Thursday, February 14, 2013

என்நாடு போல வருமா?

பனிதூங்கு மிலையாடப் படர்காற்றில் குளிர்மேவப்
பெரும்போர்வை கொளும் நாடிதே
இனிதான தமிழோசை எழுங்காலைப் பொழுதெங்கே
இடி மேகம் இசைகீதமே
குனிந்தெங்கள் நடைமாறிக் குணம் மாறிக் குரல்மாறி
கொளவென்று விதிகூறுதே
இனியென்று மனதாசை இன்பங்கள் பொலிகின்ற
எழில்நாட்டைக் கண்காண்பதோ

கனிதூங்கு மாவின்கிளி கலகலத் தோடு மணில்
கிளை தூங்கி மந்தி யாடும்
நுனி தாங்கி நெல்முதிர நிலம் நோக்கு வயற்கதிரும்
நிமிர் வானம் தொடுமாலயம்,
புனை பானை நிரைக ளயல் புதுவாழை கனியழகும்
பேச்சினொலி தமிழ்நயந்து
நனைந்தாடு தாமரைகள் நங்கை மதிமுகம்போலும்
நளினமிவை காண்பதெப்போ

இலைமீது தனைமோதி எழுந்தோடி வருங்காற்று
இன்பவரு டலின்போதையும்
கலைவண்ண நடமாடும் கண்கவருந் தோகையொடு
காயும் புகை யிலைவாசமும்
அலையோடு குளக்காற்று ஆலமரத்தடி, கோவில்
அயலுள்ள பெட்டிக்கடையும்
இலையென்ற வாழ்வாகி இருந்திங்கே என்பாடு
எனதாகு மேமாற்றமே

பனை உரசல் சர்ரென்று பழம்வீழ அணிலோட
பயந்தோடும் குருவி கூச்சல்
தனியாகக் குயிலொன்று தருமீது துணையின்றித்
தருமோசை துயர் கீதமும்
மனையோடு ஒருவேம்பு மாதுளையும் கமுகென்று
மனம் பொங்கு மெழிற்காட்சிகள்
இவைகாணா தொருவாழ்வும் இருந்தென்னபோயென்ன
எனமனது அலைந்தோடுதே

நீள்சாலை நிலம்கீழே நெடிதோடும் வண்டிகளும்
நிழல் மரங்கள் அற்றபாதை
தோள் மாறித் திடமற்ற துணிவழிந்த கோலமுடன்
தோல்வி மனம் தொய்ந்ததான
வாழ்வுணர்வு என்றாகி வண்ணங் கரு காக்கைநிறம்
வகையேனோ தோலென்றெண்ணி
நாளென்ன பொழுதென்ன நலமாயி னுளம்காணும்
நலிவு மிகுந்தேங்கும் வாழ்வே!

Tuesday, February 12, 2013

எழு தமிழா

அழுவது சிறுமைநில் எழுவது பெருமைகொள்
அணியெனத் திரள் மனிதா
தொழுவதுஇழிமையும் துவள்வது பழமையென்
றுணர்வெடு நட தமிழா
அழிவது இவரல்ல அகந்தையி னுறைவிடம்
அவரெனக் குறிசொல்லடா
கழிவது உயிர், இது கலங்கிடும் பொழுதல்ல
கரமெடு பதில் கேளடா

பழிவர உ ரிதல்ல படைகொண்ட துயிர்வாழப்
பழங்கதை யெடுத்துரைடா
உளிகொண்டு பொழிவதில் உருவரும் சிலையெனில்
எடு உளி படை தமிழா
தெளிவில்லை மனங்களின் எனில் இவர்பிடியினில்
திணறென ஒருவிதியா
களிகொண்டு புவியதும் கலகமே பயனெனக்
கருதிடில் சரியென்பதா

வழியொன்று மிதைவிட வருமெனத் திடமிலை
வளை மதியொடு உலகை
புளிந்தெடு மனதில் புதுவைகை உணர்வுற
பொறி உனதிற மையினை
துளிதனும் எமதுயர் தெரிபவர் எவருளர்
தனதொருசுகமு மெண்ணி
அழகுறும் உலகது இருந்திடவருவது
ஒளியெனக் கொளல்மடமை

மொழியதும் இனமதும் அழியென எழுபவன்
மதிபிறல் தரமுடையோன்
கழி யுயிரெனக்கொலை  வெறியுடன் குடிகளைக்
கெடுப்பவன் எதிரியொன்றே
பழிகொள்ள எழுநட பருவத்திற் பயிரிடப்
பழயவைமற ஒருதாய்
வழிவரும் தமிழனைவிழி வழிஒழுகுதல்
வெகுண்டெழு நிறுத்துவதாய்

நல்லமுதம்


சொல்லத்தெரியவில்லை - இந்த
. சுந்தர ரூபபொற் சிங்காரக் கோட்டையில்
. சொர்க்க மிருக்கும்நிலை
மெல்லவிரியு மெல்லை - எந்தன்
. மேகம்மறை நிலவான மனந்தனில்
. மீண்டு மொளிக் கலவை
நல்ல மலர்கள்தனை - இந்த
. நானிலம் மீதிற்சொரி கிறதே,யெழில்
. நந்தவனத் தினிடை
செல்லப் பிறந்த இசை - அன்புச்
. சிந்தனை வானத்து தென்றலெடுத் தென்னில்
. தந்தது போதை தனை

கல்லு முருகும் கலை - இந்தக்
. கன்னித் தமிழ்நிலாக் கற்பனை விண்ணிலே
. காயுமொளிக் குளுமை
வெல்லம் குழைத்தினிமை  - அதை
. வேரிற் பழுத்த பலாவின் கனிச்சுளை
. வெட்டி குழைத்தமுதை
நல்லினித் தேன்கலந்தே - அது
. நாவிலினித்திடப் போதுமோவென்றிட
. நாலாறு கற்கண்டினை
மெல்ல இட்டுக் கலந்தே - இந்த
. மேன்மை யொளிக் கதிர் மிஞ்சும் அவைதனில்
. மென்றிடத் தந்த நிலை!

Sunday, February 10, 2013

கவிதைச் சோலை

பொழிலலை தளும்பிய பொழிதினி லிதழுடை
புதுமலரென மனமும்
எழிலுற அலைதென்ற லிளமல ரழைந்தென
இதமுட னெவர்முதுகும்
வழிசெலும் பொழுதிடை வருடிய சுகமெழ
விழி கிறங்கிய வகையும்
மொழிதமிழ் கவிதைகள் முழுதெனப் புனைகவி
மிகுமிட மிதுவெனவோ

கருவிடை யுயிர்தரு கடவுளு மருள்சொரி
கலைபயி லறிவகமோ
குருவிடை பயிலெனக் குறுஅறி வுடனிரு
கலைமகன் அறிவெழுமோ
தருபலகனிகளும் தலைநிலம் விழுதென
திகழ்பெருந் தருவிதுவோ
பெருமள கவிதரு புலமையில் இணைதொலை
பலகையும் இதுவெனவோ

மெருகிடக் கலைமகள் வருவளோ கமலவெண்
மலர்தனும் இதிலுளதோ
முருகெனு மிளையவன் முதுமைகொ ளறிவினன்
மகிழ்வுற எழுஞ்சபையோ
பருகிட மதுவிழும் பலவண்ண நறுமணம்
படர்விழை மலர்வனமோ
வருபவ ரெவர்தனும் வளமுறத் தகமையை
வழங்கிடு மரசவையோ

அறிவினிற் பலமின்னு மகமிடை கருகொளும்
அதிசயத் திருவிடமோ
பிறிதில்லை மலையிடை பெருகிடு மருவியின்
புனலுதிர் பரவசமோ
பொறியெழ அனலுடை பெருவெளிகொதி யழல்
பரவிய வலிமையதோ
அறமெழ மனதினில் அழகுறுங் கவிபொலி
அமுதளி சுரபியிதோ

சக்தியே ஆணையிடு

கண்கள்பாதி போனதென்ன காட்சிமங்குதே - இந்தக்
 காயமென்ன செய்தபாவம் காணும் துன்பமே
எண்ணமிங்கு மேகமிட்டு என்னைதூக்குதே - அங்கு
  ஏகும்பாதை வானின்  தோன்றி ஏறு என்குதே
கிண்ணமிட்ட பாலும் பொங்கி கீழே ஊற்றுதே - அந்த
   கேணி நீரும் வற்ற மீனின் மூச்சுமுட்டுதே
அண்டவானில் ஆதவன்கள் அள்ளிவீசினாய் - சக்தி
  ஆசைகொண்ட நெஞ்சம் வாழ ஆணைகூட்டுவாய்

வண்ணமிட்ட சித்திரங்கள் வாழ்வு வேண்டுதே  -சுற்றி
  வற்றும் நீரைகண்டு பூக்கள் வாடிச் சோர்வதேன்
மண்ணில் சுட்ட பாத்திரத்தை ஏந்தி நிற்கிறேன் - என்னை
   மன்னன் என்று பேரும் வைத்து மாலைசூடவா
வண்ணமிட்ட பூக்களாலே வாசல் தோரணம் - உள்ளே
   வைத்த பானை  அன்னமின்றி கொண்டகாரணம்
உண்மை நெஞ்சில் அன்னைநீயு மெண்ணும் நீதியும் - விட்டு
   ஓரம்வைத்துப் பார்ப்பதென்ன உள்ளே வைத்திடு

திண்ணையோரம் வந்தொருவன் காத்திருக்கிறான் - கையில்
   தேவையென்று பாசமென் கயிற்றைக் கொள்கிறான்              
கண்ணை மூடித் தூங்குமட்டும் காவல்நிற்கிறான் - போகும்
   காலம் என்னும் பாதைசெல்ல என்னை கேட்கிறான்
அன்னை சக்தி கண்கள்விட்டு உள்ளம் காண்கிறேன் - அவள்
  ஆக்கும் சக்தி ஈந்த அன்பில் வீறுகொள்கிறேன்               
                                                
எண்ணமெங்கும் சக்திதீபம் ஏந்திநிற்கிறேன்- இங்கு
  என்னயல்ல என்னையீந்த தாயென்றாகிறேன்

தொட்டுத்தொட்டுத் தூரிக்கையால் வண்ணம்பூசென - நல்ல
   தூய தமிழ்சொல் கொடுத்து தூண்டி விட்டவள்
கட்டியெனைப்  போட்டுவிட்டுக் காண்பதென்னவோ - இனி
   கால் விலங்கும் அன்பு கொண்ட காவல் என்பதோ
எட்டிநடை போடுமெந்தன் கால் நிறுத்தியே - எண்ண
   இறக்கை தந்து எல்லையற்ற வான்பறக்கவே
வட்டமிட்டு தேடும்வண்டு பூவின் காண்பதாய் - புவி
    வாழு மென்னை தீந்தமிழில் வாசமிட்டதேன்

அன்னைமீது சத்தியத்தின் ஆணை வேண்டினேன் . மேனி
  ஆலையில் கரும்புபோல  ஆகப் போகமுன்
நின்மனம் அருள் புரிந்து என்னைக் காத்திடு - எந்தன்
   நிழல்பிரிந்து  கொள்ள முன்நிறுத்தி வைத்திடு
தன்னை மீறி ஓடும் காற்று உள்நிறுத்திடு - நல்ல
   தாயின் அன்பு உள்ளத்தோடு என்னைப் பார்த்திடு
பொன்னையல்ல பூமியல்ல பொழுது வேண்டினேன் - வாழப்
   போகும்நாளும் புதிது கொள்ள விதியும் வேண்டினேன்

Saturday, February 9, 2013

காதலைத்தேடும் உள்ளம்

நானும்தான் எண்ணி நடக்கிறேன் நெஞ்சமோ
நாணமின்றி நடந்தே
தேனும்தான் என்றொரு சேதிசொல்லி யென்னைத்
தீயினுள் தள்ளுவதேன்
வானும்தான் ஏறிக் கடக்க நினைக்கிறேன்
வாலொன்று தான் முளைத்து
வீணும்தான் தொற்று கிளகளில் துள்ளென
வானர மாக்குவதேன்

நானும்தான் கெட்டே யுழன்று வறுமையில்
நாற்றம் எடுக்கையிலும்
ஏனும்தான் உண்ணும் உணவில் அறுசுவை
ஊற்றடி யென்கிறதே
மீனும்தான் போல்விழி மாதர் நிலாமுகம்
மோகம் விளைப்பது ஏன்
தானும்தான் எண்ணித் தலைவியை சேரெனத்
தாகம் மெடுக்கிறதே

மானம்தான் என்றெண்ணிமங்கை மறந்தங்கு
மாலையில் சோலைவர
மேனகையோ இவள் முன்னே நடமிட
மௌனம் கலைக்கிறதே
மானும்தான் துள்ளுது மாது இவள்கண்டு
மாமனம் துள்ளுவதேன்
ஊனும்தான் எண்ணி உருகுவதேன் இந்த
உள்ளம் துடிப்பது ஏன்

ஏனோதான் எந்தனின் எண்ணம் நிறைமனம்
இரட்டை இறகுகட்டி
தானும்தான் எட்டா இடமெங்கும் தாவிட
தாகம் எடுப்பது ஏன்
காணும்தா னென்றிரு கண்களைமூடிக்
கலைஎன்று காத்திருக்க
காணும்தன் சொப்பனம் கற்பனையில்ஒரு
காதலென் றாவதுமேன்

நீரும்தான் பற்றி நெருப் பெழுதே அது
நின்றிட ஏதுசெய்வேன்
கூரும்தான் கெட்டது கொண்ட வாளைவீச
கால்களில் வீழுவதேன்
யாரும்தான் சொல்லத் தெரியாவிடை கொண்டு
ஏனோ வினவுதலேன்
பாரும்தன் என்றிடக் கொண்டவள் சக்தியைப்
பார்த்திதைக் கேட்டனன் ஏன்?