Thursday, March 29, 2012

அதிஷ்டமில்லாதவன்

நீரில் எழுதிவைத்தேன் நித்திரையில் பூப்பறித்தேன்
.  நெஞ்சிலெழும் கற்பனையை போற்றினேன்
வேர்இல் செடியை வெட்டி விதைநிலத்தில் ஊன்றிவைத்து
.  விளையும் என்றுகாத்து நிதம் ஏங்கினேன்
ஊரும்வானிடையே ஓடிவண்ண நிலவெறிக்க
.  உலரவென்று துணிதுவைத்து விரித்தவன்
பேரில் பெரியவனாய் புகழெடுக்க வேண்டுமென்று
.  பேரை மாற்றி மாற்றிப் பார்த்து தோற்றவன்

நாரில்பூ இணைத்தே நல்லதொரு மாலை கொண்டேன்
.  நாரிருக்க பூஉதிர்ந்து போனதேன்?
ஊரில் மேகம் மழை ஊற்றுகின்றபோது எந்தன்
.  உச்சிமுகில் மட்டும் பொய்த்துப் போனதேன்?
தேரில் தெய்வவலம் தெருவில்எங்கும் போன தெந்தன்
.  திக்கில் மட்டும் இருள்படர்ந்து காண்பதேன்?
யாரில் உண்மையின்று வாழுதென நொந்துமனம்
.  ஏது என்னை யும்எதிர்த்துச் செய்தவன்?

தாவும்அலைகடலில் தனி படகில்செல்ல மழை
.  தூற ஓட்டைபோட்டு ஓடவிட்டவன்
ஆறில் நீர்நடந்து அருவியென வீழதிசை
.  அறிதலின்றி நேர்படகு விட்டவன்.
போரில் வெல்லவொரு தந்திரமென் றெண்ணி நறும்
.  பூவை அம்பில் வைத்து வீசித் தோற்றவன்
ஏரில் வயலுழுது எள்ளு விதைத் தறுவடைக்கு
.  ஏக்கமுடன்  நெற்கதிர்க்காய் காத்தவன்

வாரிக் குதித்துவெள்ளம் வயல் வரம்பை மீறியதாய்,
 . வாலறுந்து போன பட்ட மானவன்
கூர்இல் கத்தியெனக் கொள்கையில்லாப் புத்தியதும்
 . கொண்டு இந்தப் பூமியிலே வாழ்பவன்
பேரில் பாவியெனப், பெண்ணறியாக் காதல்மனம்,
 .  பொன்னிலவு பொய்த்த வானமாகினேன்
பாரில் வாழ்வில் நடுப் பாதையிலே முள்ளிருக்கப்
 .  பார்வைவிழி மூடியிருள் செல்கிறேன்

Wednesday, March 28, 2012

தமிழே துயர் நீக்கும்!

கலையும் கனவின் கற்பனை யாவும்
கவலைதந்தே போகும்
அலையும் மனதில் ஆசைகள் எழவே
தொலையும்நிம்மதி தானும்
மலையும் எதிரே நிற்பதுபோலும்
மனதுள் துயரம் சூழும்
கலையும் தமிழும் இசையும்கூடின்
கணமே துன்பம் போகும்

இலையும் தளிரும் பூவும் பூக்கும்
இளமை கொண்டே தமிழும்
குலையும் கொள்ளும் கனியின் இனிமை
கொண்டே நிதமும் காணும்
அலையும்கடலும் அதுபோல் ஆழ
மறியாத் தமிழின் பெருமை
தொலையும் வண்ணம்இன்றிப் பேசத்
தமிழை முழுதாய் கொள்வோம்

குலையும் நடுங்கும் கொடுமைசெய்வோர்
கொத்தும் பாம்பும்கூட
அலையும் காற்றி லெழும் இன்னிசையாம்
அதிலே மயக்கம் கொள்ளும்
வலையும் மீனைக் கொள்ளும் அதுபோல்
வண்ணத் தமிழும் எம்மில்
நிலையும் மாற்றும் நெஞ்சை கவரும்
நினைவை அன்பால் வெல்லும்

தலையும் மேவி வெள்ளம்பாயும்
நிலையும் வந்தாலென்ன
அலையும் கதிரும் இரவில்தோன்றி
ஒளியைத் தந்தாலென்ன
சிலையும் உயிரைப் பெற்றே வீதி
சென்றாலும் நற்தமிழோ
கலையும் இன்பம் தமிழின் இனிமை
காணும் என்றும் மாறா

இலையென் வாழ்வில் தமிழேயின்றி
இன்னோர் மொழி; எவ் வூறு
நிலை யென்றாலும் தமிழே யன்றி
நில்லா துயிரும் கூடு
விலை யென்றில்லா வாழ்வில் துயரம்
விலகும் தமிழைப் பாடு
தொலை வென்றாலும் சுற்றும் மனதோ
தமிழ் சொல் எந்தன் நாடு

Monday, March 26, 2012

ஏணிப் படிகள்

வெற்றியின் படிகளில் கற்களும் குறையுது
வேண்டும் வேண்டும் தோழா
வற்றிய சுனைமீன் வாழ்ந்திடத் துடிக்குது
வானம் பொய்க்க லாமா
பற்றிலும் பரிவிலும் பக்குவம் நிறையுது
பாசம் விட்டுப் போமா
சுற்றிலும் இருள் மறைந் தோடுது ஓடுது
சோதி தோன்றும் தோழா

கற்றவை பாடங்கள் கலைப்பது கோவில்கள்
காணும் தென்னர் தோழா
உற்றவை தவறெனில் உணர்வது பயனது
உள்ளம் மாறு வாரா
அற்றது இனிதென ஆக்கிட வந்தவர்
ஆன தழிக்க லாமா
குற்றமும் செய்தவர் குரலது ஓங்கிடின்
கொண்ட பிழைகள் போமா

பெற்றது வாழ்வினைப் பிறரது கையினில்
பட்டு அழியா வாமோ
அற்புத வாழ்வினை ஆண்டவன் செய்தது
யாருக் குரிமை கொல்ல
முற்றும் அழியவென முழுது மெனதுவென
மோகம் கொள்ளு வானேன்?
புற்றி லரவமென பச்சைவிஷம் பரவப்
பார்க்கத் தீண்டுவாரோ

மற்றவர் தகைமையும் சற்றும் குறைவதில்லை
மனிதன் என்ப தாலே
சுற்றும் வாழ்விலறம் கொண்டு பூமியிடை
செய்த பாவம் ஒழிய
சற்றும் பகையுடைமை யின்றி மனம்மகிழ
சார்ந்த  வீடு உனது
பெற்றுவாழ்ந்திடென விட்டுநிலைதளரும்
பண்பு கொள்ளுவாரோ??

மழைநின்ற அதிகாலைநேரம்!



தடதட எனஇடி தொலைவெழக் கருமுகில்
தரும்மழை ஓய்ந்துவிட
திடுதிடு மெனமனம் திகிலுறப் பெரும்புயல்
தீர்ந்தொரு அமைதிபெற
சிடுசிடு என மனம் சினந்தவள் முகமெனச்
சிவந்திடும் வான்வெளிக்க
வெடவெட எனக்குளிர் வீசிடும் காற்றிடை
விடியலில் வெளிநடந்தேன்

கலகல வென ஒலி எழுமதி காலையில்
கதிரவன் வரும்திசையில்
பளபள எனும்ஒளி பரவிட இருளவன்
பயமெழத் தலை மறைந்தான்
கொளகொள எனநீர் கொட்டிய மழைவிடக்
கூடிய தூவானம்
சிலபல துளிகளைச் சிதறிடத் தூறலில்
சிணு சிணுத்திடக் காணும்

சலசல எனும்குளி ரோடையில் மழைவிழச்
சடுதியில் நீர் பெருகி
கிளுகிளு எனநகை புரிபவள் போல்மனக்
கிளர்வுடன் அதுவிரைய
மளமள எனவளர் மரங்களும் நீரிடை
மலர்களும் சருகுதிர்த்தே
விழவிழ விரிந்திடும் இயற்கையின் அலையெனும்
வியனுறு கலை வியந்தேன்

வகைவகை யெனப்பல மலர்விரி சுனையிடை
வடிவுடன் தாமரைகள்
தகதக எனஒளிர் கதிரவன் தனையெண்ணித்
தளர்வுற இதழ் விரியும்
பளபள எனவெயில் பகலென வருமுதல்
பறவைகள் துயில் கலையும்
படபட என அவை பரப்பிய சிறகுடன்
பறந்திடும் வான் வெளியும்

கடகட வெனஉருள் காளைகள் வண்டியில்
கவினுறு சந்தமெழும்
அடியடியென அவன் அதட்டியும் நடைதரும்
அழகினை அவைபேணும்
மடமட எனமது வருந்திய வண்டினம்
மலர்களில் மயங்கிவிடும்
கொடுகொடு வெனச்சிறு குழந்தைகள் அன்பினை
கொண்டிட அழதுகொழும்

எழஎழ விழுந்திடும் சிலந்தியும் வலைதனில்
எழும்விழும் பின்னுயரும்
அழஅழ ஆவதுஎதுவுமே இலையென
அடுத்ததை செய உணர்த்தும்
குளுகுளு எனப் பொழில் குளிர்வினை யெடுமலர்
குலவிடும் இனிதென்றலும்
குறுகுறு எனமனம் கொளும்சுக உணர்வினைக்
கொண்டிடச் செய்தகலும்

Saturday, March 24, 2012

நான் என்னும் ஒருவன்!

புரியாத பாடம் அறியாத மொழியில்
தினம்தினம் படிப்பவன் நான்
தெரியாத திசையில் தேரினைஒட்டித்
திக்கற்றுச் செல்பவன் நான்
கரியான இரவில் காகத்தை தேடி
கண்மூடிச்செல்பவன் நான்
பரிமீது ஏறி பரலோகம் தேடும்
பாவத்தின் காதலன் நான்

விரியாத வானம் விசையற்ற பூமி
விருப்போடு வாழ்பவன் நான்
எரியாத வெய்யோன் இறங்காதமேகம்
இதனூடே வாழ்பவன் தான்
பெரிதான ஞானம் பிறக்காத புத்தி
பெருமோட்சம் பெறஆசை காண்
கரியாகும் மேனி காத்திடத் தீயில்
கடுந்தவம் செய்பவன் யான்

சிரிக்காத கண்கள் சினந்தோடும் சொற்கள்
சிலைபோலும் இதயமும்தான்
சரிந்தோடும் நதியாய் வழிமாறியோடி
விதியெண்ணி அழுபவன் நான்
விரிந்தோடும் பாம்பை வளர்த்திடஎண் ணி
வளைபுற்றில் கரம் வைப்பேன் காண்
பிரிந்தோடும் பாதை இரண்டாகப் போனால்
பிழைவழி செல்பவன் நான்

முறிகின்ற முருங்கை மரம்மீது ஊஞ்சல்
மகிழ்வோடு கட்டுவேன் காண்
அரிகின்ற போது நுனிக்கிளை நின்று
அடிக்கிளை வெட்டுவேன் காண்
திரிகின்ற தென்றல் புயலாகும்போது
தெருவிலே எதிர் நடப் பேன்
புரிவதோ எல்லாம் பிழைஎன்கிறார்கள்,
பெரும்பிழை இவர்மொழிதான்

Friday, March 23, 2012

முதல்வன்


(இந்தப் படத்துக்கு கவிதை எழுத கேட்கப்பட்ட கவியரங்கிற்கு
எழுதப்பட்டது.)


முதல்வன்

நீதிதேவன் கூற்று:

இளமலர்க ளெங்கும்நிறைந் திலங்குமெழில் சோலை
இன்னிசையும் தென்றலதும் இன்பந்தரும் வாழ்வை
பழமினிதும் சுவைமதுவும பசியதனைப் போக்க
பால்நிலவும் பனிகுளிரும் படர்ந்தினிமை சேர்க்க
எழும்உதய ஒளிஅழகும்  உச்சிவெயில் நிழலும்
என இனிமை வாழ்வளித்தாள் இயற்கை எனுமன்னை
அழமனமும் இழிவுடனே அஞ்சும்வகை செய்து
அழகுலகை அழித்தவனே இனிநிறுத்து போதும்!


மலைகடலும் வயல்கள்கொளும் மரகத மாவுலகை
மாலைவெயில் மஞ்சளுடன் மனம்கவரச்  செய்து
சிலையழகு மங்கையரும் செல்வருடன் தம்மைச்
சேர்ந்தவரும் கூடிவிளை யாடுமெழில் இல்லம்
கலைநிறைந்த மனமகிழ்வும கொண்டஒரு வாழ்வை
காணெனவே நல்லியற்கை கட்டமைத்த போதும்
கொலைபுரியுங் குற்றங்களை  கொடுமைகளைத் தூண்டி
குலைநடுங்க வைத்தவனுன் குணத்தை இனி மாற்று !



அந்தநேரத்தில்...
(வேறு  )                                  

மேக முடைந்து விழுந்தது வோஒரு
மின்னல் அடித்திடவே
தேக மதிற்கொடுங் கோரமெடுத் தொரு
தீயபெரும் உருவம்
சாக வரமிவன் தந்திடுவா னெனச்
சொல்லு முடல் முறுகி
ஆகக் கொடுமுருக் கொண்டொரு வன்திடு
மென்று முன்னே குதித்தான்

தூய மிளிர்வுடன் ஆடை அணிந்தவன்
நீதியின் காவலனை
பாயுமொ ளிக்கதிர் பட்டுஒ ளிர்ந்திடப்
பக்கமிருந் தவனை
நீயும்எ னக்கொரு தூசு கணக்கென
நெஞ்சினில் எண்ணிவிடு
நேயம் விடுத்திடு வாஉன்தீரமும்
நேரினில் காட்டிவிடு

எத்தனை தூய்மை அழித்தவனாம் இவன்
என்னுடன் நீசமமோ
கத்தி யழித்திட வெட்டிப்புதையெனக்
கட்டளையிட்டவன் காண்
சத்தியம் நேர்மையும் விட்டவர்பக்கமே
சார்ந்திருப்பேன் அறிவாய்
இத்தரை மீதினில் நீதிய ழிந்திட
என்செயல் காரணமே!

பித்தெனும் பிஞ்சுகள் பேசரும் பெண்குலம்
பிள்ளை முதியவர்கள்
அத்தனை பேரையு மள்ளி நெருப்பிடை
அன்று எரிய வைத்தேன்
பொத்தெனப் போட்டே எரித்ததும், பாமரர்
வெட்டும் குழி பதுங்க
முத்தென வெண்விழி கொட்டவர் மூச்சினை
மூடி மண்போட்டழித்தேன்

கத்தும் குரலெழும் போது இனித்திடும்
காண்பதும் ஆனந்தமே
குத்து மொலிக்கொரு கூவியழும்குரல்
கோடிஎன் இன்பங்களே
சித்த மிழந்தனை என்னை எதிர்த்திடும்
செய்கையை விட்டுவிடு
புத்திரனே உந்தன் பொன்னுடல் காத்திடப்
போ இதில் தோற்றுவிடு

  ---வேறு----

(நீதியின் தேவன்: உலகைப் படைத்த சக்தியைப் போற்றிக் கூறுதல்)
கண்களைத் தந்தவள் காணெனில் நல்லதைக்
காணுதல் முறைமை யன்றோ
பெண்ணிலே காதலாம் மென்னுணர் வாக்கினாள்
பிரியமாய் வாழவன்றோ
எண்ணெயுள் எரிகின்ற ஒளிவைத்தும் திரியுடன்
ஒன்றிடத் தீபம் செய்தாள்
எண்ணமதில் தூய்மை செய்தனள் ஆணும்பெண்

ஒன்றாகி வாழவன்றோ!

கண்களோ காணுயிர் கொல்லென்று சினங்கொண்டு
கசந்திடும் நெஞ்சமாகி
பெண்மையைச் சிதைத்தவர் பிறன்மனை கொள்ளவும்
பிழைபடும் மனிதமாக
கண்ணியம் அற்றவர் காடுறை மாக்களாய்
காதகர் பேய்களாக்கி
மண்ணிலே மாந்தரை மாற்றினாய் கொடுமையே
மறுபடி எச்சரித்தேன்

வெண்ணிலா நீலவான் தந்தவள் நிலமதில்
விளைந்திடப் பசும்பயிர்கள்
வண்ணமோ
நீலமாய் வைத்தனள்  ஆழியை
வடிவொடு பூமி செய்து
கண்ணிய வாழ்வுறக் கல்வியும் அறிந்திடக்

கற்றிடும் ஆற்றல் தந்தாள்
திண்ணிய கொள்கைகள் தினந்தின மழித்துநீ
தீமைகள் செய்யவைத்தாய்

நீலமும் பச்சையாய் நிறமிட்ட புவிதன்னை
நீஇரத்த மோடவைத்து
ஓலமும் கதறலாய் ஊரெல்லாம் அழுதிட
உலகதைச் சீரழித்தாய்
காலமாய் பெண்மையை அழித்ததைப் பிறர்விழி
காணவும் செய்துநின்றாய்
ஞாலமே நல்லதை விட்டு நடந்திட
நாளும்பகை வளர்த்தாய்                     


(வேறு---)
கண்கள் சினத்திடக் கண்டனவோ அவன்
காட்டிய வெஞ்சினமோ
புண்ணென வேதனை கொண்டுளம் மீதினில்
பொங்கிய கோபமதோ
வண்ணம் சிவந்திட உள்ளவனாம் கொடும்
வஞ்சகன் கைகளுடன்
எண்ணியதில் வென்று இவ்வுலகைக் கொள்ள
எட்டித்தன் கைகொடுத்தான்

வெற்றி கொள்ளப் பலப் போட்டிவைத்தார் அதில்
வெல்லுமவர் பொறுத்து
சுற்றி சுழன்றிடும் பூமியதில் பலர்
சந்தோச  வாழ் வினுக்காய்
குற்றமிழைத்திடா மாந்தர்களும் உயிர்
கொன்று குவித்தவரும்
சற்று பொறுத்திடக் காத்திருந்தார் மனம்
சஞ்சலம்கொண்டிருக்க

நீதிக்குக் காவலன் முன்னிருந்தான் மனம்
நேர்மையைக் கொண்டிருந்தான்
பாதிக்கு மேலாய் இழந்தவர்கள் நீதி
பார்த்துக் துடித்திருந்தார்
சாதிக்கவே சித்தம் கொண்டிருந்தும் அது
சாத்திய மாகிடுமோ
ஊதிப் பெருத்திட்ட பேய்களுக்குப் பலம்
ஓங்கிப் பெருத்திடுமோ

வையகம்நின்று சுழல்கிறது வெயில்
வாரி அடிக்கிறது
மெய்யகம் நின்று துடித்திட ஓர்குலம்
மாய்ந்து கிடக்கின்றது
பொய்யில் பிறந்தவன் செய்ததெல்லாம்
புவி சொல்லித் தெரிகிறது
பையவெனும் ஒருநீதிவென்றே அந்தப்
பாமரர் வாழுவரோ?

நினைவும் வாழ்வும்

மலர்கள்மேனி அனலின்மூச்சு மருகச்செய்யுதோ - இன்ப
மாலைநேர முலவும்வேளை மனதில் துன்பமோ?
உலரும் வேளை கருமைமேகம் உதிரும் தூறலோ - நன்கு
உறங்கும்வேளை இடியினோசை அதிர வானமோ?
புலரும் வேளை கதிரும்கூதல் போக வைக்குமோ -அன்றிப்
பரவும் சூடு வலியென்றாகப் பாடு துன்பமோ ?
பலரும் வந்து  பாடிஆடிப் பழகும் போதிலே -நிற்கும்
பளிங்குமேடை உருளும்பாறை பனி யென்றாகுமோ?

வசந்தம் வீசு மாலைநேரம்  வந்த புயலிதோ - அன்பு
விளையுங் காலை வேகமழையில் விளையுந் துன்பமோ?
அசதியாகத்  துயிலும்கொள்ள ஆந்தைஅலறுமோ - கட்டில்
அசைந்து பேய்கள் உறையும் காட்டில் இருந்தபோலுமோ?
திசையும் திக்கும் தெரிந்திடாத திக்கில் பயணமோ - கால்கள்
தேர்ந்திடாத ஒற்றைப்பாதை  துளைக்குங் கற்களோ?
அசைந்திடாத காற்றும் மூச்சின் ஆழம் காணுதோ - உள்ளே
இருந்துஆடும் உயிர்துடித்து என்ன வாகுதோ?

இனியராகம் மீட்டுங் கைகள் ஏந்தும்வீணையோ - கைகள்
இசையும் மீட்ட எழுந்த ராகம் எதுமுகாரியோ?
பனிதிரண்டு இலையிலோடி துளிவிழுந்ததோ - கண்கள்
பலமிழந்து அழுதுநாளும் வலியிழந்த்தோ?
புனிதகோவில் மணியுமாடிப் பரவுமோசையோ - ஓசை
படரவானில் இடியென்றாகிப் புவி அதிர்ந்ததோ
கனியின்மீது தேனைஊற்றிக் கடித்தினிக்குமோ - நாவில்
கசந்து வேம்பின் சுவையென்றாகிக் காணும் கோலமோ

தனிமையாக முழுநிலாவும் தண்மை ஓடைநீர்- இன்பம்
தருமுலாவில் அலறும்ஓசை இதயம் உறையுமோ
வனிதைகாணக் காதல்கொண்டு வந்தணைக் கையில் - காணல்
கனவு என்று மனைவிதொட்டுத் துயில் எழுப்பவோ
குனிந்து கோவிற் தெய்வம்வேண்டக் கருணைதாருமோ - அன்றி
கொண்டபாரம் வீழும்வண்ணம் குடைசரிக்குமோ
மனிதவாழ்வில் ஒன்று  மாறி வேறென்றாகுமோ - மஞ்சம்
மலர்கள் தூவித் துயிலஎண்ண மலருள் முட்களோ?

Thursday, March 22, 2012

வாழ்வும் துயரும்

இன்ன லினித்திட வேண்டுமெம் வாழ்வினில்
ஏற்ற மெடுத்திட நாளும்
மென்னுள்ள மீதினில்  தோன்றும் வலிகளை
மெல்ல மறந்திட வேண்டும்
தன்மை திடம்நெஞ்சில் வேண்டும் துயர்களைத்
தாங்கும் உரம்கொள்ள வேண்டும்
புன்னகை கொண்டிட வேண்டும் புயல்தனும்
போகும்வழி நிறைந்தாலும்

செந்நெல் வயலிடை ஊற்றும் மழைவெள்ளம்
சுற்றி வரம்பினுள் நிற்கும்
அந்நிலை விட்டுயர் வாகில்ஆ  டுங்கதிர்
அத்த னையும்கெட்டுப்  போகும்
தன்னள வைமீறித் தோன்றும் துயரினில்
தாங்கிடா துள்ளமும் சோரும்
பொன்னென் மனதுபுண் ணாகும் துன்பமது
போகும்வரை மௌனமாகும்

துன்ப நிலைதனை மாற்றும்  வழி கண்டு
தொட்டதெல்லாம் நலமாக
புன்மைகள் மேல்விழப் பூவாய் எண்ணிமனம்
பொல்லாப்பு நீக்கிடவேணும்
நன்னறிவோ டுயர் மாற்றம் பெறும்வழி
நாடியடைந்திட வேண்டும்
இன்னலும் இன்பமும் வாழ்வில் நிதம்நிதம்
எத்தனை மாறுதல்கொள்ளும்

விண்ணில் கதிர்வர வைத்த விதியினை
விட்டு விலகுவதில்லை
தண்ணிலவோ தடு மாறும் தினம்வர
தாமதம் ஓர்நிலை யில்லை
மண்ணில் மனங்களும் கொண்ட விதியினில்
மாற்றங்கள் ஏன்திட மில்லை
விண்ணொளி சக்தியே வைத்து விளையாடு
விந்தை நாமுன்கையில் பொம்மை

இயற்கையின் மௌனம்


நீர்சாட்சி நிலம்சாட்சி நீலவிண் முகில்சாட்சி
ஊரெல்லை மரம்சாட்சி உறங்காத மதிசாட்சி
ஏர் சாட்சி எருதோடு எரிநதாறும் தீசாட்சி
தேர் சாட்சி திருக்கோவில் தொங்குமா மணிசாட்சி

கார் மேகம் பொழிமழையும் கடுமிடியும் புயல் சாட்சி
சேர்ந்தாடுங் கிளைமீது சிறுகுருவி அணில் சாட்சி
நேர் வளர்ந்த பனைசாட்சி நிமிர் தென்னை மரம் சாட்சி
கூர் முள்கொள் நெருஞ்சியுடம் கொதிவான வெயில்சாட்சி

வார்த்தைகளில் சொல்லிவிட வழியற்ற பரிதாபம்
பேரவல மொன்றிழைத்துப்   பிறர் காணா  ஏமாற்றி
யார் எவரும் இல்லையென நாற்பதெனு மாயிரங்கள்
ஊரோடு உயிர் கொழுத்தி உன்மத்த மாடியவன்

பார்த்திருக்க அன்னையவள் பாலகனைப் பிள்ளைதனின்
சீர்செம்மைத் தமிழ் மாந்தர் சிரசெல்லாம் கொய்தவனை
ஒர் சாட்சியில்லாது ஒழித்துவிடக் குழிதோண்டி
வாரிமண் மூடி உடல் வாழ்வழித்துச் சிரிப்போனை

நீதிதனும் கேட்கவில்லை நேர்மைமனம் துடிக்கவில்லை
ஆதி முதல் உலகாளும் அன்னையவள் இயற்கைதனும்
பாதிதனும் பார்த்தவையில் பட்ட பழி துன்பமதை
நீதி தெய்வசபையேறி நேரில் உண்மை கூறவில்லை

பொய்கை மலர் கண்டதனை போயுண்மை கூறாதோ
தெய்யெனவே துள்ளுமலை தெரியுமுண்மை சொல்லாதோ
பெய்மழையில் தூறல்தனும்  பிணமான காட்சிதனை
மெய் நீதிவழி சென்று மேலுலகில் கூறாதோ

கையிழந்து காலிழந்து கண்ணிழந்து நெஞ்சிழந்து
மெய்யிழந்து மேனியுடன் மிச்ச உயிர் விட்டுவிட
உய்யும் வழிஅற்றோரை ஓடிவந்து காவாதோ
பொய்யுரைத்த நீசர்களைப் பிழையுணர வைக்காதோ

எல்லையெது மற்றபெரும் இயற்கையோ, மங்கையரை
பொல்லாத கொடுமை செய்யும் பிணியோரைக் கேட்காதோ ?
தொல்லைதனும் தினம்செய்து துணிவோடு பொய்பேசும்
வல்லவரென் றானவரை  வான் தெய்வம் கேட்காதோ?

வேண்டும் சக்தி தேவி!

 

அழகான ஓடை அதிலோடும்நீரும்’
அரும்பான மலர் போலும் வாழ்வும்
எழவானில் வெயிலும் ஒளிர்கின்ற கதிரும்
இதை மிஞ்சும் விதமான அறிவும்
விழ வாடும்பூக்கள் விரிகிற முகைகள்
விதமாக துயர்போக மகிழ்வும்
பழமோடு தேனும் பருகும்நற் சுவையும்
படர்கின்ற மனம் வேண்டும் தாயே!

கொதிகின்ற நீரும் குளிர் கூடும்பனியும்
கொத்தும் வல்லூறாகக் குணமும்
மதிவானில் குறையும் மழைதூற துளியும்
மணல்வீழும் நிலை தாழவேண்டாம்
கதியோடு புயலும் கடல் கொண்ட சினமும்
கரை ஏறக் குடிகாணும் அழிவும்
விதியாக வேண்டாம் வினைதீர்க்கும் தேவி
வியக்கும் நற்பெரு வாழ்வுவேண்டும்

நகை சிந்தும் போது நான்கொள்ளும் இன்பம்
நல்லோர்க்கு இன்னல்கள் ஆகா
வகையன்பு கொள்ளும் வாழ்வொன்று வேண்டும்
வருந்தாத உள்ளங்கள் வேண்டும்
பகையொன்று வேண்டாம் பரிதாபம்வேண்டாம்
பழமென்று இனிதான உறவும்
புகைகொண்டுதீயும் பொழுதொன்று வேண்டாம்
புன்னகை புன்னகை வேண்டும்

குயிலோசை கூவும் குரலின்பந் தானும்
கனிவோடு காதோரம் செல்லும்
வெயில் வீழும் மலையில் வீச்சோடு அதிரும்
விளைவான எதிரோசை வேண்டாம்
பயிலும் நற்கலைகள் பாம்பாக வேண்டாம்
படும்தூறல் மழைகண்ட தோகை
ஒயிலாக ஆடும் ஒய்யாரம் போதும்
உளம்மீது மகிழ்வொன்றே வேண்டும்

ஒளி வரும் இனியென்ன !

பொடிபடத் துயர்தனை உடைபட விடுபுறப்
படுபகை யினிமறந்தே
துடியிள மனமதில் தொகையென வரமகிழ்
வுடனிரு துணிவெழவே
கடிதென வுளமனக் கடுகயமை கள்தெளி
வுறவெடு உளமகிழ்வே
மடியிடை கிடதமி ழன்னைமலர் முகமதை
மலர்வுறச் செயநிதமே

படியினைப் பலகடந் தனமினி யெனஒளி
பகல்வரத் துயருறவோ
முடிதனை உடையமன் னவனெனப் பெருமையில்
மலர்ந்திட எது தடையோ
இடிமின்னல் பொழிமழை யுடனிருள் விலகிய
தினிச்சுக மெனமறந்தே
படிகவி தைகள்பல முறபல முறையவை
பருகிட மதுஎனவே

தடிதனைக் கரமதில் எடுகுரு வினைக்கொடுந்
தவறெனக் கருதுவமோ
படிதனைப் பலகடந் திடஅடி தனையுளம்
பதமுற வெனஅறிவோம்
கொடிதென நினவுறக் கருதுவ தெவருமில்
குளமிடை கமலமென
வடிவினை யெடுமலர் வரும் கிழக் கெனும்திசை’
விடிவுறக் கதிரொளியே!

Sunday, March 4, 2012

இம்மையும் மறுமையும் ( சக்தி தா!)

இம்மையும் மறுமையும்
( சக்தி தா!)

ஒளிதா விழிதா உலகில் இளமை
உணர்வும் உயர்வும் தா
களிதா மொழிதா கனிவாய் திகழும்
கருணை மனமும் தா
எளிதாய் உணரும் விதமும் அழகும்
இனிதாம் வளமும் தா
தெளிவா மனமும் தெரிந்தே எதையும்
தொடுமோர் செயலைத் தா

வெளிதா வளிதா விளையும் எதுவும்
விரும்பும் வகையில் தா
துளிதான் எனிலும் துயரே இலதாய்
துலங்கும் வழியைத் தா
பழியாய் எதுவும் படரா தினமும்
பகலின் வெளுமை தா
சுழியாய் அலையும் இடரும் தொடரா
சுவையாம் வாழ்வைத் தா

மொழிதா செழுமை தமிழால் கவிசெய்
திறனும் உரமுந் தா
மிளிர்வாய் வருமின் னலையாய் தினமும்
மனதில் கருவுந் தா
பொழிவாய் மழையாய் புதிதாய் பொருளும்
பொருளில் நயமுந் தா
தெளிவாய் மனமும் திகழும் வகையில்
தேவி அருளைத் தா

நெளியா நடையும் நிமிர்வாய் உருவும்
நினதன் பினதால் செய்
அழியா திடமும் அறிவும் செயலும்
அருகா பெருகச் செய்
தொழிலோ நிதமும் பெருமைசொலவும்
தொழவும் உனையே செய்
எழிலே வரமாய் எதிலும் நிறைவாய்
இலங்கும் வகையாய் செய்

தழலே ஒளியின் பெரிதே யிதுபோல்
தினமும் நினைவில் நில்
விழலாய் அழியும் சிறுவாழ் வினிலே
வெறுமை விலகச் செய்
உழலே உயிரின் உடலின் இயல்பாய்
உருகித் துவளும் மெய்
குழலாய் கருகிக் குறுகிக் கோணிக்
குழியுட் புதையும் பொய்

மழையாய் இடியாய் மலராய் மணமாய்
மலையும் மதியென் றே
நிழலாய் வெயிலாய் நினைவாய் செயலாய்
நிலைத்தாய் நீயன் றோ
குழலாய் இசையாய் குழந்தை வடிவாய்
குலவும் தாயா கி
அழவும் சிரிப்பா மதிலும் கலந்தே
அணைத்தும் வெறுத்தாய் நீ

ஒளிவா னிடையே உயர்வாய் சகலம்
உருவாக் கும்சக் தீ
அழிவால் இதுவாழ் வணையும் வேளை
அருள்வா யொருமுக் தி
விழியால் அசையும் வெளிவா னிடையே
விண்மீ னாகச் செய்
கழிவாம் இதுவாழ் வினிமேல் வேண்டாம்
ஒளியென் றுனதாய் வை!