Thursday, July 28, 2011

தீயின்றி சுட்ட தேகம்

செந்தணல் கொண்டு தீமூட்டாதே திரும்பிப் பாரம்மா
. .சிங்களமன்னன் எங்களை இன்று செய்வதுபோலம்மா
எந்தழல் கொண்டு எரித்தாலும் அது இயற்கையில் தவறம்மா
. .எரியும் உடலில் சந்தணம்பூசு இரங்கிடு இறையம்மா
கந்தகம்கொண்டு எரித்தானாம் அந்தக் காதகன் செயலம்மா
. .கைளில் அந்தப் பாதகம் வேண்டாம் கைகளைக் கழுவம்மா
வந்ததுபோதும் நின்றதுகாணும் வாழ்வினில் என்றம்மா
. .வைத்த கணக்கில் குற்றமிருக்கு வார்த்தையைக் கேளம்மா

சந்திரன்கூட செங்கதிரோனும் சுற்றுகி றாரம்மா
. .சுந்தரவானில் விண்சிறுமீனும் எத்தனை நாளம்மா
வந்தவர்போவார் வாழ்விதுவென்று வைத்தது எமதம்மா
. .வாழ்வெனக்ககூறி வதைப்பதுதானே வையக விதியம்மா
பந்தெனவந்து பட்டதும் ஓடும் பாவப் பிறவியம்மா
. .பனிபோல் தோன்றி பகலுள் காயும் பாசக் கனவம்மா
இந்தொரு வாழ்வில் நிரந்தரம் இல்லை ஏனோ கூறம்மா
. .இருப்பதும் போவது வருவது இயல்பே என்றதுமேனம்மா

பூக்களின் வாழ்வு போதுமே நாமும் புதுவான் தாரகையாய்
. பொன்னொளிவானில் என்றுமே வாழும் புதுநிலை தாஅம்மா
ஈக்களின்வாயில் தேனினை காட்டி ஏய்த்தது போதும்மா
. இனித்ததுவாழ்வு என்றுநினைத்தோம் இதுவே தவறம்மா
தூக்கமும் இரவும் தந்தது யாவும் துயரத்தின் பிறப்பம்மா
. தோலினுள் தசையும் குருதியும் கொள்ளத்தோன்றுது அழிவம்மா
தீக்குள் எரியாத் தேகமும் ஒளியில் தோலும் தசை கொள்ளும்
. தொட்டால் உணராத் தேகம் செய்தால் துயரம் இல்லையம்மா !

Wednesday, July 27, 2011

என்னைத் தீயென வாட்டாதே!

(காய்ச்சல் வந்து உடல் கொதிக்கும்போது எப்படி எண்ணத்தோன்றும்?)

புண்ணாகிப் போனதே மேனி - என்ன
பொல்லாத காலமோ சொல்லடி தேவி
கண்ணான பட்டதோ மேனி - யாரும்
காணாத எழிலோடு கனவிலே தோன்றி
மண்ணாளும் வேந்தனின் ஜோதி - கொண்ட
மாசறு மேனியன் ஆனேனோ ஓடி
எண்ணாது பொய்சொல்லி மாற்றி -இங்கு 
எவர் செய்ததோ துயர் இப்படி வாட்டிக்

கொள்ளுதே தேகமும் கோடி - துன்பம்
கொண்டவன் ஆகிட மெய்நொந்து பாதி
உள்ளுரம் போனதே வீதி - விண்ணில்
உலவியே தேய்ந்ததோர் நிலவென்று மாறிக்
கள்ளமும் கொள்ளுதே ஆ..நீ, - என்னைக்
காத்திட பின்னிற்ப தேன்சக்தி தேவி
எள்ளிவன் என்றெண்ணி கிள்ளி - எங்கும்
எறியாது ’அவசியம் வாழ்`வென்று  கொள்நீ

பாதாள பைரவன் கட்டி - என்னைப்
பாம்பொடு குழியிட்டு பண்ணுமோர் துன்பம்
வேதாளம் இரண்டுகை பற்றி - உடல்
வேகிடத் தீயினில் விட்டதோர் துன்பம்
போதாது என்றிடப் பல்லை - நீட்டி
பெரிதுடல் கரியெனும்  பேய்போலும் பெண்கள்
காதோடு ஆவெனக் கத்தி - கரம்
கொண்டதோர் ஈட்டியை உடலெங்கும் குத்தி

கொதியெண்ணை குளிப்பாட்டி மேனி - எங்கும்
கொதித்திடக் கும்மாளம் இட்டுமே சுற்றி
கதியற்ற என்னையும் சீண்டி - எங்கும்
காணாத சுகம்கொண்டு ஆடுறார் தேவி
மதிகெட்டு வீழ்ந்தனே பாவி - இந்த
மலைபோலும் துன்பமும் மாற்றடிதேவி
புதிதென்று பூமியில் பூத்த - நல்ல
பூவாக மீண்டும்நான் பொலிவுறச்செய் நீ !

தள்ளாத போதிலும் பாடித் - தாயே
தமிழ்மீது பற்றினைக் கொண்டவன், ஆற்றின்
வெள்ளமென் றாகவேநீந்தி - நீ
விளையாடி மகிழஇன் தமிழ் கொண்டு ஊற்றி
அள்ளவே குன்றாநல் லமுதம் - ஈயும்
அரும்பெரும் சுரபியென் ஆகுவேன் -  காற்றை
உள்ளிடும் மூச்சினைக் காத்தால் - இந்த
உலகதன் பாரமும் பெரிதோ நீ யோசி

Monday, July 25, 2011

அனுபவம் -நீயே கற்றிட வேணுமடா !

நிலவுகாயுது தனிமையிலே அந்த நீலவிண் ணோரத்திலே
நெஞ்சம் காய்ந்திடவோ மகளே அந்த நிலவினைப் போலவுமே
உலவுதென்றலும் காயம்வர என்றும் உரசியும் வீசுவதோ
உள்ளம் காயமென்றான தெனில் அதன் உரிமைக்கு யார் பொறுப்போ?

கனவு பலவிதம் காண்பதெல்லாம் அதுகற்பனையாம் மனமே
கடிதமலர்களில் வாசமில்லை அவை காகிதமானதுவே
மனமும் வானத்தில் பறந்துவிடும் ஒரு மாபெரும் வேகத்திலே
மாறிவருவது துன்பமென்றால் அதை மறந்திடு விரைவினிலே

தீயில் கைகளை வைக்கமுன்பு அதை தெரிந்திடு பொன்மகளே
தீய்ந்ததாயினில் யார்தவறு அந்த தீயது வெறும் ஜடமே
கோயில் புஷ்பங்கள் நீமகளே அந்தகுலதெய்வம் கால்களிலே
கூடியிருந்திட நீபிறந்தாய் இது குடிசையின் வெறும்தரையே

காய்ந்த மலர்பின்பு மலர்வதில்லை மனம்காயினும் சாவதில்லை
காணும் காட்சிகள் மாற்றிவிடும் புதுகனவெழும் துளிர்த்திடுமே
தேய்ந்த நிலவது வளர்வதுண்டு அந்த திங்களும் முழுமையிலே
தேனில் இனிய நல்லொளிபரவ அது தினம்வலம் வருமுலகே

சேர்ந்த உறவுகளோடுதினம் நீ சிரித்திடு பழகிவிடு
சிந்தை பழகட்டும் தாமரையின் இலை சிந்திய நீருறவு
நேர்ந்த அனுபவம் பள்ளியிலே எந்த நாளுமே சொல்வதில்லை
நீயே கற்றிடவேணுமடா இந்த நிஜமெனும் வாழ்க்கையதே!

வானத்தொலைவிலே நீயிருந்தாலென்ன? வண்ணஒளிவருதே
கான நெடுமரக் கூடலிலே நான் காணும் பெரி தொளியே
நானுமிருப்பது காட்டுக்குளே எனைநாடியும் விலங்குகளே
ஊனைவிரும்பியே சூழ்கையிலே உனைக் காக்கவும் முடியலையே

Sunday, July 24, 2011

எங்கள் தாய்த் திருநாடு - ஈழம் (சிறுவர் பாடல்)


ஈழத் தமிழ் திருநாடு -அது
எங்கள் அழகிய தாய்திருநாடு
வானிற் பறந்தங்கு சென்றேன் -நானும்
ஆகா என்னவொரு அற்புதம்கண்டேன்

மாமாவின் வீ டதன்பக்கம் -பல
மாமரம் உண்டு மரக்கிளை தன்னில்
தாவும் குரங்குகள் போலே - தொற்றித்
தூங்கிக் கிளைமீது துள்ளிக் களித்தோம்
தென்னை இளங்காய் பறித்து - நல்ல
தேனில் இனியிள நீரும் குடித்தோம்
புன்னைமர நிழல்மீது - கூடிப்
போயிருந்தே பலபாடல் படித்தோம்

வாழைமரம் பலஉண்டு – அதில்
வந்தகுலைதனில் தேன்கனி உண்டோம்
ஆழக் கிணறதன் பக்கம் – சென்று
அள்ளித் தண்ணிரூற்றி ஆனந்தமானோம்
கோழி அடைத்த தோர்கூடு -அதில்
குஞ்சு பத்துப்பலஉண்டெனக் கண்டேன்
பொத்திப் பிடிக்கவோர் குஞ்சை -கோழி
கொத்தவர அதை விட்டோடிப் போனேன்

மாட்டு வண்டிதனில் ஏறி - எங்கள்
மாரியம்மன் கோவில் பொங்கிப் படைத்தோம்
மேட்டுவழி கல்லுவீதி -அதன்
மீது கடகட என்று குதித்து
ஆடிக் குலுக்கியே ஓடும் - வண்டி
அத்தனை பேரும்  குலுக்கிச் சிரித்தோம்
சுட்ட வடையுடன் பொங்கல் செய்து
வைத்து வணங்கிப்பின் உண்டு களித்தோம்

வேலி முளைத்த கொடியில் -காலை
வேளை குண்டுமணி தேடி எடுத்தோம்
வாயில் நெல்லிக்கனி வைத்து உண்ண
வந்த கசப்பினை நீருண் டினித்தோம்
போலி நாத சுரம் செய்து இலை
பூவரசு கொண்டு பீப்பிஎன் றூதி
நாலோ ஐந்து குரும்பட்டி - கொண்டு
நல்லொரு தேரும் செய்து இழுத்தோம்

பச்சை வயல்காடு சென்றோம் – அங்கு
பார்த்து விளைந்த கதிரினைத் தொட்டோம்
இச்சை யுடன் வரம்பேறி - அதில்
ஏறி விழுந்துடை நீரில் நனைத்தோம்
’சோ’ என்றடித்திடும் காற்றும் அங்கு
சுற்றி பறந்தன பட்சிகள்யாவும்
முச்சந்திப் பிள்ளையார் கோவில் - கண்டு
முன்னே நின்றுபோடத் தோப்புக்கரணம்

டண் என்றொலித்தது கோவில்-மணி
தானும் இடியென எண்ணிக் கலங்கி
விண்ணில் பறந்தனபட்சி - அவை
வட்டமடித்துப்பின் வந்த நற்காட்சி
எண்ணற்ற மாடுகள் கூட்டம் -அவை
எங்களை போல் அம்மா என்றிடக் கத்தும்
அண்மையிலே ஒரு நாயும் - அதை
அச்சம்கொண்டும் துரத்திப் பின்ஓடும்

தாமரைப் பொய்கையும் கண்டோம்- குளிர்
தண்ணீரில் நீந்தி மலர் கொய்துகொண்டோம்
போரடித்தே வைத்த வைக்கோல் -அதன்
மேலேபடுத்து நம்மேனி கடித்தோம்
ஆயிரம் இன்பங்கள் உண்டு -அவை
அத்தனையும் எங்கள் தாய்திருநாடு
பாவி எதிரிபுகுந்தான் - எப்போ
ஈழம் அமைத்துநாம் எம்வளம் மீட்போம்?

Thursday, July 21, 2011

எனக்கு மட்டும் ஏன்?

நீராடும் போது குளம் சேறானதேன்?
நிலவென்று நானிருக்க நெருப்பானதேன்?
போராடு எனவாழ்வு புதிர்நிறைத்ததேன்?
பூகம்பம் ஒன்றெழுந்து பொலிவழிந்ததேன்?

தேரோடும்வீதியெங்கும் செடிமுளைத்ததேன்?
திசைமாறிப் புரவிகளும் தேரிழுத்ததேன்?
வேரோடு வீழு என்று விதி வகுத்ததேன்?
வீழென்று புயலடித்து வெறுமை தந்ததேன்?

ஆற்றோரம் மலர்மீது அனலடித்ததேன்?
ஆற்றாது அவைகருகி அழிந்து போவதேன்?
சேற்றோடு வெள்ளம் ஊரைச் சேர்ந்தழிப்பதேன்?
சிறுகுடிசை சரிந்து கொடுஞ் சேதி வந்ததேன்?

காற்றோடு கனவுகளும் கலைந்து போனதேன்?
கண்ணீரும் வற்றும்வரை கலங்கி அழுவதேன்?
நேற்றோடு இருந்தவாழ்வு நிலை குலைந்ததேன்?
நினைவோடு துயரெழுந்து நிறைவு கொண்டதேன்?

சிலையெண்ணிக் கல்செதுக்கச் சிதறி உடைவதேன்?
சித்திரமும் தீட்டவர்ணம் சிந்தி யழிவதேன்?
கலையென்று நடனமிடக் கால் வழுக்குதேன்?
கவியென்று தமிழெழுதக் கைவலிப்ப தேன்?

மலையென்று நம்பிவர மண்குவியல் காண்
மன்னவனென் றெண்ண வெறும் மனிதனிவன்தான்
இலையென்று ஆனபின்னே உயிரெதற்குத் தான்
இல்லையிரு சக்தியவள் என்னருகில் தான்!

Sunday, July 3, 2011

குடைவானம் கூப்பிடுதூரம் 1


காதலிளங் கன்னியவர் கண்ணசைவைக் காட்டிவிடக்
காளையர்க்கு மாமலையும் கடுகாம்!
மாதர்களின் புன்னகையில் மேகமும்வ ளைத்திடுவர்
மின்னலெனப் பாயுஞ்சக்தி வீச்சாம்!
நாதஒலி ஓமெனுமோங் காரயிசை கேட்கும்விரி
வானிடையே காணுமிறை தேவி
யாதுமவ ளானவளின் பார்வைதனை நீபெறவே
வானம்வரும் கூப்பிடுமோர் தூரம்

ஒதுமறை வேதஒலி வானெழுமோர் காலைதனில்
உள்ளமதில் தேவஇசை பாடி
மாதினையோர் பாகனருள் மூடிவிழி நாமும்தொழ
மேன்மையுறும் வாழ்வதனைப் போல
ஏதும்மனந் தான்முயல எட்டுவது கிட்டாதென்
றெண்ணிமனம் சோர்ந்தநிலை மாறி
யாதுமென தாகுமென வீரமனம் கொள்ளுகுடை
வானம்வரும் கூப்பிடவே ஓடி


நிலவெழுந்து  புவிதழுவும் நேரமதில் ஓரிரவு
நின்றிருந்தேன் வான்விரிப்பின் கீழே
பலதுயரம் பட்டதிலே பால்நிலவின் குளுமைபெறப்
பார்த்திருந்தேன் குவிமணலின் மேலே
உலவிவருந் தென்றல்தொட ஒளிவிழியால் தாரகைகள்
உலகமதைக் கண்சிமிட்டிக் காணும்
அலைகடலின் மீன்களென ஆயிரங்கள் கோடியென
அழகொளிர விண்மீன்கள் தோன்றும்


நேர்தெரியுந் தாரகைகள் நிர்மலவான் வீதியிலே
நிற்கும்விதம் கற்பனையைத் தூண்ட
போரெடுத்துப் பூமிகொள்ளப் பால்தெருவின் வாசிகள்தீப்
பந்தங்களைக் கொண்டதுபோற் கண்டேன்
தேரோட்டி மகன்தீண்டத் தேவி யவள் இடைமணிகள்
திமிறிநிலம் விழுந்தவிதம் போலும்
காரிகையர்  ஊர்முழுதுங் கார்த்திகையின் தீபஒளி
ஏற்றியதாய் வானிருக்கக்  கண்டேன்


ஒருகணமென் திகிலடையும் உள்ளமதி லோர்நினைவு
உருளுமிந்த புவிமடியில் நின்றே
பெருவிரியும் வானிடையில் புரண்டுருள ஓடுகிறேன்
புவியிழுத்த தாலுலகில் நின்றேன்
கருமையினுட் சுழல்புவியுங் கதியெடுத்த வேகமிடை
காந்தவிசை வலுவிழந்து போனால்
உருண்டகன்ற விண்ணிடையில் உதிருமொரு பூவெனவே
உலகிதைவிட் டுச்சி வானில் வீழ்வேன்


பொதுவிலெந்த பொருளுமின்றி பூமிவெறும் கல்லெனவே
பெரியதொரு வெடிவெடித்துப் போகும்
இதுவுமொரு அதிசயமே இயற்கையதன் தருமகுணம்
எமையிருத்தி உயிர்கொடுத்த தாகும்
புதுமைசிலர் பூமியையே பங்குவைத்து எல்லையிட்டு
பொருளெனவோர் விலைபேசி விற்பர்
இதைவிடப்பே ரரசுகளோ இதுஎமது பூமிஎன்று
எளியவரை இனமழியக் கொல்வர்


முதுமைவரை ஆடுமவர் முடிவுதனில் ஆவதென்ன
மோனஇருள் சூனியத்தில் தூக்கம்
கொதிகுழம்பு சீறுமொரு கோடிஒளிச் சூரியன்கள்
கூட்டமதில் ஆவிகலந் தேகும்
இதுவிருக்க ஒருபுறமாய், உண்மையில்நா மிருப்பதெது
இத்தரையிற்  பாதமுள்ள போதும்
பொதுவினி லெம் மீதியுடல் பூமியுடன் வான்வழியே
பெரியதொரு வட்டமிட்டு ஓடும்

கடுகதியில் விரையுமொரு புகையிரதம் உலகமெனில்
காசுகொடா பயணிகளே நாமும்
நடுவழியில் இறங்குமொரு நாள்வரவும் எவரறியா
நழுவுமொரு விதிமுடியும் யாவும்
தொடுவதிவர் பாதம்நிலம், தேகமெதில் வான்வெளியில்
திரிவரிவர் கதிரவனைச் சுற்றி
விடுஒருசந் தேகமிலை விரல்தொடுமிவ் வானமதே
விரிந்ததெனில் கூப்பிடுமோர் தூரம்


உச்சிவானக் குடைவிரித்தும் உள்ளேநீல வண்ணமிட்டு
உண்மையிலே வைத்தவரை அறியேன்
நிச்சயமாம் பூமிதனை நம்முயிர்க்கு வாழ்வளித்து
நித்திரைக்கு தொட்டிலென ஆட்டி
அச்சினிலே தான்சுழன்று ஆடிப்புவி பாயுமொளி
ஆதவனைச் சுற்றிவரச் செய்தார்
உச்சகடு வேகமதில் ஓடுகிறோம் வான்வழியே
உடல்தொடுவான் கூப்பிடுமோர் தூரம்


ஆழவெளி விண்பரவி ஓடுகின்ற சீற்றமுடன்
ஓங்கியெரி வான்சுடர்கள் மோதி
வீழவெடித் தாயிரமாய் வேகமுடன் வான்சிதற
வீதியெங்குந் தூசெனவே மாறும்
வாழுமெங்கள் வையகமும் வண்ணபுயல் தீபறந்து
வந்துடலை வேகவைக்கு மென்றோ
சூழுங்குடை தான்விரித்துச் சுற்றிவளி வட்டமிட்டுச்
சுந்தரவாழ் வீந்தனளோ சக்தி!

(கவியரங்கம் ஒன்றிற்கு எழுதியதன் ஒரு பகுதி )