Monday, January 31, 2011

தை பிறந்தது, வழி பிறந்ததா ?

(தை பிறந்தது, எமக்கு வழிபிறந்ததா? என்னும் ஓர் கவியரங்கத்துக்கு எழுதியது)

ஓடும் குளிர்காற்றும் ஓங்கியநற் பெருமரமும்
ஓரத்தே நின்றசைய
கூடும் பசும்வயலை குலவிடவே தூரத்தில்
குனிந்துமே தொடுவானமும்
பாடும் குயில் பறவை பசுங்கிளிகள் பற்பலவும்
படபடத்து ஒடியலையும்
நாடும் நலம்வீடும் பேணும் உழவர்தமின்
நாணுகதிர் சேர்ந்தவயலில்

ஓடியறுத்தகதிர் ஓரம் அடுக்கிவெயில்
உடல்கருக்க வேர்வை தெளித்து
பாடிக் களித்துவரும் பலம்கொண்ட காற்றுக்குப்
பதர்நீக்கிப் பயனும்பெற்று
வாடியவர் குடிசெழிக்க வயலீந்த பெருங்கொடையால்
வாசலிலும் கோலமிட்டு
தேடியவோர் நிதிஎண்ணி தெய்வம் எனக்கதிரோன்
திசை நோக்கித் தொழுதுநிற்பர்

நாடு செழிக்கவெனில் வயல்`வரம்புயர`வென
நறுக்கான வார்த்தைகூறி
பாடும் பெரும்புலவர் பாட்டிஎம தவ்வையவள்
பதங்கூறுஞ்சொல் கேளீரேல்
தேடும் நிதியனைத்தும் தோற்றுவது கழனி,கறித்
தோட்டமெனப் பொருளேயாகும்
ஓடும் முகில் மறைந்து உள்ளமகிழ் ஆதவனே
உயிருக்கு உணவீந்ததை

தைபிறந்தால் வழிபிறக்கும் தமிழன்வாழ் வேற்றமுறும்
தழைத்தோங்கு மென்றேகூறி
மெய்யுரைத்த நாளெல்லாம் மேதினியில் போனதய்யா
மீளாத வெள்ளம் வந்து
செய்கழனி நெல்லழித்து சிதைத்தவரின் இல்லத்தே
சென்றுதான் இடம்பிடித்து
கொய்துதலை கொண்டாடும் குடியழித்த அரசுக்கு
கூலிக்குநிற்குதப்பா

தைபிறந்தால்குடியழிக்கும் தமிழீழத்திருநாட்டில்
தவிக்கவிடும் என்பதைப்போல்
கையழிந்து கைகொண்ட காசிழந்து பொருள்நீங்க
கால்நடைகள்தானுமிழந்து
தாயழுது சேயழுது தரம்கெட்டு எழுந்தோடி
தண்ணீரில் உடல் விறைத்து
பேய்களுதும் வாழ்வைவிட பேதலித்தவாழ்வுகொள்ளப்
பிறந்தவரோநாம் ஈழத்தவர்

கொய்துதலை குவித்தெண்ணிக் கொண்டாடும் சிங்கத்தின்
கொடிகொண்ட அரசுதானும்
எய்தவென எல்லாமும் உவந்தளித்து நலமவாழ
செய்தவனோ இறைவன் என்னில்
பெய்தமழை உருண்டோடிப் பேசாமல் கடல் செல்லச்
செய்வதனை விட்டே எம்மை
உய்த நிலை காண்பதுவும் பொறுக்காது எழஎழவே
வீழ்த்துவதாய் வினைகள் செய்தான்

தைபிறந்தால் குழிபறிக்கும் தலைபோகுமென்றிருகக்
தைபொங்கல் யாருக்கய்யா
பெய்யுமழை உணவழிக்க உயிரெடுக்க இடம்நகர்த்த
நன்றி சொல்வ தெவருக்கய்யா
செய்தவயல் எமக்கில்லை உள்ளவயல் வெள்ளமென
இயற்கையே கொள்ளிவைக்க
கைகுலுக்கி வாழ்த்தெழுதி களித்திடவும் எங்களுக்கு
தை இன்னும் பிறக்கவில்லை

சூரியனைக்காணாது சூழுமிருள் காலமதில்
சூடேறும் வானைநோக்கி
ஏறுவனோ கதிரோனென் றேங்கிகிடக்கின்றோம்
எரியட்டும் எங்கள்சோதி
வீறுடனே விடுதலையும் வெற்றியதும் கிட்டட்டும்
வீடெல்லாம்பொங்கல்பொங்கி
கூறிடுவோம் அப்போதே தை பிறந்து வழிபிறந்த
தழைத்தோங்கும் வாழ்வும்வரும்

மாறிடுவோம் மாற்றிடுவோம் மாகவியின் கூற்றெடுத்து
மாவுலகில் ஒருவனுக்கு
சோறுதான் இல்லையெனில் சுற்றும் புவி நிறுத்திச்
சொல்லென்று கேளாயினும்
வேறுஅவர் என்றில்லா வீரத் தமிழுறவு
விடியாமல் அலைந்துசாக
ஏறுவது கீழ்த்திசையில் எங்கள் இரவியல்ல
இது எங்கள் தையுமல்ல

தைபிறந்து வழிபிறக்கும் வார்த்தையது உண்மையெனில்
வந்ததிது தையுமல்ல
வெய்யவனும் கீழ்த்திசையில் வேகமுடனேறிவரின்
விடிந்திருக்கும் விடிவுமல்ல
தெய்வமெனும் தமிழ்பொங்கி திசையெல்லாம் முழக்கமிடும்
தேன்தமிழின் பொங்கலல்ல
செய்வதென் விடியலதன் திசைநோக்கி நடைகொள்வோம்
தோன்றட்டும் முதலில் விடிவு

Tuesday, January 25, 2011

வாழப் பிடிக்கல்லை..!

       நேற்று இன்று நாளை

நேற்று)
வாழப் பிடிக்கலைடா -தம்பி வாழப் பிடிக்கலைடா -இந்த
வையகம் தன்னிலே வந்து இருந்துமே வாழப் பிடிக்கலைடா
ஆழத் திரைக்கடலில் -ஆடும் அலைகள் போலவடா -தினம்
ஆடி யலைந்தொரு வாழ்வில் கலங்கிடும் வேதனைபோதுமடா

ஏழையெனப் பிறந்தோம் -பிறந்தே எத்தனை வீழ்ச்சி கண்டோம் -ஒரு
வாழைக்கனித் தோலில் வைத்தபாதமென வாழ்விற் தினம்விழுந்தோம்
கோழை எனப்படுத்தா -நாமும் கொண்ட இனமழிந்தோம் - இல்லை
வாளைச் சுழற்றியே வீரமுடன் வெகுதூரம் நடந்து சென்றோம்

தோளை மறைத்து நின்றா -நாங்கள் தோல்விதனைச் சுமந்தோம்- பல
காளையும் கன்னியர் போரைநடத்தியே வீரக்கதை படைத்தோம்
கூழைத் தனமெடுத்தா -படையோ தோற்ற கதைகளெல்லாம் ஒரு
ஆளைக் கலக்கிடும் சூரத்தனத்தினில் அத்தனையும் தகர்த்தோம்

ஆழ மனத்தினிலே -நாமும் அத்தனை வீரம் கொண்டும் - அட
கேளு தம்பி நாங்க நேர்மை நீதிதனைக் கொண்டே உடன்நடந்தோம்
ஊழையிடும் நரிகள் -பலவும்  ஓடிஅருகில் வந்தே - தம
துள்ளமதில் வஞ்சங் கொண்டு அழித்திட உண்மை சிதைந்ததடா

நேசமுட னிருந்தே -கைகள் நீட்டிக் குலுக்கியவர் -மனம்
கூசப் பெருங்கொடு வாளை உருவியே குத்தியதே னறியோம்
ஆழநடு நிசியில் -சுற்றி ஆயிரம் பேரெழுந்து - உயிர்
வாழத் துடித்தவர் வாழ்வைஅழித்திடப் போரை எடுத்ததென்ன

சத்தியம் சொன்னவரும் -எம்மைச் சார்ந்தவர் தம்பிகளும் -பல
உத்தமரும் வெகுமுன்னத மானவர் ஒற்றுமை கண்டவரும்
கத்தி எடுத்ததென்ன  -பகைவன் கட்சியில் சேர்ந்தென்ன - வருங்
கத்தைபணத்துக்கு ரத்த உறவுகள் காட்டிக் கொடுத்ததென்ன

(இன்று)
வாளைப் பிடிக்கலைடா -தம்பி வாளைப் பிடிக்கலைடா -இன்று
வாரி இறைத்துயிர் போகப் பெரும்போரை நாங்க நடத்தலைடா
ஆழி கடல்கடந்து -எங்கள் நாடுகடந்ததொரு - தமிழ்
ஈழப் பெருமரசானது கண்டொரு வீரநடையெடுத்தோம்

சூடான் அழைத்தெனில் -இனியோ சுற்றும் உலகமெல்லாம் அட
கூட வரும் எங்கள் கூக்குரல் கேட்டுமே கொஞ்சமிரக்கமிடும்
வாடா உடன் நடப்போம் -சேர்ந்து வாழும் வழியமைப்போம்- இனம்
தேடும் விடிவது தெய்வம்தருமென ஓடியே பின்நடப்போம்

தேடி எடுத்திடடா -எம்தமி ழீழக் கொடிபிடிடா -அது
ஆடியசைந்தது வீசிடும்காற்றினில் கூவிப் பறக்கட்டுமே
ஓடி நடந்திடடா -அந்த ஊரைக் கெடுத்தவர்கள் -தந்த
கூடி நடமுதுகொடு குத்துஎன கொண்டதைக் கைவிடடா

நாளை (நடக்கும்)
வாய்மையே வென்றதடா -எங்கள் வாழ்வு செழித்ததடா -இனிப்
போயினதுன்பங்கள் பொன்னென ஈழமும்பூத்தது பார்த்திடடா
தூய்மை திரும்புதடா -எங்கள் துன்பம் விடிந்ததடா -தனித்
தாயகம் தன்னிலே ஈழத்தமிழர சானது வந்ததடா

நாடு கடந்தரசு -நம்ம நாட்டினுள் வந்ததடா -இவர்
தேடும் சுதந்திரம் தென்றலென வீசித் தேகம் வருடுதடா
காடுமலைக ளெல்லாம் -துன்பங் கண்ட தமிழினமோ -இன்று
வீடு விடுதலை வாழ்வெனப் பாடிடும் வேளை பிறந்ததடா

Friday, January 21, 2011

தமிழ் சொல்ல.. உயிர்கொல்ல..!

தமிழே உன்னைக் கண்டால் அஞ்சித் தலையேசுற்றுதடி
தாகம் கொண்டேன் வாழ்வில் என்னைத் தனியே விட்டுடடி
அமுதே என்றுஉன்னைக் கற்றேன் ஆனா என்றெழுதி
ஆனாலின்றோ தமிழைப்பேசத் தலையே போகுதடி

அம்மா என்று மண்ணில் எழுதி அழித்தேன் அருச்சுவடி
அதனால்தானோ அன்னை மண்ணுள் அழியக் கொன்றவிதி
சும்மா தமிழைப் படியென் றப்பா சொல்லிப் போட்ட அடி
சொன்னாற் தமிழை விழுதேமுதுகில் எதிரி துவக்குப்பிடி

தாங்கா தலறும் போதிற் கூடத் தருணம் பார்த்துக்கடி
தமிழைப் பேசத் தலையும்போகும் சற்றே நிறுத்துங்கடி
நீங்காமனதில் கற்றோம்அன்று நெஞ்சில் கவிதையடி
நினவில் கனவில் நேரில் ஊரில்நிறைந்தாய் இன்பமடி

ஆனா லின்றோ தமிழைப்பேச அச்சம் கதவையடி
அக்கம் பக்கம் பார்த்தே மூடிப் பேசும் அவலமடி
தேனாய்ப் பேசிச் சிரித்தோம் தமிழை திமிரில் தலை நிமிர்த்தி
தெய்வத் தலைவன் இருந்த போது கதையே வேறுவழி

வயலின் பக்கம் சென்றேன் மாடு அம்மா என்றதடி
குலையும் நடுங்கி திகைத்தேன் எதிரி கிட்டே இல்லையடி
அயலில் ஆடு குழையைத் தின்று அம்மே என்றதடி
அடடா இதுவே போதும்என்று உளமே மிகிழுதடி

முடியை வெட்டக் கடையில் நின்றேன் முன்னே அவன்வந்தான்
முரட்டுப் பார்வை கண்டேன்”தமிழன் தானேநீ”யென்றான்
இடிபோ லெண்ணி ஏனோ என்றேன் இகழக் கண்வெட்டி
முடியைவெட்டத் தேவையில்லை சிரசைவெட்டென்றான்

முடியைவெட்டும் துணிவே போதும் தமிழன் தலைவெட்ட
முழுதாய் ஈழத்தமிழன் வாழ்வு பலியேஉயிர் கொள்ள
குடிநீர் கிணற்றில் பிணமேகாணும் கொடுமைஎன்சொல்ல
கேட்பார் எவரும் இல்லைத்தமிழே பிழைநீ நாமல்ல


புயலே வந்து புகுந்தாற்கூடத் தமிழே கொல்லுதடி
புனலும் ஓடிப் புகுந்தாற் கூட போவது ஈழமடி
அயலே நின்று அரவம் கூட ஆளைத் தீண்டுதடி
யார்தான் இவரேதமிழன் என்றால் ஆடிக் கொத்துதடி

வழியே நின்று தலைமுறையாக வாழ்ந்த ஈழமடி
வாசல்கதவை திறந்தா லின்று வருவது கொலைஞரடி
அழிவே என்று அணையும் தென்றல் அதுவும்போனதடி
அவனும்தெய்வம் அஞ்சி ஒளிந்தான் யாரும் இல்லையடி

தனியே நின்று தமிழைக் காக்கத் தவிக்கும் வேளையடி
தலையேஇன்றி போகும் நிலைமை தமிழர்க் கானதடி
எனியென் செய்வோம் எம்மைக்காக்க எவரும் எடுத்துஅடி
இரண்டே வைத்தால் போதும் உலகம் உள்ளேதள்ளுதடி

உரிமை என்றால் உயிரும்போயே உடல்தான் மிஞ்சுதடி
உணவைக் கேட்டால் உதைதான் நெஞ்சில் ஓங்கிப் படுகுதடி
அருமைதமிழை அறியா துரைத்தல் அருகில் கத்தியடி
அய்யோ என்று அலறக்கூட அச்சம் தமிழதடி

இருளில் வாழ்ந்து உயிரை கையில் எட்டிப் பிடித்தடி
எத்தனைகாலம் வீட்டுள் வாழ்வோம் சுற்றி மிருகமடி
அருகில் வந்து கதவின் ஓரம் அவைகள் நின்றபடி
அகலத்திறக்கும் தருணம் பார்த்து ஆளைதின்னுதடி

தமிழே எந்தன் தாயே உந்தன் புதல்வர் கோடியடி
தரணி எங்கும் பரந்தே வாழ்ந்தார் தனிநாடில்லையடி
தமிழன் கொல்லத் தட்டிக் கேட்க தலைவர் இல்லையடி
தமிழாம் ஈழம்இன்று, நாளை இன்னோர் தேசமடி

உலகத்தமிழா எண்ணிக்கொள்ளு இற்றை வரையும்நீ
எதுவுமில்லா அகதி, உரிமை எங்கும் அற்றாய்நீ
கலகம் எல்லாம் ஈழம்தானேகவலை ஏதென்று
கணக்குபோட்டால் கழித்துப்பார் எம்விடையே உன்மீதி

காலைப்பிடித்து கெஞ்சிகேட்டு வாழும்நிலைமைதான்
கடலில் கொல்ல கவிதைபாடி காலம் போகும்தான்
வேலை செய்து நாளும்போகும் வயிறும்நிறையும்தான்
வீரம்பேச காலைஊன்ற தேசம் இரவல்காண்

Thursday, January 20, 2011

கடலிலாடும் அலைகள் நாம்!


வாழ்க்கையெனும் கடலினிலே வண்ணத்துப் பெண்ணே -நாம்
  வட்ட அலை போல் எழுந்தே ஆடுகின்றோமே
தாழ்ந்திடுவோம் உயர்ந்திடுவோம் தாவிடுவோமே அலை
   தரையை நோக்கி ஓடுவதாய் ஓடுகின்றோமே

வினைகளாலே வீழ்ந்தெழுவோம் கண்களில் நீரே -நாம்
 விரைந்து செல்லல் விதியென் காற்றின் கைகளிற்தானே
மனைவி கணவன் மக்கள் எல்லாம் கடலிலே பெண்ணே -எம்
மனதுகொண்ட பாசமெனும் அலைகளின் வீச்சே

ஒருவரோடு  ஒருவர்கொள்ளும் உறவுகளெல்லாம் கடல்
 ஓடிவரும் அலைகள் காணும் உரசல்கள் கண்ணே
பெரிதுஆக எழுந்திடுவோம் மறுகணமெங்கே -உயர்
  பேரலையும் வீழ்ந்துவிடும் பாரடிபெண்ணே

வறுமை சோகம் வருத்தம் எல்லாம் இதயத்தில் கண்ணே -அலை
  வந்துசொல்ல யாருளரயல்  வருவதும் அலையே
வெறுமையிலே கதறுவது விதியடி அலையே நாம்
  வேண்டுவதோ அமைதியென்னும் பொய்கையின்நிலையே

ஒருவர்முன்னே ஒருவர் பின்னே ஒடுகிறோமே -நாம்
  ஒருவரோடு ஒருவர்கூட ஆசைகொண்டோமே
வருவதில்லை தருணமிங்கு வாழ்க்கையில் கண்ணே நம் 
வாழ்வில் கொண்ட கற்பனைகள் கனவுகள்தானே

ஓடும்வரை ஓடிடுவோம் உரிமையில் அன்பே கொண்டு
  ஓசையிடும் ஆர்ப்பரிக்கும் உணர்வுகள் வென்றே
வாடுவதும் தேடுவதும் ஆகட்டும் பெண்ணே - நான்
  வந்துவிட்டேன் தரை எனக்கு தெரியுது பெண்ணே

கரைநெருங்க அலையின் மனம் ஞானிகள் போலே- உண்மை
 கண்டதெனத் தெளிவுகொள்ளும் அமைதியாகுமே
தரையறியா அலைகளோடு துள்ளிடுபெண்ணே நின்
 தவிப்பில் மனம் குளுமை கொள்ளும்இயற்கையாகுமே

Friday, January 14, 2011

பொங்கலோ பொங்கல்!

பொங்கியவீரமும் புருஷ படைகளும் எங்கேயடா - அதில்
தங்கியமறமும் தாங்கிய உள்ளமும் எங்கேயடா - ஒரு
வெங்கனல் வீசிய வீரர்கள் ஐயோ எங்கேயடா - உடல்
தொங்குது கைகளில் பொங்குவதோ சொல்லு எங்கேயடா

பாடைகள் ஆயிரமாயிர மாகுது பொங்கிடடா - இவர்
ஆடைகள் போகுது ஆளுயிர் மாளுது பொங்கிடடா - அவர்
காடையர் கூவி கலந்தனர் நாட்டுக்குள் பொங்கிடடா - இன்னும்
பேடைகளோ இன்னும் பேசுவதேதடா பொங்கிடாடா

கைகள் பிணைத்துமே கண்கள் விழித்திடக் கொல்லுகிறார் - நம்
மெய்கள் அழித்துமே மேனி துடித்திட கொல்லுகிறார் - படு
பொய்கள் உரைத்தவர் பூமியின்மீதுயிர் வாழுகிறார் - இவர்
செய்கை மறந்தொரு தேன் சுவைபொங்கலும் தேவையதோ

வெட்டியபோதினில் வீழ்ந்திடக் குருதியும் பொங்கியதே -
சுட்டவர் கொன்றிடத் தூயவர்விழிநீர் பொங்கியதே - அய்யோ
பட்ட இழிமையில் பாவையர் மூச்சனல் பொங்கியதே - இதை
விட்டு என் வீட்டினில் வெறொரு பொங்கலும் வேண்டியதோ?

பொங்கிய துயரும் பூவிழி சோர்ந்திட வாழுகிறோம் - இங்கு
எங்குமே துன்பம் ஏழடி வெள்ளமும் மாளுகிறோம் - இவள்
கங்கையும் எம்மினம் கொல்ல எழுந்தனள் பாவிகளே - இனி
சங்கு முழங்கிடும் சாவு- பரந்தெங்கும் பொங்கிடுமே

பொங்கிட எண்ணில்பொழுதுவிடிந்திட பொங்கியெழு அவர்
செங்களம் கண்டவர் சிந்தனையோடுநீ பொங்கிஎழு ஒரு
சங்கத்தமிழ் வழி சரித்திரவீரனே பொங்கியெழு - உன்
பங்கினை மீட்டொரு பாகம் பிரித்திடப் பொங்கியெழு

Wednesday, January 12, 2011

தமிழில் Adventure Game யார் அந்த கொலைகாரன்? -1

தமிழில் Adventure Game  புதிர் நிறைந்த  விளையாட்டு. என்ன விலை?
 ஒன்றுமில்லை. சும்மா தரவிறக்குங்க! சும்மா விளையாடிப் பாருங்க!
ஆனா கருத்து சொல்லாம போகாதீங்க!

யார் அந்த கொலைகாரன்?
http://www.mediafire.com/download.php?q9zbzmk1egy6phx 

Tuesday, January 11, 2011

பிரிவின் சோகம்!

(மணம் முடித்து கொடுத்ததும் மகளின் பிரிவால் வாடும் தந்தை)

தென்றல் அருகினில் ஓடி வந்து என்னை
தீண்டி உரைத்ததும் என்ன? - அவள்
நின்ற திசைதனில் நேரிருந்து கண்ட
நேசக்கதைகளைச் சொல்ல - சிறு
கன்றென ஏதும் பயமறியா துள்ளி
கன்னிஅவள் கொண்ட சின்ன - உளம்
இன்று என்னபடும் பாடென எண்ணியே
ஏங்கும் தந்தைமனம் தேற்ற!

வந்து தழுவிய வாசமலர் மணம்
வாடும் எனதுடல் நீவி - இன்பம்
தந்து விலகியபோது அவள் எண்ணம்
தாவி எழுந்தது மீள - உயர்
சந்தனமாய் இல்லம் எங்கும் மணத்தவள்
சிந்துகவியெனச் சொல்லும் - குரல்
விந்தையின்று வெறும் வெட்டவெளியென
வேடிக்கையானது கொல்ல!

கைவிரல் பற்றியே கட்டழகன் மீது
காதல்கொண்டாளெனக் கண்டேன் - அவள்
மைவிழிகண்டு மயக்கியவன் என்ன
மாயம் புரிந்தனன் என்றேன் - இவள்
மெய்யுடல் பெற்றவன் மீது கொண்ட உயிர்
மெல்லகரைந்ததும் ஏனோ?- அவன்
மையலிலே இந்த மான்,கிளி, பூங்குயில்
மாறிக்குணம் கொள்ளலாமோ

கண்கள் குளமென ஆகிடவே இங்கு
காணுகின்றேன் ஒரு ஓரம் - சிறு
பெண்ணவள் அன்னையும் பேசமறந்துமே
போனதுமோ வெகு தூரம் இதை
எண்ணிக் கலங்குவ தாகுமோ என்மகள்
ஏற்ற துணை கொள்ளல் தீதோ -ஒரு
வெண்ணிலவு வெறும் வானமதில் என
வீட்டினுள் காய்திட லாமோ


நேற்று மலர்ந்தவள் நேசமுடையவன்
நேரெதிரே வரும்போது -மன
மாற்றமடைந்தவன் மேலே மயங்கிடும்
மாயம்தனை மனமெண்ணி - வரும்
ஆற்றாமை பொங்கிட அஞ்சிநின்றேன் ஒரு
அந்தி வந்த பொழுதோடு - அந்த
வேற்று மனிதனை வேண்டி எனை விட்டு
வேக நடை கொண்ட தேனோ?

ஓடும் நதியென தானிருந்தாள் துள்ளி
ஓசையுட னில்லம் நின்றாள் - அவள்
கூடும்கடல்தனை உள்ளங்கொண்டாள் எனக்
கொஞ்சமறியாது நின்றேன் - தினம்
ஆடும் உலகதில் நாமறியோ மிது
அத்தனை உறுதி என்றேன் -அது
போடும் புவிஅதிர்வோடு குலுங்கிட
பூமி சுழல் கின்ற தென்றேன்

யாவும் எமதென இல்லையம்மா இந்த
ஆவியும் சொந்தமென் றல்லேன் உயிர்
தாவும் உடல்பிரிந் தோடிட மேனியும்
தீயின் சொந்தம் எமதில்லை - ஒரு
பூவும் கொடிசொந்தமில்லையம்மா - இந்தப்
பூமியும் எம்மது இல்லை அந்த
மேவும் வெளி உயர் மேகமலைந்திடும்
வானமும் சொந்தமா? அறியேன்!

Sunday, January 9, 2011

புத்தாண்டே புதுவரவே

புத்தாண்டே புதுவரவே புன்னகைத்து வாராயோ?
புவியாண்டுபலகோடி நன்மைகளைத் தாராயோ?
பத்தோடு ஒன்றாகப் பாவங்கள் தாராமல்
பழிநீங்கி இனம்தளைக்க புதுவாழ்வு தருவாயோ?

நித்தமும் அழுதழுது நெஞ்சும்கனத்ததடி
நீநடந்து நிலமாண்டால் நீதிவழி திறக்காதோ?
புத்தாண்டு மகளே புதுவரவே வந்திங்கு
பொய்யா துறுதியுடன் பேசியெமைக் காக்காயோ?

(நீண்ட கவிதை தொடர்ந்து கொள்ள...)

ஆனந்த வேளைகள்

மெல்லக் கறுத் ததுவானம்
மேளமடித்தது மேகம்
சொல்லியழுவதுபோலும்
சிந்தியதாம் மழைநீரும்
சில்லென்று வீசிடும் காற்றும்
சேர்ந்துபறந்த தூவானம்
வல்லமனதிலும் இன்பம்
வந்துஇருந்திடச் செய்யும்

காலைமலர்ந்திடும் பூவும்
காற்றிலெழுந்திடும் வாசம்
கோல மயில்கொள் குமரன்
கும்பிடும் சன்னதி, கோவில்
நாலும் தெரிந்தவ ரோதும்
நான்மறை யின் ஒலியாவும்
சீலமுடன் உளம் மேவும்
சென்றுதுயர் தனைப் போக்கும்


மாலை மஞ்சள்வெயில் ஆகும்
மன்னவ ரெண்ணியே மோகம்
சேலை இடைதனில் நோகும்
செய்வதும்ம றந்து போகும்
வாலைக் குமரியின் நெஞ்சம்
வாலிபர் கொஞ்சிடச் சொல்லும்
காலைவிடிந்திடக் காணும்
கற்பனைகள் சுகம் காணூம்

கோபம் கனலென வீசும்
கொண்டவரின் மனம் தீயும்
தாபம்கரையத் தவழும்
தங்கச்சிலையெனும் சேயும்
தூய மழலையும் பேசும்
தேனென காதினில் சேரும்
பாவசினங்கள் அழித்து
பஞ்சென உள்ளம் மிதக்கும்

அவளே எல்லாம்! (சக்தி தெய்வம்)

தந்தையும் நீயே தாயும் நீயே
தாரணி எங்கும் ஒளிர்பவள் நீயே
வந்தாய் மனதில் வாழ்ந்திடத் தாயே
வளமேவாழ வழி செய்தாயே!


தந்தாய் என்றும் தாயே அன்பைச் சக்தி பெரியவளே
எந்தாயின்றி உலகில் நானும் இருப்பேனோ விதியே
முந்தாய் கண்டே முழுதும் கண்டோம் முன்னே இருப்பவளே
உந்தாய் என்றே கண்டாய் நீயும் ஒங்கி வளமுறவே

சிந்தை என்றும் சீராயன்பு செழித்து வளருகவே
விந்தை யுலகில் அவளே அன்றி வியப்பு எதுஉளதே
செந்தா மரையில் இருக்கும் அவளே சிரிக்கும் மின்னொளியே
வந்தேஉலகில் வடிவம் கொண்டாள் வாழ்வில் பெரும்ஒளியே

வெந்தேபோகும் வாழ்வில் என்றும் விழிக்கு ஒளியெனவே
ஈந்தாள் தன்னை இருக்கும் வரையும் இதயம் தடதடவே
பூந்தாள் பற்றி புவியாய் சுழன்று பொலிவாள் நடமிடவே
மெந்தாள் அசைய மிளிரும் வாழ்வு மீளும் அவளிடமே

கண்டேன் அவளை கவியாய் எந்தன் கலைக்கு அதிபதியே
வண்டேன் மலரில் வாசம் அவளே வாழ்வில் நறுமணமே
கொண்டேன் அவளே குலவும் இன்பம் கொடியின் ஒருபிடியே
தொண்டே சக்தி சுடரை உலகில் தொழுதே பாடுவதே

Thursday, January 6, 2011

எல்லாம் உணர்ந்தவன்

வாழ்வினில் ஆயிரம் வந்ததைக் கண்டவன்
வாட்டம் எனக்கில்லை ஞானப்பெண்ணே!
தாழ்விலும் ஏற்றமும் தன்னில் திளைத்தவன்
தாங்கும்உரமுண்டு ஞானப்பெண்ணே!
மூழ்கி எழுந்தவன் மூச்சுப் பிடித்துமே
முற்றும் கடந்தவன் ஞானப்பெண்ணே!
வீழ்வில்லை இன்னுமும் வீறுகொண்டே பாரில்
வெல்லத் திடமுண்டு ஞானப்பெண்ணே!

யாவும் உணர்ந்தவன் ஞாலம் அறிந்தவன்
நானே ஓர் ஞானியாம் ஞானப்பெண்ணே!
தாவும் இளம்தென்றல் தன்னில் புயலையும்
தாங்குமிடி கண்டான் ஞானப்பெண்ணே!
ஏவும் இயற்கையின் ஓடுமுகில் வந்து
என்ன மறைக்கினும் ஞானப்பெண்ணே!
மேவும் முகில் உள்ளே மெல்ல ஒளிர்நிலா
மீண்டும் வெளிவரும் ஞானப் பெண்ணே!

கொட்டும் மழைவரும் கூவி இடித்திடும்
சட்டச்சட பெரும் சத்தமெல்லாம்
விட்டுவிடும் ஒருவேளை அமைதியின்
வேகம் பிறந்திடும் ஞானப்பெண்ணே!
வட்டமுகம்வாடி வாழ்வது விட்டுநீ
வண்ணம் எடுத்தெழில் சோலையிலே,
சிட்டுகுருவியென் றோடிப் பறந்திடு
சிந்தை அமைதிகொள் ஞானப் பெண்ணே!

வெள்ளி நிலவினில் கையில முதுடன்
வெண்ணிலவு கண்டு உண்டதெல்லாம்
அள்ளி அணைத்திடும் அன்னை அருள்தானும்
இன்னும் வருமோடி ஞானபெண்ணே!
பள்ளி அனுப்பிய தந்தையின் பாசமும்
பார்த்து முகம் தன்னில் நீர் வழிந்தால்
துள்ளித் துடித்திடும் பாசமெல் லாமொரு
தோற்றமடி மீண்டும் சேர்வதில்லை

என்றுமே வாழ்வில் நிலைப்பதில்லை இருள்
ஓடும் ஒளிவரும் ஞானப்பெண்ணே!
நன்றும் பெருந்தீமை நல்லதும் கெட்டதும்
நாளும் தினம்மாறும் ஞானப்பெண்ணே!
குன்றும் குழிகளும் கோடி உண்டு இது
கொண்டது வாழ்வடி ஞானப் பெண்ணே!
வென்று புகழொடு வாழ நினைத்திடு!
வெய்யவனாய் ஒளிர் ஞானப்பெண்ணே!