளே சக்தி!

உருளும் உலகும் ஓடும்நதியும் ஓங்கிப்பெருகும் கடலும்
புரளும் அலையும் புயலும் பொழுதில்சிதறும் எரியும் மலையும்
கருவும் உயிரும் கனவும் உலகில்காணும் செயல்கள் யாவும்
பெருகும்வண்ணம் உளமே கொண்டாள் அவளே அன்னை சக்தி

தரையும் விண்ணும் தாவும்காற்றும் தாண்டி சென்றால்வானும்
விரையும் அண்டம் வெளியில் பந்தின் குவியல் எனவே சுழலும்
நிரையில் ஓடும் ஒளிவெண்படலத் துறையும் கோள்கள் பலவும்
வரையும் ஒழுங்கில் வார்த்தே செய்தாள் வடிவே அன்னைசக்தி

பனியும் குளிரும்பச்சை இலையும் படரும் கொடியும் தவழும்
கனிகொள் மரமும் காலம்காணும் கனிவேதாரும் வகையும்
தனிமை மனமும் தாங்காநெஞ்சும் தவிப்பும் தாகம்வெறுமை
மனிதம் கொள்ளும் நிலையும் செய்தாள் மங்கா தொளிரும் சக்தி

உயிரில்நின்றாள் ஊனில்சென்றாள் உதிரம் ஓடச்செய்தாள்
வயிறில் பசியும் வாழ்வில்வெறியும் வார்த்தே எம்மைச் செய்தாள்
பயிரில்செழுமை தந்தாள் ஆயின் பருவச் செழுமைதந்தே
உயிரில் தீயை எரியச்செய்தாள் இவளே அன்பின் சக்தி

விண்ணில் சக்தி, மண்ணில் சக்தி, வேகக் காற்றில்சக்தி
அண்டம் எங்கும சக்தி, சிதறும் அனலின் சீற்றம் சக்தி
எண்ணம் கொள்ளும் எதுவும் சக்தி இவளே எங்கும் சக்தி
கண்ணுங்காணா வானத் தொலைவில் காண்பாள்அவளே சக்தி

நானல்ல அவளே எல்லாம்!

கருவாய் உதிப்பாள் கணமே வளர்வாள் கவிதையென மலர்வாள்
தருவாள் மனதில் சுகமும்இதமும் தமிழாம் இவள் எழிலாள்
சிறுவாள் கொண்டே எதிரே நின்று சீறும்பகை முடித்து
பெருவாழ்வெய்த செய்வாய் என்றாள் பேசுந்தமிழ் எனக்கு

வருவாய் எந்தன் திருவே உருவே வாசல்தனைத் திறந்து
மருவாய் எனது மனதில் என்றும் மறையா தொளிவிளக்கு
உருவாய் உள்ளத் தெழுவாய் நடப்பாய் உள்ளம்தனில் இருந்து
பெரிதாய் நதியாய் பெருகித் தமிழாய் பொங்கிவழிந்தோடு

புகழும் பணமும் பொய்யா யுழலும் புவிதானோர் துரும்பு
நிகழும் வாழ்வில் நினையா தவளை இருப்பவனோ விரும்பு
இகழும் பொழுதும் ஏற்றும்பொழுது எண்ணாதெனது என்று
முகிழும்மனதின் தமிழாம் அவளே முழுதும் எனக் கருது

தமிழோஎந்தன் திறமையன்று தலைமேல் கனம் இறங்கு
அவளே வந்தாள் அருகேநின்றாள் அன்னைத் தமிழ்படித்து
குமிழ்வாய் உதிரும் குரலை எழுதாய் என்றாள் எனைக்குறித்து
கமழ்பூ மலராய்த் தமிழில் கனிந்தாள் கவிதைக் கிவள் பொறுப்பு