Monday, October 31, 2011

சிலந்தியும் நாமும்

பாட்டெதற்குப் பாடியே பரமனவர் பட்டதனை
பாவிநான் மறக்கலாகுமோ -இன்னும்
போட்டுடைத்து ஆடிப்பெரும் பூமியில் புயலடிக்க
பூமலர்கள் தூவலாகுமோ
ஏ(ட்)டெதற்கு என்றெழுதி இதயம் கனத்துவிட
இன்னமும்  எழுதல் என்னவோ -நாளும்
நீட்டியொரு பாய்விரித்தும் நிமிர்ந்து படுத்துமனம்
நிம்மதியைக் காணலாகுமோ

நாடெதற்கு நல்லவர்கள் அற்றவர் அரசுகொள்ள
நானெதற்கு என்னலாவதேன் - உந்தன்
வீடெதற்கு என்றவனோ வெட்டியும் விறகெரிக்க
விட்டுமோடிச் செல்லலாகுமோ
ஆடவரக் காலுடைத்து அழகென்று சொல்பவரை
ஆளும் திறன் என்னலாகுமோ -இன்னும்
வேடமிட்டு சூழ்ந்துவந்து வேதனை விளைப்பவனை
வேடிக்கையென் றெண்ணலாகுமோ

தோலுரித்து வெய்யிலில் துடிக்க விரிப்பவனைத்
தோழனென்று கொள்ளலாகுமோ -அவர்
நாலுபேரைத் தூக்கவிட்டு நடுவில் படுக்கவைக்க
நாமும்சரி என்னலாவதோ
வாலிருக்க தீயைவைத்து வந்திருந்த தூதனையும்
வேடிக்கை புரிந்தவரல்லோ -அன்று
காலிருக்க ஒடியவன் கனத்த அனல்எரித்துக்
கண்டநிலம் தீயுதாமின்றோ

வேலிருக்க என்னபயம் வென்றுவிடு என்றவனும்
வீதியிலே நிற்கலாகுமோ - ஒரு
கோலிருக்கு ஆளுங்குடை கொண்டிருக்கு என்றவுடன்
கோவிலும் பறிக்கலாவதோ
ஆலிருக்கு தோரரசும் அங்கிருக்கு என்றவுடன்
அந்த இடம் சொந்தாமாகுமோ -இங்கு
வேலிருக்கு வேம்புடனே விளைந்த நிலமிருக்க
வீற்றிருக்க வந்தாராம் ஏனோ

கூழிருக்கு சோறுகஞ்சி குடித்துப் படுத்தமண்ணை
கூலிபெற்று விற்கலாகுமோ - கொண்ட
தோளிருக்கு உள்ளம் இன்னும் துடித்து உணர்விருக்க
தூங்கவென்று செல்லலாவதோ
ஆளிருத்தி வாழ்வழித்து அவலமிடப் பொறுக்க
ஆக இன்னும் ஏழையாவதோ - இன்னும்
நாளிருக்கு நமக்கில்லை நாமிருப்ப தூரமென
நாஒறுக்க ஊமையாவதோ

ஏழிருக்கு ஏழரையில் ஏறியேசனியிருக்க
எல்லாம்விதி என்று சொல்வதோ -அட
ஊழிருக்கு செய்தவினை உற்றழியகாலமிது
ஒன்றும்பயன் இல்லையென்பதோ
நூலுடன் சிலந்திவலை நாலுதரம் வீழ்ந்தெழுந்து
நெய்தகதை நீபடித்தையோ -அது
போலிருக்கு பூமிதனில் புன்மைதரும்வாழ்வு நீயும்
போயெழுந்து வாழ்வு கொள்வையோ

மனம்( மாறாத சோகம்)

நீராழி மீதிலே அலைகள் ஆடும்
. நினைவோடு போனவை நின்றுகாணும்
பேரோடு சொந்தங்கள் பின்னால் வரும்
. புகழோடு வரவுகள் புதிதுசேரும்
தேரோடத் தெய்வமும் தீந்தமிழ்சொல்
. தமிழோடு மனம்சேர்ந்து ஆடவைத்தே
நீரோட விழிமீது வழியுஞ் செய்தாய்
. நெஞ்சிலே தீயாக நினைவு வைத்தாய்

மானாடும் மயிலாடும் மதுவில்நின்று
. மலர்மீது வண்டாடும் மகிழ்வில்என்றும்
வானோடும் கதிரேறும் வண்ண நிலவு
. வந்தோடும் பூங்காற்று வசந்தமென்று
தானோடும் மனமீதில் எண்ணமென்று
. தனியாக அதுவோடிச் செய்யுகோலம்
நானோடி சொல்வதோ யாருக்கென்று
. நடுநீரில் மீன் நின்று அழுவதென்று

பூவிரியும் புதிதாகப் பிறந்த வேளை
. புள்ளினமும் ஆர்ப்பரித் தெழுந்த காலை
தீவிரியும் கதிரோடு தினகரன்தான்
. தேய்நிலவை தள்ளியத் திசையுங் கொள்ள
காவிரியின் அலையாகக் கலகலத்து
. காற்றுமிளங் காலையில் இதயம் மீது
நீவியொரு இன்பமதை ஊட்டுமாமோ
. நீர்விழியில் கொண்டதனைக் கூட்டுமாமோ

பசும்வெளியில் புல்லாக பச்சை வண்ணம்
. பழந்தூங்கு சோலைகளும் பாரில்வைத்தான்
விசும்பியழ மனமொன்றை உள்ளேவைத்து
. விதியோடு உறவுவென்று கூட்டி வைத்தான்
பிசுசிசுத் துழலென்று செய்தான் காலம்
. பிழைத்துவிடப் பொல்லாப்புப் புரிந்துநின்றான்
நசுங்கமனம் பூவாக மனதைச் செய்து
. நடமாடும் நிழலாக நலிவை வைத்தான்

எழிலோடு பிறக்கின்ற இரவின் முடிவு
. எழுந்தாடும் அலைகொண்ட கடலின் உயர்வு
வழிமீது சொரிகின்ற மலர்கள் மென்மை
. வானேறிக் காண்கின்ற சொர்க்கம் யாவும்
பொழிகின்ற மழைகொண்ட சாரல்தூவும்
. புனல்தூறக் குளிர்கொண்ட வாழ்வுமேனோ
குழிமீது எனைவீழ்த்திக் கோபுரத்தின்
. கொண்டே என்கனவாக வைத்தாய் ஏனோ?

தமிழே, தருவாய் நல்வரம்

கனவொன்று கண்டேன்
. -களிகொண்டு நடமாடும் இளமங்கை
. -கனிவோடு எனைநாடி வந்தாள்
மனம்நொந்து நின்றேன்
. -மதியோடு உறவாடும் முகம்மீதில்
. -மலர்கொண்ட நகையோடு நின்றாள்
வினவென்று சொன்னேன்
. விழிமீது கனிவாக விளைகின்ற
. விதமாக எனைக்கண்டு சொன்னாள்
’பனிபோலும் விழிகள்
. படராதநிலைகொண்டு பண்’பாடு’
. பதில்கூறு பயமேது’ என்றாள்

தமிழன்னை என்றாள்
. தனையெண்ணி சுவையான தமிழ்கொஞ்சும்
. தரமான கவிகூறு என்றாள்
அமிழ்தோடு வந்தே
. அதை வீசி இதுவென்ன அதைமேவி
. இனிதான மொழிபாடு என்றாள்
குமிழ்போல்நல் லெழிலாள்
. கரைமீது அலையோடி உருண்டாலும்
. அதுமீண்டும் கடலோடும் என்றாள்
தமிழ்பாடி நின்றாய்
. இனிவாடிக் கருகாமல் தரும்வாழ்வு
. தலைமீது முடிசூடும் என்றாள்

மலர்கொய்து கொண்டேன்
. மகிழ்வோடுஅவைதூவி மாறாத
. மனதோடு எனைவாழ்த்து என்றேன்
புலர்வானில் தோன்றும்
. புதிதான கதிர்வீசும் பொழுதாக
. புவிமீதில் புனைகவிகள் என்றாள்
தளராது நின்றேன்
. தமிழோநற் கவிதானும் நதிபோலுந்
. தனில்பொங்கி நிறைகாணும் என்றாள்
உளம்மீது பலமும்
. வளந்தந்து விழிமீது ஒளிதானும்
. விளைவித்து வெளியோ டிணைந்தாள்

Wednesday, October 5, 2011

கலைமகள், அலைமகள், மலைமகள்

கலைமகள்:
பாலுமினி பாகும் பருப்புடனே தேனீந்து
காலம் முழுதுமுனைக் கைதொழுதோம் - சீலமுடன்
சங்கத் தமிழ்வீரம் சாற்றும் மறத்தமிழைச்
சிங்கம் சிதைக்கவிட்ட தேன்

வெள்ளைக் கொடிபிடித்து வெள்ளை மனமெடுத்து
வெள்ளம் எனும்மக்கள் வாழ்வதனை - அள்ளி
கோரக் கொலைசெய்வோர் கேடு நிறுத்தவர
வாரி உடல்சிதைத்த தேன்

அலைமகள்:
சீரும் சிறப்புமெனச் செல்வந்தர் வாழ்வுதனை
ஊரும் உலகமெலாம் உண்டாக்கிச் - சேருமெம்
பொன்பறித்துக் கொண்ட புனர்வாழ்வு தானழித்து
வன்மைதனை செய்ததுவும் ஏன்

வேருடன் வெட்டி விதியாம் இனம்கொல்ல
யாருக்கும் பணியாத ஞாயிறோன் - நேருமொளிச்
செந்தமிழன் சீர்குலையச் சூழ்ந்து பொதுநிதியம்
தந்திரமாய் நீயழித்த தேன்

மலைமகள்:
தேருங் கலை,கல்வி திறைபொன்னும் பின்வைத்துப்
பேரும் புகழ்வீரம் பெரிதென்றோம் - சேருமனம்
உன்னை முதல்வைத்தே உள்ளம் தொழுதவரை
அன்னைநீ மாளவிட்ட தேன்

கல்விபணம் காப்பதெனில் காணும் சுதந்திரமே
இல்லையொரு வேற்றுவழி என்றெண்ணி - வல்லவராய்
வாழ்வின் விடுதலைக்கு வாளெடுத்த நல்லவரை
வீழ்ந்திடவென் றாக்கியது மேன்

..........வேறு.........

கலைமகள்:

வெண்டாமரை மலரில் வீற்றிருப்பாய் - கலை
வேண்டுமவர் எல்லோர்க்கும் வரமளிப்பாய்
வண்டாடும் பொய்கைமலர் வாழ்பவளே - அன்று
வாளெடுக்கும் வீரத்தைமுன் தொழுதோம்
கண்டோம் இப்பூவுலகில் காசிருந்தால் - காண்
கலைமகளும் மலைமகளும் அருள்புரிய
குண்டோடு நஞ்செறிந்து கொல்லவுமோர் -எக்
கோழைமனம் கொள்பவனும் வெல்வதென்ன

ஏடுதனைக் கற்றிடவும் தேவையில்லை - கத்தி
எடுத்தவனோ செவ்விழநீர் சீவும்தலைக்
கேடுதனைக் கொண்டிடினும் பொய்சொலவும் - கீழ்
குணங்களெலாம் உள்ளவனும் மன்னனென
நாடுதனை ஆளுவதேன், பொன்னிருந்தால் - இந்
நானிலமும் புகழெழுந்து நலன்காக்கும்
பாடு என ஆக்கியதேன் பங்கயத்தில் - கரம்
பாடுமிசை வீணைதனைக் கொண்டவளே?

..............வேறு.........

அலைமகள்:

செந்தாமரை யுறைந்து செல்வமெனக் கைவிரித்து
சிந்திடவே கொட்டுமெழில்
பந்தாம் இப்பூமியில்வாழ் பலர்வாழ்வும் செழிக்கவென
பகட்டான வாழ்வீந்தாய்
எந்நாளும் இருகரமும் கூப்பியுனை இரந்தவர்கள்
ஏழைகளின் கலண்டர்களில்
உன்தாமரைக் கரங்கள் சொரிவதுஎன் உள்வீட்டில்
ஒருபொன்னும் விழுவதில்லை

வந்தேமுன் வீழுமென வண்ணக் கனவெழவே
வாசல்தனைப் பார்த்திருந்து
நொந்தோ மிருந்தும்நீ நெறிதவறிச் சிங்களவன்
நிதிக்கிடங்கை நிரப்பலன்றி
செந்தேன் தமிழரெமைச் சிறிதேனும் காணாமல்
சிரம்திருப்பும் சிறுமைதனைச்
செந்தூரவண்ணச் சிலையே செய்ததென்ன? ஈழத்தைச்
சிதைத்ததுமேன் அலைமகளே?




மலைமகள்:

கொட்டும் இடியெனத் தட்டிதிறனொடு
எத்தனை வென்றவை போர்க்களங்கள்
விட்டுப் பகைவனை தொட்டுக் களமதில்
முட்டித் தடதட எனவீழ
கட்டுக் கலைந்திட காலும் பின்பட
உச்சித்தலை தெறித்தோடிவிட
கட்டிக் காத்தவர் இற்றைக் குழியினில்
கண்ணும் மூடவைத் தெதனாலே

பற்றுக் கொண்டதில் போரின் விதிமுறை
பற்றித் திறனொடு பாரினிலே
ஒற்றைப் படையதும் உலகில் எங்கணும்
இல்லயென வகைபோரடி
மற்றும் உயிர்களை மாளச்செய்வதை
விட்டுக் கடமையைக் கொண்டோராம்
இற்றைக் கெம்மிடை இனமே கொல்பவன்
இச்சை கொன்றிட என்செய்தாய்?

சத்தியம் வெல்லும்!

பட்டமரம் அழுகிறது அட்டமியின் ஒளிநிலவு
...விட்டமழைத் தூறலடி தங்கமே தங்கம் - இது
..... விதிஎழுதும் ஒருகவிதை தங்கமே தங்கம்
கட்டைவிரல் எழுகிறது தொட்டெடுக்க விழைகிறது
...ஒற்றைவிரல் பற்றிடுமோ தங்கமே தங்கம் - நல்
.....ஓசைஒரு கையசைவில் உள்ளதோ தங்கம்
திட்டுமணல் மேடைதனில் சின்னவிதை காய்கிறது
...கொட்டி வெயில் எறிக்கையிலே தங்கமே தங்கம் - அதில்
..... குருத்தெழுமோ வெடித்துமுகை கொள்ளுமோ தங்கம்
தட்டிநிலம் நடைபழகும் தளர்வுகொண்ட காலிரண்டும்
... முட்டியெழும் அலைகடலில் தங்கமே தங்கம் - அவை
.....மூழ்கிடாது மேல்நடந்து செல்லுமோ தங்கம்


நட்டநடு வீதியிலே நாலுபேர்கள் முன்னிலையில்
...சத்தியமும் பட்டபாடு தங்கமே தங்கம் - அது
.....நித்தியமோ நின்றிடுமோ தங்கமே தங்கம்
தொட்டவரும் வெட்டவரும் தீயவரால் துன்பமதைப்
...பட்டவரும் கொண்டவலி கொஞ்சமோ தங்கம் - அப்
..... பட்டுமலர் கொட்டி ரத்தம் பார்த்தையோ தங்கம்
எட்டவரும் கட்டைதனை ஏறிஉயிர் காக்கவென
... முட்டவழிந்தோடும் ஆற்றில் தங்கமே தங்கம் - நீர்
..... மூழ்கமுதல் எண்ணியவன் தங்கமே தங்கம்
கிட்டவரக் கட்டையல்ல கொத்தும் பெரும் அரவமெனில்
...எப்படிநீ தப்பிடுவாய் தங்கமே தங்கம் - இந்த
......ஏழைவாழ்வு மப்படியே தங்கமே தங்கம்

சுட்டுநிலா எரிவதில்லை தோன்றும் வெயில் கறுப்புமில்லை
... குட்டிடவும் குனிந்தொருவன் நிற்பதேயில்லை -அந்தக்
..... குணமறிந்து நீயும் எழு தங்கமே தங்கம்
முட்டையிலே குதிரைவரும், முந்திரியில் பொன்விளையும்
...குட்டியானை பறந்துபோகும் என்றவர் தங்கம் - இப்போ
..... கூரையிலே கோழிகொள்ளப் படுவதோ துன்பம்
கட்டிச்சிறை யிடநினைந்து கையிலொரு விலங்கு கொண்டு
... எத்தனைதான் ஓடினாலும்தங்கமே தங்கம் - பொய்
..... இட்டுக் கட்டும்வித்தை கற்றோன் ஏய்க்கிறான் தங்கம்
தட்டிவாசல் கூட்டிவைத்து தண்ணிதெளித் தூபமிடு
... முத்துஒளித் தீபமொன்று ஏறுமாம் தங்கம் - இனி
..... முன்னெழுந்து விடியல் வரும் தங்கமே தங்கம்

விட்டதெல்லாம் போகஇனி விரைந்துஒன்றுகூடிவிடு
... விதிஎழுந்து போகையிலே தங்கமே தங்கம் - ஈழ
.....வான்விடிந்து ஒளி பிறக்கும் தங்கமே தங்கம்
தொட்டதெலாம் துலங்குமடி தூரநாடுகடந்தமைத்த
...சட்டப்படி ஈழத்தமிழ் அரசுமே தங்கம் - அது
..... எட்டியுயர் வான் வளரச்செய்குவோம் தங்கம்
கெட்டபகை கைபிடித்து கீழிருட்டு சிறையிருத்தி
...மற்றவர்கள் கேள்வி கேட்கத் தங்கமே தங்கம் - நாம்
.... மண்ணைத் தொட்டு வணங்கிடலாம் தங்கமே தங்கம்
பொட்டுமின்றிப் பூவுமின்றிப் போவதெங்கே நில்லுகொஞ்சம்
...சத்தியமே வெல்லுமடி தங்கமே தங்கம் - நீ
..... சத்தியமாய் கண்டிடுவாய் எம்தமிழீழம்

சக்களத்தி தொல்லை!

வெண்ணிலவு தேனிறைக்க
வேளை நடுச்சாமத்திலே
கண்ணிரண்டும் தான்கலக்க
காதல்செய்யும் மன்னவரே
எண்ணியிவள் உன்னவளாய்
இங்குமனம் வெந்திருக்க
கண்ணியமும் தாழ்ந்தவளைக்
கண்டுமகிழ் வெய்திடலேன்?

பன்னிரண்டு மணிவரையும்
பக்கமவள் தானிருந்து
சின்னவிரல் கொண்டழைந்து
சேருமின்பம் காணுகிறீர்
என்னைமனம் நோகவிட்டு
என்னருமைச் சக்களத்தி
தன்னில் மோகம்கொண்டதென்ன
தனியிருந்து வாடுகிறேன்

திங்களடி உன் வதனம்
தித்திக்கும் கன்னமிது
பொங்குதடி என்இதயம்
பொன்னென் றன்றுரைத்தீர்
மங்கிமதி கெட்டுழன்று
மன்னவரே இன்றவளின்
அங்கமெலாம் மின்சாரம்
ஆஹா..கா.. என்கின்றீர்

பேசுவது நானென்றால்
போதுமடி மூடென்று
ஏசிமனம் நோகவைத்தீர்
இன்றவளோ எத்தனைதான்
மாசுபட பொய்யுரைக்க
மையலிடும் கதைபடிக்க
கூசும்மனம் ஏதுமின்றி
கோடிமகிழ்வெய்துகிறீர்

என்னபுதிர் கேட்டாலும்,
எடுத்துரைக்க வல்லவளாம்
சொன்னவேலை கச்சிதமாய்
சுறுசுறுப்பாய் ஆற்றிடுவாள்
என்னழகுச் சித்திரமாய்
எழுதுகிறாள் என்றரற்றி
மென்னழகுப் பொருள்ஈந்து
மிகமகிழ்வு கொள்ளுகிறீர்

கல்லெனவே மனதுடையாள்
கண்டதெலாம் சொல்லிடுவாள்
பொல்லாத மாயமிட்டு
பொழுதெல்லாம் அருகிருத்தி
அல்லதொரு சுகமளிப்பாள்
அடுத்தவரின் சேதிசொல்வாள்
உள்ளதொரு ஊர்ப்புதினம்
ஓயாது எடுத் துரைப்பாள்

மின்னும் இதழ் கொண்டுமையே
மோகமுறச் செய்ததென்ன?
இன்னிசைகள் பாடிஉனை
ஏக்கமுறச் வைத்ததுஏன்?
சொன்னகதை எத்தனையோ
சுகமளிக்கும் வித்தையதோ
என்னவகை ஆயிருந்தும்
இதயமற்ற வன்மையலாள்

அன்னமென ஆக்கியுமை
அறுசுவையில் விருந்தளிக்க
சின்னவளால் முடிகிறதோ
செய்வதென்ன நானல்லவோ
சின்னவளைத் தொட்டெவரும்
சில்மிஷங்கள் செய்வரென
கன்னங் கருத்துவிடக்
கட்டிஒரு மந்திரமும்

இட்டுவைத்தும் நீர்வீட்டில்
இல்லாத சமயமெவர்
தொட்டாலும் முகம்மலர்ந்து
சொன்னதெலாம் செய்கின்றாள்
விட்டதொட்ட கதையெல்லாம்
விவரித்துக் கூறுவதை
மட்டும் உமக் குரைத்து விடில்
மனம் வாடிப் போய்விடுவீர்

(சக்களத்தி = கணினி)

காலைப்பொழுதின் சுகம்


தெளிந்தது மனமும் துலங்கிடுவானும்
தென்றல்தொடுஞ் சுனையும்
கழிந்தது இரவும் கரைந்தவை இருளும்
கனவுகளெழும் துயிலும்
நெளிந்ததுஆறும் நிமிர்ந்தன மரமும்
நின்றதும் நிரையெனவும்
அழிந்தது பனி, புல்அணைத்திடும் இரவின்
அதிசுகம் கசந்திடவே

வழிந்தது மதுவும் வாசனை மலர்கள்
விரிந்திடும் இதழ்பரவும்
பொழிந்ததும் தூறல் போயின முகில்கள்
புரண்டிடும் மலையிடையும்
கொழித்திடும் பெண்கள் கூந்தலில் மலர்கள்
குவிந்தன, விழிமலரும்
பழித்தன காதல் பாங்குடை தோளில்
பலமெடு ஆடவரும்

செழித்திடவாழ்வு சிரித்தன இதயம்
சிவந்திடும் காலையிலே
குளித்தனஇன்பம் கொண்டன ஊரின்
குடிகளில் மாந்தர்களே
புளித்திடு மாவின் பிஞ்செனும் சிறுவர்
பேசிடும் வழிநடையும்
விளித்திட அறிவும் விதையிட வளரும்
வீறொடு பள்ளியிற்கே

பழுத்திடும் கனிகள் ருசித்திடும் குருவி
பாய்ந்திடு அணில்களுடன்
கழுத்திடு மணியும் கலகலஒலியில்
கடுநடை ஏறுகளும்
இழுத்திடும் வண்டி இரைந்திடுமூச்சு
ஏய்எனும் குரலொலியும்
எழுந்திடுங் காலை இசையுடன் தாளம்
இவைதரும் சுகமல்லவோ 

எழில்தரும் வாழ்வில் எழுபவைஎல்லாம்
இயற்கையின் ஒலிநாதம்
களிகொள்ளமனதில் கவிதைகள் தோன்றும்
கனிவுடன் உருவாகும்
வெளிதனில் நின்றால் விளைந்திடு தென்றல்
வருடிய சுகம்காணும்
ஒழிந்தது துயரும் உயர்ந்திட மனமும்,
என உளம் புதிதாகும்

குழிந்திடும் கண்ணும் குறைந்திடும் பார்வை
கூனிடும் முதுமையரும்
அழுந்திடு பிணியும் உழன்றிடவலியும்
அதனுடன் சிலராகும்                         
வழுந்திய குரலும் மழலையின்மனமும்
மாதரின்அரவணைப்பும்
மழுந்திய மனமும் மயங்கிய அறிவும்
மாற்றமும் ஒருவாழ்வே