Tuesday, March 12, 2013

வாழும் வாழ்வு !


நல்ல மனங்களிள் அன்புக் கோவில்கட்டி
ஆண்டவன் வாழுகிறான் - அவன்
சொல்லி வழி நடந்தின்பம் பெறுவதை
என்றுமே கொள்ளுகிறான்
எல்லை வகுத்தவர் அல்லல்தனை நீக்கி
ஓங்கிடச் செய்யுமவன் - மனம்
கல்லை நிகர்த்தவர் கொள்ளும் இதயங்கள்
மெல்ல உருக்கிடுவார்

கண்ணைத் திறக்கினும் காணுபவை வெறும்
காட்சி கனவுகளே -  இந்த
மண்ணில் நடந்திடும் மாய விநோதங்கள்
மர்மக் கதை யெனவே
எண்ண மென்பதென்ன  எத்தனை பேய்களின்
இன்பச் சுடுகாடு  - நெற்றி
கண்ணனவன் நட மாடிக்கழிக் கும்வெண்
சாம்பல் கொள்ளும்மேடு

அள்ளிக் கொண்டுசெல்ல ஏதுமில்லை நாமும்
அந்த மென்றாகையிலே - ஒரு
வெள்ளிக் கதிரொளி ,வெற்றிடம், சூழிருள்
வேறொன் றிருப்ப தில்லை - யாவும்
துள்ளித் திரிகின்ற பொன்னெழில்வாழ்வினில்
தேடும் பொன்செல்வங்களும் - பதில்
அள்ளியெடுத்திட வந்துவிழுவது
ஆகத்துயர் அழிவே

தொல்லை தரும்விதி கொண்டவாழ்வுமிது
தூய்மையில் மாயைகளாம் - நாமும்
இல்லைஎனப் புவி நீங்கிய பின்னரே
உண்மையைக் காண்பதுண்டோ
சொல்லிலே தன்னலம் எண்ணும் மனம்விலங்
குள்ளபெருங் காடு -  இவை
அல்லதென்றாகியும் மற்றவர்  போற்றுவர்
ஆகா எழில் வாழ்வு

1 comment:

  1. முடிவில் உள்ள வரிகள் அனைத்தும் உணர வேண்டிய உண்மைகள்...

    ReplyDelete