Wednesday, July 11, 2012

தமிழே என் உயிரே!

              தமிழே என் உயிரே!

நிலவென்றேன் காதலும் கொண்டேன் - தமிழ்
நினைவோ யென்மனவான நிலவென்றே னின்றோ
பலமின்றி உயிர்வாடும் வேளை -அவள்
பரிசாக இருள் தந்து பிறையாகித் தேய்ந்தாள்

மலரென்று அவள் பேரைச்சொன்னேன் - என்
மனதோடு கவிசொல்லி மகிழ்வீந்தாய் என்றேன்
இலதென்று துயர் கொண்ட வேளை -  அவள்
இதயத்தின் திரைமூடி ஏனோ கிடந்தாள்

கலையென்று தமிழாசை கொண்டேன்- என்
கரமேந்தும் உளிகாணாச் சிலைநீயே என்றேன்
நிலைகெட்டுத் தடுமாறும் போதில்- அவள்
நினைவேனோ கல்லாகி நிற்பதைக் கண்டேன்

கலைவானிற் தமிழ் தென்றல் என்றேன் -என்னில்
கவியாகி உயரின்பம தருவாய்நீ என்றேன்
உலைந்தாடி உயிர் துஞ்சும் வேளை -அவள்
உள் மூச்சாய் என்னுள்ளே ஒன்றிடா நின்றாள்

எழிலாய் நல்நடைகொண்ட தமிழே என்னில்
எழுந்தாடும் மயிலே என் இளமைதான் என்றேன்
அழிகின்ற நிலை கொள்ளும் வேளை - என்னுள்
அசைந்தாடி மனமேடை அதிர்நடம் செய்தாள்

மழைபோலும் கவியூற்று என்றேன் - கரு
முகில்நீ யென்றே னிடிமின்னல் என்றாள்
விழைந் தூறுந் தமிழ் தேனே என்றேன் - பூவில்
எழுந்தோடுந் தேனீ யாய் எனில்கொட்ட நொந்தேன்

No comments:

Post a Comment