Monday, July 9, 2012

மறுபிறப்பு

           

ஒளியேற்றி விழிமீது எழிலூறும் கரம்கொண்டு
உயிரென்று தமிழ் தூக்கினேன்
நெளிந்தோடும் நுதல்மீதில் வழிகின்ற ரத்ததில்
நனைந் தெந்தன் விரல்காண்கிறேன்
களிகூடித் தமிழோடு கதைபேசி விளையாடும்
கவிகொண்டு அதை நாடினேன்
பொழிகின்ற மழையாக அழுதேங்கித் துடிக்கின்ற
பெருங் கூட்டமதைக் காண்கிறேன்

மலிவென்று தமிழ்பேசி மகிழ்வோடு கவிகூறி
மலரென்று கவி பாடினேன்
பலிகொண்டு உயிர்போக பாவங்கள் பொலிந்தாடும்
பயங்கரம் கண்டேங்கினேன்
வலிகொண்டு வரும் ஏதும்  வழிஉண்டோ உயிர்தப்ப
வாயற்ற குரல் கேட்கிறேன்
எலிகொண்ட திணறல்கள் அறியாமல் விளையாடும்
ஒருபூனை போலாகினேன்

இனிப்போதும் எழுந்தோடு இடர் கொண்ட தமிழ்பாடு
எனும் ஓசைவான் கேட்கிறேன்
தனியாக இருந்தேனும் தவழ்கின்ற காற்றோடு
தா உந்தன் தமிழ் என்பதாய்
புனிதத்தின் புயலாக பொதுவீரம் கொண்டேகும்
புதுவேகம் எழக் காண்கிறேன்
மனிதத்தின் மரணத்தை தரும்பேய்கள்: செயல்கூற
மழைவெள்ளமாய் பொங்குவேன்

உயிர்போக அழகென்ற உணர்வோங்கக் கவிபாடும்
அவனின்று உயிர்சாகிறான்
கயிறொன்று கழுத்தோடு உடன்காணச் சங்கீதக்
கலைபோற்றும் மகன் தேய்கிறான்
பயிர்போலும் விளைவாகும் பாலர்கள் கொலைசெய்யும்
பச்சைகள் இவன்பாடுவான்
வயிரத்தின் தன்மைக்கு வழிகொள்ளும் செயல்செய்த
வலிதோரை மனம்போற்றினேன்
*************************

No comments:

Post a Comment