Wednesday, July 11, 2012

பொய்யழகு



சொல்லெடுத்து கட்டும் வேளை
சேரும்எண்ணம் யாவுமே
மெல்லடுக்கி வைப்பதொன்றும்
மேவுமின்பம் இல்லையாம்
பல்லடுக்கு வைத்துப் செய்யும்
‘பா’சுவைக்கவேண்டிடின்
நல்லதொன்றை நாற்பதென்று
நாவுரைத்துப் போகுமே

வல்ல பத்தை நூறு- என்று
வாயுரைக்க மெய்யிதோ
எல்லை மீறிப் போனதென்று
எண்ணினாலும் நீதியோ
தொல்லை கூடினாலும் செய்தல்
வேண்டுமென்று பொய்யதை
சொல்லு மாயிரம் கவிஞர்
சொல்லி வைத்த துண்மையே

அல்லி காதல்கொண்டதந்த
அம்புலிக்கு என்பதும்
வில்லும் வாளும் கொண்ட வந்தாள்
வேல் விழித்த மாதெனில்
இல்லை ஈதுபொய்யென் றெண்ணி’
எட்டி துப்பிச்  செல்வரோ
எல்லையற்ற இன்பமென்று
ஏடுதூக்கிக் கொள்வரோ

நற்சுவைத்த சோற்றில் போடும்
நாவுறைக்கும் உப்பினை
சற்று தூவிக் கொள்ளும்போது
சாதம்செய் கவி(ஞ்)ஞனை
முற்றுமே உவர்ப்பு என்று
மீண்டும் கீழே தள்ளிடா
சொற்சுவைக்கு சேர்த்த வேகம்
சற்றுகூடும் உண்ணுவீர்

’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’

No comments:

Post a Comment