Wednesday, July 11, 2012

தெரியாத பாதை

இருள்நடுவே ஒளியறியா இருவிழியும் கருவளையம்
தெருவழியின் திசையறியு மாமோ
குருமனதி லெழும்பதிலைக் கருதிஒருமகன் உரையா
கிரியையவன் மடமையென லாமோ
தருவதனில் கிளையுயரம் தனதுவலு வெனவிளையும்
தனயனுயர் மேகம்தொடு வானோ
மருவி உயரெழுமலையின் அதியுயரம் வியந்தவனை
மறுபுறத்தில் எதுவினவ லாமோ

வரும்புயலின் இருதிசையு மெதிரெனவும் கருமுகிலம்
விளையுமொரு இடிமுழக்கம்ஏனோ
தருமழையும் தரணிவிழும் குளிரெழவும் இடிமுழங்கி
தலையில்விழ அவன்விதியின்பாடோ
மருமமதில் துலங்குதென மரஉயர்வில் பழுத்தகனி
முடவன் பறிதுண்டதென்ற தீர்ப்போ
சருகுவிழச் சரசரக்கும் பெரிதுமொலி நொருநொருங்கும்
சதியெனவே மிதிப்பவனின் கூற்றோ

கொதிஅனலில் விறகையிடக் கூடுமதில் பனியெறிந்து
குறையுதெனில் பனியின்பிழை யாமோ
மதியிழந்த ஒருவனினால் மனமிழந்துவாட ஒரு
மண்ணு மறியா தவனினாலோ
கதியெனவே தெருஇரந்த கையிலோடு கொண்டவனைக்
கரிகொணர்ந்து மாலையிட்டவேளை
விதிவகுத்த தென்றரச கட்டிலிட வெம்பசிக்கு
வீதிவந்து நிற்கும் குணம்தானோ

ஒருபுதிரும் புரியவில்லை என் உழறும் சிறியவனை
உலகபெரும் மாசபையில் வைத்து
திருமொழியும் பொழியெனவே தேர்வுசெயின் அவன்விழியும்
திருதிருவென் றிருக்குமாமே
கருதுவதோ கடமைதனை மறந்தவனென் றுரைப்பதுவோ
உருகிமனம்வேதனையில் நொந்தால்
தருவதற்கு தமிழையன்றி இதுதருணம் எதுவுமில்லை
தமிழினிடம் தந்துவெகுநாளோ

No comments:

Post a Comment