Sunday, March 17, 2013

சிரித்திரு மகளே


நீலப் பெருவானில் நிற்கும் வெண்தாரகை
. நின்று சிரித்ததுவோ - நறுஞ்
சோலை நிறைமலர் சுந்தர மென்னிதழ்
. சொல்லும் சிரிப்பிதுவோ
ஓலையிடை தென்னங்கீற்றினூடு நிலா
. ஓடிச் சிரித்ததுவோ-மழை
போலும் இளந்தூறல்காண வண்ண வான
. வில்லும் சிரித்ததுவோ

வாழை மரங்களில் வந்துநீளும் குலை
. வைத்த முன் பூவரிசை -அது
தோழமை கொண்டு சிரித்தனவோ- கனி
. தேனைக் குழைத்தனவோ
கீழை வயற்கரை கோபுரவீதியில்
. கூடும் மந்தியினமும் - வந்து
வீழப் பொலிந்த கனிஉண்டு ஆனந்த
. வேளை என்றாடியதோ

பச்சை வயல்வெளி முற்றும் நிறைகதிர்
. பட்ட இளம் தென்றலில் - கதிர்
சச்சச் சரஎனச் சுற்றிவளைந் தயல்
. சாய்ந்தே சிரித்தனவோ
மிச்ச இரும் பனல் செம்மைகொள்ளப் பெரும்
. பட்டறை பையன் அதை -ஊதி
அச்சென ஆக்க அடிக்க தணல் தெறித்
. தங்கும் சிரித்ததுவோ

கானகத்தே நின்று ஆடும் மரங்களும்
. காணும் பசும் இலைகள் - நெடு
வானமழை விழும்நீர் துளி கொஞ்சிட
. வெட்கிச் சிரித்தனவோ
தானுமாடிக் கிளை தொங்கிடும் பூக்களைத்
. தாங்கிச் சிலுசிலிர்த்து - எழி
லான சிறுஓடை மீதுமலர் தூவி
. ஆனந்த மென்கிறதோ

வெள்ளை மணல் மீது வந்துகடலலை
. வீழ்ந்து சிரித்தனவோ -கயல்
துள்ளிக் குளத்திடை தாமரைப்பூ இதழ்
. தொட்டுச்சிரித்ததுவோ
வெள்ளிப் பனி உச்சி ஏறும்கதிர்கண்டு
. வீழ்ந்து சிரித்ததுவோ -சுகம்
அள்ளித்தரும் இளம்தென்றல் சிலிர்ப்பிட
. ஆரத் தழுவியதோ

அத்தனை காணும் சிரிப்பு மியற்கையின்
. அன்புடை வாழ்த்துக்களோ - இவை
முத்து மாலையிடை கோர்த்த மணிகளோ
. இரத்தின ஆரங்களோ
புத்தம் புதிதென பூமியில்வந்தஎன்
. பட்டெழில் பொன்மகளே -நீயும்
கத்தி அழுங்குரல் விட்டுச் சிரித்திடு
. அற்புத பூமியிதே

தாகம்


ஒற்றுமை என்பது வெற்றித்திருமகள்
   நெற்றியிலிட்ட திலகம் - தமிழ்ப்
பற்றினைக் கொண்டெழு ஒன்றெனச் சேர்ந்திடு
   கிட்டிடும் வாழ்வி லுதயம் - உயர்
நற்றமிழோ உந்தன் நாவில் புரளினும்
    இரத்தத்திலே கொண்டவீரம் - அதை
விற்றிடவோ விலைபேசிடவோ உந்தன்
    சொத்தில்லை பாரம்பரியம்

வேற்றுமை விட்டணி செல்வாய் அதுவுந்தன்
    வா  ழ்வினுக்கோர் அத்திவாரம் -இன்னும்
சுற்றி மனங்கொண்ட செந்தீ  எழுந்துயிர்
     கொள்ளும் சுதந்திர தாகம் - வெறும்
புற்றினில் சீறிடும் பாம்பின் விசம்விடப்
     பொல்லாவெறியரின் மோகம் - இனி
முற்றும் எனத்துயர் கொள்வதை கண்டிட
     முன்னெழுந்தார் இவர் வீரம்

பற்றிஎரியும் அடிவயிற்றி லெழும்
     பாசமிகுந் திவர்போலும் - பல
கற்றிடும் மாணவர் உள்ளம் கண்டதீயும்
      காற்றினிலே பெரிதாகும் - தீயைப்
பெற்றிடும் செந்தமிழ் செல்வங்களேஇனி
      முற்று மெரிந்திடும் நீசம் - நீவிர்
ஏற்றிடும் தியாகத்தின் தீயும் சுதந்திரம்
      வெற்றிவரை தொடரட்டும்


செங்குருதி சிந்தப் பெண்களுயிரைக்
     குடித்தவன் பஞ்சணை மீதும் - அவன்
தங்கமுடி தலைகொண்டர சாளவும்
     தாழ்ந்து நலிவதோ நாமும் - இனி
சங்கு ஒலித்திடப் பொங்கியெழுந்தவர்
     சந்தண மார்பெடு தீரம்   கண்ணே
பொங்குமிதற்கொரு பாதைவிடு இது
     புத்தொளி காணுமோர் தாகம்

புகழ்போதை

           

புகழ்போதை தனைவெல்லப் புவிமீதிலே
  புதிதாக எது உண்டு சபைஏறியே
நிகழ்கின்ற எதுதானும் தனைமீறியே
  நேரும் வினோதங்கள் கலைமேவியே
அகழ்கின்ற குழியாவும் அவர்மேனியே
  அடங்குமென் றறியாமல் சில பேருமே
திகழ்கின்ற விதிவந்து மனம்கொள்ளவே
  தெரிந்தாலும்குழி தோண்டும் வழியாகுமே

அலைகின்ற திரையேறி அவன் நீந்தினான்
 அழகென்று அலைகண்டு அதனுற் புகுந்தான்
தலைமூழ்க அலையோங்கி வரும்போதினில்
   தனதுயிரின் நிலைகண்டு கரைவேண்டினான்
நிலைகெட்டுத் தடுமாறி அதில்நீந்தவே
    நேரமதில் உருண்டோடும் விதியானது
குலைகின்ற பொழுதெண்ணிக் குறைவாக்குமோ
    கொடிதெண்ணித் தடையிட்டு உயிர்நீக்குமோ

கதியும்பிழைத் துயிர்கொள்ளப் புயல்வீசுமோ
  கைதந்து உயிர்காத்துக் கரைசேர்க்குமோ
நதிகொண்டபூவாக நலிந்தோடியும்
 நிலைகெட்டு விழும்போது நினைந்தேயவன்
புதிதெண்ணி வரும்போது பகைமிஞ்சுமோ
  பொழுதென்ப இருளோடு புகை மிஞ்சுமோ
அதிசீலஒளித் தீயே அருகோடுவா
   அகிலத்தில் அவன்கொள்ளும் அமைதியும்தா

(வேறு)

அண்டம்பொறி பறந்தோட அனல்சிதறி வெடியதிர
ஆக்குவாய் சக்திதேவி
முண்டம்தலை யென்றிணைய முகம்செய்து தமிழ்கொண்டு
மூச்சினையும் ஊதிவைத்தாய்
கண்டம் கடல்கடந்துவந்து கடுங்குளிரி லுழலகலை
யுணர்வுகொண் டெழெவும் வைத்தாய்
தண்டமெது தருவதெனில் தந்தமகு டம்விழவுன்
தகித்திடும் தீயில் இடுவாய்

குண்டெனுருள் கோளங்களும் கூட்டமைத்துக் கோடியெனக்
குதித்தோடச் செய்ததாயே
வண்டெனச்சொல் மதுவார்த்து வாழ்வில்புகழ் போதைதனை
வழிகாட்டி விட்டதேனோ
செண்டினொடு மலராட செய்தவளே கருவண்டு
தீண்டிவிடத் தெருவில்பூவாய்
மண்ணொடுமண் ணாகஎனை மாறிவிடச் செய்ததுவும்
மகிழ்வானால் மறுப்புமுண்டோ

பிச்சையிவன் உடலீந்து பிச்சையென உயிர்வைத்துப்
பிச்சையெனும் வாழ்வீந்த தாய்
இச்சைதனைக் கொண்டெழுந்தும் இயல்பில்கவி பாடிப்புவி
இரந்துதிரி என்றதெவரோ
பச்சையுடல் மீதுயிரைப் படைத்திட்ட தேவி யுனைப்
பாடிவலம் வாஎன்பதால்
அச்சமில்லை என்றவனை அணை என்று கூறியதேன்
அணையல்ல அணையென்பதோ?


காலத்தை வென்றவன்

கலையென்ன மனம்மீது கலைந்தோடவோ
கவியின்பத் தமிழ்நாவிற் கசப்பாகுமோ
இலைஎன்ப தொருசொந்தம் எனவாகுமோ
இதைக் கண்டு விழிமூடி இருஎன்பதோ
மலையென்ற மனம்கொண்ட திடமானது
மண்னாகி உருமாறி மறைந்தோடுமோ
தலையெங்கும் தடுமாற்றம் தலைதூக்குமோ
தவிப்பான தெனைக்கூடித் தரைவீழ்த்துமோ

இடர்வந்து வழிமீது இருந்தாடுமோ
இடம்விட்டு இருள்காணும் திசை செல்லவோ
சுடர் கொண்ட மணிதீபம் புயல் கொள்ளவோ
சுடுமென்று ஒளிகாவா திருள் நிற்பதோ
படர்கின்ற துயர் கண்டு பணிந்தோடவோ
பழகும் நற்துணைகொண்டு விரைந்தேறவோ
அடர்வானில் விரிமேகம் ஒளிமூடுமோ
அடடா என் விதியென்று சுடர் தூங்குமோ

இறைதேவி எனயாளும் ஒளிதீபமே
எனதாசை தமிழோடு இன்னும்வாழவே
கறைபூச எனதன்பு மனம்மீதிலே
கருதாது பகையின்றி உயிர்மேவியே
உறைவாய்நீ உயரன்பில் எனையாளவா
உளம்மீது கொளுமின்பத் தமிழ்மீண்டும்தா
மறை வானில் பெரிதான ஒளி தீபமே
மனப்பூத்துத் தமிழ்பாடும் மறுவாழ்வுதா!

பொங்கல் வராதோ?

         

பொங்கலும் உண்டேன் இனிக்கவில்லை - சில
பூவள்ளிப் போட்டேன் மணக்கவில்லை
தெங்கின் அருகிடை தோன்றும்கதிர் - இன்று
தேசு கொண்டுவீசக் காணவில்லை
செங்கரும்புண்ணச் சுவைக்கவில்லை - ஒளி
சோதி விளக்கேற்ற நிற்கவில்லை
மங்கும் பொழுதென்னும் தீரவில்லை - சில
மேகம் மறைக்குது வெய்யிலில்லை

வண்ண மலர் காலை பூக்கவில்லை = அதில்
வாசமெழக் காத்தேன் வீசவில்லை
கொண்டு வரும் தென்றல் கூடவில்லை  - இன்று
கூவும் சேவல் குரல் கேட்கவில்லை
மண்ணில் உதயத்தைக் காணவில்லை - கோவில்
மங்கல ஓசை மணிகளில்லை
பண்பாடு மீண்டும் தளைத்ததொரு - பொங்கல்
பாரில் விளைந்திட ஏதுசெய்வேன்

பாயும் சுருட்டியுள் வைக்கவில்லை - இந்தப்
பாழும் தூக்கம் விழி நீங்கவில்லை
தேயும் நிலாவென்ற தென்பு நிலை - எந்தத்
திக்கிலும் பாதை தெரியவில்லை
நேயம் நேர்மை எங்கள் பக்கமில்லை - எந்த
நீதியும் ஓசை மணிகளில்லை
காயும் வயலிடைநீருமில்லை - என்ன
காரணமோ பதர் நெல்லுமில்லை

கண்கள் விழித்து கடிதெழுந்து - உடல்
காணும் சோம்பல்தனும் மெய்முறித்தே
எண்ணத்தில் தீயிட்டுப் பானைவைத்தும் - அதில்
ஒற்றுமைச் சர்க்கரை ஊற்றிவைத்து
மண்ணையும் மாகதிர் வெய்யவனை - எண்ணி
மங்கலபாடல் முழங்கியொரு
வண்ணப் புதுபொங்கல் செய்வதெப்போ - அதை
வாயில் வைத்துசுவை கொள்வதெப்போ ?

அரசனா? ஆண்டியா?

ஆண்டுபோய் ஆண்டொன்று சேரும் - இந்த
ஆனந்த வான் வண்ணமாகும்
மூண்டு தீ வானிடைஓடும் - அது
மூவர்ணமாய் ஒளிபூக்கும்
ஆண்டவன் ஆளுவன் யாரும் - என்ன
ஆனாலும்ஆணவம் மங்கா
தீண்டும் வாள் தேகங்கள் கேட்கும் - அது
தித்திப்பை இரத்தத்தில் காணும்

ஆண்டிகள் போல்மொழி மேன்மை - இனம்
அங்கென்றும் இங்கொன்றும் ஓடும்
வேண்டிப் பிழைப்பதை நாடும் - ராஜ
வீரம் சலித்த தென்றோடும்
ஆண்ட பரம்பரை மீண்டும் - ஆளும்
ஆசைகுன்றிச் சோம்பல் கொள்ளும்
வேண்டா மென்றெதள்ளி ஓடும் - என்ன
வேதனையில் இன்பங் கொள்ளும்

ஆண்டவன் என்செய்யக் கூடும் - அந்த
ஆறாம் எண்ணம் கெட்டதாகும்
மீண்டுமிவர் சக்தி மேன்மை - பெற
மேதினியில் வாழ்வுமிஞ்சும்
தீண்டாது புத்தியை மூடி - இது
தேவை யில்லை என்றுவீசி
வேண்டா தென்றே கூனிநின்றால் - என்ன
வேதனைதான் மீதியன்றோ

தோண்டப் பொருள்வரு மென்றும் - பொன்
தோட்டதில் காய்கொள்ளும் என்றும்
நோண்டிக் கூரைதனைப் பிய்த்தே - ஒரு
நாளில் கொட்டும்பணம் என்றும்
ஆண்டாண்டு எண்ணிக் களித்து ஆவர்
ஆயுள் முடியும் வரைக்கும்
பூண்டாகிப் புல்லாகி தேய்ந்தும் இவர்
புத்தி கெட்ட வாழ்வே மிஞ்சும்


**********

Thursday, March 14, 2013

காதல் வெறுப்பு

நீர்வார்த்து நீரினிடை நெளிந்தோடவும்
  நீந்துகயல் நெளியலையும் உருவாக்கினாள்
பார் செய்து பரந்தவெண் பனிமலைகளும், 
   பட்ட கதிரா லு
ருகி வீழும்நதி
நேர் நிற்க வெயிலோடு நிழல் மரங்களும்

   நீள் வானம் நீந்துமெழில் மேகங்களும்
சீர்ஆக்கி உலகமைத்து சிலமாந்தரும்
  செய்தவரை வாழென்றே சிரித்துநின்றாள்


யாராக்கி மனிதமதில் அறிவையீந்து
  ஆணாக்கிப் பெண்ணாக்கி அவர்சேரவும
பேராக்கி அன்னையொடு  பிள்ளையென்றும்
  பெற்றவரில் தந்தையும் உருவாக்கினாள்
கூராக்கி மனங்கொள்ள உணர்வீந்தவள்
  குருதி தசைஎன்புடனே கூட்டி வைத்தாள்
தேராக்கி வாழ்வுதனை தினமோடென
  தேகமதில் உணர்வோடு உயிரையீந்தாள்


விண்ணாக்கி விண்ணிறைந்த கோள்களாக்கி
  விளையாடி அசைக்கின்ற \சக்தி தேவி
ஆண்காணப் பெண்ணழகு, அன்பினோடு
  அறிவீந்தும் அதைமீற உணர்வு தந்து

கண்ணாக்கி கன்னியிடம் காதலெனும்
  கருவாக்கிப் பொருளாக்கிக் கனவாக்கியும்
மண்ணாகப் போகுமுடல் மதன் வீசிடும்

   மலர்க்கணைபட் டுள்ளமும் மயங்கவைத்தாள்

வானாக்கி வெளியாக்கி விண்மீன்களும்
  வண்ணமதி விளையாட வழிசெய்தவள்
தேனாக்கி தேன்மலரில் சுவையாக்கியும் 
  செய்தபின்னே தேவையென வண்டாக்கினாள்
தானாக்கி மனித உடல் தன்னிலிச்சை
   தனையாக்கி குலமாக்க விதியும் செய்தாள்
ஏனாக்கிவைத்த இந்த இயற்கை யீர்ப்பை
   இழிவென்று இயம்பி இதைத் தள்ளலாமோ


இறைநோக்கம், இருவர் மனம் ஒன்றாகுதல்
  இளைமைதனும் தாய்மையின் ஏதுவானால்
கறைகொண்ட உணர்வென்று கருதலாமோ
  காதல் பெருந் தவறென்று தள்ளலாமோ
குறை காணின் இறைதானும் குறைசெய்யுமோ
  குற்றமவள் குணமென்று விதிசெய்வதோ
நிறைவற்ற எண்ணமென விரல்நீட்டினால்
  நீயென்று தீயள்ளி பொசுக்கிடாதோ


ஆதலினால் காதலினைச் செய்வீரென
  அகிலமதில் யானுரைக்க வில்லையையா
காதலென்ப குற்றமெனக் கருதவேண்டாம்
  கருணையுடன் நோக்குங்கள் காதலர்களை
பாதகமே யில்லாது பறந்து வானில்

   பறவைபோ லிருவரையும் மிதக்கவைத்து
நாதயிசை மாலையணி தோளாராக்கி

   நல்லதொரு வாழ்வீந்து மகிழுவீரே!

Tuesday, March 12, 2013

வாழும் வாழ்வு !


நல்ல மனங்களிள் அன்புக் கோவில்கட்டி
ஆண்டவன் வாழுகிறான் - அவன்
சொல்லி வழி நடந்தின்பம் பெறுவதை
என்றுமே கொள்ளுகிறான்
எல்லை வகுத்தவர் அல்லல்தனை நீக்கி
ஓங்கிடச் செய்யுமவன் - மனம்
கல்லை நிகர்த்தவர் கொள்ளும் இதயங்கள்
மெல்ல உருக்கிடுவார்

கண்ணைத் திறக்கினும் காணுபவை வெறும்
காட்சி கனவுகளே -  இந்த
மண்ணில் நடந்திடும் மாய விநோதங்கள்
மர்மக் கதை யெனவே
எண்ண மென்பதென்ன  எத்தனை பேய்களின்
இன்பச் சுடுகாடு  - நெற்றி
கண்ணனவன் நட மாடிக்கழிக் கும்வெண்
சாம்பல் கொள்ளும்மேடு

அள்ளிக் கொண்டுசெல்ல ஏதுமில்லை நாமும்
அந்த மென்றாகையிலே - ஒரு
வெள்ளிக் கதிரொளி ,வெற்றிடம், சூழிருள்
வேறொன் றிருப்ப தில்லை - யாவும்
துள்ளித் திரிகின்ற பொன்னெழில்வாழ்வினில்
தேடும் பொன்செல்வங்களும் - பதில்
அள்ளியெடுத்திட வந்துவிழுவது
ஆகத்துயர் அழிவே

தொல்லை தரும்விதி கொண்டவாழ்வுமிது
தூய்மையில் மாயைகளாம் - நாமும்
இல்லைஎனப் புவி நீங்கிய பின்னரே
உண்மையைக் காண்பதுண்டோ
சொல்லிலே தன்னலம் எண்ணும் மனம்விலங்
குள்ளபெருங் காடு -  இவை
அல்லதென்றாகியும் மற்றவர்  போற்றுவர்
ஆகா எழில் வாழ்வு

மங்கல ரூபி

மங்கல ரூபசு கந்தினி மாதே மலைமகளே
சங்கு முழங்கிய தாலும் பெரும்புகழ் தந்தவளே
செங்குல மீது சொரிந்தகுறை தன்னைச் சீர்செயவே
எங்கும் மொளிர்ந்திடு வண்ண முயர்சுடர் ஏற்றிவிடு

இங்கு குளிர்தர இன்பமெனும் முகில் வந்திடுவாய்
சங்கரனின் கொடுவெங் கதிரில் மனம் கொண்டுமொரு
பொங்கி நடம் செயப் புன்மை யழிந்திடச் செய்ததென
பங்கம் விளைத்தவன் பாதம் வணங்கிடச் செய்துவிடு

சிங்கம் தனிற் தினம் எங்கும் புகுந்திடச் செய்பவளே
எங்கள் உளம் வரை வந்து பிழைகளும் கொல்பவளே
 தங்கமெனும் மனம் கொண்டெமை வெல்லும் சங்கரியே
இங்கிவர் ஏழை உளந்தனைக் காத்திட வருவாயோ

மங்கு மிருள் எனும் மாயை மறைந்திடக் காணுவதாய்
கங்கை கொளும்பெரு வெள்ளமதில் பழி கழுவியொரு
எங்கும் நிறை ந்திட ஊதிய சங்கு மொலித்துவர
மங்கல மாயிவன் கண்களிலே சக்தி தந்து விடு

சோர்வு வேண்டாம்

(வேலைதேடிக் களைத்துச் சோர்ந்த மகனுக்கு தந்தை கூறுவதாக...)

காலமோடிச் செல்லும்போது
.....காணும் வாழ்வில் மாற்றமுண்டு
.....கண்ணில்நீரும் கொண்டதேனோ மகனே
நீலவானிற் தேயுஞ் சந்திரன்
.....நேரம்வந்த போதுமீண்டும்
.....நேர்வளர்ந்து வட்டமாகும் முகமே
கோலமுந்தன் சின்ன உள்ளம்
.....கொண்டதென்ன? பூவும்வாடிக்
.....கீழ்விழுந்தபோது காணும்சோர்வும்
நாலும் நன்மை தீமை என்று
.....நாமும் கொண்டவாழ்விலின்று
.....நீயுமெண்ணிக்  கீழ்கிடப்பதேது

காகம் ஓடும் மேகமீதில்
.....காலைவேலை செய்வென்று
.....காததூரம் செல்வதுண்டோ கூறு
தாகமென்று  கீழிறங்கித்
.....தாவென்றெங்கும் காசுகொண்டு
.....தண்ணீர்கேட்டுத் திரிவதுண்டோகூறு
ஆக இந்தமனிதன்வாழ
.....ஆனசட்டம் நீதியேதும்
.....ஆண்டவன் வகுத்தல்லப் பாரு
தேகம்சாக வெட்டிகொல்லும்
.....தீய நெஞ்ச மாந்தர்தானே
.....தேவைஎன்று சட்டம் போட்டதுண்டு

தான்சுழன்றே ஓடும்பூமி
.....தன்னில் வாழ்வு பொய்யின்போர்வை
.....நீயும்கொண்ட துக்கம்விட்டுநில்லு
ஏன் பயந்து கைகள்கட்டி
.....இங்கும் அங்கும் ஓடியாடி
.....இம்சை கொள்ளும் வாழ்வை விட்டுதள்ளு
நான் என்றெண்ணி ஏர்பிடித்து
.....நல்லபூமி நெல்விதைத்து
.....நாட்டில் ஏற்றம் கொள்ளும் வேலைபாரு

Monday, March 11, 2013

புகழ்

உளமலர் விரிந்தொளி பெறுகுது பெறுகுது
உவமையும் எதுவில்லையே
தளம்பிடுங் குளஅலை தவித்திடு மழகுடன்
திகழ்வது மனவுணர்வே
மளமள வெனவரு மழையெனும் புகழ்மொழி
மகிழ்வினைத் தரசுகமே
விழவிழ மலர்களில் வழிநெடு நடையிடும்
விதமெனச் சிலிர்த்திடுமே

குளஅலை களில்முகம் தெரிந்திடும் வகைமனம்
குதித்திடும் புகழ்ச்சியிலே
நிழலது முகில்வர நிலமிடை அழிந்திடும்
நிலை யெனப் புகழ் கெடுமே
இளமன திடை வரும் கனவுகள் என இவை
இருந்திடும் வாழ்வெனிலும்
அழவென வருவது தொகைதொகை மகிழ்வென
அடைவது சிறிதல்லவோ

புகழ் தரும் உணர்வுகள் பெரிதுவ கையுமெழ
புரிவது புதுச் சுகமே
நிகழ்வது சரியெனில் நெறியெழும் புகழ்பெரு
நிலவெனும் குளிர் சுகமே
பகலவன் ஒளியென பரவிடும் இருள்மறை
பனிவிடும் புல்லெனவே
அகமிடை -இருளற அதியுயர் தகவுற
அடைவது பெருமகிழ்வே

மழைதரு முகிலென மனமதில் கனமெழ
மதுவென இனித்திடிலும்
உளதினி மையில்பொலி வுறயுத விடுமிதில்
உருகிடும் மனம்பெரிதே
துளையிடு குழலிடை நுழைவளி இசைஇடும்
நிகரென வரும் புகழோ
வளர்ம்தி முகமதில் வரும்மகிழ் வுறப்புகழ்
தனையெடு மருந்தெனவே

Friday, March 8, 2013

மறுக்காதே தாயே!

          
களிமிகு புவியிடை கருவென வுயிர்தரு
கருணையே வருவாயோ
அளிபல அமுதெனு மருஞ்சுவை தமிழிசை
அகமெழ வருளாயோ
துளிபல உதிர்வெடு கடுமழை எனமனம்
தமிழ்பொழிந் திடத்தாயே
எளிதென மனமுயர் இசைகவி பலவெழும்
இதயமும் தாராயோ

புவியசைந் திடுமதைப் பு[ரிந்திடும் உணர்வினைப்
பொழுதுளம் இழந்தாலும்
செவியினி தமிழ்சொலும் .திறமெடு தகமையைச்
சிறுமதி புரியாது
கவினுறு மலர்தன்னும் கனிபிழி சுவைமது
கொளும்நிலை மறந்தாகி
ரவியெழ ஒளிவரத் தனைமறந் தொழுகிடும்
இனிமலரென வெனைச்செய்

குழிவிழ குறுகிட குவயலம் தனிலுள
கொடுமைகள் எதுகொளினும்
அழியென கவிமனம் அடங்கிட புரிசெயல்
அரிதெனும் பெருங்கேடாம்
பொழிலுடை எழில்மலர் பிடுங்கியே தரையிடும்
பிழைதனைப் போற்றாது
தொழிலதை விடுஅருந் துயர்களை மனமெடு
துணையிரு தமிழ்த்தாயே

மொழிசொல மனதினில் முழுதென உயிர்திட
மொடுநிலை வளர்ந்தோங்க
கழிஎன குறியிடுங் கணிதமென் றுயிர்கொளும்
கடமையும் சரியாமோ
ஒழிஎன முடிவினை உயரெனக் கருதிடல்
ஒருமுறை விடுதாயே
பழிஎனப் பழமையின் தவறெதும் நினைந்திவன்
பயில்கலை மறுக்காதே

ஏங்குதோ உள்ளம்

நில்லாது ஆறோடும் நில்லாதே என்றதனை
சொல்லாத போதுமது சுற்றியோடும்
செல்லாத இடமெங்கும் சுற்றிவரும் பூங்காற்று
சேறோடு சாக்கடையின் நாற்றம்கொள்ளும்
கல்லாத மதிபோலும் கர்வமெனும் விஷம்பூசிக்
காடையரின் அரசோங்கும் கண்கள் தோண்டி
கொல்லாது கொல்பவரும் கூடியமை இராச்சியத்தில்
இல்லாத பதவிக்கு ஏங்கும் நெஞ்சம்

வெல்லாது அறம்தேய, விடியாது இருள்சூழ
விளக்கொன்றாய் புயல்காற்றில் வைதததீபம்
செல்லாத காசுக்கு  சென்றுமனம் தடுமாறும்
சீரான பொய்மைக்கு சிரசும்தாளும்
வல்லாதி வல்லரென வம்சங்கள் என்று மகா
வாள்கொண்டு அகிம்சைதனை வளர்போம் என்றால்
இல்லாத நாற்காலி அறிந்துமோர் நிழலான
இருக்குமா சனத்திற்கு ஏங்கும் உள்ளம்

பல்லாதி மன்னர்களில் பசுவுக்கு நீதிசொல்ல
பிள்ளை தனைத்தேரிட்டும் பாசம்கொண்டு
முல்லைக்குத் தேரீந்தோன் மூதாட்டி ஔவைக்கு
மேலும்வாழ் வென்றெண்ணி தானும் கொண்ட
நெல்லிக்கனி யீந்தவரும் நீதிதனைக் காணுமென
நிகழ்த்திநல் கதைபடித்தும் நெஞ்சம்தன்னை
இல்லாது நீதிக்கு இழுக்கேற்று நாற்காலி
இருந்தாலே போதுமென இச்சை கொண்டார்

நெல்லுயர கோனுயர்வன் நீதிபல நெறிகளையும்
நிச்சமாய் இவர்கற்ற நெறிகளாயின்
கல்லாலே மாங்காயைக்  கனியென்றுஅடிப்பவர்செங்
கோல்கொண்டு சிரசுதனை குறித்துவீசி
நில்லாது கழுத்திருந்து  நீக்குஎன ஆட்சிவிதி
நேரெழுதி தமிழ்சாய்த்து நிற்போர்பக்கம்
பொல்லாத ஆசையுடன் புறத்தோடி இரந்தவரை
போடுவரோ எலும்பென்று பார்த்தல் நன்றோ

Thursday, March 7, 2013

எது காக்குமோ?

எழில்கொண்ட மலைமோதி யழுகின்ற முகிலேசொல்
   ஏனிந்தக் கொடுந் துன்பமோ
பொழில் நீந்துமலை நீயும் குலைந்தாயே யெதனாலலே
  போவென்று விதி சொன்னதோ
மொழி பேசுந் தமிழாநீ யழிகின்ற தேனோஉன்
  மனமொன்றத் திறனில்லையோ
பழிவந்தே யெமையாளும் பலரொன்று சேர்ந்திங்கு
   பலமோடு வழி காணீரேல்

தெளிவான பெருவானிற் திகழ்கின்ற மதிகூட
    தெரியாது பிறை யாகலாம்
வளிகொள்ள இணைகின்ற நறுவாச மலர்தானும்
   வடிவின்றி நிலம் வீழலாம்
களிகூடித் திரிகின்ற ஒளிவானின் முகிலோடி
  கதியின்றித் தொலைபோகலாம்
எளியோரி னுயிரோடு விளையாடு மிவந்தன்னை
    எதுவந்து தனதென்குமோ

பெரிதாகிப் பிளவாகி நிலமான பிரிந்தோடி
    வருவாயென் மகனென்னுமோ  
தெரியாத இரவோடு எழுமாழி உருண்டோடி
     தவழாயென் மடியென்குமோ
சரியாத மலையுச்சி சரமாரி தீபொங்கி
  சடசடத் துதிர் வாயிலோ
புரியாத தொருகுற்றம் பிறிதென்று யினியில்லை
  புகுவா யென்மகன் என்னுமோ
 
ஒருநாளில் கனவோடு  உறவாடும் மன எண்ணம்
   உயிர்கொண்ட தெனமாறுமோ
திருநாளும் பகலாகித் தெரிகின்ற ஒளிபோலத்
  தேயாமல்  நிலவோடுமோ
அருகாமை கொடியொன்று அலைந்தாடிமகிழ்வோடு
   அடடா என்றொலி கூட்டுமோ
பெருகாதோ ஒன்றாகிப் பிறந்தோமே அழகென்று
  புதிதாய்நல் வழிகாண்பமோ

கருகாதோ அருகாதோ கறை கொண்ட தினம்மாறிக்
    கரும்பெனும் வாழ்வாகுமோ
வருமாமோ மகிழ்வோடு வளைசங்கின் துளையூடே
    விளைகின்ற ஒலி கேட்குமோ
உருமாறிக் கருமாறி உலகத்தில்  வாழ்வேங்கும்
    இளையோரை யினி காப்பமோ
பெருமாரி இரவோடு பிரளயம் செய் தாயே,
    புகு நாட்டில் புரள் தீமைகொல்!