Wednesday, July 11, 2012

அஞ்சலி

கொடுத்தவனே தாவென்று பறிக்கும்போது
கொண்டதெது காயாமோ கனியோ பிஞ்சோ
விடுத்தவனே வேண்டும்போ துடைத்து வீழ்த்த
வேடிக்கை நாமும் என்செய்வோம் கண்டு
தடுத்தவனை நிறுத்தவும் முடியவில்லை
தானாக உயிரையும் பிடித்துக்காக்கும்
கொடுத்ததோர் திறனையும் கொண்டோமல்லோம்
கொண்டவன் கொண்டிடக் குறுகிநிற்போம்

இருட்டோ செல்லும்வழி இல்லை வண்ண
ஒளி நிறைந்த பாதையோ மலர்கள் தூவி
இருத்தி யொரு ரதமோட்டி அழைத்தார்தானோ
இல்லையொரு பல்லக்கில் ஏற்றினாரோ
கருத்தவழி விண்மீன்கள் தொங்கும் பாதை
கனத்தவெடி வானதிர சத்தமிட்டு
பருத்த அனல் சிதறுமோர் பாதைதானோ
பனிகுளிர கூதலும் படர்ந்ததுண்டோ

நிறுத்தியொரு மூச்சிழுத்து விட்டோம் இங்கே
நிருத்தியமோ இல்லை வெறும் நிழலே வாழ்வு
வெறுத்து வரும் காற்றானதுள்ளே செல்லா
விட்டதெனில் அடுத்தகணம் வருவோம் பின்னே
பொறுத்த உடல் பகலிரவாய் இயங்கம்தன்னும்
போய்விடவே துருத்தியினை மூடிவைக்கும்
தறித்தமரம் வீழுவதாய் அந்தக் கணமே
தரணிஉடல் தழுவ உயிர் தனித்ததாகும்

ஒருத்தர் தனும் நிரந்தரமென்றில்லை யம்மா
ஓடிவிளையாடிடும் உதைபந்தாட்டம்
பருத்த களைப்பாகிவிட பாதியாட்டம்
படைத்தவரே குழல் ஊத ஆள்மாறாட்டம்
இருந்தவரோ போகஇன் னொருத்தர்வரவு
இதுவேதான் உலகென்னும் இயற்கை பதிவு
வருத்தமுறும் மனத்தோடு இறைவன் அருளால்
வணங்குகிறேன் அஞ்சலிகள்! அமைதிகாண்க!

No comments:

Post a Comment