Friday, August 31, 2012

துயரே தினமும்..!

சலசலக்கும் அருவிதரும் சங்கீத ஓசைதனில்
சஞ்சலமே கொள்ளுமனம் சாந்தமுறாதோ
கலகலக்கும் குருவிஇசை காற்றி லெழும்வேளையிலே
காதுவழி சென்றுதுயர் களைந்துவிடாதோ
பலபடித்தும் அறிவதல்ல பட்டவைகள் கற்பதெனும்
பாடமென எண்ணியதை பழகி விடாயோ
குலமழிக்கக் குடியழிக்க குமுறும் கடல்எழுமொருநாள்
கூடிநின்றே தினமழிப்பார் கொடுமைகள் விதியோ?

சிலர் அயலில் சோதியெழும் சில இருட்டுள் தள்ளிவிடும்
செலவிருக்கும் வாழ்விலென்ன சிறிதும்மிஞ்சாதோ
கலவரமும் வாழ்வில்வரும் கலவரமே வாழ்வுஎனில்
காணும்துயர்க்  காட்சிதனை மாற்றுவர் யாரோ
பலர் மலைத்தும்  பலமழிந்தும் பலரலைந்தும் பலரிழந்தும்
பட்டதுயர் மாறவில்லை பாவங்கள் ஏனோ
கலகமதில் கோபுரங்கள்  காணும் மனை தீயழிக்கக்
காப்பவர் யார் நாடகமும் ஒப்பனைதானோ

தலை வரைக்கும் மேலெழுந்து தண்புனலும் மூடுவதாய்
தாவியிடர் ஏறியபின் தன்னிலை யாதோ
மலையளவு துன்பமிடத் மனமுடைய காண் அவலம்
மறுபடியும் மறுபடியும் உயிர்பெறலாமோ
வலைநுழையும் மீன்களென வாரி அவர் கொண்டதெல்லாம்
விதியழிக்கும் கொடுமையென விளைவதுமேனோ
அலைகரங்கள் ஆட்டுவதும் அதிபெரிய கப்பலெனில்
அகம்மலைய உலுப்புவதாம் அதனிலும்பெரிதோ

உலைகொதிக்கும் வாழ்வுதனில் உயிர்கொதியைப் போக்கவென
ஓடுமிடம் எரிமலையின் ஊற்றெனலாமோ
நிலைதளரும் வேளையிலும் நீயிறைவா அன்பு செய்ய
நிகழும் இதம் மகிழ்வுதரும் நிறுத்தியதேனோ
கலைத்தெமையே கூற்றுவனும் கயிறெடுத்தே துரத்துகிறான்
கைப்பிடியில் அகப்படுவர் யார்முதல் தானோ
விலையுங் கொள்ளா வாழ்வுதனில் விலைபெருத்த உயிர்பறிக்க
விடைகொடுப்பர் யாரறியோம் நீயல்ல நானோ


Wednesday, August 29, 2012

ஒரு மலரின் ஆற்றாமை (காற்றை விரும்பிய மலர்)


சித்திரமே சிறுமலர்நான் சிரிக்கக் கூடாதா
செவ்விதழ்கள் புன்னகையை விரிக்கக்கூடாதா
எத்தனைநாள் காத்திருந்தேன் இருள் விலகாதா
எழும் கதிரால் முகை வெடித்தே இளமை கொள்ளாதா
சித்தமெல்லாம் உருகமனம் சிலிர்ப்பெடுக்காதா
சேர்ந்தபனி தூறல் தன்னில் செழுமை கொள்ளேனா
சத்தமில்லா தொட்டுமனம் விட்டவன் மீண்டும்
சங்கதியை கேட்டு மணம் கொள்ள வரானா

ஒற்றையென்றே வாழ்ந்துநிதம் உற்றதே துன்பம்
ஓடிவரும் ஆறுகடல் ஒன்றெனக் கூடும்
குற்றமென்ன நானிளைத்தேன் கொண்டவனின்றி
கோலமலர் குற்றுயிராய் வாழ்ந்தது போதும்
வெற்று மனம்கொண்டு நிதம் வீழ்பனி கூதல்
வெள்ளிநிலா பொன்னொளியில் விளைவது துன்பம்
சுற்றிவரச் சென்றவராம் சுந்தரவாசன்
சொந்தமெனை விட்டு மனம் சென்றது எங்கே?

கற்றவரும் மற்றவரும் கண்களில் காணும்
கண்டவுடன் முகம் மலரும் கடுவினைகூடும்
பற்றியெனை கையிழுத்து பக்கத்தில் சேர்கும்
பழியதனால் உருவழியும் பாதகமாகும்
நெற்றியிலே குங்குமமும் சூடுவர் தன்னும்
நீளமெனைக் குழல் முடித்தே நிம்மதிகொள்ளும்
மற்றவரின் வாழ்வுக்கெனை மாண்டிடவைத்தும்
மனிதசுகம் தருமெனை நீ மறந்தனை ஏனோ

புத்தம்புதுவாழ்வுதனும் புழுதியில் போக
புதுமலரே என்றதெலாம்  போயெழில்வாட
நித்தம் சில வண்டு எனச் சுற்றிடக் காணும்
நின்றெனையே கொள்ள எந்தன் நிம்மதி போகும்
சத்தியமே விட்டு அவை தேனுண்ணக் காணும்
சம்பவமும் முடிந்தபின்னே சடுதியில் ஓட்டம்
இத்தனையும் கொள்ளுமிவள் எத்தனைபாடு
இவ்வுலகில் வாழ்வதற்கு ஏனிந்தக்கேடு

கத்துங்குரல் இன்றி மனம் கலங்கிடுவேனோ
காற்றணைந்து காதல் மணம் கொண்டிடுமாமோ
உத்தமனே உன்கரமும் தொட்டபின் நின்னை
உள்ளமதில் வைத்துநிதம் உருகுவளாமே
நத்தையென ஊரும்கணம் நாளென மாறும்
நானழிந்து போகமுதல் நாட்டினி லோடும்
சத்தியமும் மீறியதோர் சந்தணவாசா
சேர்ந்திடலாம் கூடி மணங் கொள்ள நீவாடா

Monday, August 27, 2012

பிடிக்கல்லை


வாழப்பிடிக்கலைடா தம்பி வாழப்பிடிக்கலைடா
வையகமெங்குமே ஓடித்தரங்கெட்டு வாழப் பிடிக்கலைடா
தாழப்பிடிக்கலைடா தம்பி தாங்கும் மனதில்லடா
ஆழக்கடலிலும் நம்பிக்குதிக்கலாம் ஆட்களைஇல்லையடா
ஏழை துடிக்குதடா தம்பி ஏழ்மை பிடிக்கல்லடா - இந்த
ஏய்ப்பவ ரின்னமும் ஏறியிருக்கிற  ஊரைப்பிடிக்கலைடா
கூழைக் குடித்திடலாம் வாழ்வில்  கூனிக்கிடப்பதிலே
கொஞ்சமுள்ளேமனம் கொள்ளுது இன்பமென்றில்லை வருத்தமடா

வாளைப் பிடிக்கலைடா  தம்பி வாலைப் பிடிக்கலைடா இன்னும்
வாழவைக்குந் தெய்வம் காலைப் பிடித்துமே வாழக்கிடைக்கலைடா
மேள மடிக்கவில்லைத் தம்பி மூச்சுநிறுத்தவில்லை - காட்டில்
மேவி அடுக்கியோர் மேடை விறகினிற் பாயை விரித்தாரடா
தோளை யிழக்கலைடா தம்பி தொட்டதிலங்கலைடா உள்ளத்
தூரிகையால் மனவானில்கிறுக்கிடத் தோன்றுது செந்தணலா
வாழைமரத் திலிடா தீயும் மூளப்பெ ருத்திடுமா -எங்கள்
வாடும்மனதுக்கு வாழும்வழிகாட்டும் வண்ணம் எழுந்திடுமா

மீளப் பரந்திடுமா இன்பம் மெல்லத் தழைத்திடுமா - உள்ள
மேக இடிமின்னல் போலும் உணர்வது ஓடித்தணிந்திடுமா
மாளக்கிடந்தவர்கள் கூடு மெல்லத் திறந்திடுமா அந்த
மாவிற் கனிகொள்ளும் கூவும்குயில்களும் ஓடிப்பறந்திடுமா
சோளம்விளைந்த வயல் நிற்கும் சூரன் வெருளியினால்  - அச்சம்
சூழல்தவிர்ந்தொரு வேளை பயமில்லா வாழ்வு கிடைத்திடுமா
வாழப்பிடிக்குமடா இந்த வாழ்வுமினிக்குமடா - இந்த
வையகம் தன்முறைவாழ்வெடுத்தால் மட்டும் வாழப்பிடிக்குமடா!

Saturday, August 25, 2012

வரமொன்று தந்தாள் !


விக்குகிறேன் திக்குகிறேன் விளையாடிப் பூமழையில்
சொக்குகிறேன் நிற்குமிடம் செந்தமிழ்காடோ
நெக்குவிடும் தேன்மலர்கள் நிற்பனவோ சாய்வனவோ
தொக்குமினித் தேன்சொரிந்தே சிந்துகுதாமோ
எக்குகிறேன் ஏகிறுகிறேன் இரவினொளி நிலவினிலே
பக்கமிருந் துற்றதமிழ் சொல்லிட எண்ண
சிக்குங்கரு நீள்முகிலுள் சுந்தரவான் மதியுறக்க
எக்கருமை செய்ததிவை கற்பனை போக!

செக்கச்சிவந் தாதவனும் சேருமொளிக் காலைவரை
இக்கதிதான் இருள் மருவ அற்புதவானில்
தக்கஎழில் கொண்டெழவும் தன்னுடையோன் விண்ணொளிர
மொக்கலர்ந்து காணுகிறாள் தாமரையாளே
திக்கிலொளி கீழெழவும் தென்றல்தொடப் பூமலர
லக்குமியும் வீணைமகள் வீரத்தின் தாயே
முக்குணமும் கொண்டவளாய் முன்னிருந்தாள் தேவியவள்
மிக்க எழில் சக்தியுடன் மென்மலர்மீதே

செக்கிழுத்த தாய்ச் சுழன்று சுற்றிவந்து வீழ்ந்தெழுந்தேன்
சக்தியிடம் வேண்டும் வரம்என்பது போல
மிக்க தமிழ் கூறுவையுன் மேன்மைதனுக் கீந்திடலாம்
துக்கம்விடு சொல்லுமனம் தோன்றவதேது
`சுக்குப்பல நூறெனத்தூள் ஆக்கும்பலம் ,வீரமதும்
புக்குமிடம் வெல்லும்பலம் போலவும்வேண்டும்
அக்கம்பக்க மெங்குமிலா அற்புதமாய் பொன்விளைந்து
சொக்கி நிற்கும் செல்வமென மற்றது வேண்டும்

சக்கரமோ சுற்றுவதாய் தாழும் எழும் வாழ்வினிலே
அக்கறையாய் பாடுந்தமிழ் அத்துடன்வேண்டும்
திக்கிலெலாம் நின்றவளோ தேன்கவிதைச் சொற்குரலால்
பக்குவம்பார் ஒன்று மட்டும் கொள்வதுகூடும்
இக்கணமென் றோதிமன இச்சைதனை விட்டுவிடு
முக்கனியில் ஒன்றுவிழி மூடிஎடென்றாள்
கைக்குள் விரல்ஒன்றெடுத்து கண்விழிக்கா மூடியதாய்
முக்கனியில் ஒன்றுதொட முத்தமிழ்கொண்டேன்

அற்புதமுன் ஆசைகளில் ஆனதுஒன் றாகியதே
பொற்கதிரில் போகமுதல் புன்னகைத்தாள் காண்
சிற்பஎழில் தேன்மலரால் தெய்வமெனும் அன்னையவள்
கற்பனையின் நாயகனே கைதொடும்போது
சற்று இடம் மாறிடினும் தங்கத்தமிழ் தானிருக்கும்
பற்றுடையேன் நின்கனவில் பாரடா என்றாள்
வித்தகியாய் காணுபவள் விட்டகலத் தொட்டெடுத்தேன்
மற்றபழம் மீதுங் குறி செந்தமிழ் கண்டேன்

Friday, August 24, 2012

காத்திருப்பேன் கண்ணா

கிராமத்தில் ஒரு வயல் காட்சி . அவனும் அவளும் மாறிமாறி பாடுகிறார்கள் )

வெயில் வெறுத்தே உலகைவிட்டு
வீழுதடி மனசுதொட்டு
வயல் கரையில் ஆடிஉலா வந்தவளே - உன்
வடிவெடுத்து வானம் செம்மை கண்டதல்லோ

முயல்பிடித்தேன் மூணுகாலு
நெல்விதைத்தேன் சோழமாச்சு
இவள் மயக்க கதையளந்த மன்னவரே - உள்ளம்
எதைநினைத்து கலங்குகிறாள் இன்றவளே

கண்ணிலிட்ட மைகறுப்பு
காணுங் குரல் தளதளப்பு
என்னவட்டம் போடுகிறாய் சின்னவளே- உன்
இளமை என்னை கொல்லுதடி பொன்னவளே

மண்ணை ஆழஉழுதுவைத்து
மாடுரண்டை விரட்டிகிட்டு
கண்ணை மேல வைக்கிறீரே சின்னவரே - இது
கண்ணியமோ கூறுமய்யா பொன்னவரே?

சலசலத்து ஓடும்நதி
சற்று நடை தவறுமடி
சிலுசிலுத்த புல்வரம்பில் சித்திரமே - நீ
சிரித்து விட்டால் மாமன் கெட்டான் இக்கணமே

கலகலப்பு பேச்சிலிட்டு
கன்னிமனம் கலங்கவிட்டு
நிலவு நேரம் கைபிடிக்கும் நல்லவரே- உங்க
நினைவி லிங்கு காயும் நிலா வெந்ததுள்ளே

கலயமொன்று இடுப்பில் வைத்துக்
கைவடிக்கா சிலைநடந்து
வலை விரித்தே எனைப்பிடித்தாய் வல்லவளே- இந்த
வானத்துக்கும் மழை இருக்கு ஈரமுள்ளே

உலையிலிட்ட சோற்றினிலே
ஒருபருக்கை பதமெடுத்து
நிலையறிந்து வடிச்சிடலாம் மன்னவரே - உங்க
நினைவி லேது படிக்கணும் நான் இன்னுமல்லோ?

சலசலத்துக் காளை பூட்டி
சாலையிலே ஓடும்வண்டி
கலகலக்கும் உன் சலங்கை சத்தமடி - என்
காலமெல்லாம் உன்முகந்தான் மிச்சமடி

நெல்முதிரும் கதிர் வளையும்
நேரம்வரும் அறுவடைக்கும்
நல்லவரே வளைந்து நின்றேன் பாரய்யா - எந்த
நாளில் எனைக் கைபிடிபாய் கூறய்யா

வயல் விதைத்து வளரவிட்டு
வளம் கொழிக்க அறுத்தெடுத்து
வசதியுடன் மாமன் நிற்பான் தையிலே - அப்போ
வாழ்வில் உனைக் கலந்திடுவேன் பொய்யில்லே

புயல் அடிக்கும் மழையும்கொட்டும்
புகுந்த வெள்ளம் குடியழிக்கும்
அயல் முழுக்க கிசுகிசுக்கும் நல்லவரே -- உயிர்
அதுவரைக்கும், துடித்திருக்கும் என்னவரே!

Wednesday, August 22, 2012

தெரியாத விடையைத் தேடி 3

இது ஒரு அசாதாரண கற்பனையாக இருக்கலாம். அதாவது இறைவனின் இந்த உலகப் படைப்பிலே  மாற்றங்கள் தேடுகிறேன்.இந்த வந்துபோகும் உலகவாழ்வால் என்ன நடக்கிறது. அது ஏன் இருளாக இருக்கிறது.  பாவம் செய்வனும் வாழ்கிறான் . புண்ணியம் செய்தவனும் வாழ்கிறான். பெரிதாக ஒன்றும் வித்தியாசம் தெரியவில்லை. அதனால் பூமியைப் படைத்தவர் புனரமைக்க வேண்டும் இதுவே என்மன எண்ணம். பாவங்களுக்கு பரிகாரம் அடுத்த பிறவிவரை வேண்டாம். உடன் தீர்வு தருக. அல்லது பாவம் செயல்களை நீக்குக. இதுஎனது வேண்டுகோள் இது பைத்தியக் காரத்தனமாக இருந்தாலும் சொல்லத்தோன்றியது எனது எண்ணத்தில் ஒரு பத்துவீதத்தை இங்கே தந்தேன் தருகிறேன்
அன்புடன் கிரிகாசன்



புது யுகம் படைப்பாய்  தேவி*


பொன்னால் எம் மேனிசெய்து பூந்தேனை ஓடவிட்டு
மின்னல் ஒளியழகும்  மேவும் மணம் மலர்வாசம்
பன்னீராய் வேர்வை விழப் பட்டபனிப் புல்லழகாய்
தன்னோ டிழைந்து செலும் தகதகத்த மேனி தந்து

கண்ணால் வழிந்தழுதால் காண்பதுவோ இன்பமென
மண்ணில் விழுந்துடலும் மாளும் வகை இல்லையென
எண்ணில் குறித்திவர்க்கு இத்தனை நாள் வாழ்வென்றும்
விண்ணேகும் காலங்கள் வேறன்றி ஒன்றமைத்து

அன்பும் அறனுடனே ஆட்சியிலா வாழ்வுமுறை
மன்னன் மணிமுடிகள் மாவதைகள்தான் நிறுத்தி
இன்னு முண்ப தென ஏழைவயல் விளைஅன்னம்
புன்மை விலங்கினுடல் போலெதுவும் இல்லாமல்

பொன்னாய் இருந்துமுடல் போரெனவே பகைகாணின்
மின்னாய் கரைந்துருகி  மெல்ல வெளிக்காற்றோடி
சின்னத் தூளாகிச்  சென்றப்பால் சேர்ந்துருவம்
தன்னால் கொளும் மாயத் தன்மையுடன் படைத்தாலென்

பிள்ளைப் பேறில்லை பேருழைச்சல் நோவில்லை
முள்ளில் பட்டாலுங்கால் மோசவலி கொள்வதிலை
உள்ளமொன் றுள்ளேவைத் துணர்வோடு மதையாக்கி
தெள்ள தெளிந்த மதி தீங்கற்ற யோசனைகள்

பள்ளிப் படிப்புடனே பல்கலைகள் கற்றிடவும்
கொள்ளும் பசிக் குணவாய் கூட்டிவலு மின்கதிர்கள்
வெள்ளைக் கதிர் வலிமை வீரமதை வேண்டுமெனில்
அள்ளிப் பசுமை மஞ்சள் அத்தோடு நீலம் என

வண்ணக் கதிர்க்கலவை வாய்ருசிக்கத் தின்றுமனம்
எண்ணும் கனவுகளில் எழும்வண்ணக் காட்சிமயம்
கண்ணும் காணுமுடல் கை தொடவோ ஒன்றுமில்லை
வண்ணம் எமைப் படைத்து வாழவென விட்டாலென்

காந்த அலைக் கட்டும் கால்நடக்க மின்னதிர்வும்
மீந்தே அதிகரித்தால் மேனியிடை சூடெழவும்
கூந்தல் அலைக் கதிர்கள்  கொண்ட மணம் எங்கிருந்து
தீய்ந்த குறுமணியா  தின்ற கதிர்மின் தெறிப்பா    

ஆய்ந்து விளையாடி அழகுக் கனவுலகில்
நீந்திக் கதைகள் சொலி நெஞ்சமதில் நன்றெண்ணி
சாந்தி கிடைத்ததெனச் சஞ்சலங்கள் விட்டொழிந்து
மாந்தர்தம் வாழ்வுதனை மாற்றிவைத்தல்ஆகாதோ

கண்ணிரண்டு மூடவுமுன் காணுமிருள் தேவையில்லை
நண்பர் உறவுகளும்  நல்லதன்றி எண்ணமில்லை
பெண்கள் சிதைவதற்குப் பேதையுடல் திண்மமில்லை
எண்ணம் பிழைத்தவனோ எட்டித்தொட ஒன்றுமில்லை

வெள்ளை முகிற்தேரினில்  விண்முழுதும் சுற்றிவந்து
அள்ளித் தெறித்த கடல் ஆர்க்கும் அலைமேல்நடந்து
கொள்ளிக் கெரியு முடல் கொண்டிருந்த வேளை விட்டு
எள்ளை நிகர்த்த சிறு  இன்னலென்ப தேதறியா

வஞ்சமும் சூதுவினை வாழ்வழிக்கும் ஆட்சிமுறை
நஞ்சுச் சதி சூழ்ச்சி நல்லவரை கொல்வதெனும்
மிஞ்சும் துயரவழி மேதினியில் இல்லையென
விஞ்சும் பெருவாழ்வு வேண்டுமதை ஆக்கிவிடு

(இது என் தனிப்பட்ட கற்பனை. தவறுகள் இருப்பின் சுட்டிக் காட்டுக. நன்றி)

Tuesday, August 21, 2012

அன்னையின் உள்ளம்

தொட்டாலும் மொட்டவிழப் பூக்காதோ, பூவிதழ்கள்
சட்டென்று விட்டழகு கொள்ளாதோ, உன்விழிகள்
பட்டாலும்  காய்பழுத்து வீழாதோ, நீள்வானப்
பொட்டாம் மதிஒளியைப் போர்த்து, மகிழாதோ

கொட்டும் இமையெழிலும் காணவே வீணைசுரம்
மெட்டா யெழுந்திசையும் மீட்டாதோ அன்னமென
எட்டா நடைபழகி இன்பமுடன் வைத்தஅடி
விட்டேன்போ வென்றுமடி வீழ்த்தி மகிழாதோ

நின்றே நடைபழக நீவிழுதல் கண்டாலத்
தென்றல் அணைத்துன்னை தேன்கனியே காவாதோ
பொன்போலும் ஒர்வண்டு பூவெண்ணி செம்மையுறு
நின்தாள் மலர்ப்பாதம் நின்றுமது தேடாதோ

அன்பாலே அன்னைமடி ஆறித்துயில் கொண்டவளே
அன்னை யெனப் பெயரான ஆக எனை செய்தவளுன்
தென்பால் உயிர்வாழத் தோன்றுதடி கூறுந்தமிழ்
நின்பால் இனிக்குமொழி நேருஞ்சுகம் பேசிடடி

தொட்டில் தனில்தோன்றும் திங்களென காணுவளே
கட்டும் கனிமழலைக்  கொஞ்சுமொழி கற்பகமே
தொட்டால் நெகிழ்ந்து மனம் தோற்றுவிடும்மென்னிதயம்
கட்டே விரிந்து மன்ம் காணுதடி சொப்பனமோ

நின்றால் வரும்புயலோ நிற்குவிதம் மாறியுடன்
தென்றல் எனத்தோன்றி தேகந்தனை தீண்டமலர்க்
கன்றாய் கருதி மழைகாண, முகில் ஓடவைத்து
வென்றே கதிரெழுந்து வெம்மைதந் தாற்றுமடி

பொன்னாய் விளைவயலில் போகுமிளம் காற்றூதி
முன்னால் வளைகதிரை மேனிகொள தேம்பியிரு
கண்கள் வழிந்தொழுகக்  கத்தியழும் நேரம்மனம்
புண்ணாய் துயர்பெருகி போதெல்லாம் நோகுதடி

பொன்னாய் கிடைத்தபெரும் பேறேநீ பூமியிதைத்
தன்னால் சுழலவிடும் சக்தியினை நாள்நினைந்து
என்னால் முடியுமென ஏற்றமிக உள்ளுணர்ந்து
அன்னை யவள்தனை வேண்டு, ஆற்றலுனதாகுமடி

தெரியாத விடைகளைத்தேடி.! 2

பூச்சரங்களாடும் வண்ணம் பூத்த தீயின் தோரணம்
தீச்சுவாலை விட்டுச் சீறித் தோன்றுமந்தப் பிரபஞ்சம்
வீச்சுக் கண்டு வானவீதி யோடி வந்த தீயொன்று
நீச்சல் போட்டு வான்குளிர்ந்து நிற்கும் பூமியானது

ஆன திந்தப் பூமிதன்னில் ஆளின் முன்னைத் தோற்றங்கள்
வானத்தோடு மண்ணும் சேர் ரசாயனக் குழந்தைகள்
தானடைந்த சேர்வைகொஞ்சம் தாவிஏற்றம் கொண்டிட
மானிடத்தின் சக்திஊற்று மண்ணில் ஆரம்பித்தன

அத்தனைக்கும் ஆதிமூலம் ஒன்று வான சக்தியே
புத்தியோடு சேருமந்தப் பேரரும் ஓர் நூதனம்
சக்தியும் சிவனணைந்த தத்துவத்தைக் கண்டதும்,
இச்சா,ஞான, கிரியா சக்தி மானிடத்துள் ளாகின

எத்தகை இருந்தும் அந்தச் சக்திமூலம் ஒன்றதன்
தத்துவத்தில் ஆடுமென்னைச் சற்றுமே புரிந்திலன்
உத்தமம் மென்றெண்ணி எந்தன் உயிரளித்த தேவியை
புத்திரன் சினந்து மென்னைப் பெற்றதேன் என்றாகலாய்

யுத்தம் பூமி ரத்தவேட்கை கத்துமோலம் கதறிட
செத்தமேனி சிதறும் மூளை சென்று நாயிழுத்திட
ரத்தநாற்றம் கொண்டதேசம் கண்டுமே வினாக்களை
புத்தியற்ற மூடனிங்கு பேச்சிலே பிதற்றினன்

கத்தி கொண்ட வன் அடுத்துக் காணும்மேனி வெட்டிட
எத்துடிப்பு மின்றிக் கண்கள் ரண்டும் பொத்தி நிற்பதேன்
சத்தியத்தி னோடுநேர்மை சாத்வீகத்தை விட்டவர்
மொத்தம் பூமி தன்னதென்று மூர்க்கம் கொள்ள விட்டதேன்

உன்படைப்பில் நீதிகெட்டு ஒன்றையொன் றழிக்கையில்
என்னநீதி கண்டுநீயும் உள்ளம் கல்லென் றாவது
அன்னகோர மானிடத்துக் கான நீதி தண்டனை
இன்னும் நேர்மை காவல் சட்டம் உன்வழக்கி லில்லையோ

உன்கரத்தில் கொண்ட தீர்வு என்னவென்று கூறுவாய்
இன்னுமென்ன பூமிவாழும் எம்மவர்க் கிலக்கணம்
வன்மை செய்வர் தம்மைகேட்க வாழ்க்கைநீதி திட்டமும்
சொன்னதாயுமெந்த யாப்பும் உன்னிடத்தி லில்லையோ

பூச்சி தன்னைப் பல்லிஉண்ணும் போகும்குஞ்சை காகமும்
மூச்சிரைக்க ஓடும்மானை மூர்க்காய் சிறுத்தையும்
வீச்செடுத்து நீந்தும் மீனை வீறுடன் பெருஞ்சுறா
நாச் சிவந்து கொள்ளப் பற்றும் நாங்களும் துடிக்கிறோம்

வாழ்வுஎன்ன ’வல்லவற்கு வாழ்க்கை’ என்றுன் சட்டமோ
காழ்வுகொண்டு ஏழையென்ப காவுகொள்ள விட்டதோ?
தாழ்வு கொண்ட வர்தமக்கு தாங்கும் பூமி தன்னிலோர்
வாழ்வுஇல்லை யென்று வைத்ததாய் வகுத்த சட்டமேன்?

ஆகு முந்தன் நீதியென்ன அன்னையேஉரைத்திடு
போகுமிந்தப் பூமிதன்னில் பேச்சில் உள்ள நீதியும்
வேகுமிந்த சூழை வான்வெ றுத்துமோடிச் சுற்றிடும்
பூகோ ளத்து மாந்தர் வைத்த பொய்மை சட்டம் தீயிடு

வல்லவன்தன் வாழ்வுகொள் வனாகும் என்ப மட்டுமே
உள்ள நீதியென்று கூறு உண்மை யன்பு வெல்லுமாம்
பொய்புரட்டு பேசல்தீது. பெண்ணின்கற்பு என்பவை
மெய்யென்றில்லை மானிடாஏ மாந்தையோ சிரித்திடு

மாக்கள் போலும் கானகத்தில் மானிடத்துப் பண்புகள்
நீக்கி நீயும்வாழுஎன்று நேரெழுந்துச சொல்லிடு
பூக்கள்போலும் காணுமுள்ளம் பேய்களுக்குத் தீனியாம்
சாக்கடை நிகர்த்ததென்னில் சற்று மேன்மைஎன்றிடு

தீக்குள் போட்டதாம் குடும்பம் தாலிதர்மம் பிள்ளைகள்
காக்கவென்ற சட்டமில்லை காடையர்கள் கைக்கொள
ஆக்கு சட்டம் ஆடும்பூமி எங்கும் ஓடிபேச்சிடு
போக்கிலோடும் பூமிக்கொன்றும் யாப்புஇல்லைஎன்றிடு

வாக்கு சத்யம் வாய்மை யான, வாய்த்த தீயமக்களில்
போக்குக்கான தேசராஜ்யப் போர்வைஎன்று கூறிடு
பூக்குமிந்த சோலைகாணும் பூமிகொண்ட சாத்திரம்
ஆக்கும் சம்(பி)ர தாயங்கள் அனைத்தும் தேவை என்றிடில்

மல்லிகைமனங்கள் வாழ மண்ணில் ஏற்ற சட்டமும்
துல்லியத் தெளிந்தகொள்கை கொண்டு நீஇயற்றிடு
கல்லினுள்ளே இல்லைநீயும் கருணைகொண்டுவந்திடு
சொல்லை நீதிகாப்பவர் கரங்கள் ஓங்கச்செய்திடு

தொல்லையின்றி இன்பவாழ்வு தூய்மைபேணும் நல்மனம்
அல்லலின்றி ஆண்டுகள்நல் லானந்தித்த வாழ்வினை
மெல்ல வாழ்ந்து கண்டிடநற் காரியங்கள் செய்திடு
நில்லு சக்தி நீச உள்ளம் நெருப்பினோ டெரித்திடு

பூக்கள் பூத்துப் பொன்னிறத்து வானில் மஞ்சள் தீயெழ
தேக்கும் ரம்மிய மான இன்பம்சேர்த் தெல்லார்க்கும் பங்கிடு
ஆக்கிவைத்த நின்விதிக்கு ஆடவில்லை பூமிதன்
போக்கில் சுற்றுதென்னில் வான் கருங்குழிக்குள் தள்ளிடு!

Sunday, August 19, 2012

தெரியாத விடையைத் தேடி...! பகுதி 1

வல்ல யுகம் படைத்தாய் வானிற் சுழல்வகுத்தாய்
நில்லென் றொளி செய்தாய் நேர்நிகர்த்த லற்றதெனக்
கல்லும் மண் கொண்டுருளக் காணும் புவிசெய்து
நல்லமனம் கொண்டங்கு நாம் வாழ வழிசெய்தாய்

பூவாய் வாசங்காண் பொருள்படைத்துப் போகையிலே
தூவாய் மலரெனவே தூங்கும் பூஞ் சோலைதரு
காவாய் நீதென்றலெனக்  கமகமக்கும் வாசமுடன்
போவார் வருவோர்க்கு புதுவாசம் தந்திடவும்

நாவால் இசைபடிக்க நாதம் இழைந் தினிமைகொள
நோவாய் மருந்தெனவும் நீசெய்தாய், சூட்சுமங்கள்
நீவான் பரப்பிட்டு நிகரற்ற சுழல் அண்டம்
ஆ வாய்பிளந் தலற ஆச்சரியங் கள் படைத்தாய்

தேவி படைத்தவளே திக்கெட்டும் காண்பவளே
ஏவி உலகத்தை இயக்குவளா முனைக் கண்டு
பாவி கரந் தூக்கிப் பணிதல் விட வேறெதுவும்
ஆவி இருக்கும்வரை அறியேன் அகபொருளே!

ஆயின் தமிழ்குழந்தை ஆனஇவன் வாயெடுத்துத்
தேயின் அறம் நேர்மை திசைமாறி நீதிசெலின்
வாயாற் குரல்கொண்டு வாழவெனும் உரிமைதனை
நீயிற் குவலயத்தில் நிமிர்ந்து கேள் என்றதனால்

தீயாய் கனல்தகித்தும் தெய்வம் சொல் குற்றமென
வாயால் கருகியவர் வழிவந்தோன் கேட்கின்றேன்
நீயாய் தெரிந்துமிந் நிலையற்ற பொய்வாழ்வைப்
பேயாய்  திரிந்துகெடும் பிறவிதனைச் செய்தனையோ

அழகுத் திருமேனி அற்புதமாய் சிந்தனைகள்
குழலும் திருமுகத்தில் குங்குமத்தை நெற்றிகொள
மழைலைக் குரல் மடியில் மன்மதனின் அம்புபட்டு
விழுந்த கனிஎனவும் வீரமுறும் வாழ்வீந்தாய்

அவளும் நானெனவும் அகமெடுத்த பாசமதில்
துவளும் மலர்க் கொடியைத் தோளிட்டுத் தூணாக
தவழும் குழந்தைகளும் தாங்கி கடல்நடுவே
கவிழும் படகொன்றின் கரையறியாப் பயணமிது

வாழும் இவ்வளமேனி வந்ததுமுன் சக்தியெனும்
நாளும் கிழக்கேறும் நல்லுதயச் சூரியனின்
ஆழத் தெறித்தஅனல் அணையும் கரித்துண்டுகளாம்
மீளத் தீ பற்றுமொரு மீள்வுக்காய் காத்திருந்தோம்

ஓளியின் குழந்தைகள் நாம் ஒளியாக இருந்தெம்மை
வெளியில் வான்பரப்பில் விளையாடு எனவிட்டு
தெளியும் மனதுடனே திகழும் வாழ்வமையா
பழியும் பாவமிடும் பச்சையுடல் ஈந்தாய் ஏன்?

பொழியும் சிலைசெய்யும் பொற்கலைஞன் கரம்பற்றும்
உளியும் அவன்மனதின் உருவத்தை முன்னெடுக்கும்
நெளியும் திரைகடலின் நீலம் கொடுத்தவளே
அழியும் வாழ்வுக்கேன் அனைத்தும் இருட்டமைத்தாய்

மொழியும் பலபேசி  முன்னறியா பெரும் காழ்ப்பு
தொழிலோ இறைமை யெனத் தீமை செயப் பேரும்வைத்து
அழிவை பொலிவாக்க  அரசுடைமை  நட்புறவு
கழிவைகுணம்கொண்டகாவலர் பெருகிவிட

உலகம் சுழல்வதென்ன உண்மைகளின் வெம்மைதனை
கலகம் கொலைதீமை கள்ளர்களின் கொள்ளைதனை
நிலம் மேற் கொடுமைகளை நித்தம் எண்ணிக் குற்றமுடன்
தலையும் சுற்றி  தடு  மாறி  நிற்கா ஓடுகுதோ

(பகுதி 2 ல் தொடரும்)


Saturday, August 18, 2012

படும் பாடு..


ஆடென்று சொன்னாலே அதிர்ந்துஆடும்
அம்பலத்து நடராசா உந்தன் செயலோ
ஆடென்று ஆடவைத் தகிலம் கூடி
அழித்தெங்கள் இனம் கொல்லக் காண்டாயன்றோ
சூடென்ற வேள்வியிற் தோன்றும் வேங்கை
தோல்தன்னும் கச்சையாய் கொண்டாய் இன்றோ
நாடென்று எழுந்தவர் நாமம் கேட்டு
நடுவில்மற்  றவரோடு நின்றாய் ஏனோ

பாடென்று தம்பாட்டில் இருந்தோர்தன்னை
பாடாத பாடாகப் படுத்தி நீயும்
பாடென்று பாட்டீந்து தருமிக்கன்று
படுத்தியதோர், பாடாகப் பாவி யீழம்
பாடடா சுதந்திரம் ஒன்றேபாடு
பாடதைக் காணேல்போம் உன்பாடென்றே
ஓடடா என்றெழும் உணர்வை ஈந்தும் பின்
உன்பாட்டில் ஏதேதே ஆடிவிட்டாய்

கூடென்றும் கொள்ளென்றும் உயிரை ஈந்தாய்
கொண்டோம் நாம் உன்நெற்றி கண்ணின் முன்னே
காடென்று கனல் பற்றி எரிந்தோமய்யா
கண்டும் கண்மூடாமல் நின்றாய் ஏனோ
நாடென்று ஒன்றாகி நின்றோம் இன்றோ
நாம் விட்டுபோகோம் எந்நாளும் ஓடித்
தேடென்று தேடித்தான் தேசம் கொள்வோம்
தில்லை நடராசனே தீமை தவிராய்

ஓடென்று சொன்னாலுன் திருவோடென்போம்
ஓடோம் எம்மிடம் விட்டு ஓடமாட்டோம்
மூடென்று சொன்னால்உன் முக்கண் என்போம்
மூடோம் வாய் மூடிப் பேச்சற்றல் கொள்ளோம்
கேடென்று என்செய்வாய் கேட்கும் ஓலம்
கூராயுன் சிந்தையினுள் கேட்கும் கண்ணும்
மூடென்று ஆகும்மனம் வைக்கும் அன்பால்
முற்றும் நிலைமாறி நம் வாழ்வும்ஓங்கும்

கொல்லாதே கொல்லாதே

கொல்லாதே கொல்லாதே கூவுகிறேன் - தமிழ்
சொல்லாற் குயில்போலப் பாடுகிறேன்
நில்லாதே என்றெண்ணம்  மிஞ்சுவையோ - கொண்ட
நெஞ்சின் கனவுகள் பஞ்சனலோ
கல்லாலே கல்லாலே கோவில் செய்து - அங்கு
காணவென்றே தெய்வம் உன்னை வைத்து
எல்லாமே தந்துனைப் பூசைசெய்தும் - எம்மை
ஏனோவா ழென்றிங்கு விட்டதில்லை

வல்லூறு குஞ்சினைத் தூக்கிவிடு - என
வாழ்வின் விதியமைத் தாய்இறையே
நல்லோரின் நெஞ்சங்கள் நாதியற்று - விதி
நாளும் பலிகொள்ள வைத்ததென்ன
வில்லாலே அம்பையும் விட்டதுபோல் - உயிர்
வேகமெடுத் தந்த வானடையும்
சில்லால் உருண்டிடும் தேர்வழுகி - மலை
செல்லா துருண்டுகீழ் வீழ்வதென்ன

வெல்லாத தாயெமை வாழவைத்து - அதில்
வேண்டுமென்றே துன்பம் மேவவிட்டு
கல்லால் எறிந்துகாய் வீழ்த்தலென -அந்தக்
காலமும் வீழ்த்திக் களிப்பதென்ன
நில்லாய் இருவென்று நேசமுடன் - எமை
நீலக்குழி சுழல் பந்தில் வைத்து
பல்லாங்குழி யாட்டம் ஆடுவதேன் - வாழப்
பாதியில் வெட்டிப் பறிப்பது மேன்

சொல்லாலே செந்தமிழ்ப் பாடிஉனைப் - பெரும்
செந்தீயின் ஆதிமுதற் பொருளே
கொல்லாதே என்றே இறைஞ்சி நின்றேன் - உந்தன்
கோவம் தவிர் என்று கெஞ்சுகிறேன்
வல்லாதி சக்தியிவ் வையகத்தைப் - பெரும்
வானில் உருட்டிக் களிப்பவளே
சொல்லடிசக்தி உன் தூயமனங் - கொண்டு
சோதி என்தீபம் எரிய விடு

**************

Friday, August 17, 2012

இழி பிறவி

( இது மென் உணர்வுக் கவிதையல்ல . முகம் சுழிக்க செய்யும் விரும்பினால் தொடரவும்)

கருவறைக்குள் மனிதமெழக் காணும்தேவியே - எம்மை
கழிவறைக்குள் உருளவைத்த கதையும் ஏனடி
பெரு வயிற்றுள் புரளவைத்த போதும்நீந்தியே - பின்பு
பெருமையற்ற விதமுலகில் பிறப்பதேனடி
அருவருப்பில் உருவமென்று அகந்தை நீங்கவோ - நீ
அகம்நினைத்து விதித்த விதம் அழகு பாரடி
தெருவிடத்தில் சிறுமைசெய்யும் தோற்றமாகவே - உயிர்
தரும் விதத்தை செய்ததுமேன் தருமமாமோடி

விறகு வைத்து தீயெரிய வெற்றுச் சாம்பலாய் -மாறி
வரும் உடம்பில் இனிமைசுகம் வைத்ததேனடி
உறவுவைத்து உயிர் களிக்கும் உணர்வும் ஏனடி - அதில்
உயிரெடுக்கும் வதைப்படுத்தும் உயிர்கள் பாரடி
கறந்தெடுத்த கழிவுகளின் மூட்டைதானடி - இந்தக்
கருமத்துக்கென் றெமைப் படைத்தாய் கனவுதானடி
அறுசுவையும் மலர்மணமும் அழகுசந்தனம் - என
அதைமறைக்கும் அறிவுதந்து ஏய்த்ததேனடி

பிறவிதனில் ஆண்டியுடன் பெரிய மன்னரும் - யாரும்
பேதமில்லா போதுமதைப் பின்னர்கொள்வதேன்
வறியவரின் உயிர்வதைத்து வாழ்வி லுன்னதம் - என்று
வசதிகொண்ட வலிமையினர் வாழுங் காட்சிஏன்
குறையும்கொண்ட குருதிப் பையில் குணங்கள் பூசியே - பல
கொடுமைகளைத் துணையெடுக்கும் கோலமமைத்தாய்
பிற உடலை அணைப்பதிலும் சுகங்கள் அளித்தே - அதை
பிரித்தழிக்கும் உணர்விலின்பம் பிறர்க்குவகுத்தாய்

வருவதெலாம் நோயும்பிணி வருத்தம்காணடி - அது
வரும் வரையும் கனவுசுகம் போதைதானடி
பெரும் அளவு கற்பனையின் மாயைவாழ்வடி- இவர்
பிறந்தவழி தொகை பெருக்கும் பேய்களாமடி
கருகும்வரை கழிவுகளின் மோகந்தானடி - இவர்
கைபிடித்த சதைகள்ரத்தம் கனியின் சாறோடி
உருவம் மட்டும் உரிக்கமுன்பு இன்ப ஊற்றடி - அதன்
உள்ளிருப்ப கைபடவே உயிர்கொல் நோவடி

செருப்பதிலும் கேடுகெட்ட சிரசு தந்தடி அது
செருக்குடனே உலவிவரச் செய்ததேனடி
சருகைவிடச் சரசரக்கும் சிறுமைமேனியாம் அதைச்
சரசமிடச் செய்யுணர்வில் செழுமைப் பூச்சடி
வருகையிலே துயரடைவும் வாழ்வும், விட்டவர்- வானம்
விரைகையிலே இன்பமெனும் உணர்வு கொள்வதே
இருக்குமிந்த உண்மைதனும் இயல்புமாற்றியே எம்மை
இருட்டில்விட்டு அகவிளக்கை அணைத்த தேனடி

Thursday, August 16, 2012

சுவாசிப்போமா சுதந்திரமூச்சை?

பொன்னேர்மொழி கல்லும் மா புழுதிதோன்றிக்
கொள்ளாத் தொல்காலத்தே தோற்றிச்சீர்கொள்
தென்னார் வளர் தமிழம் சொன்னார்யாரோ -தமிழ்
சொல்லச்சிரம் மேனியதுபிறிதென்றாக்கும்

வல்லார்கொடுவாளை வளைத்தே நீதி
வளையாது குலம்காக்கத் தலையெடுத்து
பூல்லாய்பூண்டாய்நின்றோர் புறத்தேவளர்ந்து
பொழுதோறும்கிளைவிட்டுப் பரந்தேஉயரப்

பல்நேர்விருட்சமெனப் பரந்தேவலிமை
புகழ்பாடு நானூற்றுப் புறத்தேதானும்
சொல்லாக் கடுந்தோளின் பொலிவைக்கொண்டே
புயல்வீசும் களமாக்கிப்பொழுதில்மீளும்

தன்நேர்நிகரற்ற தமிழன்நடுவே
தழைத்த சில புல்லுருவித் தடைகளாலே
இன்னாரென் றினம்காட்ட இகமேசூழ்ந்து
எரிநஞ்சுவெடிகொண்டு இனமேகொன்றும்

மண்ணாளப்பிறந்தவரை மரணம்ஆளப்
பண்ணியபின் பலநூறாய் வகுத்தேவேலி
முள்போட்டு அடைத்த மாகொடுமைதன்னை
முழுதாகக் கேளாமல் உலகம்யாவும்

சொல்லால் விளையாடிச் செய்வதேது
செயலால்வெறும் ஆமைகதி கொள்வாராயின்
சொல்லரிய இனமழிந்து போதல்அன்றி
சுவாசிப்போமா நாமும் சுதந்திரத்தை?

Monday, August 13, 2012

தமிழுக்கு மாலை

         
எண்ணம் இனித்திடப் புன்னகை பூத்திடும்
இன்பத் தமிழழகே - நின்னை
கண்டதும் கற்பனை வெள்ளம் மனதிடை
கட்டுடைத் தோடுவதேன்
எண்ண விளக்குகள் மின்னிஎரிந்திட
எங்கும் ஒளி பரந்தே -  இடை
விண்ணிலெழும் அதி மின்னலொளிர்வுற
மேனிசிலிர்க் கிறதே

தண்ணமுதே நீயும் உண்ண உண்ணவென்ன
தேனொழு கும்பழமோ - இந்த
மண்ணில் உன் மாபுகழ் மாவுலகெங்கிலும்
மாலையின் பூந் தென்றலோ
புண்படுமாம் நெஞ்சு போலவலி யெடுத்
தாலுமென் இன்தமிழே - உனைப்
பண்ணிசைத்தே மனம் பாடிடப் போகுது
பக்கமில்லா தொழிந்தே

சொல்லச்சொல்ல இன்னும் இன்னுமுளதெனச்
சொல்வது பொன் தமிழோ - அது
மெல்லெனக் காற்றிடை மேவிப் பரவிடும்
மாடத்தொளி விளக்கோ
இல்லை இல்லைஇது என்றும் கிழக்குவான்
ஏறுஞ் சுடரொளியாம் - இதற்
கெல்லையிலை இது ஓடுமுலகத்தின்
உண்மைப் பெருஞ்சுடராம்

கல்லெனக் காணினும் மெல்ல உருக்கிடும்
காவியத் தேன்மழையே -  எமை
செல்லென மேடையில் சித்திரம் தீட்டவும்
செய்திட வைப்பவளே
சொல்லைஉடைத்துநல் சுந்தர வண்ணங்கள்
சேர்த்து வரைந்திடவும் -நல்ல
சொல்லருங் காவிய மாம்தமி ழோவியம்
மெல்ல உயிர்பெறுமே!

மேவியலை எழும்நீர்க்குளமோ தமிழ்
மெத்தப் பெருங்கடலோ - அலை
நீவிமனதிடை நூறு உணர்வெழ
நெஞ்சங் களித்திடுமோ
தேவி கரம்தந்து தீமையின் வெம்மையில்
திண்டாடு வோர்தமையே - புனல்
தாவி குளித்தெழத் செய்பவளோ தமிழ்
தண்மை யளித்திடுதே

****************

Saturday, August 11, 2012

சிவந்த மண்

சொல்லிச் சிவந்தன பாவலர் எண்ணம்
சுமைந்து சிவந்தன  ஏழைகள் நெஞ்சம்
கிள்ளிச் சிவந்தது பிள்ளையின் கன்னம்
கேட்டுச் சிவந்தன  ஈழவர் உள்ளம்
எள்ளிச் சிரித்திடும் எம்மவர் கூட்டம்
ஏய்த்துப் பிழைத்திட இன்செயல்கண்டு
கொள்ளிச் சிவப்பெனக் கண்டனளெங்கள்
கோலமுகத்தமிழ்  ஈழ  மெம் அன்னை

ஓடிச் சிவந்தது மேலடி வானம்
உண்மை விட்டே நீதி சாய்ந்தது பூமி
நாடி திரிந்ததை நம்பியும்கெட்டோன்
நாட்டை இழந்து நலிந்து சிவந்தான்
கூடிக் கனல் எழக் கத்திய மாந்தர்
கொண்டகுரல்வளை நொந்துசிவக்க
வாடிச் சிவந்துடல் வீரத்தின் மைந்தன்
வாழ்வைத் துற்ப்பன் என்றே பசி காத்தான்

தேடிச் சிவந்தனர் தேசத்தின்  மைந்தர்
தீண்டச் சிவந்தது தென்படை தீயில்
மூடிச் சிறையிடை மூர்க்கரும் கொல்ல
மேவிச் சிவந்தது மேனிகள் ரத்தம்
கூடிகிடந்தமண் குடிசைகள் தீயை
கொண்டு சிவந்திட குமுறிய மாந்தர்
வேடிக்கையென்று சிரித்தது பூமி
விதியிதைக் கண்டு  சிவக்குமோ நீதி?

******************

மாலைகள் தோளில் விழும்போது....

பொற்கதிரோ பொன்நிழலோ
     பூத்தஎழிற் தாரகையோ
வெற்றிடமோ வான்வெளியில் 
    விண்ணதிரும் தீம்புனலோ
அற்புதமோ ஆனந்தமோ
    ஆனவழி போகுமிவன்
சுற்றிவர ஆடுமெழில்
    சுந்தரவிண் பூந் துகளோ

நிற்பதுமேல் வானமெனில்
     நேர்வரும்வெண் மேகங்களோ
கற்பனையோ சொப்பனமோ
      காற்றுமழை கடுங்குளிரோ
புற்றரையோ நித்திரையில்
       புள்ளினங்கள் ஆர்த்தெழவே
உற்றசுகம் போலிதுவோ
       உள்ளமதின் பொய்க்கனவோ

சுற்றுவது பூமியதோ
      சூழுவது பொற்கிரணக்
கற்றைகளோ சுற்றுமிவன்
      காண்புகழோ வீறுகொள்ளக்
கொற்றவனை நேர் நிகரோ 
       கூடிவரும் சந்தமுடன்
நற்றிணையும்  நெஞ்சங்களால்
      நான் எடுத்தபுது வாழ்வோ

சற்குணமோ சொற்சினமோ
     சார்ந்தவரைப் பற்றுவனோ
அற்றவனோ அறிவுதனை
     விற்றவனோ என்றவனை
முற்றமதில் முழுமதியும்
     முன்னெழுந்து பொற்கிரணம்
சுற்றிவர நர்த்தமிடச்
     சொல்லரிய சுகம்தருதே

கற்குளமோ நீரலையிற்
     காணுமெழிற் தாமரையில்
நிற்பவளே உன் அருளால்
      நெஞ்சிலுனைக் கொண்டவனைக்
கற்றறிந்தோர் சொல்லிலெனைக்
      களிப்புறவே ஆக்குவளே
புற்றெழுந்த மேனியினன் 
      போகும்வரை மறப்பதுண்டோ


வன மங்கை






ஆனந்த மாமழை தூவிடக் காட்டிடை
ஆடி நடந்துசென்றேன் - உயர்
வானமும் தூவிட பூமழை போலெண்ணி
வேடிக்கை யாய் குதித்தேன்
தான தந்தான வென்றே சுதிகூட்டியே
துள்ளிக் குதித்தவனோ - ஒரு
மானின்விழி கொண்ட மங்கை கண்டே
மருண்டோட வியந்துநின்றேன்

பூமுகம்கொண்டவள் பைந்தமிழ் வாணியோ
பொன்னி நதி,கடலோ -நெடும்
பூமரத்தே கொடி யானதுமல்ல விண்
போகும் நிலவுமல்ல
சாமத்திலேவரும் பேயுமல்ல எந்த
சாகச மோகினியோ- கொடுந்
தீமைசெய் சத்துரு வல்லஎனக் கண்டு
தேவதை யார்நீ என்றேன்

கானகத்தே கனிந் தோர்முகம் என்பதைக்
காணத் திகைத்தவனாம் - அட
ஏனவளோ எனைக்கண்டு அப்பாதையில்
இல்லா தொழிந்து கொண்டாள்
மானின் மருள்விழி யோடு நடந்தவள்
மங்கையைக் கண்டேயவள் - ஏனோ
தானிங்கு பெண்தனி யாய்நடை கொள்வது
தக்கதன் றங்குரைத் தேன்

ஏனிங்கு வந்தனை ஏதினை நாடினை
எங்குன தில்லமென்றேன் அவள்
மேனி மறைத்திடக் கொண்ட  துகிலிடை
மேவும் கறைகள் கண்டேன்
நானிங்கு வாழ வழியொன்று தேடியும்
நாடி நடந்தது வந்தேன் -அதில்
வானரங்கு போலக் கண்டே நினையிங்கு
வேதனை கொண்டே னென்றாள்

போ நங்கையே நீயும் பொய்யுரைத் தாயிது
போலொரு செய்கையுண்டோ -இந்தக்
கானகத்தே விலங்கானது கொண்டிட
காண்பதும் வாழ்க்கை யொன்றோ
நீநடந்தே திரிந்தேகையில் எத்தனை
நெஞ்சைப் பிளக்கவென - கண்டு
நின்னுடை மேனி குறிவைத்தே தாவிடும்
நீசவிலங்கு உண்டாம்

பாரிடை வாழும் மனிதர் களைவிடப்
பாசம் இவைகள் என்றாள் -  அங்கு
வாரிக் கிழித்துடல் வஞ்சமுடைத்தன
வாழ்ந்திடும் நாட்டிலென்றாள்
நேரில் மகாபெரும் நீதிவழிகொண்ட
நேர்மையின் காவலர்கள்  - எந்தன்
பேரில் பகையில்லைஆயினும் தொட்டவர்
பேசாக் கொடுமை செய்தார்

காட்டின் விலங்குகள் கண்ணியமுள்ளன
காமவெறி பிடித்தே - மனம்
போட்டியிட்டுப் பல ஆண்விலங்கும்கூடிப்
பெண்ணைக் கெடுப்பதில்லை
மாட்டி விலங்கிட்டு மாறி மாறிச்சுகம்
மங்கையில் காண்பதில்லை - தம்
பாட்டில் நடக்கும் இப்பாவியை கண்டன
பாய்ந்துயிர் கொள்ளவில்லை

மங்கை யெனக்கிந்த காடு அடைக்கலம்
மாமழை கூதலெல்லாம் - அந்தப்
பங்கை யிடும்சதைப் பாவிவெறியரின்
பார்வைக்கு ஏதுமில்லை
சிங்கம் புலி குளுமாடு கரடிகள்
சேர்ந்து வதைப்பதில்லை - இவை
அங்கம் கிழித்துயிர் கொல்லா துடித்திட
ஆனந்தம் கொள்வதில்லை

தங்கள்  எதிரியென் றாற்சினம் கொண்டிடும்
தாக்கி யழித்துவிடும் -  இது
எங்கும் நடக்கும் இம் மங்கைஉயிர் ஒரு
நாளில் மரணம்வெல்லும்
பொங்குஞ் சினங்கொண்டேன் பூமியில் மாந்தர்கள்
போல இம்மாக்க ளில்லை - நல்ல
மங்கையர் கற்பினைக் காப்பதற்கு இந்த
மாவனம் ஒன்றே துணை!

உன் அழகில் தொலையும் நான்.



வளைந்த பிறையின்  வடிவொடு நின்றாய்
அலைந்து ஆடும் அழகினில் மயிலாய்
குலைந்த குழலோ குறு வலை போலும்
தொலைந்த மீனும் துடிவிழி யாக

நெரிந்த மனமும் நிகழ்வது சினமும்
விரிந்த கடல்முன் வெறுமையுங் கொண்டு
எரிந்த சுடரும் இறங்கிடும் வேளை
சரிந்த கரையில் சற்றுனைக் கண்டேன்

செறிந்த துயரில்  சிதையுறும் வாழ்வில்
எறிந்த பந்தாய் இனிமைகள் மீட்க
முறிந்த மனதில் மகிழ்வினைக் கூட்ட
அறிந்து தானோ அயலிடை வந்தாய்

எழுந்த அலைகள் இமையென விரியும்
விழுந்து மீண்டும் வியப்புற உயரும்
தழும்பும் நீரும் தாவிடும் நீயும்
அழுந்த மனதில் ஆசையை ஊட்ட

இருகை  நீட்டி இயல்புற ஆடி
விருப்போ டென்னை வீழ்த்தி மகிழ்ந்து
கருகும் மாலை காட்டிய இன்பம்
பருகும் அழகிற் பலவகை நூறாம்

பொறு பொறுவென்னும் அமைதியி னாழம்
பெற நீரலையில் போகுமெம் வேகம்
சிறு தூறல்கள் சேரவுன் மடியில்
மறுகிக் கிடந்தேன் மனதோ மயங்க

பொன்னிற வானம் புதிதோர்காட்சி
தன்னை மறந்து தனிமையில் நானும்
என்னுடை வாழ்வின் இயல்பு துறந்தே
நின்னிடை காணும் நெகிழ்வில் தோற்றேன்

மின்னலில் வானம் மிளிரும் நிலையில்
அன்னமென் றாடும் அலைநீர்க் கரையில்
பொன்னெனும் கூடல் புதுமைப் படகே
உன்சுகம் தன்னில் தொலைந்தேனோ நான்

Friday, August 10, 2012

பித்தனின் பக்தன் யான்!

மந்திர மோமணி மாமகுடம் கொண்ட
மன்னவன் தானுமில்லை -சுடும்
வெந்த வெயிலிடை வீடுமில்லை வெறும்
வெட்டவெளி யிருக்கை -அன்று
வந்து பாட்டிகுழல்  புட்டவிக்கத் தின்று
வைத்தனனாம்   அடியைத்  -  அதைத்
தந்துமுயிர்களைத் தாரணியில் அடி
தாங்கிடச் செய்வன் பிள்ளை

பாம்பை எடுத்தவன் பட்டாடை விட்டுமே
பாதியுடல் மறைத்து - அட
தாம்தும் தரிகட தோமென ஆடியே
துள்ளித் திரிபவன்மேல்
போம் வழியில் ஒரு பித்தன் சுவைத்துபின்
பொல்லாத தூட்டிவிட்ட - அந்த
வேம்பின்  சுவைகொள்ள வீண் உணவை தந்த
வேடனை ஒத்தநிலை

பித்தனைப் போலொரு பக்தனிவனும்   சே,,
பென்னம் பெரிது இல்லை - உள்ளே
சுத்தமென மனம் கொண்டிருப்பின் அதைச்
சொல்லும் உரைப்பதில்லை
கத்தும் மொழியினில் கர்வமில்லை உயிர்
கட்டையில் நிற்பதில்லை - 

செத்தும் விழும்வரை சந்தனம்பூசிநல்
அத்தர் தெளிப்பதில்லை’

நாறும் உடலுக்கு நாயைவிட பெரும்
நல்ல குணங்கள் இல்லை
சோறு கொள்ள வில்லை யாயின் நடந்திடச்
சொட்டும் தகுதியில்லை
ஏறும் உயரம்பொன் னாடை சிங்காசனம்
ஏதும் செழிப்பதில்லை
நீறென்றா கும்வரை வாழும் புழுக்கொண்ட
நீள்குடல் எம்மில் குறை

காலைக் கடன்களில் காணும் காட்சிகண்டு
கண்கள் விழிப்பதில்லை
கோல முகத்தினில் எச்சில் வழிந்திடக்
கொண்ட உணர்வுமில்லை
காலம் முடிந்திடக் காகம் இழுத்துண்ணும்
யாக்கையில் இரத்தம்சதை
நாளும் நாலுபோக நாறும் சதைதன்னில்
நாம் கொள்ளும் வீண்அகந்தை

காலில் விழுந்தவன் எப்பவும் கௌரவம்
கெட்ட மனிதனில்லை
தோலின் நிறம்வெள்ளை தூய்மை கருமையின்
தோற்றம் அழுக்குமில்லை
வேலிபல வைத்த வாழ்வினில் தெய்வமும்
வைத்தது வேறு எல்லை
நாலும் நாலும் அதைக் கூட்ட எட்டுவரும்
நம்ம கணக்குப் பிழை

Thursday, August 9, 2012

ஆனந்தக் கண்ணீர் !

விழிகளில் பொழிவது மழையோ - விரிகடல்
கொழியலை மருவியுள் வருதோ - சுழல்புவி
ஒளிகொள விரைந்திடு வழியோ - தவறிடக்
களியுடை சுகயுகம் புகுதோ - சிறுமனம்

அழகிய நடமிடும் மயிலோ - அநுபவம்
குளமதில்  எழும்சிறு அலையோ - அதிலுளம்
விழிகயல் எனத்துடி கொளுதோ - இனிமையின்
வழியிடை எனைவரச் செயுதோ - புகழ்மலர்

கொழுவிய பெருந்தொடை இதுவோ - மணந்தரு
செழுமையிற் கிறங்குது மனமோ - குளிரிட
விழுவது எதுநிகர் பனியோ - சொரிகிற
பொழுதினில் பெரிதுயர் முகிலோ - விலகிட

எழுவது விடியலின் ஒளியோ - குளிர்விடத்
தழுவுது சுடுமிளங் கதிரோ - உடனணை
பழகுதென் றலுமயல் வருதோ- சிலையெனப்
பொழிவது எனைநினை வுளியோ - அடஅட

தெளிவது கயல்புகு புனலோ - புதுமையென்
றொளிதரு பளிங்கெனும் உருவோ - இனிமையைப்
பொழிந்திட வருமிசை நெகிழ்வோ - அதைவிடப்
பிழிந்திடுங் கனிரசம் இனிதோ - மகிழ்வினை

மொழிந்திடத் தமிழ்தனி அறியேன் - ஒருபதம்,
களிகொளும் உணர்விது பெரிதாம் - அதனிடை
பொழிபுகழ் மதுரச மழையாம் - இதைவிட
அளியுயர் பதவியொன் றிலையே ,வாழிய!

Monday, August 6, 2012

நம்பிக்கை


வானமடி வான் சரிந்து வீழ்ந்துடைந்த தென்றலறி
   வாழ்விற் திகில் கொண்டவர்களே
ஆனபெருங் கடமைகளை ஆக்கலது அற்று பெரும்
   அடிவானம் வீழ்ந்ததே யென்று
தேனமுதச் செல்லமலர்ச்  சிறுமைகளில் மனமுழன்று
   திரிவதனை விட்டேவாரும்,
வானமழை பூவொழுக வந்தவராம் தேவர்களும்
   வாழ்த்துரைக்க வாழ்ந்துபார்க்கலாம்

ஆனையொரு அடிமிதிக்க அடர்ந்தபசும் புல்வழுக்க
 அடிசறுக்கி வீழ்ந்தது ஐயோ
போனதுவோ உயிர்பிழைத்து பெருநடையும் திரும்பிடுமோ
  பிளிறலதும் உண்டோ வென்று
ஊனமுடை நினைவெழுந்து உள்ள மலர்க் காவழிய
  உண்மைகளை உடைத்து வீழ்த்திச்‌
சேனை வகை யில்லை எனச் சிறுமை கொள்ளா தெழும் நடவும்,
  சிறந்ததொரு வாழ்வு காண்போம்!

நீரிலிடை ஓடுமலை நிறுத்தவெனப் புறப்பட்டீர் 

   நெஞ்சத்து இனியோர்களே
சேரி(இ)மயச் சிகரமதைச் சூழ்முகிலும் கலையுமங்கு
  சூரியனை நிறுத்திட வென்று
ஓரிரவு முழுதோடும் உயர்வானத் திங்கள் முகம்‌
  உள்ளகரும்‌ மறைநீக்கிட
வாரி யடித் தெழுந்தோடி வாழ்விலதென் றாகிமனம்
  வாடாதீர் வாழ்ந்து பார்ப்போம்

Sunday, August 5, 2012

உயிர்த் துடிப்பு

(இதில் சில இடங்களில் இரு பொருள் தோன்றும் கீழே பார்க்க:-)


பொன்னன்ன நடையில் புகழுடைத்த தாயென்
பெற்றநிலை பெருங்காயம் செய்தால்
என்ன துயரென்ப இல்லை இலைஎன்றால்
இல்லைஇலை என்றதரு பொருளோ?
மின்னல் நகைகொள்ள மிளிருமென எண்ண
மிரளவென மின்னலிடி கூட்டும்
பன்நல்ல செய்கை பன்னல்லதென்று
பன்னல்லல் புன்மை களை காணும்

கண்ணென்று கூறிக் கனிவ தனம் என்றால்
காய்களிடு கண்களெனக் காணும்
வண்ண இசைபாடி வண்டூதும் போதோ
வட்டமலர் தென்னைமது ஊற்றும்
உண்ண வெனக்கூற ஊற்றுமமு தான
உள்ளிருந்து நீலமென மேவும்,
எண்ண மதியாலே எண்ணிரண்டு கூட்ட
எழுபதிலோ எண்ணத் தீ பொசுங்கும்

பண்ணென்று கூறப் பதில்வருவதெல்லாம்
படுவினைகள் பண்ணலென வாகும்
கண்ணாடி முன்னே கலையுருவம் கொள்ள
கலையுருவம் கலை யென்று கதறும்
தண்மை யலைப்பொய்கை தன்னில் நீராட
தளதளக் ’கும்மாள(ழ)’ மிட்டுக் கொள்ளும்
வண்ணத்து வில்லாய் வானத்து மேலே
வாழ்வைத் திருத்திப் பின் தள்ளும்

பேச்செல்லாம் பேச்சாய் பிறைசூடி(க்) காணும்
பிறிதொரு கண் பார்வையென மாறும்
வாய்ச் சொல்லின்ராகம் வடியுமது என்ப
வருகு ருதிவண்ண மது வடியும்
தீச்சுடர்களேற்றி  தீயஇருள்போக்க
தெரியும்நிழல் கிலிபிடித்து ஆட்டும்
பூச்சூடும் பெண்ணே பாவியிவன் நெஞ்சின்
படபடக்கும் துடிப்பி லுயிர்துடிக்கும்!

************************
இருபொருள் மயக்கம்

உதாரணமாக முதல்வரிகளில்
1. நல்ல குணமும்  புகழுமுடைய அன்னை பெற்றமேனியில்  என்பது ஒன்று
2.  புகழை உடைத்ததாய் என் நடைமுறை(க் கேடு) எனது மேனியில் பெரும் புண்ணாய் துயர்கொள்ள வைக்க ....


என்பதுவும்


1. இந்த உடலுக்கு துயரம் இல்லை இல்லை என்று அடித்துக்கூற
  துயரம் உள்ளதென்ற பொருள் தருதே?  (இல்லை இல்லை என்ற
இரண்டு இல்லை, ’உண்டு` என்று வரும்

2.  என்ன துயர் இல்லாமலில்லை என்று கவலைப்பட்டால்
அது மரத்தில் இலை இல்லை என்பதுபோல் வேறான வகையில்
தொனிக்கிறதே




என்பதாகச் சில இரு பொருள்படும்

Saturday, August 4, 2012

எழு உணர்வே, நீ எங்கே!


ஒளியேற்றி விழிமீது எழிலூறும் கரம்கொண்டு
உயிரென்று தமிழ் தூக்கினேன்
நெளிந்தோடும் நுதல்மீதில் வழிகின்ற ரத்ததில்
நனைந் தெந்தன் விரல்காண்கிறேன்
களிகூடித் தமிழோடு கதைபேசி விளையாடும்
கவிகொண்டு அதை நாடினேன்
பொழிகின்ற மழையாக அழுதேங்கித் துடிக்கின்ற
பெருஞ்சோக விழி காண்கிறேன்

மலிவென்று தமிழ்பேசி மகிழ்வோடு கவிகூறி
மலரென்று கவி பாடினேன்
பலிகொண்டு உயிர்போக பாவங்கள் பொலிந்தாடும்
பயங்கரம் கண்டேங்கினேன்
வலிகொண்டு வரும் ஏதும்  வழிஉண்டோ உயிர்தப்ப
வாயற்ற குரல் கேட்கிறேன்
எலிகொண்ட திணறல்கள் அறியாமல் விளையாடும்
இடர்பூனை பல காண்கிறேன்

இனிப்போதும் எழுந்தோடு இடர் கொண்ட தமிழ்பாடு
எனும் ஓசைவான் கேட்கிறேன்
தனியாக இருந்தேனும் தவழ்கின்ற காற்றோடு
தமிழ் கொண்ட நிலை கூறுவேன்
 புனிதத்தின் புயலாக பொதுவீரம் கொண்டேகும்
புதுவேகம் எழக் காண்கிறேன்
மனிதத்தின் மரணத்தை தரும்பேய்கள்: செயல்கூற
மழைவெள்ளமாய் பொங்குவேன்

உயிர்போக அழகென்ற உணர்வோங்கக் கவிபாடும்
உணர்வே நீ எனை நீங்கிடு
கயிறொன்று கழுத்தோடு உடன்காணச் சங்கீதக்
கலைபோற்றும் மனம் போய்விடு
 பயிர்போலும் விளைவாகும் பாலர்கள் கொலைசெய்யும்
பச்சைகள் தனைப் பாடவும்
 வயிரத்தின் தன்மைக்கு வழிகொள்ளும் செயல்செய்த
வலிதோரை மனம் போற்றிடு

நேரமில்லை



நேரமில்லை என்று சொல்ல நேரமில்லை அன்புதோழ
நீயெழுந்து எல்லைபோடவேண்டும்
ஈரமில்லை என்று நெஞ்சில் காணுகின்றதோ விடுத்து
தூரமில்லைநீ நடக்கவேண்டும்
வீரமில்லை என்றுசோர நேரமில்லை அன்புநண்ப
பாரமில்லை தோள் சுமக்க வேண்டும்
யாருமில்லை தேசம்காக்க நின்னையன்றி!  பார்த்திருக்க
நேரமில்லை வாழ்வெடுக்கவேண்டும்

போருமில்லை பூமியில்லை பூவையோடு ஆணுமில்லை
போரெடுத்த வீரமைந்தரில்லை
யாருமில்லை என்றிருக்க நானுமில்லை என்னறெமக்குள்
வாரிமுள்ளை வீசிசெல்ல வேண்டாம்
வேருமில்லை என்று வெட்டும் கோடரிக்கு கைபிடிக்க
கூடிநிற்பதென்று எண்ணிடாதே
தீருமென்று நீயெழுந்து தேசமண்ணைக் காதலித்துத்
தேவை கொள்ளு தூங்க நேரமில்லை

நேரமில்லை என்று சொல்லி நேரமுள்ளை நீநிறுத்த
நேரம்நிற்பதில்லை அங்குஓடும்
தீரமில்லைச் சாரமில்லை செல்வதற்குப்  பாதையில்லை
சேரவில்லை என்று சாட்டுவிட்டு
தூரமுள்ள வானவில்லைப் போலவண்ணம் காட்டி யுந்தன்
சோருமுள்ளம் நீவிடுத்தல் வேண்டும்
ஓரமில்லை நீயும் அஞ்சி ஓடுமெல்லை வாழ்வு விட்டு
ஓர்மையோடு தேசம் மீட்க வேண்டும்

Friday, August 3, 2012

வானிலோடும் எண்ணம்

( என் கவிதைகளை வாழ்த்தும் இனிய உள்ளங்களுக்காக)

இன்பமென்று துள்ளிஉள்ளம்
ஏறிமேகம் ஓடுதே
என்ன கண்டு தென்றலோடு
ஏழைநெஞ்சு ஆடுதே
பன் நெடுத்த வானவீதி
பால்நிறத்து வீதியில்
பம்பரத்தை ஒத்தகோளின்
பாதைகண்டு ஓடுதே

சின்ன வான வெள்ளியோடு
சேர்ந்து கண்கள் மின்னின
பொன்னெடுத்த  மேனியோடு
போதை வந்து துள்ளின
என்னவோ நினைத்து விண்ணில்
ஏறு  மந்த சூரியன்
தன்னொளிக்கு தாமரைகொள்
தன்மையென்று ஆகுதே

பண்ணிசைக்கும் பாவலர்தம்
பாடல் தந்த இன்பமும்
கண்ணசைத்து ஆடுந்தோகை
காணும் பெண்கள் நாட்டியம்
உண்ணும் பொன்னிழைத்த கிண்ணம்
ஊற்றும் தேன்கனிச் சுவை
எண்ண மொத்தமாக இன்பம்
இன்று நெஞ்சு காணுதே

வெந்த செம்மை கொள்ளிரும்பை
வேண்டி யாரும் கைக்கொள
முந்தியோர் கரும் இரும்பு
மோதியே  வளைத்திடும்
சந்தணத்தின் தூள்களாக
 சற்று மின்னல்பூக்களும்
வந்துவீழும் அன்புதன்னும்
வாழ்மனத்தை மாற்றிடும்

சொல்லும் வார்த்தைப் பூக்குவித்து
சோலையென்று ஆக்கினேன்
நெல்லெனக் கவிச்சரங்கள்
நட்டு நீரும் பாய்ச்சினேன் 
புல்லென முளைக்குமென்று
போய்விழித்துக் காண்கையில்
சொல்லரும் புகழ் குவித்து
சேர்ந்ததங்கு பொன்னடா!

மீண்டும் துளிர்க்கும் மரங்கள்



போவன முகிலும் இருளும் துயிலும்
புலரும் பொழுதினிலே
ஆவன ஒளியும் விழியும் மலரும்
அழகும் காலையிலே
தாவின அணிலும் கிளியும் கனிகள்
தாங்கிய மரங்களிலே
மேவின மகிழ்வும் இனிமை உணர்வும்
மீண்டும் வாழ்வினிலே

தேய்வது பிறையும் அறமும் நீதி
திரிவது மெய்மையென
காய்வது வெயிலில் நனைந்தோர் பொருளும்
கண்களில் நீரெனவும்
ஓய்வது இலதாய் உயிரும் உடலும்
ஒன்றாய் துடித்திருந்தோம்
பாய்வது பகையும் நதியும் குருதி
பலரின் உயிர்களென

ஏனது என்றே எண்ணிச் சோர்ந்து
இருந்தோர் வாழ்வினிலே
போனது பொய்யும் திமிரும் கருமை
புன்மை செயலெனவே
வானது மீதில் தெரிதே ஒளியும்
வருதே வசந்தமென
காணுது மீண்டும் துளிர்கள் வாழ்வுக்
கேங்கும் மரங்களிலே !

********************

கலையுள்ளம்


அலைகள் ஆடும்கடலினிலே அது 
எழுதல் அழகன்றோ
அலைகள் இல்லா ஆழிஎனில் அதில்

அழகுக் கிடமுண்டோ
உலையும் சலசல் ஓசையிடும் அது 

உண்மைஎழிலன்றோ
உறங்கிக் கிடந்தால் எதுவாகும் அது 

உண்ணத் தகுமாமோ

கலையும் கண்ணாய் கொண்டவரில் பல

கருத்தும் எழும்வீழும்
காணும் இவையும் சுவைகூட்டும் கலை 

கனிந்தே இனிதாகும்
மலையின் உயரம் இருந்தாலும் குறை 

மனதில் வளராமல்
மாறிக் கலையாய் தருவதிலே அம்

மலர்கள் சிறந்தோங்கும்

மலர்கள் என்றும் சுடுவதில்லை கலை
மனதும் அதுபோலும்
மாற்றம் வாழ்வின் நிரந்தரமே நம் 

மனதும் அதுகொள்ளும்
புலமை பொங்குமுணர்வதிலே வெகுபு

திதாம் நதிவெள்ளம்
புரளும், மனதின் எண்ணங்களைப் புடம்

போட்டே எழிலாக்கும்
 

மலர்கள் பலவாம் பலநிறமே அதன் 
முரணே அழகாகும்
மணங்கள் கவிதை எனவாகும் அவை 

தமிழின் பொதுவாகும்
பலதும் கவிதை உணர்வுகளும் பல 

வண்ணம் கொண்டாலும்
பழகும் தமிழே ஒன்றாகும். மணம்

பரவச் சுகம்காணும்
*******

தீ யெரிந்த பாதை

    
ஒளியிருந்த திசையை நோக்கி ஓடினேன்
உள்ள இருள் விடியும் நம்பித் தேடினேன்
பழியிருக்கும் போலப் பாதை தோன்றுதே
பகலினொளி பார்த்து  மனம் ஏங்குதே
வழியிருக்கும் என்று எண்ணிஓடினேன்
வாசமிடும் மலர்களெ ன்று தேடினேன்
குழிருக்கும் போலப் பாதை தோன்றுதே
குடியிருக்க வீடு எங்குமில்லையே!

தளை யெடுக்க வென்று பயிர் நாட்டினேன்
தண்மை நீருமூற்றி மனம் தேறினேன்
விளையும் போலத் தோற்றம் காணவில்லையே
வினைகள் ஏது வெளிச்சம் காணவில்லையே
மழைவிடத்தூ வானம் மாறாக் காண்பதேன்?
மஞ்சள் சிவப் பென்று மாறுங் கோலமேன்?
தலையிற் பட்ட அம்பி னாலே மானது
தரைவிழுந்த  துள்ள லுள்ளம் காணுதே!

துளையெடுக்கும் வேதனையும் ஏதையா?
துன்பமென்று எண்ணும் நிலை ஏனையா?
மலையடுக்கில் மண்குவியல் தேறுமா?
மாற்றம் கண்டு மயங்குவது மேனையா?
தலையெடுக்கும் வேளையினித் தகமையைத்
தனியேமனம் கொண்டு நலம் காணுவோம்
விலை கொடுத்து வாங்கத் துயர் மலிவெனில்
வீணிலதை விட்டு பாதை ஏகலாம்

மறதியென்று ஒன்றை யீந்த ஆண்டவன்
மனதில் வைத்த கோலமேது மாற்றுவோம்
பிறவி என்று பூமிவந்த பிழையய்யா
பிறந்த பின்னே பாசம் அனபு தவறய்யா
கறந்த பாலைக் குடிக்கப்பசி காணலாம்
காண்பவரில் நன்மை கறந் தேற்பதோ
இறந்து போகும்வரையுந்  துன்பம் இயல்புதான்
எதுவென் றாலும் தூக்கி எறிந்தேகுவோம் !!

Thursday, August 2, 2012

தீட்டாத ஓவியம்

               

நீருக்கு நிறமுமில்லை நிழலுக்கு வண்ணமில்லை
பாருக்கு அமைதியில்லை பார்வைக்கு எண்ணமில்லை
வேருக்குக் காற்றுமில்லை விடிவுக்கு மறைதலில்லை
யாருக்கும் பூமியில்லை யாத்திரை பயணம் ஒன்றே

போருக்கு அன்புஇல்லை புகழுக்கு எதிரியில்லை
நாருக்கு மணமுமில்லை நடப்பவை தீமையில்லை
ஊருக்குள் சேதியில்லை உறவுக்கு சொந்தமில்லை
நீர்நிலை வற்றும்வேளை நீந்திட அலைகளில்லை

கூருக்கு குத்தல்பண்பு குழிசெயல் வீழ்த்தல்நீதி
காரிருள் கண்மறைத்தல் கனவுகள் உண்மை மீறல்
பேரருள் ஞானம்தானும் பிழைசரி தேர்ந்து செல்லல்
யாரதை மாற்றக்கூடும்  நாளதுமட்டும் மாறும்

பேருக்கு பிறவி, வாழ்நாள் புரிந்திட மறந்த ஜென்மம்
சீருக்குச் சிறுமை கொள்கை சிரித்திடத் தகுந்த புத்தி
யாருக்கும் தூரவானத் திருந்திடும் நிலவு என்றும்
பாருக்குள் இன்பங்கொள்ளும் பாமலர் சோலை காணும்

மறைந்திட காணுந் தீபம் மாபெரும் சூர்ய உதயம்
குறைவது வீணை ராகம் குரலொலி கூடிப்பாடும்,
இரைவது நிற்க மீண்டும் எழுந்திடும் இனியகீதம்
இரவது விடியும்போது இனியவெண் நிலவு மாயும்


****

விட்டுக் கிடப்பதோ?

வெட்டிய வெட்டுக்கள் தொட்டவர் செய்கையும்
விட்டு மறந்திடுவாயோ - அன்றிப்
பட்டதை எண்ணிடக் கெட்டவரை யெட்டிச்
சட்டையிற் கைபிடிப்பாயோ
கொட்டிட வெம்புனல் கட்டியும் கைகளைச்
சுட்டெரித்த கண்டும்நீயோ - உந்தன்
முட்டிய நீர்விழி முன்னே அழிந்திடப்
பட்ட விதியென்ப தாமோ

சட்டியை தூக்கியுன் மொட்டைத் தலையதில்
வைத்து ஆடிக் களிப்பாயோ - கையும்
விட்டிடத் தொப்பென வீழும் செயலதை
வெற்றியென்றே கத்துவாயோ
மட்டி மடையனென் றெத்தனை தேசங்கள்
பொட்டுடன் பூவும் வைப்பாரோ - அவர்
வெட்டிபயல் இவன் குட்டலாம் என்றிடச்
சட்டையும் விட்டிழிவாயோ

நட்டமும் போனதும் நாமதெனில் அவை
துட்டுக்குப் பேய் மலிவாமோ - அட
வட்டமேசை போட்டுச் சுற்றியிருப்பவர்
சுட்டபொன்னை நிகர்ப்பாரோ
தட்டை யில்லைவட்டப் பூமிசெய்து அண்டம்
விட்டு சுழல் சத்தியாமோ - ஆக
பொட்டை பொடியனாம் இரட்டை விதம் செய்தாள்
விட்டொரு பேதமுண்டாமோ?

நெட்டைப் பனைக்கிடை வட்டுக்குள்ளே ஒளி
சுட்ட வெயில் வருமாமே - அது
கொட்டும்வெயில் கண்டு சுட்டதெனப் பகை
கொண்டு இருந்தவர் நாமே
சொட்டெனும் புத்தியில் பட்டுறைத்தாற் பிழை
விட்டவர் நாமென்னலாமே -அட
தட்டி மண்ணைக் குந்தல் விட்டு எழு - இனிக்
கெட்டதெல்லாம் போகுமாமே

வேண்டலும் வேண்டாமையும்


தேர்வேண்டேன், தேருலவும்
   தேவனெழில் யான்வேண்டேன்
ஊர் வேண்டேன், ஊர்புகழ
  உத்தமனாய் உயர் வேண்டேன்
பேர் வேண்டேன் பெருமைகளைப்
   பேசுகின்ற தாய் வேண்டேன்
சீர்கொண்டு தினம்பாடும்
    செந்தமிழை  வேண்டுகிறேன்

நீர்கொண்டவிழிபொங்க
    நிற்குநிலை வேண்டேனுட்
கார்சூழும் உள்ளமதில்
  காணுகின்ற துன்ப மழை
போரென்ற இடிமின்னல்
   புகை தீயும் வேண்டேனுன்
நேர்நின்று கவிபாடும்
  நெஞ்சத்தில் தமிழ் கேட்டேன்

வீரென்றே அலறிவிழ
  வேகத்தில் உயிரோடும்
யார் கொண்டார் எனவெண்ணா
   யாக்கைதனைப் புறந்தள்ளி
வேரின்றி வீழ்மரமாய்
   வீச்செழுந்து  தீபொசுக்க
நேரோடித் தப்புமுயிர்
 நேர்மையியல் இனிவேண்டேன்

ஏர்கொண்ட உழவன்பால்
    இயங்கும்நல் லுளம் கேட்டேன்
ஓரின்ப வாழ்வென்றால்
    உலகில் நற்றமிழ் கேட்டேன்
தேரென்று தேராமல்
   தேனூறும் சொற்குழையல்
தீருந்தன் பசியென்று
    தீந்தமிழ்சொல் வரங்கேட்டேன்.

கோரென்று மலர்கொய்து
  கூடியொரு மாலைசெய
பாரென்று சார்ந்துள்ளம்
   படுகுழியில் வீழமனம்
சேரென்று  துயர்தந்து
   சீற்றங்கொள் விதிவேண்டேன்
வாரென்று தமிழின்பம்
     வாய்க்கும் நல் வளம்கேட்டேன்


************

அருள் தேவி அளியாயோ

           

திக்கித் திகிலில் தடுமாறித் திசையும் அறியா வேளையிலெம்
பக்கத் திருநீ சிவசக்தி பார்த்துக் கொள்ளாய் பாவிமனம்
சுக்குத் துளாய் சிதறுங்கல் தேங்காயென் றாக்கும் இன்னல்
புக்கும் போதில் பெருவெள்ளம் போலாகாது புறங்காப்பாய்

மக்கட்செல்வம் மன்னரணி மாதர் மனதும் மகிழ்வாக
செக்கச் சிவந்து வானேறிச் செல்லும் சூர்யப் பார்வையிலே
மொக்கைத் திரளை அவிழ்பூவின் மெதுமையென்றே மனமாகி
அக்கம் பக்கம் அன்பொழுக ஆனந்திக்கும் வாழ்வீ யாய்

தக்கத் துணையே இல்லாது  தானே தோன்றி உலகோடு
உக்கித் தூளாய் இரும்பாக்கும் உப்பைக் கொண்டோர் உடலீதில்
சொக்கித் திகழச் சுகந்தேடிச் சொல்லற் கரிதாய் நலிவாகி
கொக்குத் தவமாய் குறுங்காவல்  கொண்டோம் துன்பம்நீக்காயோ

நக்கத் தேனாய் நம்வாழ்வில் நல்லோ ரின்பம் என்றோடி
சக்கைபோடு போட்டுள்ளம் சரியும் வானைப் போலாகி
மக்கென்றாகி மாயைகளில் மருவும் வண்ணம் மடியும் முன்
எக்கொற்றத்தே இருந்தாலும் எழுந்தேவந்து எமைக் காவாய்!


**********