Friday, June 17, 2011

ஆனந்தக் கூத்தாடு !

கூட்டி லடைத்திடும் கொல்லும் விலங்கினம்
நாட்டினை ஆள வைத்தாய்
நாட்டி லிருத்திட வேண்டிய மக்களை
நன்கு சிறையி லிட்டாய்
ஏட்டி லெழுதிடக் கூசும் கொலைகளை
ஏனோ எம்மேல் விதித்தாய்
வாட்டி வதைப்பதென் றாலிவர் தாமென்று
வாழ்வி லெழுதி விட்டாய்

ஓட்டிக் களைத்துமண் மீது விழுந்திவர்
உள்ளம் தவிப்ப தெல்லாம்
கூட்டிக் கைகள்தட்டிக் கொண்டாட வோஇந்த
கோல மெமக் களித்தாய்
போட்டி போட்டாயிரம் ஆயிர மாய்வந்து
புண்பட மேனி செய்தாய்
காட்டிப் படம்செய்து காணக்கொ லைசெய்ய
கன்னிய ரும்கொ டுத்தாய்

ஊட்டி வளர்த்தவர் ஓர்விரல் வாயினில்
இட்ட சிறுவ ரெல்லாம்
நாட்டின் எதிர்கால மன்னர் களென்றுமே
நாமும் நினைத் திருந்தோம்
சூட்டில் சிதறிடச் சுக்கு நூறாகிட
சொல்லி இன மழித்தே
மூட்டி எரிதீயில் முன்னே வைத்தேயவர்
முற்றும் கருகச் செய்தாய்

ஆட்டிப் படைத்திடும் ஆண்டவ னேஇதற்
காமொரு தீர்வில் லையா
போட்டி யிட்டேபல நாடுகள்சேர்ந் தெமை 
பொல்லா வதை யிடவா
வேட்டை யிட்டேவெறி நாய்களைபோ லெமை
வீழ்த்திக் கடித்த வர்க்கே
நாட்டை யும்நம்தமிழ் தேசத்தையும் தந்து
நல்ல வர மளித்தாய்

கேட்டு மிரங்காது எம்மைய ழிக்கஏன்
இத்தனை கோபம் கொண்டாய்
போட்டுப் புரட்டியு டல்கொத்திக் கொன்றிடப்
புல்லருக் கெல்லா மீந்தாய்
கூட்டுச் சதிசெய்து கொள்கையி லொப்பந்தம்
கொண்டது முண்டோ சொல்லு
ஆட்டு சுழன்றோடி ஆனந்தக் கூத்தாடு
அள்ளிடக் கொஞ்சம் என்று

Tuesday, June 7, 2011

அன்றும் இன்றும்

அன்று

நீலவான நெற்றி நீறென மேகத்தை
நீள இழுத்துக் கிடந்தது
காலக்குமரனும் கால்நடந்த வழி
காற்றி லழிந்திட போனது
சேலை முகிலணி கீழடி வானிலே
சென்றன புள்ளின மானது
மாலையல்ல அது மாதவம் செய்தவர்
மங்கிய பொன்னொளிநாளது

ஆலைகளில் தங்கள் வேலைமுடிந்தவர்
ஆனந்தித்து வீடுசென்றனர்
காலைமுதல் இல்ல வேலைமுடித்திட்ட
காரிகைகள் எழில்கொண்டனர்
சாலையோரம் விழிவைத்துத் தமதவர்
சற்று பொழுதினில் வந்திடும்
மாலைத் தனிமையை காதல்மொழிகொண்டு
மாற்றும் துணைவரைக் காத்தனர்

போதை யெடுத்திடும் இன்கவிபாடியே
பேதையர் நாட்டியமாடினர்
மாதை அழகிலும் மல்லிகை வாசமும்
மற்றவர் கண்டுளம் ஏங்கினர்
காதை இனித்தமிழ் கீதமடைந்திடக்
காணப்பொறுக்காது சின்னவர்
பாதை தனில் பெருங் கூச்சலிட்டோடிடப்
பற்றி இழுத்தனர் பெற்றவர்

காகம் பலகூடி நீர்நிலையோரத்தில்
கங்கை நீராடிக் களித்தன
போகும் நிறமெனப் பார்த்தனவோஎனப்
போயொரு சின்னவன் கண்டனன்
தேகம் சிலிர்த்து தெளித்தன நீரினை
துள்ளிப்பறந்த பறவைகள்.
தீமைகளற்று சிறந்தது அன்றைய
தீந்தமிழீழமென் தேசமே



இன்று

தேரைச்சிறிதொரு சின்னச் செடிக்கீந்த
தேசத்தின் மன்னன் தமிழ்வழி
பாரை வணங்கியே அஞ்சியும் கெஞ்சியும்
பாவம் பழியில்கிடந்தது
போரைநடத்திய வீரமும் தீரமும்
பற்றிய தீயினில் நீரென
ஊரை அழித்திடும் தீயெழ ரத்தமும்
ஊற்றி அணைத்துக் கிடந்தது

மார்பில் அடித்துக் கதறிய மங்கையர்
மானம் அழியக் கிடந்தனர்
போர்வை கிழித்தெழு பேய்களோ சிங்களம்
புத்தநீதி விட்டுக்கொன்றனர்
வேர்வைவிழ வயற் பக்க முழுதவர்
வீதிகளிற் பிணமாகிட
கூர்கொடும் வாளினைக் கையிற்பிடித்தவர்
கொன்று குவித்து விரைந்தனர்

கோவில்களின் மணியோசை இறப்பவர்க்
கூதும் சங்கின் ஒலியாயின
ஆவி பறந்தது நீர்கொதித்து அல்ல
ஆட்கள் உடல்செத்துப் போயின
பாவிகள் வெட்டிட ஆடிஅடங்கின
பாவையர் பூவுடல் பார்த்துமே
கூவிக்கதறியே ஓடினர் சின்னவர்
கூட்டிவர யாரு மில்லையே

மாலை மலர்ந்திட தென்றலில்வந்தது
மக்கள் இறந்தமெய் வாசமும்
வேலைமுடித்தவன் கைகளில் ஊறிய
வெட்ட வழிந்ததோர் ரத்தமும்
பாலைவனமென ஊருமழிந்தது
பாலையில் நீர்வற்றிப்போனதாய்
காலை நிலமூன்றி கொல்லப்பகை அழக்
கண்ணீரற்று ஈழம் நின்றது





Wednesday, June 1, 2011

மே 18

வெட்டுதோ மின்னல் வீழ்ந்ததோ வானம்
வெடிவெடித் தெங்கணும் அதிர
முட்டுதே புகையும் மூளுதே தீயும்
மேகமே வீழ்ந்திடத் தோன்றி
தட்டியே சிதறித் தடதட வென்றே
தாவுதே துண்டுகள் அய்யோ
சுட்டுமே தீயிற் துடித்ததே உடல்கள்
சூழ்பெருந்தீ எரித்திடவே!

கொட்டிட வானிற் குண்டுகள் நூறாய்
குடிசைகள் வீடுகள் கூரை
பட்டுமே சிதறிப் பறந்தன உள்ளே
படுத்தவர் எழுந்துமே பதறிச்
சட்டென ஓடித் தப்புவோம் என்று
சற்றொரு கணமதில் எண்ண
விட்டதோ குண்டு விஷமெனப் பரவி
விழுத்தியே உடல்கருக் கியதே!

தந்தையும் தாயும் பிள்ளையும் சேர்ந்து
தழுவிக் கிடந்தனர் செத்து
அந்தநாள் பூமி கண்டதோர் பிஞ்சும்
அழுதிட எரிந்ததீ பற்றி
வெந்திடும் தீயால் வேகிடும் தேகம்
விளைதிட்ட ஓலங்கள் கோரம்
முந்தையர் முதியோர் மங்கையர் பாலர்
மரணித்த விதமோபயங் கரம்

வந்ததும் புரியா வாழ்வதும் அறியா
வசந்தங்கள் தேடிய பூக்கள்
கந்தகம் தூவி கருகியே முறுகி
கால்கை துடித்திடச் செத்தார்
எந்தநல் லிதயம் இறைவனைத் தொழுதும்
எரிந்திடும் தீவிட்ட தில்லை
செந்தமிழ் பேசிச் சிரித்தவர் மேனி
சிங்களம் கொன்றிடத் தீய்ந்தார்

பச்சைம ரங்கள் படுத்திடும் வீடு
பதுங்கிய குழிகளே சிதையாய்
இச்சைகொள் மாந்தர் இருத்தியும் நிறுத்தி
எரிந்திடக் கொள்ளியும் வைத்து
துச்சமாய் எண்ணித் துடித்துடல் அலற
தீயெனும் குண்டுகள் போட்டு
மிச்சமே யின்றி முழுஊ ரழித்து
மூடிஓர் சுடுகாடு செய்தார்

வந்திடும் உலகம் வாழ்வினைக் காக்க
என்றவர் நம்பிய போதும்
சுந்தர தேசம் சுழல்புவி யாவும்
செத்துநீ போஎன விட்டார்
மந்தைகள் நாமோ மனிதமே இல்லை
மரம்செடி கொடிகளை விடவும்
எந்தவோர் வகையில் இழிந்தவர் சொல்லு
இதையும்போய் யாரிடம் கேட்போம்

செந்தமிழ் ஈழம் சிறியதோர் பூமி
சிவந்திட இரத்தமாய் ஆறு
கொந்தளித் தோட குற்றுயிர் ஆகிக்
குரலின்றி கிடந்துமே அழுது
கந்தனே நல்லூர், கதிர்காம வேலா
காத்திடு என்னைநீ யென்று
நொந்துமே சோர்ந்து நீள்கரம் கூப்ப
நினைந்துமே அறிவழிந் திட்டார்

சிந்தியே கண்ணீர் தேகமும் பதற
சேர்ந்துமே அலறிடக் கேட்டும்
வந்தவர் யாரோ வாளெடுத்தங்கே
வெட்டியே மீந்தவர் கொன்றார்
எந்தவோர் தெய்வம் இரங்கவேயில்லை
ஏனய்யா கந்தனே கூறு
சந்தண மேனிகள் செந்தணல் தின்றிட
சென்றது எங்கு நீசொல்லு

காற்றின் புலம்பல்!


தேடுகிறேன் காணவில்லை தேன்மலரே நீயெங்கும்
வாடும் தமிழனுக்கோர் வழிஒன்று கண்டதுண்டோ
கேடும் துயரங்களும் கெட்டுமனம் சோரஉயிர்
ஆடுமொரு ஊஞ்சலென ஆவிஉலைந் தோடுகிறான்

வெள்ளை நிறமல்லிகையே விதி என்பதிவ் வழியே
அள்ளிப் புயலெனெவே அடித்தோடக் கண்டனையோ
நள்ளிரவில் கொல்லுவதும் நாடுபெருந் தீயெரியக்
கொள்ளிவைத்துக் கொல்விதியை கண்டீரேல் சொல்லிவிடு

கூவி இசைத் தேன் படிக்கும் கோகிலமே இவ்வழியில்
காவியுயிர் தோள்சுமந்து காலன்வரக் கண்டனையோ
ஆவி,உடல் தான்பிரித்தே அள்ளுமுயிர் கொஞ்சமில்லை
சாவு இனிப்போதுமென்று சற்றே நிறுத்திவிடு

கார்இருளின் நேர்முகிலே கனத்தோர் மழைபொழிய
நீர்அருவி ஆறெனவே நீபோகும் மண்ணதிலோ
ஊரை அழித்தவனால் உதிரமது பெருகி நதி
ஆறாகி ஓடவைத்தோன் அழிய இடிவீழ்த்தாயோ

வட்டச்சு னைநடுவில் வந்த’அலை’ காலுதைக்க
பட்டதுயர் தான்மறந்து பங்கயமே ஆடுகிறாய்
தொட்டபகை காலுதைக்கத் தூயதமிழ்த் தம்பிசிலர்
விட்டமொழிக் காடுவது விந்தைஉனைக் கற்றதிலோ

ஊரின்எழில் பார்த்துலவும் ஓடுங்கரு வான்முகிலே
நீரைப்பொழிய முன்னே நின்றுபதில் சொல்லிடுவாய்
ஊரை உறவுகளை உத்தமரைக் காக்கவெனப்
போரைநடத் தியவர் போனவழி கண்டதுண்டோ

காற்றின் சுதந்திரமும் காணுமதன் விடுதலையும்
பேற்றில் பெரும்பேறாய் பேசிடுவர் எனையெண்ணி
நேற்றோ பூந்தென்றலென  நீதிக்காய் நின்றவர்கள்
சீற்றப்புய லாகிப்பின் சென்றதிசை கண்டவர் யார்?

பூவே, விரிவானே, போகும்முகில், புள்ளினமே
நாவே நறுந்தமிழை நல்லிசைப்போர் கொன்றுஒரு
சாவே பிடியென்று சுற்றும்புவி தந்திடினும்
போ,வீறு கொண்டிவரோ புத்தீழம் செய்திடுவர்!