Wednesday, November 17, 2010

கவலை மாற்று கண்ணா!

மொட்டாய் பூத்து மெல்லத்தோன்றி மண்ணில் வந்த கண்ணேயுன்
வட்டக்கண்கள் பார்த்தேன் அங்கு வாழும் சோகம் ஏனையா
தெட்டத் தெளியும்வானத் திங்கள் தோற்றும் வதனம் தீயாலே
பட்டுக்கருகும் பூவாய் சோர்ந்தாய் பாட்டுச் சொல்வேன் கேளாயோ!

பட்டும் பாயில் மெத்தை என்று பாரில்வந்தாய் கண்ணே கேள்
கொட்டிப்பனியும் கூதல் உண்டு கொஞ்சம் எண்ணிக் கொள்ளடா
மொட்டும் மலரும் பூக்கள் உள்ள மேதினியில் மெல்லவே
தொட்டுப்பேசும் தென்றல் உண்டு வெட்டும் வண்டும் உண்டடா!

கட்டில் மட்டும் வாழ்வு இல்லைக் காதல் கொண்ட நெஞ்சங்கள்
மட்டுமல்ல மண்ணில் இன்னும் மாயம் உண்டு மைந்தனே
சிட்டுக்குருவி பாடல் கேட்டுச்சிந்தை மயக்கம் கொள்ளாதே
முட்டிக் குதறும் காளை பின்னால் மெல்லச்சேரும் தள்ளாதே

வெட்டும் வாழும் குத்தும் ஈட்டி வைத்தே பலரும் நிற்பாரே
பொட்டும் வைத்து பூவைக்காதில் சுற்றி செல்வார் காண்பாயே
எட்டும் ரண்டும்பத்து என்று எண்ணிப் பாடம் சொன்னாலும்
வட்டம் ரண்டாய் எட்டைமாற்றி வார்த்தை பொய்யாய் செய்வாரே!

சொட்டுக் கண்ணீர் விட்டுக்கொள்ளச் சேர்த்துவை நீ பின்னாலே
விட்டுக்கொள்ளும் வேளை நூறு வாழ்வில்தோன்றும் வையமே
பட்டும் எண்ணம் சோராதே நீ பாதைகண்டு முன்னேறு
தட்டித்தூசாய் எண்ணித் துன்பம் தன்னை விட்டு ஈடேறு

சட்டம் உண்டு சதிகள் உண்டு சங்கதிகள் நூறுண்டு
திட்டமிட்டு வாழ்வை கொண்டு தீரத்துடன் முன்னேறு
வெட்டும் மின்னல் வீழுந்தலையில் வேண்டாமச்சம் என்றேயோர்
சுட்டிக் கவிதை சொன்னார் அங்கே சொல்லும் தீரம்கொள்வாயே

No comments:

Post a Comment