Wednesday, August 31, 2011

வந்தென்? வாழ்ந்தென்?

வந்துமென் பூமியில் வாழ்ந்துமென் இன்பங்கள்
தந்துமென் தமிழன்னையே
சொந்தமண் இன்றியே துன்பமென் றுள்ளமும்
சோரும் நிலையானதே
பந்தமென் பாசமும் கொண்டுமென் நீதிகண்
பாரா விழிமூடியே
கொன்றுமென் மேனியை குற்றமிழைத்தவன்
கூத்தாடத் தூங்குவதேன்

நின்றுமென் கண்டதென் நெஞ்சில் இலட்சியம்
கொண்டுமென் கொல்லுபவன்
வென்றதென் றாடியே வீரமென் றெம்மினம்
வேருடன் வெட்டுகின்றான்
தென்றல் அணைத்திடும் தீபந்தனை, பெருந்
தீயெனில் ஓங்கவைக்கும்
கொன்றவன் ஆடிக் குதித்திடக் கைதந்து
கொண்டாடும் இவ்வுலகும்

மலரும் மலர்ந்துமென் மதுவை நிறைத்துமென்
மனதில் மகிழ்வில்லையேன்
உலகம் சுழன்றுமென் னொளிவான் எழுந்துமென்
உரிமை எமக்கில்லை யேன்
பலரும் பெருந்துன்பம் பட்டுடல்கொன்றிடப்
பிரியும் உயிர்களும் தென்
னிலங்கை அரசன்கை எடுத்தொரு வாளினால்
ஈழம் சிவந்திட்ட மண்

செழித்தென் சிரித்துமென் சீர்கொண்டு வாழ்ந்துமென்
சிதைகின்ற தெமதீழ மண்
களித்தென் கண்டுமென் கனவுகள் ஆயிரம்
கடுந்துயர் கொண்டது மண்
விழித்தென் வெகுண்டுமென் வீரம் எடுத்துமென்
விலைபேசி விற்றனர் மண்
அழிந்ததென், அடடா ஆகுமோ ஈழமென்
றன்புடை தம்பியர்முன்

உளித்தன் கைகொண்டு உடைத்தனன் சிற்பியும்
உருவாக்கும் கற்சிலை காண்
அழித்தனன் கல்தனை அடித்தனன் உடைத்தனன்
அதனாலே வந்தது பொன்
னெழில்தேன் வடித்தன்ன எண்ணத்தின் அற்புதம்
எழுந்தது கற்சிலைப்பெண்
மொழிதான் இதற்கிலை மௌனத்தின் பரிசென்று
மனம்கொள்ளு செயல்,வார்த்தை பின்

பிறந்தென் வளர்ந்துமென் பேசரும் வாழ்விலே
பெருநிலை அடையினுமென்
மறந்தேன் கிடந்தனன் மயங்கும் நினைவென
மற்றெதும் எண்ணாதுமுன்
னிறங்கிடு வாழ்வினில் சுதந்திரமொன் றுதான்
இருப்பதில் சிறந்ததுஎன்
றுறங்கிடா தேடுநீ உரிமையைப் பெற்றிடு
உன் நிலம் உன்னுடை கண்

இருந்தென் நடந்துமென் இறையெண்ணிக் கைகளை
எடுத்தென் இறைஞ்சியு மென்
வருந்தென் றல்தானுமெம் வாழ்வென்ற தாயினோர்
வீசும்புய லென்று எண்
பருந்துமென் பாம்புமென் படும்சண்டை யாவுமமுன்
பாதையில் வரும் தடை காண்
வருந்தேல் எழுந்துநில் வாழ்வில் சுதந்திரம்
வரும்வரை போராடு, வெல்!

Friday, August 26, 2011

நடநட விடியல்வரை..!


படபட தடதட எனவரும் இடர்களும்
விடுபட உயிர்பெறவே
கடகட குடுகுடு எனநட தடைகளும்
பொடிபட உடைபடவே
கொடுகொடு பிடிபிடி எனத்துயர் தருபவர்
பகைவரும் எமைவிடவே
நடநட கிடுகிடு எனசெய லெடுகரம்
இணைந்திடு ஒருபடவே

கடகட எனஎழு கனதுள செயவென
திடமுடன் எடுநடையே
இட இட முடிஉன திருகர மிடுசெயல்
முடிவுற எமதுயர்வே
சட சடவெனப்பகை தொடவரில் கொதியுறும்
அனலென எமதிடையே
மடமட எனஎரி மறமுடன் தருமமும்
பெருநெருப் பெனஎழவே

தொடைகடகடவென நடுங்கிய நிலைவிடு
மடைவெள்ளம் உடைபடவே
விடுவிடு எனவரும் அலையென நடைஎடு
எதிரிகள் விடைபெறவே
தொடுதொடு குடையென வளையினும் தொலைவினில்
உளவிரி விண்அருகே
மடுமடு என அல்ல மலையென நிமிர்வரும்
கொடுமைகள் தறிகெடவே

தடுதடு வருமவர் தமிழரை நெருங்கிட
துடிதுடி உனதுடலே
எடுஎடு கொடுகொடு எதிரிகள்நடைபிழன்
றுடைபட விழகுழியே
மடமைகொள் ளவரிடம் எதுவென்ன பகர்வதில்
ஒருபய னெதுவில்லையே
அடிதர வருமவர் அதைவிட உடனிடு
அதைவிட ஒருசெயலே

Wednesday, August 24, 2011

இயற்கையில் கொலைஞர்

கனிந்து களித்தனகாண் காய்நிறைந்த சோலைமரம்
குனிந்து களித்தனநீர் கொள்கழனி விளைகதிர்கள்
பனித்து களித்தனநற் பச்சைவெளிப் புற்தரைகள்
மனிதர் தலையெடுத்து மகிழ்ந்தனவாம் மன்னர்படை

மணந்து களித்தனமென் மலரிதழோ வாசம் அதை
கொணர்ந்து கொடுத்தின்பம் கொண்டதிளம் பூங்காற்று
வணங்கிக் களித்தனஎம் வாழ்குடிகள் தெய்வம் எனில்
பிணங்கள் கிழித்தின்பம் பெற்றனவாம் எதிரிபடை

விளைந்து களித்தனநல் வயலோடு பெருந்தோட்டம்
வளைந்து களித்தனவான் வில்லெடுத்த ஏழுநிறம்
நுழைந்து களித்தனபெண் நெஞ்சமதில் அன்பர்முகம்
களைந்து களித்தனராம் காதகர் நற்பெண்டிர்உடை

பொழிந்த மழைகுளித்து பூமரங்கள் சிலிர்த்தன,வான்
எழுந்த ஒளிகுளித்து இளம்பயிர்கள் வளர்ந்தன,எம்
அழிந்த உடல் கிழித்து ஆறாகிக் குருதிதனும்
வழிந்த கடல் குளித்து வாழ்ந்தனராம் எங்கள்பகை

எட்டநின் றாடியது இன்னிசைக்குப் பாம்பு, மரத்
தொட்ட இலைஆடியது தென்றல்வர, வானமுகில்
விட்டு மழைதூறல்விழ வண்ணமயில் ஆடத் தலை
வெட்டிமகிழ்ந் ஆடினராம் வீதியிலே எமையெதிரி

கொட்டியடி முரசமதைக் கொண்டபகை தீரவெனக்
கட்டியெம தீழமதைக் காத்திடுவோம் நாளுமென
எட்டிநட இன்தமிழின் ஏற்றமதைக் கண்டுவிடு
சட்டமதைக் கொண்டுபகை தள்ளிச்சிறை பூட்டிவிடு!

Tuesday, August 23, 2011

என்ன? என்ன? என்னடா?


நேர்மையென்ப தென்ன என்ன, நீதி என்பதென்னடா?
போர்புரிந்து மென்ன என்ன, போர்விதிகள் எங்கடா
பாரிழைத்த தென்ன என்ன, பார்த்து நீதி கேளடா!
ஊரழிக்க மன்னன் என்ன, எமன் விடுத்த தூதனா?

கோலமிட்டு மென்ன என்ன, கோவில்கட்டி என்னடா?
ஆலமிட்ட கண்டன் என்ன, அசுரனைஅ ழிப்பரோ?
காலமிட்ட தென்ன என்ன, கன்னியர்க்கு மேனிதான்
கால்மிதித்துக் கொல்லு என்று காலதேவன் சட்டமா?

காலைப்பூ மலர்ந்த தென்ன, காய் வெயிலும் கொல்லவா?
பாலையில் விழுந்த நீரைப் போலஈழம் செல்லவா?
சேலையை இழந்த பெண்கள் சீரழித்தல் கண்டுமா?
மூலையிற் படுத்துறங்க மேனிஎன்ன கல்லோடா?

வீறுகொண் டெழுந்து நில்லு வெல்லவென்று துள்ளடா
ஆறுபோ லெழுந்துஓடு அன்னைபூமி வெல்லடா
நீறுகொள்ள மேனிகொன்று நித்தம்தீ கொளுத்துவோர்
கூறுபோட முன்பிடித்துக் கூட்டில்தள்ளிப் பூட்டடா  

வாழையுங் கனிந்துவந்து வாயில் சேருமென்றடா
நாளைஎண்ணி நீஇருப்ப தாகுமாமோ கூறடா
வேளையில் பழுக்குமென்று விட்டுகாத் திருக்கவே
ஏழைஅஞ் சுகம் பறந்த இலகுபஞ்சை எண்ணடா

பொன்னிழைத்த தட்டிலில்நாடும் புன்னகைத்து மெல்லவே
நன்மைசெய்து நாமளித்தோம் நாடுஉங்க ளானதே
என்றுருக்க உள்ளங்கொண்டு ஈழமீவ ரென்பதை
இன்னும்நம்பி அண்டைநாட்டை எண்ணிக்காத் திருப்பியோ

முன்னெடுத்த கால்களோடு மெல்லஉண்மை கண்டுநீ
தன்நிகர்த்த தாருமற்ற தன்மைகொண்டாய் நம்புநீ
உன்னெடுப்பில் நீதகர்த்த போர்களங்கள் எத்தனை?
நின்னைநீயே நம்பு வாழ்வில் நீதிஒன்று காணடா !

Thursday, August 4, 2011

வாழ்க்கை

தேனோடும் மனம் மீதோடும் துயர்
. தானோடும் மகிழ் வேயாகும்
வானோடும் முகில் போலோடும் உளம்
. வாழ்வோடும் வழி தானோடும்
மீனோடும் கடல் மேலோடும் அலை
. போலாடும் அது தள்ளாடும்
தானோடும் அலைமீதோடும் எமைத்
. தாங்கும்ஓடம் வாழ்வாகும்

நிலவோடும் ஒளி நிலம்மூடும் அதில்
. நினைவோ டினிமைகள் குதிபோடும்
பலஓடும் முகில் அருகோடும் சில
. அதைமூடும் பொழு திருள்கூடும்
கலையோடும் மனம் தமிழோடும் சில
. காலம் மகிழ்வுடன் இருந்தாலும்
பலமோடும் பெரும் வலியோடும்
. பல துன்பம் மகிழ்வைப் பந்தாடும்

மலைபோலும் மனதிடமோடும் அதில்
. கனிவோடும் நாம் நடந்தாலும்
வலைபோடும் விதி வாழ்வோடும் பல
. வழியிற் துயர்தர விளையாடும்
சிலைபோலும் மனம் இருந்தாலும் அதிற்
. சிலநேரம் விழி வழிந்தோடும்
நிலைமாறும் துயர் தனை ஓடும்வகை
. நினைவை மாற்றிடும் நிலைவேண்டும்

விழிமூடும் வரை வழிதேடும் பெரும்
. வாழ்வில் எதுவரை உரமோடும்
எழிலாடும் மலர் இதழ்காணும் மெது
. இதயம் கொண்டிட வாழ்ந்தாலும்
வழிதோறும் பல குழிகாணும் அதில்
. வீழ்ந்தே அடிபட வலிதோன்றும்
எழிதோடும் நல்ல இயலோடும் அதை
. இல்லா வகைசெய்து எழுநீயும்

வாழ்வோடும் அது வானோடும் சுடர்
. போலாகி ஒளிவந்தாளும்
நாள்கூடும் வரை போராடும் மனம்
. பேராழித் திரை போலாடும்
வீழ்வோடும் பெருவளைவோடும் அது
. வீழ்ந்தாலும் உடன் வீறோடும்
ஆழ்வோடும் வெகுஅழகோடும் அது
. அலைந்தும் உயர்ந்திடக் கரைநாடும்

இனிதோடும் மனம் இதுபோலும் நிலை
. இருந்தும் வாழ்ந்திட வழிதேடும்
கனிதேடும் கிளி என்றாகும் படி
. கலையில் இனிமையை மனம்தேடும்
பனிமூடும் அது விழிமூடும் பின்
. படபட வென்றே இடி தோன்றும்
எமை நாடும் எதுவென்றாலும் அதை
. எதிர்கொள்ளும் மனம் இறை வேண்டும்

மீனோடும் அதுஆறோடும் அலை
. மீதோடும் அது சேர்ந்தோடும்
ஏனோடும் சிலஇளமீன்கள் அதில்
. எதிரோடும் நிலை போலோடும்
தானோடும் குளிர் தண்ணீரில் இவை
. தடுமாறும் அது இடம்மாறும்
தேனோடும் அத் திரைநீரில் அவை
. தேடிச் சுகமும் கொண்டாடும்

வசந்தம் வீசும் காலை.!

இனிதொரு நாளில் எழுகதி ரொனும் இலங்கிடு குவிவானம்
பனிதரு காலை பசும்விரி புல்லில் படகுளிர் மெய்காணும்
தனியிவன் பாதம் தரைபட மலராய் தருவது கிளர்வாகும்
புனிதமும் போற்றி இருளினை ஓட்டி எழுகதிர் ஒளிவீசும்

மனிதரின் வாழ்வும் மகிழ்வினைத் தேடும் மனதொடு விரைந்தோடும்
தனியிடம் போகும் பாதையில் எங்கும் தவறுகள் உருவாகும்
மனதினி லின்றி மகிழ்ந்திட வென்று மறுபடி மனம் வாடும்
கனவினில் காணும் வர்ணங்கள் யாவும் காலையில் மறந்தாகும்

தமிழது கண்டு தாகமென் றாகி தருவது எதுவேனும்
அமுதமென் றெண்ண அதுசுவை மாறின் தமிழது எனையேசும்
குமிழிடு குளிர்நீர் குமிழிக ளென்றும் கடுதியில் பெரிதாகும்
அமைதி என்றாலும் அளவினில்மாற அது உடைந்தழிவாகும்

புவனமும் காண இயற்கை யென்றெண்ணி பகலினில் நிலவோடும்
தவறென மீண்டும் இரவினில் வந்தே தண்ணொளி தனைவீசும்
அவசரம் வாழ்வில் எழுவதுஎன்றும் மனிதரின் மனமாகும்
நவமுகம்கொண்டு நாம்சிரித்தால் நல் மலர்களை மரம்தூவும்

பசுந்தரை மீது பனி வருமோடி பகலவன் அதை வெல்லும்
வசந்தமும் ஓடி வரும்மன தெங்கும் மலர் மணம் நிறைவாகும்
கசந்திடு மனமும் கனிவுற எண்ணக் கனவுகள் விரிந்தாடும்
இசைந்திட மனமும் இன்பமொன் றேதான் எண்ணியே உறவாடும்

Monday, August 1, 2011

காண்பது பொய்யா?

ஆழவெளி விண்ணோடை அழகுத் தோற்றம்
அதனூடே  வெடித்தோடும் ஒளியின் சீற்றம்
கோளமெனச் சுழல்கின்ற குண்டுக் கற்கள்
குலைந்தோடும் தீநாக்கு குழம்பின் வீச்சு
தாழமுக்கக் குளிர்தணலைத் தணியாத் தன்மை
தாமிவைகள் விழிகொண்டும் தெரியக் காணேன்
ஏழையிவன் அறியாதோர் அதிசயங்கள்
இருப்பனவோ, பொய்யோ யான் ஏதும் அறியேன்

 
நீலவிண் பொய்யென்றால் நிலவும் பொய்க்கும்
நீள்நதியும் குளிரோடை நீந்தும் மீனும்
காலமெழும் தேன்கனிகள் கடலும் பொய்க்கும்
கதிரெழுந்து வீழுமதன் காட்சி பொய்க்கும்
ஆலமரம் அதனூடே அணையும் பட்சி
அலைந்து வரும் தென்றலதும் அழகுப்பூக்கள்
கோலமயில், கூவுங்கருங் குயிலும் பொய்யே
குவலயமும் பொய்யேஎன் கூற்றும் பொய்யே

வாழுகிறோம் மெய்கொண்டு வந்தோம் மண்ணில்!
வாசமெழும் மலர்க்கண்டு கொண்டோம் இன்பம்!
வீழுகிறோம் எழுகின்றோம் வீசும் காற்றில்
வாசமது கொண்டோம் பின் வாழ்வும் கண்டோம்
நாளும்பொழு தாகவரும் நம்மைக் காக்கும்
நாணலிடை தொட்டசையும் நல்லோர் தென்றல்
ஆழவிடும் மூச்சின்றிப் பொய்க்கு மாயின்
அத்தனையும் பொய்த்து விடும் அகிலமன்றோ?

அலையாடும் தூரத்தே அணில்கள் ஓடும்
அழகுமயில் துளிவீழ அசைந்து ஆடும்
தலையாடும் இளங்காற்றில் தருக்கள் ஆடும்
தானாடி சலசலக்கும், தொலை தூரத்தில்
நிலவோடும் நிற்காது நெருங்கி மேகம்
நிலமோடும் அதனோடு நிதமும் ஓடும்
கலைகொண்டு காண்கின்றேன் காணுமிவை எக்
காலமும் பொய்யாவதிலைக் காணல் மெய்யே!