Monday, July 9, 2012

மன மேடையில் விதி எனும் புயல்

தட்டத் தடதட தட்டத் தடதட
தட்டத் தடதட தா
தட்டும் கைகளைக் தட்டிக் குமுறின
தலைமேல் மேகங்கள்
கொட்டும் துளிவிழ கூரையில் மழையோ
கூட்டும் இசைராகம்
டட்டொட் டகுடகு  டட்டொட் டகுடகு
டட்டொட் டகுவென்ன

அண்ட வெளிக்கொரு அழகியமங்கை
அகிலம் மணமகளாள்
மண்டல அழகன் ஆதவன் கூடும்
மணநாள் இதுவென்றே
கொண்டலை வீசும் கடலின் அலைகள்
காலை ஒளிமின்னும்
கண்கவர் நகையாம் பொன்னும் வெள்ளி
கைமெய் மேலணிந்து

வெண்பனி ஆடை உடுத்தும் காலை
விடியல் வேளைதனில்
தண்மனதோடு தலைவன் கரங்கள்
தழுவும் நிலைகாண
கொண்டவன் தாரும் கூறைச்சேலை
கூடும் ஒளிவெள்ளம்
பூண்டவள் கொள்ளும் புதிதோர்வாழ்வை
பொறுத்தே காத்திருக்க

தட்டியடிக்கும் இடியின்சத்தம்
தரிகிட தடமேளம்
கொட்டிட வானத் திடையேகாணும்
கூசுமொளி மின்னல்
பட்டு மினுங்கப் படம் செய்தாரோ,
பாரும் எழில் கொள்ள
நட்டநடுநிசி: பெய்யும் மழையில்
நங்கை குளித்திருந்தாள்

சட்டமியற்றும் விதியின் எண்ணம்
சார்ந்தே இருப்பதில்லை
விட்டது தொட்டது வினையாய் மாற்றும்
விதியின் விளையாட்டு
கொட்டிய மழையும் கூதல் காற்றும்
குடுகுடு மேளமதும்
சட்டெனமாறிச் சினமும்கோபச்
செயலெனக் கண்டிடவே

பட்டுப் படர்ந்திடு காற்றும் கதியெழப்
பாய்ந்து சிதைத்தனவோ
தொட்டுக் கைபடத் தோன்றும் எதையும்
தூக்கி அடித்திருக்க
வெட்டும் மின்னலில் தூவிடும் மழையோ
வெள்ளி கம்பிகளாய்
விட்டேஇடைவெளி வீழ்ந்திடப் சிதறும்
வெள்ளிச் சிலம்புகளாய்

நட்ட மரங்கள் நாட்டிய மாடுது
நனையும் ஆடுகளாய்
ஒட்டியிருந்தன உயரக் கிளையினில்
ஓரிரு குருவிகளும்
வட்டமடித்தது வானெனும் அசுரன்
வாயல் ஊதும் புயல்
கட்டிய மாலை பூக்கள் பொட்டு
கரைத்தே வழிந்தோட

கட்டுக் கடங்கா தென்னை மரங்கள்
காற்றில் பெரிதாட
சுட்டுபொசுங்குது மின்னல் ஒர்பனை
சட்டென தலைபொசுங்க
நெட்டிமுறித்தொரு பேய்களின் அரசன்
நிலமக ளுடனான
முட்டப் பெரும்பகை கொண்டதுபோலே
முடிவில் எழில் சிதைய

ஒட்டமுறிந்த மரங்களின் கிளைகள்
உதிர்ந்த கைவளையல்
தொட்டே யிழுத்த வெள்ளம் ஊரில்
துகிலின் அலங்கோலம்
மெட்டி கழன்றது மெல்லிடைகாலால்
மின்னிடும் நீர்தேக்கம்
தொட்டவன் செயலால் உதிருது மரங்கள்
துயரக் கண்ணீராம்

*******************

No comments:

Post a Comment