Friday, July 20, 2012

கிளியும் நானும் 3


         
3. ஆனந்தக் கூத்து

இருள் என்னும் மாயை இகத்தின் அணிகலனோ
பொருள் என்ன பூமி  புதைக்கும் படுகுழியோ
வரும் போதும் அழுதே வந்தோம்  முதிர்ந்தோடிப்
பெருந்தீ சுவைகொள்ளப் போமட்டும் அழுதழுதே

இருந்தேகும் வாழ்வே இறைவன் எமக்களித்தார்
வருந்தியக் கிளிகொண்ட வாழ்வெண்ணித் துடிதுடித்து
அருங்கிளியைப் பார்க்கவென ஆசை யுடன்விடிந்திடவும்
கருந்திட்டுக் கரைந்திட்டு கண்விட்டுபோகும் வரை

இருந்திட்டு முடிவாக எழுந்தெட்டிக் கால்வைத்து
பரும்திட்டும் மனங்கொள்ளப் பறந்திட்டுப் போகாமல்
வரு மட்டுமெனைக்காத்து வாய் பேசக் கிளிதானும்
குருந்திட்ட தென்னோலை கூத்தாடக் காத்துளதோ

உருளுமா அவனியிடை ஓடிச்சுடர் எறிக்க
தருமொளியின் வீச்சில்   தரணிஒளிப் பாய்விரிக்க
வருந்திமனம் கிளிசொன்ன வார்த்தைகளை நம்பியதால்
இருந்த இடம் ஒருகால் ஏகிமுகம் கண்டல்லால்

அதிகாலை வேளையிது அடங்கா துடித்தமனம்
மதிகாண் மயக்கமதும் மாறும் பெருந்துயரம்
விதியென்று விட்டோட விலகிடலாம் என்றெண்ணி
கதிகொண்டு காலைக் கடமைகளை ஆற்றியபின்

நடந்தேன் செல்வழியில் நான் கொண்ட கவலையது
உடன் வான் பறந்துகிளி உயிர்தானும் மாளவென
கடந்தே பொறுமையினை கைவிட்டுக் காட்டாறு
விடங்கொள் தீனிவகை  வீச்சருவி நெருப்பென்று

விழுந்தே உயிர்விட்டு வீணாகிப் போய்விடுமோ
எழுந்தே மன அச்சம் என்னுடலில் பதைபதைக்க
அழுந்தி உளைச்சலிட ஆகா வென் அலைந்தோடி
செழுநீர் மலர்ப்பொய்கை  சேருமிட மடைந்தேன்

உயர்வளர ஏங்கி உரமெடுத்த சிறுதென்னை
நயமெழுந்து காண நான் திரும்பிப்  பார்வையிட
வியந்துள்ளம் விருவிறுக்க வேதனைதான் கிளியில்லை
அயர்ந்தே அறிவழிய ஆவென்று திகைத்தபடி

மொழியின்றி மௌனப் பதுமையென உடல் விறைக்க
வழியின்றி திரும்ப வந்த திசை கால்வைக்க
பழகிக் கொண்டகுரல் பாட்டெழுந்து கீச்சிடவே
அழகு கிளியினது அருந்தோற்றம் ஆ..கண்டேன்

விருந்தோ கண்களுக்கு வேறில்லை மரத்தில்
இருந்து பசுமிறகை எகிறியடித் துள்ளியது
சொரிந்த மர பூக்கள்  சொல்லரிய மகிழ்வூட்ட
சரிந்து பறந்தடித்து செய்ததை என்சொல்வேன்!


(கிளி பாடுகிறது)

எந்தன் வாழ்வில் இன்பமான பொங்கி ஓடுதே- அன்பு
சிந்தை வானில் வந்து தென்றலாகி ஆடுதே
வந்து ரூபவண்ண வாழ்வின் சந்தமானதே - இன்பம்
தந்ததான தென்ன `தந்த தந்த தானவே`

மந்தியான துள்ளியாடும் மாமரத்திலே - போலும்
உந்தியாடி உள்ளமிங்கே ஊஞ்சலாடுதே
அந்திவான மேகமென்று  ஆடியோடியே - வானம்
சிந்தையான செம்மை கொண்டு சிந்துபாடுதே

கொந்தி உண்ட இன்பழத்தை கொண்ட மாமரம்  - அங்கு
வந்திருந்து காணுமின்பம் வாழ்வசந்தமே
அந்தரத்தில் தொங்குமின் கனிக்கு ஏங்கியே - தின்று
சொந்தமாக்க வந்ததன்று அஞ்சுகமொன்றே...

கண்டுநானும் கொண்ட வாழ்வு இன்பமானதே -  என்னை
கொண்டுமேக மெங்குலாவும் கொள்ளை யின்பமே
தண்டிலாடும் பங்கயத்தின் தண்மைபோலவே  - என்றும்
பண்பிலாடும் உள்ளம் கண்ட பாச உள்ளமே

தொடரும்

No comments:

Post a Comment