Monday, July 9, 2012

வானத்திலே ஏற...

  
(இது  படத்தை கண்டு எழுந்த கவிதை )


காற்றைக்கேட்டேன் ஊற்றைக் கேட்டேன்
கதறிக் கண்கள் வழியத் தென்னங்
கீற்றைக் கேட்டேன் கிளியைக் கேட்டேன்
கிழக்கே தோன்று மொளியைக் கேட்டேன்
ஆற்றைக் கேட்டேன் அலையைக் கேட்டேன்
அன்பென் றெந்தன் வாழ்விற் கொண்ட
பேற்றைப் பெரும்பே றெங்கே என்றே
பித்தங் கொண்டே பேசித் திரிந்தேன்


வானத்தேறிச் சென்றாள்; என்றே
வண்ணப் பூவும் காட்டும், துள்ளும்
மீனைக் கேட்டால் அருகில்வந்தே
மேகம் மீதில் கண்டேனென்னும்
தேனைத் தின்னும் வண்டோ தெற்குத்
திக்கில் என்று வெறியிற் கூறும்
பூனை முன்னால்பாய்ந்தே மண்ணுள்
போனாள் என்று காலால் கீறும்

ஊனைத் தீயில் போட்டோமென்று
உராரெல்லம் சொன்ன ராயின்
நானத் தனையும் நம்பித் தானும்
நங்கை யவளை மறப்பே னாமோ
ஏனென் கண்ணை விட்டே நீயும்
எங்கோ மறைவில் நின்றாயென்றே
மானைப் போலே அச்சம்கொண்டாள்
மங்கைதன்னை தேடித் திரிவேன்

பூநெய் யுண்ணும் வண்டாய் தேடி
போகு மென்னைக் கண்டே ஊரும்
ஆனான் பார்பைத் தியமாய் போனான்
அய்யோ என்று  பின்னாற் பேச
வானில்ஓர்நாள் வந்தாள் நிலவில்
வண்ணம் காட்டி நின்றாள் கண்டேன்
தேனை ஊற்றும் திங்கள் வதனம்
தினமும் வானில்கண்டேன் பின்னால்

ஈனத் தனமென் றன்பில் கொள்ளா
தெழிலாள் அவளைச் சேரச் சென்றேன்
ஏனோ அந்த மரணப் பாறை
என்னை வாவென் றுள்ளம் கொள்ள
நானும் நடையும் கொண்டேன் அங்கே
நாளில் சிலதே மேகம் காணும்
வானத்தழகும் வடிவும் கண்டு
வானில் ஏற எண்ணம் கொண்டேன்

எரியும் கதிரே இவளைக் கண்டால்
எங்கே யென்று கூறாய் என்றேன்
விரியும் வானத் திடையே வெயிலும்
வீழும்நிலையில் கண்டேன் கண்ணில்
தெரியும் மேகக் கூட்டத் தூடே
தூரம் மேலே ஏறிச் சென்றால்
உரிமை யெந்தன் உறவுக் குரியாள்
உள்ளா ளென்று எண்ணும் போது

மரணப்பாறை மீதில் இயற்கை
மடியில் முன்னே வந்தேன் ஆழக்
கரணம் போடும் முகில்கள் கூடக்
கதிரும் வீழக் கடலைக் கண்டேன்
தருணம் தன்னில் ஏதோ எந்தன்
தலையுள் மின்னல் ஒளியின் சிதறல்
முரணாய் எழுமோர் குரலைக் கேட்டேன்
மௌனம்பேசும் மொழியைக் கேட்டேன்

என்னே விந்தை எதிரில் இயற்கை
ஏற்றும் இன்பம் இழையக் கண்டேன்
பொன்னாய் வீசும் கதிரும் மின்னும்
பூவாய் பஞ்சாய் மேகம் விரையும்
அந்நேர் தெரியும் ஆழக்குளியில்
அச்சம் பீதி தோன்றும், உள்ளம்
மின்னல்போலும் மேனி கொள்ள
மெல்லக் கூறும் ஒலியும்கேட்டேன்

அழகும் அச்சம் பிறிதே ஆனால்
அங்கே ஒன்றாய் இணையக் கண்டேன்,
எழிலின்அருமை இயற்கை வெறுமை
இழையக் கண்டேன், இனிமை கொண்டே
இளகும் மனமும் இறுகும்உணர்வும்
இரவும் விடிவும் இறப்பும் பிறப்பும்
அறிவும் தெரியாநிலையும் என்றும்
அனைத்தும் எதிர்கள் இழைதல் கண்டேன்

சுற்றும் புவியின் முட்டும் வானம்
சோதிக் கனலாய் பரிதிவட்டம்
கற்று மறியாக் கதிர்வாழ் அண்டம்
காற்றும் காற்றின்மூச்சாய் உயிரும்
சுற்றம் உற்றார்  கொள்ளும் அன்பும்
செல்லும்போதில் சிந்தை அழுதல்
முற்றும்முழுதாய் எதிராம் முனைகள்
மோதல் இன்றி இணையக் கண்டு

இயற்கை அதுபோல் இவளும்நானும்
இரண்டே, தவறி ஒன்றாய் கண்டேன்
வியப்பே யில்லை இங்கே நானும்
வானத்திடையில் அவளும் நின்றாள்
வையமீதில் வருவோம் போவோம்
வாழ்வில் எல்லாம் வகுத்தாள் சக்தி
இயற்கை அழைப்பால் சென்றாள் நின்றேன்
இன்னோர் நாளில் வருவாள் செல்வேன்

கதிரும் வீழ்ந்தது கறுத்தது வானம்
கனவும் போனது நிஜத்தில் நானும்
உதிரும் இலைகள் பூக்கள்கண்டேன்
உறவும் உதிரும் ஓர்நாள் என்றேன்
புதிரும் விடையும் இரண்டும் கண்டேன்
பூமிப் பந்தின் சுழலு முணர்ந்தேன்
எதிலும் ஏதோ அர்த்தம் உண்டு
இயற்கைப் பின்னல் ! எழுந்தேன், நடந்தேன்

************************

No comments:

Post a Comment