Saturday, July 7, 2012

மாலைநேரக் கடற்கரை

  

அலைகள் ஆடி நடனமாடும் அழகு காண வாரீர்
 அமைதியான கடலின்தூரம் அதுவும் காண வாரீர்
கலைந்து ஓடும் திரைகள் வந்து கரையில் புரளக் காணீர்
  கால்கள்மீது குளிர உள்ளம் கனமிழக்கக் காணீர்
வலைகள் போட்டு வருத்திநீரை வாரிஅள்ளி மீனை
  வாழ்வுக்காகத் துடிதுடிக்க வஞ்சம் செய்யக் காணீர்
மலைகளாக எழுந்து ஆடும் அலைகள்  வீழ்ந்து மனிதன்
  மதியிழந்து ஆடுமாட்டம் முடிவைக் கூறக் காணீர்

கடலைவிற்கும் சிறுவ னென்ன கடவுள் ஆகுமாமோ
  கரைபுரண்ட அலைகள் கொண்ட கடலை விற்பனாமோ
உடலை நீவும் காற்று என்ன உரிமை கண்டதாமோ
  உள்ளம் மீது உணர்வு என்ன ஓடும் அலைகள்தாமோ
விடலை என்ன வளைந்து காணும் படகு மறைவில் இன்பம்
 விலை என்றாக வனிதை உள்ளம் விற்று வாங்கினானோ
சுடலைஞானம் வந்துகாணத் தொலைவில் நின்ற ஒருவர்
  சுற்றிப் பொங்கும் அலைகள் பீதி மரணம் எண்ணினாரோ

சிறுவர் கூட்டம் ஓடிச் சிரித்து செய்வ தென்ன காணீர்
 சிப்பி சேர்த்து மணலை வாரிச் சிறிய வீடுகட்ட
குறும்பினோடு அதை யழித்துக் கொண் டொருவன் ஓட
 கூச்சல் போட்டு கீழ் விழுந்து கதறும் பெண்ணைக் காணீர்
வறுமைமீறி இரந்து வாழும் வகையில் ஒருவன் நிற்க
 வசதி கொண்ட ஒருவன் இழிய வார்த்தை கூறக்காணீர்
திறமையோடு சுண்டல் விற்றுத் திரியும் சிறுவன் பாராய்
 தொழிலே வாழ்வுக் கழகுஎன்று சொல்லும் வார்த்தை காணீர்

பொறுமையோடு  பதிலைக் கூறும் பொருளும் கேட்ட மனிதன்
 பிறிதே யல்ல எனதுவேலை பிழைப்பு ஈதென் றியம்ப
 உறுதி விட்டு அலைகளான தோடிவந்து கரையில்
  ஓசையிட்டு சிரிசிரித்து உருண்டு போகக் காணீர்
விறுவிறென்று வீழும்கதிரும் வெள்ளிஅலைகள்மீது
  வியக்கு வண்ணம் சிவப்பு மஞ்சள் வியந்தவாறு பூச
மறுமை கொண்டு உதயமாகும் மகிழ்வில் நாளைஎண்ணி
  மறையும் கதிரின்  அழகைக் காண மலரும் உள்ளம்வாரீர்

************************

No comments:

Post a Comment