Saturday, July 7, 2012

சின்னவனோ ?



பிள்ளையார் வாகனன் பேசரும் வல்லவன்
பேருலகெங்கணும் வாழ்மனங்களை
கொள்ளையும் கொண்டவன் துள்ளியே ஓடுவன்
கோவிலில் சாமியாய் கண்டவன், நிறம்
வெள்ளையும் ஆனவன் வேறுகார்வண்ணமும்
வாய்த்தவன் வெட்டிவிஞ் ஞானபாடத்தில்
பள்ளியில் பாடமும் கொள்ளவாழ் வீந்தவன்
பக்கமும் வந்திடப் பூனையில் மணி

கொல்லெனச் சத்தமும் கொண்டிடக் கட்டவே
கூடியும்பேசி எண்ணம் கையைவிட்டவன்
மெல்லிசை கேட்டதில் மெய்மறந் தற்றைநாள்
மானிடன் பின்னலைந் தூரைவிட்டவன்
கல்லெனும் நெஞ்சையும் கண்டிடப் பஞ்செனக்
காப்பவன் சின்னவர்மென் மனங்களோ
தொல்லிடம் காட்டுமோர் பெட்டியில் ’மிக்கி’யாய்
தோன்றிடச் சித்திரப் பேச்சிழைப்பவன்

கண்ணிவைத் தன்னவர் கொல்பொறி வைத்திடக்
கொள்ளவும் தன் உயிர் கூட ஈந்தவன்
மண்ணிலே சின்னவன் மனதிலே நல்லவன்
மாளிகை குடிசைகள் பேதமற்றவன்
எண்ணிலே பெரியவன் இதயமும் கொண்டவன்
எட்டி யார் பிடிப்பினும் எகிறிஓடுவன்
கண்ணிலே வெறுமையைக் காட்டுவர் ஆயினும்
காலமாய் வாழும் மார்க் கண்டனாம் இவன்

No comments:

Post a Comment