Monday, July 23, 2012

அன்பு காட்டு !


நீறுசெய் தேவிவன்மை நிர்மல மாக்கு உள்ளம்
ஊறுசெய் வாழ்வு கொண்டேன் உள்ளமோ பேய்பிடித்து
தாறுமா றென்று நஞ்சும் தலையிடை ஏறியாட்டும்
பேறுதான் கொண்ட என்னைப் பின்னரும் பேரஞ்ஞானம்
கூறியே அன்பு கொன்று குற்றமென்றாக்க செய்யா
ஆறிட முன்னே எந்தன் ஆணவம்  நீக்கிக் காப்பாய்
தேறிட ஏதும்சொல்ல தீமைகொள் பேச்சென்றாகி
மாறிடும் வினோதமென்ன மாதேவி மாற்றி வைப்பாய்


ஏனது நெஞ்சில்நீயும் இல்லெனும் சொல்லைத் தந்து
நானது என்று ஆகி நகைத்திடச் செய்தல்விட்டு
வானது உள்ளம்கொண்ட வகையினன்  ஆக எந்தன்
ஊனது உடலினோடு உள்ளமும் கொள்ளளின்றி
தேனது ஓடும்நாட்டில் தேவையின் புருசனாக்கு !
கூனியேஓடும் மந்திக் கோலமும் தந்துவாழ்வில்
நானினி என்னசெய்ய நடுவினில் ஏதுமற்று
தீனிடு என்பர்போல திகழவும் செய்தல் வேண்டா !சாவினி காண்வரைக்குஞ் சஞ்சலம் கொள்ளவைத்து
பூவினில் நல்ல உள்ளம் புண்பட என்னைக் கொண்டு
நாவினில் வாக்கு தந்து நல்கிடு மாறு செய்து
பாவினில்  பச்சை வண்ணம் பாடிடச்செய்தலின்றி
ஓவென அழுதும் உண்மைஉள்ளமும் கெட்டுவாடி
ஏவிநீ யென்னைக் கொண்டு இயக்கிடும் வேலைதன்னை
காவிஞான் செய்யவல்ல கவிஞனாய் ஆக்கி வல்ல
தேவியே என்னிலென்றும் தென்புற அன்பு காட்டு

******

ஆசையோடு துள்ளிகுருவியாக சிறகடித்து காற்றின் மீதெழுந்து நானும்
குவலயத்தின் மேல் பறக்க வேண்டும்
அருவியாக மாறவேண்டும் அலைகள் பொங்கி ஆடஅங்கு
அணைக ளின்றிப் பாயு  மின்பம் வேண்டும்
வரும் மனத்தின் உணர்வு எந்தன் வாய்மொழிக்கு ஊறு அற்ற
வகையிலான வாழ்வு கொள்ளவேண்டும்
பருகவென்று தமிழினோடு பால்நிலாவில் உண்ணும் சாற்றில்
பாகுவெல்லம் தேன்கலக்க வேண்டும்

வரிசையென்ன முதலிலில்லை கடையில்நிற்கும் போதுமந்த
வாழ்வில் துன்பமற்ற வேளை வேண்டும்
பெரியதென்ற பயம், எதற்கும் பிணியதென்ற பிறவியற்று
பிள்ளையென்று வாழும் வாழ்க்கை வேண்டும்
கருமையோடு பொய்மை தன்னும் கலந்துசொல் சுதந்திரத்தில்
கயவனல்ல கவிஞனாக வேண்டும்,
உரிமையோடு ஏறிவான மோடும் உள்ளம் வேண்டும்நானும்
இறைவனாகக் கவிபடைக்க வேண்டும் 

அருமையாக நடனமாடு மழகுதோகை வடிவுகொண்டு
ஆட வேண்டு மென்று மாட வேண்டும்
கருமைவண்ணக் காகமொன்று கரையுமோசை வேண்டுமங்கு
கருங் குயில் கள்கானம் சொல்ல வேண்டும்
எருமையொன்று நடுவில்நின்று எனைமுறைத்துப்பார்க்க அங்கு
எழுந்து ஓடும் குறுகுறுப்பு வேண்டும்
ஒருமை என்று எதுவும்இல்லை உறவுவேண்டும் இயற்கைதன்னின்
ஒன்றிக் காதல் கொள்ளும் இன்பம் வேண்டும் 

கருகும்வெப்பம் வேண்டும் காற்றின் குளிர்மைதன்னும் வேண்டும்நல்ல
காட்டுமலர்கள் பூத்துப் பொலியவேண்டும்
முருகு மேன்மை தமிழின் மூச்சு முழுதிருக்க வேண்டும் வாழ்வின்
முடிவு தானும் தமிழ் மணக்கக் காணும்
திருகுதாளம் வேண்டும் கண்கள் தெரியும் பாதைமீது வண்ணத்
தூரிகை கொண்டழகு ஓவியங்கள்
வரம்பு தன்னும் மீறும் இன்ப வடிவுகொண்ட பூவின் வண்ணம்
வந்து  இன்பம் என்று ஆக வேண்டும்

**********************

Friday, July 20, 2012

கிளியும் நானும் பகுதி 1ம் 2ம் பகுதிகள்

( நீண்ட கவிதை )

1. பாடும் கிளி
ஆடுமிலை யழகும் அந்திவான் செம்மைதனைக்
கூடும் முகில்ஓடக் குருவிகளும் ஆர்ப்பரிக்கத்
தேடும் நிலவெழுந்து தேனாய் ஒளி வார்க்க
பேடுதனை மனதெண்ணிப் பேச்சில் துயரெடுத்து 

தென்னோலை மீதிருந்து தனியே கிளியொன்று
மின்னும் ஓளிநிலவில் மேதினியை இருள்கவர
தன்மனதின் சோகத்தை தழுவிடும் காற்றிடையே
சொன்னவிதம் கண்டேன் சொல்லியதைக் கேள்மின்!
**************************

(கிளி பாடியது) 

சேலைக்குள் மூடிய செங்கரும்பென்றவள்
சேதி யுரைத்திருந்தேன்
மாலையில் பூத்த மலரிவளோ, அல்ல
மஞ்சள் நிலவு என்றேன்
ஆலைக்குள் காணும் அனலிரும்போ எழில்
அள்ளி சிவந்ததென்றேன்
பாலைக்குள் காணும் பசுஞ்சுனையாம் அன்று
பார்த்துளம் காதல் கொண்டேன் 

தோலுக்கு பூசிய சந்தனத்தை ஐயோ
திங்கள் எனப்புகழ்ந்தேன்
காலுக்கு வாய்த்த நடையசைவைத் தோகை
கொண்ட நடனம் என்றேன்
மேலுக்கு மின்னிய பொன்னகைகள் விட
புன்னகை போதுமென்றேன்
ஆலுக்கு கீழ்நின்று அற்புதம் இக்கனி
ஆகா சுவைக்கு தென்றேன் 

வேலுக்குக் ஒத்தவிழி புகழ்ந்தேன் மதி
விற்று பிழைத்திருந்தேன்
பாலுக்கு ஆவலில் பார்த்திருந்த பூனைப்
பக்குவம் கொண்டழிந்தேன்
காலுக்கு மெட்டி அசைந்தவிதம் கண்டு
கற்பனை ஊற்றெடுத்தேன்
நாலுக்கு ஏதுமில்லாதவள் தன்னையே
நாணமின்றி புகழ்ந்தேன் 

மூலைக்குள் வைத்த முழுநிலவோ புவி
மீண்டும் இருள் கொண்டதோ
மாலையிடப் பலிபீட மழைத்தவர்
மாயமென் றானதுவோ
சோலைக்குள் ளேபுயல்சுற்றியதோ உள்ளம்
சோர்ந்து சலித்ததுவே
ஓலையில் கண்டவை கற்பனையோ இவள்
உண்மையில் பெண்ணவளோ? 

******************** 

தூரத்தே நின்று  துயர் கூறும்கிளி பார்த்து
வீரக்கிளியே உன் வாழ்வினிலே கண்டதென்ன
நீரைக் குறுவிழிகள் நேர்வீழு மருவியென
தாரையெனக் கொட்டத் தவித்தழுதல் ஏன் என்றேன் 

ஆக உயர்வானில் அழகனிவன் பறந்தாலும்
போகா இடமெங்கும் புகுந்த மனத்துயராலே
வேக அனலிடையே வீழ்ந்த்புழுவாய் மனது
நோகச் சிறுமை கொண்டேன் நேர்ந்ததென் னறிவீரோ


   கிளியும் நானும்  2. 

     2. காதல் கருவூர்   

துக்கம் குரலடைத்துத்  தோன்றிடச் சிறுகிளியோ
அக்கம் பக்கம் என அயல் பார்த்துத் துடிப்புடனே
திக்குதிசை தெரியாத்  தென்றலென நானலைந்து
சிக்கித்தவித்த கதி சொல்வேன் எனப்பகன்று ,

"பாடிப் பரவசமாய் பார்த்தோரும் கேட்போரும்
நாடி மகிழ்வெய்த நானொன்றும் குயிலல்லத்
தேடிக் கனிதின்று தேகம் வளர்த்தலின்றி
ஆடிக் களிப்புறவும் ஆற்றலுடைத் தல்லேன் யான்

பச்சை நிறம் பார்த்துப்  பாடுங் குயிலை விட
இச்சை வடிவமதை  எடுத்தான் என இயம்பி
உச்‌சப் புகழுமென் இணை பறவையினம் கண்டு
நச்சுக் கர்வமதில்  நானூறிக் கிடந்திட்டேன் 

ஊரில் கண்டதெலாம் உள்ளத்தே கொண்டுகதை
நேரில் பசப்பிடுவேன் நீள்மரத்துக் கிளையிருந்து
பாரிற் பலகுரலில் பக்குவமாய்ப் பேசுமிவன்
சேரில் எவரென்று தெரிந்தே யவர்மொழியில்

கூறி நயமுரைத்துக்  கொண்டதிலே மகிழ்வாகி
ஆறித் திகழும் ஓர் ஆற்றலுடைத்  திருநாளில்
ஏறி வான் பறந்தே எட்டாத்  தொலையுள்ள
சீறிக் கொட்டுமெழில் செல்வம் செழித்துள்ள

நல்ல தோரூர் எண்ணி நான்பறந்த வேளையில்
வல்ல விதியும் வாழ்வின் எனை வெறுத்த
கல்லுள் தேரைக்கும்  உண்ண உணவீயும
அல்லல் அறுத்தாளும் அரனோ எனை வெறுத்து  

போகுமிடம் மாற்றிப்  பூக்கள் மலர்வற்ற
ஆகும் பெரு வேம்பும் அடர்ந்த  முட்புதருடனே
ஏகமுயர் மூங்கில்கள் எழுத்தோர் காடுமென
தாகம் தணி சுனையும் தாமரையும் இல்லாதோர்

பாயும் நதியோடப் பலமீன்கள் துள்ளிவிழ
காயும் நிலம் அருகே கரும்புவயல், தோட்டமுடன்
சாயும் நாணல்களும் சார்ந்தூரும்  அரவமெனப்
போயும் ஒழித்தமரப்  பொந்திடையே கருந்தேளும்

ஆன இடமொன்றை அடைந்தேனாம், அண்டமெனும்
வானத் திடை சுழலும் விந்தையாம்  உலகினிலே
ஏனத் திசைநோக்கி  எனை யிழுத்த தோவிதியும்
மானம் தனையிழக்க மாதவறிழைத் திருந்தேன் " 

கேவிக் கதறியக் கிளியும் நடுநடுங்கி
நாவில் எழுந்தகதை நவின்ற கதை தொடராது
கூவிக் கதறும் நிலை கூடிவிடக் கண்டதனால்
ஆவி துடித்தலறி அமைதிவரை அழட்டுமதில்  

தண்மை மனம் கொள்ளத்  தானாய்த் துயிலுமென
எண்ணி இடம்விட்டு ஏகாந்த மாய் இரவின்
விண்ணும் நிலவொளியும் வீசுமிளங் காற்றிடையே
கண்முன் கிளிஇருக்கக் காலெடுத்து நான் நடந்தேன்

முன்னோர் கால்வைக்க மூடக் கிளியோ உள்
என்னே நினைந்ததனை இசைபடித்த தோஅறியேன்
கன்னம் நீர்வழியக் கரு இருளும் காணுமந்த
முன்னிரவில் கீக் கீ யென் றெண்ணம் இசைத்ததுவாம்


(கிளி பாடியது)

மெல்லிய பஞ்செனும் மேகம் படைத்ததில்
மின்னலை ஏன்கொடுத்தான்
முல்லைசெறி மலர்ப் பந்தலின் மீதிலே
மூடியோர் பாம்பை வைத்தான்
கல்லும் உருகிடும் சேதி கொள்ள எங்கள்
கண்களில் நீர் படைத்தான்
வல்லமை கொண்ட மனங்களிலே கொடும்
வஞ்சனை கோலமிட்டான்

பென்னம் பெரிதென பூமி செய்து அதை
பின்னிச் சுழல வைத்தான்
இன்னுமதில் நடமாடவென மக்கள்
எத்தனையோ படைத்தான்
பொன்னிற் அழகென்னும் மாதர்செய்து ஒரு
போதை விழியில் வைத்தான்
மின்னலென மனம் கொன்றிடக் காதலை
மெல்ல இழையவிட்டான்

சின்னதென பல பூக்கள் செய்து அதில்
தேனை நிரப்பியவன்
தின்னும்சிறு வண்டு தேவை முடிந்ததும்
தென்றலில் ஓடவைத்தான்
இன்னரும் ராகங்கள் தான் படைத்து அதில்
ஏனோ முகாரி வைத்தான்
பொன்னெழில் வண்ணசிலை வடித்து அதைப்
போட்டு உடைக்க வைத்தான்

தண்ணீரில் தாமரை தான்படைத்து மனம்
தாகமெடுக்க வைத்தான்
விண்ணின் கதிருக்கும் வீதி மலருக்கும்
வேடிக்கை காதல் வைத்தான்
மண்ணில் இருப்பது மாயமென்ன? மனம்
மாறும் உணர்வு வைத்தான்
எண்ணி மனங்காவல் கொள்ளவில்லை யெனில்
என்றுமே துன்பம் வைத்தான்

பகுதி 3 ல்தொடரும் ...

கிளியும் நானும் 3


         
3. ஆனந்தக் கூத்து

இருள் என்னும் மாயை இகத்தின் அணிகலனோ
பொருள் என்ன பூமி  புதைக்கும் படுகுழியோ
வரும் போதும் அழுதே வந்தோம்  முதிர்ந்தோடிப்
பெருந்தீ சுவைகொள்ளப் போமட்டும் அழுதழுதே

இருந்தேகும் வாழ்வே இறைவன் எமக்களித்தார்
வருந்தியக் கிளிகொண்ட வாழ்வெண்ணித் துடிதுடித்து
அருங்கிளியைப் பார்க்கவென ஆசை யுடன்விடிந்திடவும்
கருந்திட்டுக் கரைந்திட்டு கண்விட்டுபோகும் வரை

இருந்திட்டு முடிவாக எழுந்தெட்டிக் கால்வைத்து
பரும்திட்டும் மனங்கொள்ளப் பறந்திட்டுப் போகாமல்
வரு மட்டுமெனைக்காத்து வாய் பேசக் கிளிதானும்
குருந்திட்ட தென்னோலை கூத்தாடக் காத்துளதோ

உருளுமா அவனியிடை ஓடிச்சுடர் எறிக்க
தருமொளியின் வீச்சில்   தரணிஒளிப் பாய்விரிக்க
வருந்திமனம் கிளிசொன்ன வார்த்தைகளை நம்பியதால்
இருந்த இடம் ஒருகால் ஏகிமுகம் கண்டல்லால்

அதிகாலை வேளையிது அடங்கா துடித்தமனம்
மதிகாண் மயக்கமதும் மாறும் பெருந்துயரம்
விதியென்று விட்டோட விலகிடலாம் என்றெண்ணி
கதிகொண்டு காலைக் கடமைகளை ஆற்றியபின்

நடந்தேன் செல்வழியில் நான் கொண்ட கவலையது
உடன் வான் பறந்துகிளி உயிர்தானும் மாளவென
கடந்தே பொறுமையினை கைவிட்டுக் காட்டாறு
விடங்கொள் தீனிவகை  வீச்சருவி நெருப்பென்று

விழுந்தே உயிர்விட்டு வீணாகிப் போய்விடுமோ
எழுந்தே மன அச்சம் என்னுடலில் பதைபதைக்க
அழுந்தி உளைச்சலிட ஆகா வென் அலைந்தோடி
செழுநீர் மலர்ப்பொய்கை  சேருமிட மடைந்தேன்

உயர்வளர ஏங்கி உரமெடுத்த சிறுதென்னை
நயமெழுந்து காண நான் திரும்பிப்  பார்வையிட
வியந்துள்ளம் விருவிறுக்க வேதனைதான் கிளியில்லை
அயர்ந்தே அறிவழிய ஆவென்று திகைத்தபடி

மொழியின்றி மௌனப் பதுமையென உடல் விறைக்க
வழியின்றி திரும்ப வந்த திசை கால்வைக்க
பழகிக் கொண்டகுரல் பாட்டெழுந்து கீச்சிடவே
அழகு கிளியினது அருந்தோற்றம் ஆ..கண்டேன்

விருந்தோ கண்களுக்கு வேறில்லை மரத்தில்
இருந்து பசுமிறகை எகிறியடித் துள்ளியது
சொரிந்த மர பூக்கள்  சொல்லரிய மகிழ்வூட்ட
சரிந்து பறந்தடித்து செய்ததை என்சொல்வேன்!


(கிளி பாடுகிறது)

எந்தன் வாழ்வில் இன்பமான பொங்கி ஓடுதே- அன்பு
சிந்தை வானில் வந்து தென்றலாகி ஆடுதே
வந்து ரூபவண்ண வாழ்வின் சந்தமானதே - இன்பம்
தந்ததான தென்ன `தந்த தந்த தானவே`

மந்தியான துள்ளியாடும் மாமரத்திலே - போலும்
உந்தியாடி உள்ளமிங்கே ஊஞ்சலாடுதே
அந்திவான மேகமென்று  ஆடியோடியே - வானம்
சிந்தையான செம்மை கொண்டு சிந்துபாடுதே

கொந்தி உண்ட இன்பழத்தை கொண்ட மாமரம்  - அங்கு
வந்திருந்து காணுமின்பம் வாழ்வசந்தமே
அந்தரத்தில் தொங்குமின் கனிக்கு ஏங்கியே - தின்று
சொந்தமாக்க வந்ததன்று அஞ்சுகமொன்றே...

கண்டுநானும் கொண்ட வாழ்வு இன்பமானதே -  என்னை
கொண்டுமேக மெங்குலாவும் கொள்ளை யின்பமே
தண்டிலாடும் பங்கயத்தின் தண்மைபோலவே  - என்றும்
பண்பிலாடும் உள்ளம் கண்ட பாச உள்ளமே

தொடரும்

கிளியும் நானும் 4


4. மாயக் கிளி

கிளியின் பாட்டென்ற கிள்ளைமொழி தான்கேட்டு
உளியோ கூர்பட்ட உருவம்செய் சிற்பியென
மொழியாற் கவலையுற மேதினியிற் பெருஞ்சோகம்
அழுதே எனைக்கலங்க ஆக்கியதக் கிளிநோக்கி

பனியோ படுகுளிரோ பைத்தியமென் றாகியதோ
தனியே ஆடுவதும் தலைமாறிக் குதிப்பதுவும்
இனிதோ இளங்கிளியே இரு, சற்று கேளாயுன்
புனிதத் திருவாயால் பொய்யுரைத்த லாவதுமேன்

நேற்றோர் நாள் நிறுத்தா நீரொழுகும் விழிகொண்டு
கூற்றோ கொடிதென்று குவலயத்து வாழ்வதனை
காற்றோடு சென்றே காட்டிடையே சிக்கிமனம்
சேற்றோடு வாழச் சிதைந்ததெனச் சீற்றமுற்றாய்

இன்றோ குதிபோட்டு இன்பமே உலகென்று
தின்றே ஆடுகிறாய் தெரிவதுமென் முரண்கூறு
நன்றோ பெண்ணவளை நாஇழிந்து பேசுவதும்
இன்றே அவளன்பு ஆகா என் றோதுவதும்

ஒன்றேமெய் ஒன்றில்லை ஒன்றாகும் என்றில்லை
நின்றுலகில் நீயாடும் நிலையும் புரியவில்லை
சென்றேகாண் உள்ளத்தில் சீலம் தவறிவிடல்
நன்றோ மனமழுக்காய் நலிந்து கெடல் ஆவதுமோ

திரும்பித் திசை எனது திருமுகம் பார்த்த கிளி
இரு மனிதா ஏதேதோ எண்ணியதைக் கூறாய் நில்!
வருமுனது வார்த்தையெது வைத்தெல்லை காக்காது
வருந்தியழு தாயென்று வாய்கூசப் பொய்யுரைத்தாய்

எறும்பளவு துயர்தனும் என்மனது பட்டதில்லை
பொறுமையுடன் மன்னித்தேன் பேச்சாம் உனதென்றே
இறுமாப் புடன்பேசும் இளங்கிளியை கண்டயர்ந்தேன்
`வெறும் பச்சைப் பொய்கொண்டு விளையாடும் நாடகமென்

அழகுக் கிளி வாழ்வில் அவலம்தான் பெரிதென்று
அழுத செயல்கண்டேன் அதுவும் பொய்யாமோ
பொழுதான நாளொன்று போகத் தலைகீழாய்
முழுதும் இலையென்று மாயக் கதை சொன்னாய்`

//மாய உலகில்லை மாறுவதோ உன்கூற்று
மாயு முலகுண்மை மரணத்தின் மேடையிது
காயம் உயிர் கொண்டாய் காலந்தான் கொண்டோடக்
காயம் விளைத்துனையே காவு கொள்ளும் புவியாகும்//

”மோசக்கிளியே நீ முன்னொன்று பேசியதென்
பாசப் பலியென்று பாரினிலே பட்டதுயர்
கூசாப் பொய்பேசிக் குலைந்துனது மனமிழிந்தாய்
வேசம் புரியவிலை வீண்பிறப்போ தெரியவிலை”

(அடுத்ததில் முடியும்)

Thursday, July 19, 2012

கிளியும் நானும் - 5


5. கிளியின் பதில்

என்னைப் புரியவில்லை என்றரற்றும் மனிதா
நின்னைப் புரிந்தனையோ நீவந்ததே உலகில்
என்னபயன்? வாழ்ந்து இறுதியிலே போம்வரையும்
உன் வாழ்வில் துன்பங்கள் இன்பங்கள் எண்ணிப்பார்

மண்ணைப் புரிந்தனையோ மாதினைப் புரிந்தனையோ
எண்ணம் புரிந்தனையோ இரவுபகல் தான் ஏனோ
கண்ணால் காணுகின்ற காட்சி புரிந்தனையோ
விண்ணில் சுழல்கோள விந்தையும் புரிந்ததுவோ

பிறப்பும் இறப்புமதன் பெரிதாம் பயன் என்ன
உறவும் பிரிவுமதி லுள்ள துயரின்பங்கள்
மறதி மனஎண்ணம் மற்றுமுள ஞாபகமும்
அறமும்நீதியதில் அந்நியம் இவையெல்லாம்

என்னபயன் வாழ்வை இறைவன் படைத்ததெனில்
அன்னதொரு வாழ்வால் அவனுக்கு என்னபயன்
உன்னதவோர் வாழ்வாம் உயர் வாழ்வு என்றெல்லாம்
என்னபயன் இத்தரையில் இருந்துபோய் என்னபயன்?

எண்ணமே உலகாய் இருந்தும் அதன்வழியே
வண்ணக் கலவையாய் வாழ்ந்தும் இறுதியிலே
மண்ணும் எமைத்தின்ன மண்ணாக போஎன்று
கண்ணைக் குருடாக்கி காண்வாழ்வுச் சூட்சுமமென்

கண்ணில் காணாக் கனவுகளும் கற்பனையும்
எண்ணப் பிசாசாய் இருந்தெம்மை ஆளுவதும்
உண்மையிலா மாயை ஒன்றே வாழ்வென்றான
தன்மைதனைப் புரிந்தபின் தானெனைப் புரிந்திடுவாய்

வேதங்கள் விதிமுறைகள் வினைகள் கிரியைகளும்
ஆகமங்கள் வாழ்வின் அறநெறிகள் சாத்திரங்கள்
யூகங்கள் வாக்குகள் யுக்திகள் வித்தைகளும்
ஆகும் விதியுரைக்க அந்நியமாய் மாவுலகு

மாதங்கள் ஆண்டோடு மதியுரைகள் பொன்மொழிகள்
வாதங்கள் வார்த்தைகள் வாழ்வின் அறநெறிகள்
யாதும் நம்வாழ்வில் நல்வழியை போதிக்க
போதுமெனப் புரண்டு பூமி எதிர் சுற்றுவதேன்

செங்கோல் பிடித்தகரம் செய்வதும் நீதியெனச்
சிங்காசனம் குடையும் சீலமெனக் காணுவையோ
தங்கள் குடிமக்கள் தாம்வாழ எவ்வினமும்
பொங்கக் குருதி விழப் பிணமாக்கும் மற்றினமேன்

பொய்யும் புனைகதையும் புழுகும் புரட்டெழுந்து
வையம்முழுதாழும் வலிமிகுந்த காலமுமேன்
செய்யும் களவுகளும் சீரழித்துப் பெண்ணினத்தை
நையப் புடைத்தழிக்க நாடாளும் உலகமிது

தெய்வம் கண்பார்த்து சிரித்தபடி நிற்பதென்ன
பெய்யும்மழை ஒறுக்கா பூமிவளம் கொடுப்பதென்ன
வெய்யோன் குடையாள விளைபொன் கொழிப்பதென்ன
மெய்யும் அறம்நீதி மிரண்டலறி ஒடலென்ன

கொல்லும்காலமதில் கூத்தாடு மென்மனதை
நில்லும் புரிந்துகொள்ள நெஞ்சங்கள் முடியாது
கல்லும் மண் கொண்டேயிக் காற்றிலா வெளியோடி
செல்லும் பூமிக்கு சிறப்பென்ன சீரழிவைச்

செய்தவரார் ஆதிச் சிறப்பார்ந்த செந் தமிழை
உய்யும்குலம் தன்னை உலகிருந்து சுவடொழிக்க
கையிணைந்து போடும் கயமை விதிமுறைகள்;
செய்ய ஒரு பகுதி திசைமாறிக் கூடலென்ன

என்னை புரிவதென்ன இதயமிதோ காணுலகில்
நின்னை புரிந்தனையோ நிலையற்ற உலகமதில்
சொன்னவிதிமுறைகள் சுடுகாட்டில் போய்மறைய
புன்மை தனைப் புரியாப் பொழுதுவரை கிளியானும்

எண்ணம் பிழைத்திங்கே இழிந்துவிட ஆடுகிறேன்
பெண்ணைப் புகழ்ந்துபின் பேயெனவே சாடுகிறேன்
மண்ணை மாந்தர்தமை மகிழ்வென்று கூறுகிறேன்
வண்ணம் உடன்மாறி வானவில்லு மாகுகிறேன்

உலகே அலைந்தோடி உண்மை தனைச் சீரழித்து
பலமும் பணம் கொண்டார் பக்கம் உருள்கையிலே
வலமும் இடம் தெரியா வாழ்மக்கள் தவித்திருக்க
நலமும் சிதைந்தவெறும் நாடகத்து நடிகன்போல்

கண்டால் சிரிக்கின்றேன் கணம் பின்னே அழுகின்றேன்
கொண்டாட்டம் போடுகிறேன் குணம் மாறித் தவிக்கின்றேன்
மண்ணில் விதியழித்த மாந்தரினை கேட்பதற்கு
கண்ணைத் திறந்து இறை காணும்வரை பைத்தியம் நான்!

மறு கணமோ கிளியை மரத்தைக் கிளைகளதை
குறுகிய தோர் தென்னையும் குளத்தைக் குருவிகளை
கருகலிற் கண்டஇளம் காற்றைக் கடும் வெயிலை
அருகினிலே காணோம் அட என்ன மாயமிதோ ?

(முடிந்தது)

அன்பின் வலிமை

அன்புடை மனதை நீங்கின்
ஆங்கதன் பெய ரன்பல்ல
தன்னலங் கொண்ட வண்ணம்
தாழ்வதும் அன்பென்றல்ல
துன்புறச் செய்யும் போதும்
தோல்வியில் உழன்றகாலும்
வன்மையில் உள்ளம் வெந்தும்
வாழ்ந்திடல் உண்மை யன்பாம்

என்புடை உடலின் சூடும்
இழந்திட வாழ்வு மாயும்
அன்புடை எண்ணம் குன்றின்
ஆற்றலும் தேயும் நல்லோர்
பொன்னது தீயில் வெந்தும்
புத்தெழில் கொள்ளல் போலும்
தன்னக அன்பு துன்பம்
தாங்கிடப் பொலியுமன்றோ

சின்னதோர் பொறிபறந்தே
சென்றது பஞ்சுமூட்டை
தன்னிடை வீழ்ந்ததாயின்
தீயெழுந் தாட்சிகொள்ளும்
மென்னுளம் கொண்ட அன்பில்
மீறிடும் கோபம் இன்னும்
அன்புகண் டகந்தைநீறாய்
ஆகத்தெய் வீகந் தோன்றும்

உன்னத அன்பின் வீச்சில்
உணர்வெழுந் தோடிநன்மை
பன்னெடும் வகையில்கிட்டப்
பனியிதழ் பூவின் நாற்றம்
என்பதோர் இன்பஞ் சேர
இதயமோ துள்ளும்அன்பில்
பின்னியே பிணைந்தவாழ்வு
பிறவியில் பெருமைசேர்க்கும்

கண்சினந் தழல் தகிப்பின்
காதலில் குளுமைஎண்ணம்
புண்ணென ஆகுமுள்ளம்
பெய்மழை தணலைஒக்கும்
விண்ணென விரியுமன்பு
வேகமாய் பற்றி மார்பில்
தண்மைகொள் சந்தனத்தை
தந்ததென் றாக்கிநிற்கும்

உண்ணவே பசி ஒறுப்பின்
ஊரதின் கண்கள் பட்டுப்
புண்ணென ஆனதென்று
புலம்பிடும் அன்னைபோலும்
பண்படும் தன்னில்குற்றம்
பார்த்திடும்  பொய்த்தபோதும்
உண்டெனத் தேற்றும் மன்பு
ஓங்கிடும் தோற்பதில்லை


புன்னகை இதழ்கள்மீது
போவதும் உள்ளம்பொங்கிப்
பன்னெடும் பாதையோடிப்
பாய்ந்திடும் ஆறுபோலும்
தன்னெழில் உவகைமீறத்
தானிணைந் தொன்றுசேர
அன்புடைமனதைத் தேடும்
அதிலிணைந் தொன்று ஆகும்
**************************

Tuesday, July 17, 2012

அவள் கேட்டாள் !

  (அவள் )
விளைந்து நெல்லு அறுவடைக்குக்
வளைந்து நிற்கையில் - அன்று
விரைந்த வந்த வெள்ளம் சேதம் 
விளைத்த தேனையா
குழந்தை யொன்று பிரசவிக்க
காத்திருக்கையில் - உயிர்
கூட்டைவிட்டு பறந்து போன
கிளியென் றாவதா?

(அவன்‌ )
வளைந்து ஓடும் நதியும் வீட்டுள்
வந்து நுழைவதாய் - தேடி
விளைந்த  துன்பம் களைத்த போது
வென்று போனதாம்
இழந்துபோன கதையென் றல்ல
எடுத்த பாடமாம் - இந்த
சுழன்ற பூமி நிலைமை உண்மை
செயல்கள் புரிந்ததாம்

(அவள் )
தெரிந்து நன்மை என்ன இன்று
தெருவில் நாமையா - இந்த
திரியு மெண்ணெய் இழந்த போலும்
தீய்ந்த தீபமாம்
கரியும் சாம்ப லாகி உடலும்
கலந்த மண்ணிலே - என்ன
சொரியும் மலர்கள்  மீண்டும் பூக்கும்
செடிகள் வளருமா

(அவன்‌ )
நரியு மேய்க்கும் காகம் போன்றும்
நாமும் வாழ்ந்த மாம் - என்றும்
உரிமை ஒன்று உள்ளதென்று
உலகம் ஏற்கவும்
தெரியுமுண்மை தெரிந்தபோதும்
திரைகள் மூடின - அன்று
பெரியதான தவறு செய்ய
விதிகள் கூடின

(அவள் )
சரி என்றான விடையைச் சொல்லப்
பிழையைப் போட்டதே - உலகம்
சரி யென்றாக்க கணக்கை மாற்றிச்
சதியும் செய்வதோ
தெரியவில்லை இருளில்பாதை
தவறலாகுமா - பூமி
திரியும்பாதை விலகின் எங்கள்
தேகம் போகுமே

(அவன்‌ )
கருமைகொண்ட விண்ணில் பாதை
காணா தோடியும் - பூமி
தருமம் என்‌ற பாதை ஒன்று
தவறிப் போனதால் ‌
பெருமை பேசும் உலகில் நீதி
பிழைத்துப்  போ னதோ   இந்த
கருமை கண்டு அருகில் சென்று
கரைந்த ழிந்ததமோ

(அவள் )
கறந்த பாலும் மடியில் செல்ல
கூடுமா அய்யா - எங்கள்
இறந்த சொந்தம் இனியும்வாழ
எழுவது மு ண்டா
சிறந்த தென்ற பொய்யில் உண்மை
சிதைந்ததோ செய்ய - இன்னும்
மறந்த துள்ள சிறிதும் போக்கிச்
மகிழ்வரோ சும்மா

(அவன்‌ )
வருந்தி  என்றும் அழுவதெங்கள்
வழமை தானென்று - நாமும்
இருந்து மண்ணைக் குனிந்து கண்டு
இயல்பு தவறினோம்
பருந்து வந்து குஞ்சைக் கவ்விப்
பறக்கும் போதினில் - இன்றும்
விருந்து கொண்டு எதிரிவீட்டில்
விலைகள் பேசுறோம்

ஓருவ ரென்று நீயும்நானும்
உள்ளபோதிலே - எம்மை
கருவில் கொண்ட தமிழென்தாயை
காத்தல் நியதியே!
புரிந்துகொண்டு பாசத்தோடு
கைகள் சேர்த்திடு - இன்றேல்
சரியென்றாகும் வாழ்வு இன்றிச்
சதிகள் வென்றிடும்

Wednesday, July 11, 2012

விளையாட்டு

        விளையாட்டு

வண்ணக் கலவைகொண்ட மேகம்
வந்தே மறைந்து செல்லும் வெய்யோன்
கண்ணைக் கூசும் ஒளிவெள்ளம்
காற்றில் பறந்து செல்லும் குருவி
விண்ணைக் குனிய வைக்கும் வையம்
விந்தை இவைஇணையும் எல்லை
மண்ணில் மரங்கள் மறைகூட்டம்
மகிழ்வில் இயற்கை விளையாட்டே

பொன்னை உரித்த வண்ண மதியைப்
பின்னால் ஒழித்து வைக்கும் மேகம்
என்னை விடென்று நிலவோடும்
இன்னோர் முகிலும் அதை மோதும்
முன்னே உயர்ந்த பனை மரத்தின்
முகத்துள் மறைந்து விளையாடும்
தன்னை மறந்து பனை ஆடும்
திங்கள் சிரித்து வான் ஓடும்

காலை வரையொளி விண்மீன்கள்
கண்கள் சிமிட்டி விளையாடும்
சோலை மலர்களுடன் வண்டும்
செழித்த பூவின் மணம் கொள்ளும்
மாலைத் தென்றல் மனம்மயக்கும்
மரங்கள் அணைப்பில் கிளுகிளுக்கும்
கோலம் அனைத்தும் விளையாட்டே
கொள்ளும் இயற்கைமகள் குணமே

நீரை உயர்த்திக் கரந் தூக்கி
நிமிர்ந்த கணம் குலைய வீழ்ந்து
பாரைப் பெரிதும் தனதாட்சி
பக்கம் சூழ்ந்து செய்யும் ஆழி
ஊரைப் பார்க்க வரும் ஒருநாள்
உள்ள தனைத்தும் அள்ளி யோடும்
வேரை தறித்த மரம் போலும்
வாழ்வை யழித்து விளையாடும்

தூரக் கனத்த ஒலி உறுமும்
தோன்றும் ஒளி வெடித்து மின்னும்
வாரி யடித்து மழை ஊற்றும்
வந்தே புயலும் அதில்கூடும்
நீரைத் தெளித்து விளயாடும்
நின்றோர் தமைஇழுத்து வீழ்த்தும்
கூரை அழித்து விளையாடிக்
கோலம் கெடுத்த பின்பு போகும்

ஓடித் துரத்தி பிடித்தொருவன்
உள்ளோர் உயிர் பறிக்கும்வேளை
வாடித் துயருறவும் மக்கள்
வருந்தி ஒடும் விளையாட்டு
நாடி நரம்பு களும் அஞ்சி
நடுங்கிப் பதைபதைத்து எங்கும்
தேடித் திரிந் தலைந்து தஞ்சம்
தினமும் காணும் விளையாட்டு!

வேரைத் தமிழ்க் குலத்தின் விழுதை 
வெட்டி யழித்து விளையாட
ஊரைக் கொழுத்தி உயிர்கொல்ல
உடலை நெரித்து புவிகொள்ள
தாரையெனக் குதிக்கும் வெள்ளம்
தரையில் குருதி செல்லும் காட்சி
நேரில் உலகின் விழிகாண
நின்றே இழைக்கும் விளையாட்டோ

ஆவிவிட்டு வெளிஓடும்
ஐயோ என்றலறிச் சாகும்
கூவி அழுத குரல் கேட்கும்
கொல்லும் போது வருமோலம்
நாவில் தமிழ் கதைத்த காலம்
நாட்டைவிடுத்து  உலகோடும்
பாவி இவனும் யமனோடு
பாயும் மறிக்கும் விளையாட்டோ?

அஞ்சலி

கொடுத்தவனே தாவென்று பறிக்கும்போது
கொண்டதெது காயாமோ கனியோ பிஞ்சோ
விடுத்தவனே வேண்டும்போ துடைத்து வீழ்த்த
வேடிக்கை நாமும் என்செய்வோம் கண்டு
தடுத்தவனை நிறுத்தவும் முடியவில்லை
தானாக உயிரையும் பிடித்துக்காக்கும்
கொடுத்ததோர் திறனையும் கொண்டோமல்லோம்
கொண்டவன் கொண்டிடக் குறுகிநிற்போம்

இருட்டோ செல்லும்வழி இல்லை வண்ண
ஒளி நிறைந்த பாதையோ மலர்கள் தூவி
இருத்தி யொரு ரதமோட்டி அழைத்தார்தானோ
இல்லையொரு பல்லக்கில் ஏற்றினாரோ
கருத்தவழி விண்மீன்கள் தொங்கும் பாதை
கனத்தவெடி வானதிர சத்தமிட்டு
பருத்த அனல் சிதறுமோர் பாதைதானோ
பனிகுளிர கூதலும் படர்ந்ததுண்டோ

நிறுத்தியொரு மூச்சிழுத்து விட்டோம் இங்கே
நிருத்தியமோ இல்லை வெறும் நிழலே வாழ்வு
வெறுத்து வரும் காற்றானதுள்ளே செல்லா
விட்டதெனில் அடுத்தகணம் வருவோம் பின்னே
பொறுத்த உடல் பகலிரவாய் இயங்கம்தன்னும்
போய்விடவே துருத்தியினை மூடிவைக்கும்
தறித்தமரம் வீழுவதாய் அந்தக் கணமே
தரணிஉடல் தழுவ உயிர் தனித்ததாகும்

ஒருத்தர் தனும் நிரந்தரமென்றில்லை யம்மா
ஓடிவிளையாடிடும் உதைபந்தாட்டம்
பருத்த களைப்பாகிவிட பாதியாட்டம்
படைத்தவரே குழல் ஊத ஆள்மாறாட்டம்
இருந்தவரோ போகஇன் னொருத்தர்வரவு
இதுவேதான் உலகென்னும் இயற்கை பதிவு
வருத்தமுறும் மனத்தோடு இறைவன் அருளால்
வணங்குகிறேன் அஞ்சலிகள்! அமைதிகாண்க!

முடியிழந்த அரசன்........!

சாந்தம் தவழும் முகத்தொடு அங்கவன்
சாமியாய் வீதியிலே
நீந்தும் பிறவியென் றார்க்கும்கடற்புயல்
நேர்ந்ததை எண்ணி நின்றான்
காந்தமெனும் இருநேர்விழி மூடியோர்
காலத்தின் கோலமெண்ணி
வேந்தனெனக் கொண்டவாழ்வு இழந்திட
வீதியிலே கிடந்தான்

கோலமறிந்தவன் கூடிச் சுவைகொண்ட
கொத்தெனும் மாங்கனிகள்
காலமெனும் இளங்காற்றில் பழுத்த
கனிச்சுவை தான் அறிவான்
பாலமுத மொழி பைந்தமிழில் வீரம்
பேசிய போதி லெல்லாம்
நீலவெளி விண்ணில் நேரெழுந்த கதிர்
நின்றநிலை யறிவான்

ஊதியடித்தது காற்று இரைந்தெழ
ஏனோ இருள்மருவ
காதி லொலித்திட்ட காலின் சலங்கைகள்
கண்ணை மறைத்துவிட
சேதி புகுந்ததும் ஏது? மனங்கோணி
சில்லெனும் கூதலிட
பாதி இழந்த நிலவுவெனக் கண்டனன்
பாரொளி போயிருக்க

மீண்டும் பிறக்கத் துடித்து நின்றான் மன
மின்னலைக் காணவில்லை
கூண்டில் வெளிவரப் பாடுபட்டான் ஏதும்
கொள்ள முடியவில்லை
ஆண்டுபல சென்று போனதினால் மன
ஆற்றல் அழிந்ததுவோ
தோண்டி மனதிடை ஊன்றி வளர் பயிர்
தூய தளிர் வருமோ

சொல்லடி சக்திஉன் தூய ஒளியினால்
சுட்டுக் துயர் பொசுக்கி
வல்லமை தந்தவன் விண்ணின் ஒளிதன்னை
வேண்டும் வரைகொடுத்து
பல்விதமாயும் படர்ந்து உரம்கொண்ட
பச்சை மரம் வளர
நல்லொரு சக்தியை நீ வழங்கு அருள்
நன்மை யடையச்செய்வாய்

**************************

    Reply     Reply to author      Forward  
உண்மைகளாம்

              உண்மைகளாம்

பூக்கலாம் பூவெலாம் புன்னகைக்கலாம்
பூமணம் தென்றலும் பெற்று வீசலாம்
ஆக்கலாம் அழியலாம் அகிலமீதீனில்
அன்பெனும் ஆயுதம் ஏந்தி ஆளலாம்
நோக்கெலாம் மாறினும் நினைவு லாமதி
நெஞ்செனும் வான்வரா நிற்க லாகுமோ
வாக்கெலாம் தேன்சுவை வந்ததாமெனில்
வாழ்க்கையில் வேறெதும்  வண்ணமும் ஏனோ

ஏற்கலாம் தள்ளலாம் எதுவுஞ்செய்யலாம்
இன்பமென் றானதை இழக்க லாகுமோ
ஏற்றலாம் இறங்கலாம் இடிந்துவீழலாம்
இன்மனம் தண்டனை இழைக்கலாகுமோ
தோற்கலாம் வெல்லலாம் தோள்கள் மோதியே
தூயஇன் வேளையில் தூய்மை போகுமோ
போற்றலாம் பாடலில் புதுமை கண்டெவர்
புன்னகை கொண்டுமே புரிந்துகொள்ளலாம்

சாய்க்கலாம் வீழ்த்தலாம் சூறைக் காற்றதும்
சாலையின் ஓரத்துச் சோலை மரமெலாம் !
வாய்க்காலும் வரம்பிலே வாழும் நாணலும்
வந்ததோர் புயலிலே வளைய வீழுமோ
நோய்க்கெலாம் மருந்தென நினைவி லூற்றலாம்
நேர்மையைக் கூறுமக் கூற்று தன்னையே
வாய்மையும் கொண்டிட வாழ்த்திக் கூறலாம்
வந்தெங்கும்  வீசட்டும் வசந்த மாகவே!

திருமண வாழ்த்துக்கள் 2


உயிரோடு உயிர்சேர உறவொன்று காணும்
ஒருவாழ்வின் முதல்நாளிதாம்
பயிர்ஈது ஆயிரங் காலத்துக் கென்றே:
பலர் போற்றும்பெரு வாழ்வுதான்
வெயில் கண்டு மலர்கூட்டம் விரிகின்ற போலும்
விளங்கும்உங் கள்வாழ்க் கையில்
மாயிலாடும் மான்கூட்டம் மகிழ்வாகத் துள்ளும்
மனம் காணும் மகிழ்வொன்றுதான்

எழில்கொண்ட வாழ்விலே இணைகின்ற கைகள்
இறுகட்டும் பிடி அன்பினால்
வழிகண்டு நடைகொள்ளூம் புதுவாழ்வில் எங்கும்
வசந்தமே வீசட்டும் மேல்
வெளிவானில் முகிலோடும் விளையாடுந் தென்றல்
வீசட்டும் அதுவீட்டில், வான்
ஒளிதந்து கதிரவன் எழுகின்ற விடியல்
இதுஎன்றும் புதுவாழ்வுகாண்

ஒருவர் பின் இருவராய் ஒருவாழ்வு கண்டீர்
இருவரும் ஒன்று சேர்ந்தீர்
இருவரும் பின்னொன்று மூவரென்றாகி
இன்பமும் கொண்டு வாழ்வீர்
தருமன்பு குறையாது தரணியில் பொங்கித்
தழைக்தோங்கும் வாழ்வினூடே
பெருகட்டும்சந்ததி பெருமைகள் சேர்த்தே
பிறந்திடும் அன்பு வாழ்வு

எதுவந்த போதிலும் ஒருவரோ டொருவர்
உளளத்தில் கள்ளமின்றி
புது வாழ்வின் இந்நாளைப் போலவேயென்றும்
புன்னகை கொண்டு வாழ்வீர்
விதிவந்து விளையாடும் மனமொன்றி நின்றால்
வென்றிடத் துயரோ டிடும்
பதியோடு சதிசெய்யும் உறவுகள் ஓங்கி
பலநூறு ஆண்டு வாழ்க!

கள்ளி - இவள் என் காதலி


கள்ளுண்டதாய் மதிகெட்டே - அவள்
காதலை ஏற்றுக் களித்தேன்
கொள்ளென்று கூடிக் கிடந்தாள் - அவள்
கொஞ்ச மயங்கிக் கிடந்தேன்
தள்ளென்று தள்ளி விழுத்தி - தரை
தன்னில் படுத்திக் களித்தாள்
அள்ளென்றுஅள்ளி சுவைத்தாள் - எந்தன்
ஆளுமை தன்னை அழித்தாள்

என்னென்று சொல்வேன் அவளை - எனை
என்றுமே கூடிப் பிரியாள்
தன்னையே என்னிடந் தந்தாள் - அல்ல
தன்னிலே என்னைக் கலந்தாள்
பொன்னென்றே ஏதும் விரும்பாள் - நான்
போகும் இடமெங்கும் வந்தாள்
புன்னகை செய்திட்டு நின்றார்  - பலர்
போனபின்போ புறஞ் சொன்னார்

நன் மனையாட்டியின் முன்னே - எனை
நாணமின்றித் தொட்டு நின்றாள்
என்னஇது என்றுகூறி - சதி
என்னை வெறுத்திடச் செய்தாள்
அன்னை யெனும் பாசம் விட்டு -எனை
ஆகத் தனிமை யென்றாக்க
முன்னைபின்னை யெந்தன்மேனி - முற்றும்
மோகக் குறி பதித்திட்டாள்

காதலில் மாபெரும் கள்ளி - எவர்
காணாமல் என்னுள் கலப்பாள்
மோதலென் றேதுமே யில்லை - என்னை
மெல்லென மோகத்தில் கொன்றாள்
போதுமடி என்று சொன்னால் - இல்லை
போதாதென் றேசுகம் கொள்வாள்
சாதல்;வரை வரு வாளோ - உனைச்
சற்றும் விட்டுப்போகே னென்றாள்

காதிலே சொன்னேன் பார் குற்றம் - அந்தக்
காக்கும் கடவுளும் வையும்
ஏதினிப் போதும் விட்டேகு -- என்ன
இல்லை யென்றேஅழு திட்டாள்
பாதியுடல் கொன்று விட்டாள் - இன்னும்
பார்த்துக் கிடக்கின்றாள் என்று
மீதியும் கொல்வா ளறியேன் - என்றன்
மேனி கலந்த நோய் என்பாள்

***********************

தமிழே என் உயிரே!

              தமிழே என் உயிரே!

நிலவென்றேன் காதலும் கொண்டேன் - தமிழ்
நினைவோ யென்மனவான நிலவென்றே னின்றோ
பலமின்றி உயிர்வாடும் வேளை -அவள்
பரிசாக இருள் தந்து பிறையாகித் தேய்ந்தாள்

மலரென்று அவள் பேரைச்சொன்னேன் - என்
மனதோடு கவிசொல்லி மகிழ்வீந்தாய் என்றேன்
இலதென்று துயர் கொண்ட வேளை -  அவள்
இதயத்தின் திரைமூடி ஏனோ கிடந்தாள்

கலையென்று தமிழாசை கொண்டேன்- என்
கரமேந்தும் உளிகாணாச் சிலைநீயே என்றேன்
நிலைகெட்டுத் தடுமாறும் போதில்- அவள்
நினைவேனோ கல்லாகி நிற்பதைக் கண்டேன்

கலைவானிற் தமிழ் தென்றல் என்றேன் -என்னில்
கவியாகி உயரின்பம தருவாய்நீ என்றேன்
உலைந்தாடி உயிர் துஞ்சும் வேளை -அவள்
உள் மூச்சாய் என்னுள்ளே ஒன்றிடா நின்றாள்

எழிலாய் நல்நடைகொண்ட தமிழே என்னில்
எழுந்தாடும் மயிலே என் இளமைதான் என்றேன்
அழிகின்ற நிலை கொள்ளும் வேளை - என்னுள்
அசைந்தாடி மனமேடை அதிர்நடம் செய்தாள்

மழைபோலும் கவியூற்று என்றேன் - கரு
முகில்நீ யென்றே னிடிமின்னல் என்றாள்
விழைந் தூறுந் தமிழ் தேனே என்றேன் - பூவில்
எழுந்தோடுந் தேனீ யாய் எனில்கொட்ட நொந்தேன்

தேடிப் பொருள் கண்டான்


புனையும் கவிதை ஊற்றில்லை - ஒரு
பொருளில் தோற்கின்றான்
வினையும் முனைவில் பிழையென்றே - அவன்
விழியிற் துயர் கண்டான்
தனையும் தொடரும் நிழலின்றிஅவன்
தனியே நிற்கின்றான்
உனையும் இழந்தேன் கதிகொள்ளேன்- என
இடையில் எழுகின்றான்

நினைவுச் சாலையில் நடக்கின்றான் -தன்
நிழலைதேடித்தான்
நனையும் பனியில் கிடக்கின்றான் - குளிர்
நடுவே இரவில்தான்
கனையும் எண்ணக் புரவிகளை - ஓர்
கற்பனை ரதம் பூட்டி
கனவில் ஏறி வலம் வந்தான் - அக்
காற்றில் தேடுகிறான்

வெயிலுமில்லை விரிவானில் - ஒரு
வெறுமை தெரிகிறது
பயிலுமின்பத் தமிழேடு - அது
பனியில் நனைகிறது
துயிலும்விழிகள் இமைமூடா - நீர்த்
துளிகள் உதிர்கிறது
ஒயிலாம் பொங்கும் உணர்வெல்லாம் - ஏன்
உள்ளே ஒழிகிறது

மலர்கள் தீயில் எரிகிறது - அவன்
மனதோ துடிக்கிறது
பலதும் கருகத் தெரிகிறது - அதில்
பயமும் எழுகிறது
நிலமும் நடுங்கி அதிர்கிறது - ஆ..
நீளப் பிரிகிறது
உலகம் முடிவை அணுகிறது - உடல்
உள்ளே விழுகிறது

கலங்கும் இதயம் வெடிக்கும்போல் - ஓர்
கனமும் கொள்கிறது
விலகும்கணமும் வேதனையா -  இலை
விளையும் விதிதானோ
சிலதீப்பொறிகள் சிந்தையெழ மா
சக்தி சக்தி யென்று
நலந் தா என்றே கதறுகிறான் கணம்
நிற்றே உயருகிறான்

கலங்கி உதிர்ந்து சேர்வதுபோல் அவன்
கண்முன் தீவெள்ளம்
இலங்கு மொளியிற் கதிரல்ல  அது
ஏதோ பெரிதொன்று
உலங்கு முயிரில் தெளிவாக ஓர்
உண்மை ஒளிதரவே
வலமும் இடமும் வளைந்தோடும் நிழல்
வளரக் காண்கின்றான்

அயலில் நிற்கும் ஒளிதீபம் அதில்
அழகைப்பெறுகின்றான்
புயலும் தீயும் உருமாறி - மென்
பூவை தொடும் தென்றல்
அலரும் இதழ்கள் தீயொளியில் வெகு
அழகைப் பெறக் கண்டான்
சலனம் இன்றித் தீகுளிரச் - சே
சட்டென விழிக்கின்றான்

அயலில் சத்தம் கேட்கிறது அவன்
அருகில் காண்கின்றான்
வெயிலும் நிழலும் தெரிகிறது - பெரும்
வெளியும் பசும்புல்லும்
கயலும் துள்ளும் நீரோடை - கனி
கொள்ளும் மரங் கண்டான்
வயலும் கூவும் குயிலோசை - ஆ
வாழ்வை அவன் கண்டான்

முயலொன்றோடிப் பசும்புல்லின்- நுனி
மெல்லத் தின்கிறது
மயக்கு மின்ப மலர் தூவும் - பெரு
மரங்கள் சலசலப்பு
தயங்கும் மனதில் தமிழோடிப் - பெருந்
தாகம் எடுக்கிறது
புயங்கள் நீளவிரிகிறது  - கவி
புனையப் பொருள் கண்டான்

காற்றாடி


நிற்குமிந்த நிலையின்று திரும்பிப் பார்க்கிறேன்
நெடிதுயர்ந்த கட்டிடங்கள் நிமிர்ந்து காண்கிறேன்
சற்றுஎட்ட உயர வானில் செல்லும்மேகங்கள்
சுற்றி வட்டமிடுப்போகும் சிறியபறவைகள்:

பொற்கதிர்கள் பொலியவெம்மை போடும்வானிலே
நற்குணத்தி னோடு  காணும் நாளின் ஆதவன்
கற்றறிந்த மாந்தராக காணும் போதிலே
சுற்றுதந்த சிறிய வண்ண பட்டம் காண்கிறேன்

உயர்ந்தவானில் எந்த வேளை எழுந்ததிங்கிதே
தயங்லோடு தலைநிமிர்ந்த தருணம் போனதோ
மயங்கிஆடும் பொழுதிலென்ன கருவம் மீறுதோ
இயங்குகின்ற துள்ளல் ம்ம்ம் இதுவும்வேண்டுமோ

பெரியவானில் எழுந்ததென்ற பெருமைபேசுதோ
உரியதான நிலையைவிட்டு உருண்டுவீழ்குதோ
புரியவில்லை இதுவும்காற்றின் விதியென்றானதோ
சரிவதென்ன அடாடா அந்தோ சாய்ந்துபோனதோ

தெரியாத பாதை

இருள்நடுவே ஒளியறியா இருவிழியும் கருவளையம்
தெருவழியின் திசையறியு மாமோ
குருமனதி லெழும்பதிலைக் கருதிஒருமகன் உரையா
கிரியையவன் மடமையென லாமோ
தருவதனில் கிளையுயரம் தனதுவலு வெனவிளையும்
தனயனுயர் மேகம்தொடு வானோ
மருவி உயரெழுமலையின் அதியுயரம் வியந்தவனை
மறுபுறத்தில் எதுவினவ லாமோ

வரும்புயலின் இருதிசையு மெதிரெனவும் கருமுகிலம்
விளையுமொரு இடிமுழக்கம்ஏனோ
தருமழையும் தரணிவிழும் குளிரெழவும் இடிமுழங்கி
தலையில்விழ அவன்விதியின்பாடோ
மருமமதில் துலங்குதென மரஉயர்வில் பழுத்தகனி
முடவன் பறிதுண்டதென்ற தீர்ப்போ
சருகுவிழச் சரசரக்கும் பெரிதுமொலி நொருநொருங்கும்
சதியெனவே மிதிப்பவனின் கூற்றோ

கொதிஅனலில் விறகையிடக் கூடுமதில் பனியெறிந்து
குறையுதெனில் பனியின்பிழை யாமோ
மதியிழந்த ஒருவனினால் மனமிழந்துவாட ஒரு
மண்ணு மறியா தவனினாலோ
கதியெனவே தெருஇரந்த கையிலோடு கொண்டவனைக்
கரிகொணர்ந்து மாலையிட்டவேளை
விதிவகுத்த தென்றரச கட்டிலிட வெம்பசிக்கு
வீதிவந்து நிற்கும் குணம்தானோ

ஒருபுதிரும் புரியவில்லை என் உழறும் சிறியவனை
உலகபெரும் மாசபையில் வைத்து
திருமொழியும் பொழியெனவே தேர்வுசெயின் அவன்விழியும்
திருதிருவென் றிருக்குமாமே
கருதுவதோ கடமைதனை மறந்தவனென் றுரைப்பதுவோ
உருகிமனம்வேதனையில் நொந்தால்
தருவதற்கு தமிழையன்றி இதுதருணம் எதுவுமில்லை
தமிழினிடம் தந்துவெகுநாளோ

நிலவும் பூவும் சுடரும்


தீதந்த வெம்மையில் சுட்டபொன்னோ -அந்த
.  நீலத்து வான்மதியும் - கதிர்
   தான்தந்த தாலொளி பெற்றதன்றோ அந்த
.  நேரற்ற கூன்நிலவும்
நாதந்தான் கீதமுட னொலிக்க இந்த
   நாட்டில் நிலவெறிக்க - என்றும்
   நாடியொளி கொடுத் தாய்நில வின்முகம்
   நாளும் வளர்ந்து கொள்ள

வா தந்தான் என்றிட வந்ததெல்லாம் நிலா
   வண்ணம் மறந்திடுமோ அது
   வீதி புவிசுற்றிப் போய்வரினும் சுடர்
   வெய்யோனைச் சுற்றுதன்றோ
பூதந்த வாசமும் போய்விடுமோ- எழில்
.  புன்னகை வாசலிலே - தினம்
   போய்வந்த தும்மணம் வீசுதென்றல் -என்றும்
   பூவை மறந்திடுமோ

பேதந்தான் வானிற்பெரும் முகில்கள் வந்து
    போய்வரும் நேரத்திலே.  அந்தோ
    போகின்ற மேகம்மறைத் தென்ன அதில்
    பொன்நிலா பின்எழவே
மாதந்தான் மார்கழி கார்த்திகையோ மயில்
.    மீதுமழை பொழிதோ - ஒரு
    மன்னவன் தேரிடை பூங்கொடியோ - மனம்
    மாறக் கிடந்திடுமோ

தீவந்த திக்கிலே தென்றல்வந்து சிறு
    தேன்மலர் சுட்டதுவோ- கொடுந்
.   தேளுடன் பாம்புகள் தொங்கும் வழி -செல்ல
.   தேசம் கடத்தினரோ
பாவந்தான் விட்டேகும் பாதையிலே
  .  பனி மூடிகிடந்ததென்ன - நடை
.    போகையில் பாதங்கள் நீர்சறுக்கி - நெடும்
.    பள்ளத்தில் வீழ்ந்ததென்ன

தாவத்தான் பற்றினும் ஒர்கிளையை - கரம்.
   தொட்டும் தவறுவதேன் - நல்ல
..  தங்கம் என்றே யதுமின்ன அள்ள - அது
.   தத்தும் தவளைகள் ஏன்
நாவைத்தான் வெட்டி நறுக்கிடலாம் மழை
    நாளில் கத்தும் தவளை-  இல்லை
    நாள்முழுதும் அது கத்தும்  விட்டுவிடு
    நாவே  அதற்கு எல்லை

....................

பொய்யழகுசொல்லெடுத்து கட்டும் வேளை
சேரும்எண்ணம் யாவுமே
மெல்லடுக்கி வைப்பதொன்றும்
மேவுமின்பம் இல்லையாம்
பல்லடுக்கு வைத்துப் செய்யும்
‘பா’சுவைக்கவேண்டிடின்
நல்லதொன்றை நாற்பதென்று
நாவுரைத்துப் போகுமே

வல்ல பத்தை நூறு- என்று
வாயுரைக்க மெய்யிதோ
எல்லை மீறிப் போனதென்று
எண்ணினாலும் நீதியோ
தொல்லை கூடினாலும் செய்தல்
வேண்டுமென்று பொய்யதை
சொல்லு மாயிரம் கவிஞர்
சொல்லி வைத்த துண்மையே

அல்லி காதல்கொண்டதந்த
அம்புலிக்கு என்பதும்
வில்லும் வாளும் கொண்ட வந்தாள்
வேல் விழித்த மாதெனில்
இல்லை ஈதுபொய்யென் றெண்ணி’
எட்டி துப்பிச்  செல்வரோ
எல்லையற்ற இன்பமென்று
ஏடுதூக்கிக் கொள்வரோ

நற்சுவைத்த சோற்றில் போடும்
நாவுறைக்கும் உப்பினை
சற்று தூவிக் கொள்ளும்போது
சாதம்செய் கவி(ஞ்)ஞனை
முற்றுமே உவர்ப்பு என்று
மீண்டும் கீழே தள்ளிடா
சொற்சுவைக்கு சேர்த்த வேகம்
சற்றுகூடும் உண்ணுவீர்

’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’

மாந்தர் துயர் மாறாதா ?

        

பொன்னிழைத்த நீலவண்ணப் பட்டுவான்வி ரிப்பினூடு
போவதெங்கு நீயும் சொல்நி லாவே
முன்னிழைத்த பாவம் மென்ன  மேகமூட்ட மாய் குவிந்து
முற்றும் தங்கள் வாழ்விருண்ட போலும்
தன்னலத் திலாடி இன்பம் தானெனக்கு நீ ஒழிந்து
தொல்லை யின்றி போவென் றங்கே தள்ள
வன்மம்கொள் செய் குற்றமென்ன வாயடைத்து நிற்கவிட்டு
வாழ்வையே பந்தாடும் கோலம் காணீர்

நன்மை செய்வ ரென்று யாரை நம்பலாமோ காணும்உள்ளம்
நீலவான் எடுத்த ஆழம் அன்றோ
சொன்ன சொல் லதும்பிழைக்கும் சுற்றும் காண்ப வைமயக்கும்
சற்றேஆய்ந்து பார்க்க வேண்டு மன்றோ
தென்னைகீ ழிருந்து பாலில் தேன் கலந்து உண்டபோதும்
தீய'கள்' குடித்ததென்று சொல்லும்
தன்மையாம்  மனம்படைத்த தாகும்மாந்தர்‌ கோடிகோடி
தாங்குமிந்த பூமி கண்டு கொள்ளு

சின்னதோர்‌ தமிழ் பயின்று செல்வமும் கொழித்த எங்கள்
சீருடை நல் தேசமொன்றில் இன்றோ
நன்நெறிக் கிணங்க நீதி நல்லவர் தம்மாட்சி ஒன்று
நாளெதில்  கிடைக்குமென்று வாடி
வன்முறைக் குள்ளாகி வாடும் வாழ்வினைப் பெற்றானவர்க்கு
வானமும் வெளிப்பதென்று  கூறு
சென்மமும் எடுத்ததேனோ சீருடல் அழிப்பதேனோ
சிந்தையில் கிடக்கும் கேள்வி நூறு

துன்பமும் துயர் நிறைந்த தோல்விதான் என் றானவாழ்வில்
தூயஉள்ளம் கொண்ட தேச மக்கள்
வன்மையும் கைவாள் பிடிக்க வாயினில் பொய் ரத்த தாகம்
வாய்த்தவர் இருப்பின் வையம் மீது
என்னதான் உரைத்து நீதி எப்படிக் கரங்கள் கொண்டு
ஏங்கியும் இரந்தும் வாழ்வு இன்றி
துன்புறும் நம்சொந்தம் மண்ணில் தூய நல்லுணர்வு கொண்டு
தன்உயிர்கள் காத்து வாழ்வதெப்போ ?

*****************************

Monday, July 9, 2012

வானத்திலே ஏற...

  
(இது  படத்தை கண்டு எழுந்த கவிதை )


காற்றைக்கேட்டேன் ஊற்றைக் கேட்டேன்
கதறிக் கண்கள் வழியத் தென்னங்
கீற்றைக் கேட்டேன் கிளியைக் கேட்டேன்
கிழக்கே தோன்று மொளியைக் கேட்டேன்
ஆற்றைக் கேட்டேன் அலையைக் கேட்டேன்
அன்பென் றெந்தன் வாழ்விற் கொண்ட
பேற்றைப் பெரும்பே றெங்கே என்றே
பித்தங் கொண்டே பேசித் திரிந்தேன்


வானத்தேறிச் சென்றாள்; என்றே
வண்ணப் பூவும் காட்டும், துள்ளும்
மீனைக் கேட்டால் அருகில்வந்தே
மேகம் மீதில் கண்டேனென்னும்
தேனைத் தின்னும் வண்டோ தெற்குத்
திக்கில் என்று வெறியிற் கூறும்
பூனை முன்னால்பாய்ந்தே மண்ணுள்
போனாள் என்று காலால் கீறும்

ஊனைத் தீயில் போட்டோமென்று
உராரெல்லம் சொன்ன ராயின்
நானத் தனையும் நம்பித் தானும்
நங்கை யவளை மறப்பே னாமோ
ஏனென் கண்ணை விட்டே நீயும்
எங்கோ மறைவில் நின்றாயென்றே
மானைப் போலே அச்சம்கொண்டாள்
மங்கைதன்னை தேடித் திரிவேன்

பூநெய் யுண்ணும் வண்டாய் தேடி
போகு மென்னைக் கண்டே ஊரும்
ஆனான் பார்பைத் தியமாய் போனான்
அய்யோ என்று  பின்னாற் பேச
வானில்ஓர்நாள் வந்தாள் நிலவில்
வண்ணம் காட்டி நின்றாள் கண்டேன்
தேனை ஊற்றும் திங்கள் வதனம்
தினமும் வானில்கண்டேன் பின்னால்

ஈனத் தனமென் றன்பில் கொள்ளா
தெழிலாள் அவளைச் சேரச் சென்றேன்
ஏனோ அந்த மரணப் பாறை
என்னை வாவென் றுள்ளம் கொள்ள
நானும் நடையும் கொண்டேன் அங்கே
நாளில் சிலதே மேகம் காணும்
வானத்தழகும் வடிவும் கண்டு
வானில் ஏற எண்ணம் கொண்டேன்

எரியும் கதிரே இவளைக் கண்டால்
எங்கே யென்று கூறாய் என்றேன்
விரியும் வானத் திடையே வெயிலும்
வீழும்நிலையில் கண்டேன் கண்ணில்
தெரியும் மேகக் கூட்டத் தூடே
தூரம் மேலே ஏறிச் சென்றால்
உரிமை யெந்தன் உறவுக் குரியாள்
உள்ளா ளென்று எண்ணும் போது

மரணப்பாறை மீதில் இயற்கை
மடியில் முன்னே வந்தேன் ஆழக்
கரணம் போடும் முகில்கள் கூடக்
கதிரும் வீழக் கடலைக் கண்டேன்
தருணம் தன்னில் ஏதோ எந்தன்
தலையுள் மின்னல் ஒளியின் சிதறல்
முரணாய் எழுமோர் குரலைக் கேட்டேன்
மௌனம்பேசும் மொழியைக் கேட்டேன்

என்னே விந்தை எதிரில் இயற்கை
ஏற்றும் இன்பம் இழையக் கண்டேன்
பொன்னாய் வீசும் கதிரும் மின்னும்
பூவாய் பஞ்சாய் மேகம் விரையும்
அந்நேர் தெரியும் ஆழக்குளியில்
அச்சம் பீதி தோன்றும், உள்ளம்
மின்னல்போலும் மேனி கொள்ள
மெல்லக் கூறும் ஒலியும்கேட்டேன்

அழகும் அச்சம் பிறிதே ஆனால்
அங்கே ஒன்றாய் இணையக் கண்டேன்,
எழிலின்அருமை இயற்கை வெறுமை
இழையக் கண்டேன், இனிமை கொண்டே
இளகும் மனமும் இறுகும்உணர்வும்
இரவும் விடிவும் இறப்பும் பிறப்பும்
அறிவும் தெரியாநிலையும் என்றும்
அனைத்தும் எதிர்கள் இழைதல் கண்டேன்

சுற்றும் புவியின் முட்டும் வானம்
சோதிக் கனலாய் பரிதிவட்டம்
கற்று மறியாக் கதிர்வாழ் அண்டம்
காற்றும் காற்றின்மூச்சாய் உயிரும்
சுற்றம் உற்றார்  கொள்ளும் அன்பும்
செல்லும்போதில் சிந்தை அழுதல்
முற்றும்முழுதாய் எதிராம் முனைகள்
மோதல் இன்றி இணையக் கண்டு

இயற்கை அதுபோல் இவளும்நானும்
இரண்டே, தவறி ஒன்றாய் கண்டேன்
வியப்பே யில்லை இங்கே நானும்
வானத்திடையில் அவளும் நின்றாள்
வையமீதில் வருவோம் போவோம்
வாழ்வில் எல்லாம் வகுத்தாள் சக்தி
இயற்கை அழைப்பால் சென்றாள் நின்றேன்
இன்னோர் நாளில் வருவாள் செல்வேன்

கதிரும் வீழ்ந்தது கறுத்தது வானம்
கனவும் போனது நிஜத்தில் நானும்
உதிரும் இலைகள் பூக்கள்கண்டேன்
உறவும் உதிரும் ஓர்நாள் என்றேன்
புதிரும் விடையும் இரண்டும் கண்டேன்
பூமிப் பந்தின் சுழலு முணர்ந்தேன்
எதிலும் ஏதோ அர்த்தம் உண்டு
இயற்கைப் பின்னல் ! எழுந்தேன், நடந்தேன்

************************

மலர்ந்திடும் வேளை

      

மலர்ந்திடும் இதயம் மனமல ரவிழும்
மறுபடி உதயம் வரும்
கலந்திடும் இருளும் ஒளிபெறக் கமலம்
கதிர்வரப் புன்சிரிக்கும்
நலந்தரு எண்ணம் நடைகொளவிடியும்
நாளொன்று புதிது எழும்
இலதெனும் வெறுமை இருளொடுவிலகும்
இரவியின்சுடர் பரவும்

மரங்களில் பறவை மறுபடி ஒலிக்கும்
மறைந்திடக் கிடந்திடினும்
சுரங்கள் என்றோசை சிறு பெரு கூச்சல்
சேர்ந்திடக் கலகலக்கும்
பரண்களில் காவல் பாடிடஓடும்
பயிரிடை மனம்கொள்ளினும்
அரண்டுவிண்ணோடி முகிலிடைதேடி
அதுமறு படியும் வரும்

அகமெழுமன்பு அமைதியில் காணும்
ஆதவனென ஒளிரும்
முகமதில் ஏனோ முறுவலை நீக்கும்
மொழிபல வெம்மைதரும்
தகுமென இல்லா தவறுகள்கூடி
தலவிதிதனை எழுதும்
தகமைகள் இல்லா தனை தனிகூறின்
தரணியும் அமைதிகொளும்

******************************

மறுபிறப்பு

           

ஒளியேற்றி விழிமீது எழிலூறும் கரம்கொண்டு
உயிரென்று தமிழ் தூக்கினேன்
நெளிந்தோடும் நுதல்மீதில் வழிகின்ற ரத்ததில்
நனைந் தெந்தன் விரல்காண்கிறேன்
களிகூடித் தமிழோடு கதைபேசி விளையாடும்
கவிகொண்டு அதை நாடினேன்
பொழிகின்ற மழையாக அழுதேங்கித் துடிக்கின்ற
பெருங் கூட்டமதைக் காண்கிறேன்

மலிவென்று தமிழ்பேசி மகிழ்வோடு கவிகூறி
மலரென்று கவி பாடினேன்
பலிகொண்டு உயிர்போக பாவங்கள் பொலிந்தாடும்
பயங்கரம் கண்டேங்கினேன்
வலிகொண்டு வரும் ஏதும்  வழிஉண்டோ உயிர்தப்ப
வாயற்ற குரல் கேட்கிறேன்
எலிகொண்ட திணறல்கள் அறியாமல் விளையாடும்
ஒருபூனை போலாகினேன்

இனிப்போதும் எழுந்தோடு இடர் கொண்ட தமிழ்பாடு
எனும் ஓசைவான் கேட்கிறேன்
தனியாக இருந்தேனும் தவழ்கின்ற காற்றோடு
தா உந்தன் தமிழ் என்பதாய்
புனிதத்தின் புயலாக பொதுவீரம் கொண்டேகும்
புதுவேகம் எழக் காண்கிறேன்
மனிதத்தின் மரணத்தை தரும்பேய்கள்: செயல்கூற
மழைவெள்ளமாய் பொங்குவேன்

உயிர்போக அழகென்ற உணர்வோங்கக் கவிபாடும்
அவனின்று உயிர்சாகிறான்
கயிறொன்று கழுத்தோடு உடன்காணச் சங்கீதக்
கலைபோற்றும் மகன் தேய்கிறான்
பயிர்போலும் விளைவாகும் பாலர்கள் கொலைசெய்யும்
பச்சைகள் இவன்பாடுவான்
வயிரத்தின் தன்மைக்கு வழிகொள்ளும் செயல்செய்த
வலிதோரை மனம்போற்றினேன்
*************************

பரம்பொருளே ! வரம்தா !


திங்கள் முடிசூடும் உந்தன்தலைமீது
தங்க எழில் கங்கை வைத்தவா
சங்கும் மழுஏந்தும் உந்தன் கரங்கொண்டு
சொந்தமென் துன்பம் நீக்கிடு
மங்கும் வாழ்வழிய முன்னர் நலங்கூட்டு
மங்கை தனில்பாதி தந்தவா
செங்கண்ணாற் சிரித்துத் தேவர்பகை தீய்த்த
செய்கைபோல் துயரும் தீய்த்திடு

தங்கும் வடபூமி தாழக் குறுமுனியை
தன்னந்தனி தெற்கில் வைத்தவா
கங்கை எழுந்தோடக் காகம் வடிவாக
கண்ட ஐங்கரனின் தந்தையாய்
பங்கமாம் மனதில் பாவநிலை தாழ்ந்து
பொங்குமன்பு உயர்வாக்கிட
சங்கின் வெண்மை உளம் எங்கும் கொள்ள அனல்
செய்து என்பாவம் சுட்டிடு

எங்கும் தமிழ்காக்க, வென்றே உயர்வாக்க
எண்ணி ஆறுமலர் தொட்டிலாய்
பொங்கும் அழகோடு கந்தரூபன் உரு
பங்கு சேர்த்து லகுக்கீந்தவா
தொங்கும் சடைமாதின் தூயமலர் வாசம்
தங்கும்செயல் கூறி தீய்த்தவா
எங்கும் உனதுபெருஞ் சந்தநடம்காண
இன்பமெழும் பாவம் கொண்டிடு

மங்கும் ஒளிபோயும் மாலைஇருள்சூழும்
மந்தம்போற் துன்பம் போக்கவே
தங்க ஒளிவீசும் திங்கள் வளர் என்று
தந்து வரம் காத்த தூயவா
இங்கும் வரமீந்து இயற்கை யோடன்பு
எட்ட வழிசெய்யா நிற்பதேன்
பங்கு சரிபாதி மங்கை கொளமீதி
பாதி பலம் கொண்டதால் ஈதா?

*************************

மன மேடையில் விதி எனும் புயல்

தட்டத் தடதட தட்டத் தடதட
தட்டத் தடதட தா
தட்டும் கைகளைக் தட்டிக் குமுறின
தலைமேல் மேகங்கள்
கொட்டும் துளிவிழ கூரையில் மழையோ
கூட்டும் இசைராகம்
டட்டொட் டகுடகு  டட்டொட் டகுடகு
டட்டொட் டகுவென்ன

அண்ட வெளிக்கொரு அழகியமங்கை
அகிலம் மணமகளாள்
மண்டல அழகன் ஆதவன் கூடும்
மணநாள் இதுவென்றே
கொண்டலை வீசும் கடலின் அலைகள்
காலை ஒளிமின்னும்
கண்கவர் நகையாம் பொன்னும் வெள்ளி
கைமெய் மேலணிந்து

வெண்பனி ஆடை உடுத்தும் காலை
விடியல் வேளைதனில்
தண்மனதோடு தலைவன் கரங்கள்
தழுவும் நிலைகாண
கொண்டவன் தாரும் கூறைச்சேலை
கூடும் ஒளிவெள்ளம்
பூண்டவள் கொள்ளும் புதிதோர்வாழ்வை
பொறுத்தே காத்திருக்க

தட்டியடிக்கும் இடியின்சத்தம்
தரிகிட தடமேளம்
கொட்டிட வானத் திடையேகாணும்
கூசுமொளி மின்னல்
பட்டு மினுங்கப் படம் செய்தாரோ,
பாரும் எழில் கொள்ள
நட்டநடுநிசி: பெய்யும் மழையில்
நங்கை குளித்திருந்தாள்

சட்டமியற்றும் விதியின் எண்ணம்
சார்ந்தே இருப்பதில்லை
விட்டது தொட்டது வினையாய் மாற்றும்
விதியின் விளையாட்டு
கொட்டிய மழையும் கூதல் காற்றும்
குடுகுடு மேளமதும்
சட்டெனமாறிச் சினமும்கோபச்
செயலெனக் கண்டிடவே

பட்டுப் படர்ந்திடு காற்றும் கதியெழப்
பாய்ந்து சிதைத்தனவோ
தொட்டுக் கைபடத் தோன்றும் எதையும்
தூக்கி அடித்திருக்க
வெட்டும் மின்னலில் தூவிடும் மழையோ
வெள்ளி கம்பிகளாய்
விட்டேஇடைவெளி வீழ்ந்திடப் சிதறும்
வெள்ளிச் சிலம்புகளாய்

நட்ட மரங்கள் நாட்டிய மாடுது
நனையும் ஆடுகளாய்
ஒட்டியிருந்தன உயரக் கிளையினில்
ஓரிரு குருவிகளும்
வட்டமடித்தது வானெனும் அசுரன்
வாயல் ஊதும் புயல்
கட்டிய மாலை பூக்கள் பொட்டு
கரைத்தே வழிந்தோட

கட்டுக் கடங்கா தென்னை மரங்கள்
காற்றில் பெரிதாட
சுட்டுபொசுங்குது மின்னல் ஒர்பனை
சட்டென தலைபொசுங்க
நெட்டிமுறித்தொரு பேய்களின் அரசன்
நிலமக ளுடனான
முட்டப் பெரும்பகை கொண்டதுபோலே
முடிவில் எழில் சிதைய

ஒட்டமுறிந்த மரங்களின் கிளைகள்
உதிர்ந்த கைவளையல்
தொட்டே யிழுத்த வெள்ளம் ஊரில்
துகிலின் அலங்கோலம்
மெட்டி கழன்றது மெல்லிடைகாலால்
மின்னிடும் நீர்தேக்கம்
தொட்டவன் செயலால் உதிருது மரங்கள்
துயரக் கண்ணீராம்

*******************

பாப்பா ஓடிவா !சின்னப்பாப்பா ஓடிவா! சித்திரமே ஆடிவா
கன்னம்மீது  நீரோடக் காரணந்தான் ஏனம்மா
புன்னகைத்த கண்களும் பூவிரியும் பொன்முகம்
இன்னும்சோகம் கொள்ளுதே ஏனழுதாய் சொல்லம்மா

அத்தை உன்னைப் போடிஎன் றாத்திரத்தில் வைதாரோ
சத்தமின்றிக் குட்டியும் சஞ்சலத்தைத் தந்தாரோ
நித்தம் போலுன் அண்ணனும்  நின்னைக் கேலி செய்தாரோ
எத்தகையோர் காயத்தை உந்தன்உள்ளம் கொண்டதோ

கத்திச் சத்தம் போட்டதால் கையில் கிள்ளிஅம்மாவும்
பொத்துவாயை என்றேதான் புன்னகைத்துச் சொன்னாரோ
நித்திரைதான் வந்ததோ நேரம் ஓடிப்போனதோ
புத்தியின்றி உற்றவர் பூவை காணா நின்றாரோ

நெற்றிமீது முத்துக்கள் நேர்ந்த தென்னகாரணம்
சுற்றி ஓடி வந்ததால் சூரியனும் சுட்டதோ
பற்றுக்கொண்டேன் அப்பாவும் பக்கம்வந்தார் நீரினை
அற்ற விழி கொண்டொரு அன்பு வார்த்தை பேசிடு

 அம்மா பெற்றசெல்லமே ஆடிவரும் பொன்னிலா
 வெம்பி அழும் வேதனை வேண்டாமடி விட்டுடு
 தம்பியுடன் தோட்டத்தில் தாவும்முயல் குட்டிகள்
 தும்பி பூச்சி ஒணானும் துள்ளும்பூனை பார்போம்வா

*****************************

சாந்தி! சாந்தி!

        

செந்தமிழ்க விந்தமொழி சீருட னெழுந்ததமிழ்
சொன்னமுறை மைகள் தவறி
வந்துகறை கொண்டவித மென்றவகை யாமிதெனில்
வந்துகளை சக்திதேவி
தந்தமொழி யோநினது  சந்தமது கொண்டதன்றி
எந்தன் வகையொன்று மிலைகாண்
மந்தமிள மாருதமென் றெண்ணி எழும் தென்றலிடை
இந்த விதமென்ற பகையென்

நந்தவன மாமலர்சு கந்தமது வானமு
மெழுந்ததென எண்ணிமலர
வந்த விளை தென்றலும்ப டர்ந்த பொழு தெங்கணும்
விளைந்த விதம்வேறு மருவி
இந்தவொரு மாசபை கொளும் விதிகள் தானுமுறை
கொன்றதெனும் சேதிபரவ
சந்தனமும் பூசி ஒருமந்தைபிரித் தாடுமுடி
வென்ற பலிபீடம் அணுக

வந்துகணம் சூலமுமென் நெஞ்சிலிடு நீதி
யழிந்தஇடம் மேவிநிரவி
செந்நிறமென் நீர்கழுவி குந்தக மழிந்துகறை
கொண்டஇடம் தூய்மைபரவி
தந்துவிடு நீமொழியென் றந்தகனை காரிருளில்
சந்த மொளிர்பாதைகாட்டி
வந்துஇரு என் றெனது வாழ்வில்  கலையீந்தவளே
வண்ணஒளி மாற்றிவிடுநீ

சுந்தரமும் சோதிபிர பஞ்சமதில் தீஎனவும்
சுற்றிவரும் சக்திதேவி
மந்திர வினோதமொழி மாயவலை கொண்டெனையே
மாற்றியவள் நீயேசொலடி
மந்தமுடை கொண்டமன தெண்ணமதில் தூசிதனை
இன்றுதுடை இன்னும் கருதி
வந்துசுகம் தந்தவளே வாழவிடு என்னை நின
தென்ற நினைவோடுஅணுகி !

சொந்தநிலை யேதுமிகை யென்றவகை தீர்வுதனை
தந்திடடி சாந்தி சாந்தி
சந்(தி)ரனென நான்தினம்வ ளர்ந்த பிறையாகி
வளம் குன்றுவதும் மீண்டும் நிறுத்தி
அந்தவொரு நாளில்சு தந்திரமென் றானகவி
கொண்டபொருள் நீங்கவிளைத்தாய்
இந்ததின மேதுஇனி ஒன்றுதவி றென்னில் எது
வென்று மன  தோடு பகர்வாய்!

Sunday, July 8, 2012

பறந்து பார்

பற பற  கவிதையின் சிறகுகள் விரி விரி
பரந்திடும் பெருவெளியில்
துறதுற  கயிறுகள் இறுகிடும்வலி இது
பெரிதெனத் தெரியுதெனில்
நறநற வெனப் பல நெரிந்திடும் ஒலிகள்பல்
லிடை யிருந்தெழு மொலியில்
குறைகுறைப் பிரசவம்  நிகழுவ துயிரிடை
கொளும் வலி சிறிதல்லவே

விரைவிரை எழுந்துடு விரிவிழி தெரிந்திடும்
வியன்தரு வெளிவானில்
நுரைநுரை எனப்பல நகர்ந்திடும் முகிலிடை
நிறைந்திடு சுதந்திரமும்
வரைவரை எதுவுமே இலதொரு பெருவெளி
விடிவுடன் கிழக்கிடையே
கரைகரை யிலப்பெரு கனவுகள் தருகதிர்
கவிதையென் றெழுகையிலே

விரி விரிமலர்களை வடிவினில்பல நிற
வழிமது இதழ் நெகிழ்வே
புரிபுரி உணர்வெனும் பெரிதொரு அரங்கமும்
புதிதென நடமிடவே
சரிசரி எனதுன திளமன மதுசொலும்
சகலதும் கவிதைகளே
எரிஎரி இறுகிடும் இழைகளும்  கரங்களில்
இருந்தெரிந் திடநீறே

தெரி தெரி, வரிவரி எனவரிந்திடவலி
துன துயிர்படுந் துயரே
சிரி சிரி பெரிதென உரிகரி இரவெனும்
சிறுமையும் விலகிடவே
அரிதரி தெனஅறி அவள்தரும் தமிழ்பெரி
ததைநினை உயர்வெனவே
வெறிவெறி எனவெழு உணர்வுகள் தனைவடி
உயர்தரு கலைஎனவே!

*****************

நான் ஆடும் ஆட்டம்

            

தில்லையிலாடும் திருபரனே  எந்தன்
தேகமு மாடுதய்யா
எல்லை வரையின்றி ஆடுதய்யா அது
என்சுகம் கொல்லுதையா
தொல்லையென யானும் கோடிமுறை காதில்
தேவை உரைத்துவிட்டேன்
வல்லவரைக் காக்கும் சொல்லுனது என்னை
வந்தருள் செய்திடாதா?

அள்ளும் வரை இன்பம் உள்ளதென்று இந்த
ஆடும் உலகினிலே
உள்ளம்கழித்திடக் காணுகிறார் அதில்
உள்ளதுன் பார்வை யையா
கள்ளமில்லாத உன் பிள்ளையிவன் மேனி
காணுந் துயர் பெருத்து
துள்ளுவதேன் உந்தன் சுந்தரமென் நடம்
சொல்லித் தருமெண்ணமா

நள்ளிரவு பகல் பேதமின்றி எந்த
நாளும் கருக்கலிலும்
தெள்ளென வானம் இருக்கையிலும் அந்த
திக்கில் ஒளிஎழவும்
வெள்ளமிடும் மழைதூறலிலும் மஞ்சள்
வெய்யில் எரிக்கையிலும்
அள்ளி வழங்கிடும் உன்னருளால் தினம்
ஆடிக்களித்து நின்றேன்

எத்தனை இன்பம் இப்பூமியிலே இந்தப்
பக்தனை அன்புடனே
தத்தத் தரிகிட தோம் எனவே ஒரு
தாளமும் மேடையின்றி
வித்தைஒன்று இவன் மேனியிலே உள்ளே
வைத்தெழில் கோலம் செய்தாய்
உத்தரித்தும் தினம் நின்னை தொழுதிவன்
உத்தமன் ஆடுகிறேன்

பூமி அதிர்ந்திட வில்லை ஐயா எந்தன்
பொன்னுடல் ஆடுதய்யா
வா,மினுங்கும் உந்தன் மேனிவண்ணம்  தன்னும்
வாய்த்திடல் பொய்த்திடினும்
நீமிதித்தே சுழன்றாடி நின்றால் இங்கு
நிற்கும் புவி நடுங்கும்
சாமி எனைமட்டும் ஆடவைத்தாய்

************

Saturday, July 7, 2012

காப்பாள் சக்தி

பக்திக்கரம் பொத்திப் பரிவொடு
பக்கமிவன் சத்தம் இடஉனை
மிக்கபெரி தென்னக் குரலொடு
வரம் கேட்டேன்

சித்தம் இழ அஞ்சித் திகிலுற
சத்தம் இடு கத்திக் கதறென
நித்தங் கொடும் பக்தன் இவனுயிர்
துடியென்றாய்

வற்றும்குளம் வெப்பக் கனலிடை
நிற்கும் புனல் அற்றுக் கமலமும்
சுற்றிச் சுடுங் கற்றைச் கதிர் பட
வாடல்போல்

வெட்டை வெளி கொட்டும் மழைபுயல்
பட்டுத் தெறி மின்னல் இடையிவன்
மொட்டைத் தலை விட்டுக் காலணி
நில்லென்றாய்

பெட்டைக் குயில் வட்டச் சுனையிடை
குட்டை மரம் கொட்டும் மலர்விழ
பட்டுத் துணி பக்கம் துணையுடன்
பழம் உண்டு

சுட்டும் மொளிர் வட்டப் பொன்மதி
எட்டும் இசை தொட்டுத் தென்றலில்
கிட்டும் சுகம் மட்டும் கொடுஎன
வரம்கேட்டேன்

பட்டுத் துடி அட்டத் திசையிலும்
வெட்டிக் கிழி துட்டன் குலமதை
சட்டம் இலை குற்றம் இவரென
விதிகூறி

தட்டிக் கிழி ஒட்டத் தொலையிவர்
மட்டும் இலை சுற்றும் முழுதெனக்
கொட்டிட்டிரு கைகள் சத்தமும்
செய்தாரை

வைத்துப் பெருவஞ்சம் செய்தவர்
புத்திக்குள் என்‌ வைத்துப் பிழைபட
வெட்டிக் களி தட்டி சிதறடி
என்றாயோ

முற்றும் ஒளிர் கற்றைச் சுடுமனல்
மற்றும் வெடி கொள்ளப் பெருவெளி
சற்றும் பிறழ் வில்லை யென உருள்
பிரபஞ்சம்

கட்டிப் பெரு யந்ரக் கதியுடன்
தொட்டுகட கட்டக் கடவென
பட்டுத் துகளென்னச் சிதறிடா
தோர் சக்தி

தெட்டத் தெளி வுற்றுத் தேவியை
மட்டும் நினை ந்துன்னை தொழுதிட
கட்டி சுழல் கொள்ளும் சக்தியே
காவாயோ

மாலைநேரக் கடற்கரை

  

அலைகள் ஆடி நடனமாடும் அழகு காண வாரீர்
 அமைதியான கடலின்தூரம் அதுவும் காண வாரீர்
கலைந்து ஓடும் திரைகள் வந்து கரையில் புரளக் காணீர்
  கால்கள்மீது குளிர உள்ளம் கனமிழக்கக் காணீர்
வலைகள் போட்டு வருத்திநீரை வாரிஅள்ளி மீனை
  வாழ்வுக்காகத் துடிதுடிக்க வஞ்சம் செய்யக் காணீர்
மலைகளாக எழுந்து ஆடும் அலைகள்  வீழ்ந்து மனிதன்
  மதியிழந்து ஆடுமாட்டம் முடிவைக் கூறக் காணீர்

கடலைவிற்கும் சிறுவ னென்ன கடவுள் ஆகுமாமோ
  கரைபுரண்ட அலைகள் கொண்ட கடலை விற்பனாமோ
உடலை நீவும் காற்று என்ன உரிமை கண்டதாமோ
  உள்ளம் மீது உணர்வு என்ன ஓடும் அலைகள்தாமோ
விடலை என்ன வளைந்து காணும் படகு மறைவில் இன்பம்
 விலை என்றாக வனிதை உள்ளம் விற்று வாங்கினானோ
சுடலைஞானம் வந்துகாணத் தொலைவில் நின்ற ஒருவர்
  சுற்றிப் பொங்கும் அலைகள் பீதி மரணம் எண்ணினாரோ

சிறுவர் கூட்டம் ஓடிச் சிரித்து செய்வ தென்ன காணீர்
 சிப்பி சேர்த்து மணலை வாரிச் சிறிய வீடுகட்ட
குறும்பினோடு அதை யழித்துக் கொண் டொருவன் ஓட
 கூச்சல் போட்டு கீழ் விழுந்து கதறும் பெண்ணைக் காணீர்
வறுமைமீறி இரந்து வாழும் வகையில் ஒருவன் நிற்க
 வசதி கொண்ட ஒருவன் இழிய வார்த்தை கூறக்காணீர்
திறமையோடு சுண்டல் விற்றுத் திரியும் சிறுவன் பாராய்
 தொழிலே வாழ்வுக் கழகுஎன்று சொல்லும் வார்த்தை காணீர்

பொறுமையோடு  பதிலைக் கூறும் பொருளும் கேட்ட மனிதன்
 பிறிதே யல்ல எனதுவேலை பிழைப்பு ஈதென் றியம்ப
 உறுதி விட்டு அலைகளான தோடிவந்து கரையில்
  ஓசையிட்டு சிரிசிரித்து உருண்டு போகக் காணீர்
விறுவிறென்று வீழும்கதிரும் வெள்ளிஅலைகள்மீது
  வியக்கு வண்ணம் சிவப்பு மஞ்சள் வியந்தவாறு பூச
மறுமை கொண்டு உதயமாகும் மகிழ்வில் நாளைஎண்ணி
  மறையும் கதிரின்  அழகைக் காண மலரும் உள்ளம்வாரீர்

************************

என் மனத் தீதே! எழுந்தோடு!!

     

கலையும் விலையும் இலதாம் பெரிதோர்
நிலையும் அறிவாய் நீயே
தலையும்  பிறழக் கலையும் நிலையோ
உலையும் மனதின் சிதைவே
சிலையும் பொழியும் கலைஞன் உளியோ
கலையும் சொல்லும் அழகே
கொலையும் செய்வோன் கையில் காணில்
புலையும் கீறும் பொருளே

எதையும் நானே எனதென் றெண்ணச்
சிதையும் இதயக் கருவே
புதையும் இன்பம் சதையும்பெறுமாம்
வதையும் வலியும் நிதமே
விதையும் ஊன்றும் வகையாய் அன்பாம்
அதையும் ஊன்றிக் கொள்மின்
கதையும் வேறே விதமாம்  பெரிதோர்
புதையல் பெறுதற் கிணையே

மதமும் நானென் விதமும் எண்ணின்
சதமும் பெருமை இலதே
இதமும் பரிவும் இல்லா உள்ளம்
நிதமும் காணும் அழிவே
மிதமும் கர்வம் மிகினும் உன்னை
வதமும் செய்யும் இறையே
உதவும் கருணை இறைவன் பதமும்
தொழுநீ இன்பம் வருமே

நகையும் இழிவை செய்யும் வகையில்
பகையும் கண்டே வாழ்ந்தால்
மிகையும் துன்பம் கொள்ளும் வகையில்
புகையும் தீயும் மனமே
குகையில் மிருகம் போலும் வன்மை,
முகையிற் கருகும் மலரே
தகைமை பெருமை பெறுமே அன்பை
சிகையில் முடியாய் கொளவே
*************************

சின்னவனோ ?பிள்ளையார் வாகனன் பேசரும் வல்லவன்
பேருலகெங்கணும் வாழ்மனங்களை
கொள்ளையும் கொண்டவன் துள்ளியே ஓடுவன்
கோவிலில் சாமியாய் கண்டவன், நிறம்
வெள்ளையும் ஆனவன் வேறுகார்வண்ணமும்
வாய்த்தவன் வெட்டிவிஞ் ஞானபாடத்தில்
பள்ளியில் பாடமும் கொள்ளவாழ் வீந்தவன்
பக்கமும் வந்திடப் பூனையில் மணி

கொல்லெனச் சத்தமும் கொண்டிடக் கட்டவே
கூடியும்பேசி எண்ணம் கையைவிட்டவன்
மெல்லிசை கேட்டதில் மெய்மறந் தற்றைநாள்
மானிடன் பின்னலைந் தூரைவிட்டவன்
கல்லெனும் நெஞ்சையும் கண்டிடப் பஞ்செனக்
காப்பவன் சின்னவர்மென் மனங்களோ
தொல்லிடம் காட்டுமோர் பெட்டியில் ’மிக்கி’யாய்
தோன்றிடச் சித்திரப் பேச்சிழைப்பவன்

கண்ணிவைத் தன்னவர் கொல்பொறி வைத்திடக்
கொள்ளவும் தன் உயிர் கூட ஈந்தவன்
மண்ணிலே சின்னவன் மனதிலே நல்லவன்
மாளிகை குடிசைகள் பேதமற்றவன்
எண்ணிலே பெரியவன் இதயமும் கொண்டவன்
எட்டி யார் பிடிப்பினும் எகிறிஓடுவன்
கண்ணிலே வெறுமையைக் காட்டுவர் ஆயினும்
காலமாய் வாழும் மார்க் கண்டனாம் இவன்

எதிர்காலம்


குருவியாக சிறகடித்து காற்றின் மீதெழுந்து நானும்
குவலயத்தின் மேல் பறக்க வேண்டும்
அருவியாக மாறவேண்டும் அலைகள் பொங்கி ஆடஅங்கு
அணைக ளின்றிப் பாயு  மின்பம் வேண்டும்
வரும் மனத்தின் உணர்வு எந்தன் வாய்மொழிக்கு ஊறு அற்ற
வகையிலான வாழ்வு கொள்ளவேண்டும்
பருகவென்று தமிழினோடு பால்நிலாவில் உண்ணும் சாற்றில்
பாகுவெல்லம் தேன்கலக்க வேண்டும்

வரிசையென்ன முதலிலில்லை கடையில்நிற்கும் போதுமந்த
வாழ்வில் துன்பமற்ற வேளை வேண்டும்
பெரியதென்ற பயம், எதற்கும் பிணியதென்ற பிறவியற்று
பிள்ளையென்று வாழும் வாழ்க்கை வேண்டும்
கருமையோடு பொய்மை தன்னும் கலந்துசொல் சுதந்திரத்தில்
கயவனல்ல கவிஞனாக வேண்டும்,
உரிமையோடு ஏறிவான மோடும் உள்ளம் வேண்டும்நானும்
இறைவனாகக் கவிபடைக்க வேண்டும்

அருமையாக நடனமாடு மழகுதோகை வடிவுகொண்டு
ஆட வேண்டு மென்று மாட வேண்டும்
கருமைவண்ணக் காகமொன்று கரையுமோசை வேண்டுமங்கு
கருங் குயில் கள்கானம் சொல்ல வேண்டும்
எருமையொன்று நடுவில்நின்று எனைமுறைத்துப்பார்க்க அங்கு
எழுந்து ஓடும் குறுகுறுப்பு வேண்டும்
ஒருமை என்று எதுவும்இல்லை உறவுவேண்டும் இயற்கைதன்னின்
ஒன்றிக் காதல் கொள்ளும் இன்பம் வேண்டும்

கருகும்வெப்பம் வேண்டும் காற்றின் குளிர்மைதன்னும் வேண்டும்நல்ல
காட்டுமலர்கள் பூத்துப் பொலியவேண்டும்
முருகு மேன்மை தமிழின் மூச்சு முழுதிருக்க வேண்டும் வாழ்வின்
முடிவு தானும் தமிழ் மணக்கக் காணும்
திருகுதாளம் வேண்டும் கண்கள் தெரியும் பாதைமீது வண்ணத்
தூரிகை கொண்டழகு ஓவியங்கள்
வரம்பு தன்னும் மீறும் இளமை வடிவுகொண்ட மேனிவண்ணம்
வந்து  இன்பம் என்று ஆக வேண்டும்

Monday, July 2, 2012

பெண்ணே உன்னை நீ மறந்தாய்


விண்வெளி யாம்பிர பஞ்சமெனும்ஒரு
விந்தைதனைப் படைத்து
துண்டெனச் சூரியக்குஞ்சுகள் செய்ததை
திக்கெங்குமே விதைத்து
வண்ண மென்தூரிகை கொண்டொரு மஞ்சளும்
வார்த்தே சிவந்தநிறம்
கண்ணைக் கவர்எழில் நீலமும் வெள்ளையும்
கற்பனைக்கோலமிட்டு

ஓடி உருண்டிடும் இராட்சதகோளமும்
உருண்டிடும்  பந்துகளும்
ஆடி அதிர்ந்திட அண்டசராசரம்
அத்தனையும் அமைத்து
கூடிஒன்றாகிடக்  குமுறுமோர் தீயெனும்
கோடி அனல்குழம்பும்
தேடியிழுத்திடும் காந்தமென்னலையினில்
சிக்கா துருள வைக்கும்

எண்ணவும் எட்டாத  விண் படைத்தவ்விடம்
வைத்ததும் யாரவரோ?
கண்களும் காணாத சக்தியின் ஆக்கமாம்
காரணிதான் இதுவோ?
மண்ணை யுமாக்கியே மானிடம் செய்தது
மாபெரும் சக்தியெனில்
பெண்ணெனக் கண்டிடும் தோற்றமும் பூமியில்
பெற்றதும் சக்தியதோ!

சக்தியே தோற்றமாம் சக்தியே மாற்றமாம்
சக்தியே நம்முருவம்
சக்தியே ஏற்றமும் சக்தியேவீழ்ச்சியும்
சக்தியேஎம் உலகம்
சக்தியின்உருவமே பெற்றவ ளன்னையாம்
அத்தனை உயிர்களுக்கும்
வித்தெனஆக்கியே விளைந்திட வைத்திந்த
வையக வாழ்வளித்தாள்.


2. பெண்வதை
உயிரைத்தந்தாள் உடலைத்தந்தாள்
உலகைக் காட்டிவிட்டாள்
பெயரைத் தந்தாள் பிறப்பைத் தந்தாள்
பெண்ணென அன்புதந்தாள்
வயிற்றுக்காக உணவும் தந்தாள்
வைரம்கொள்ள வைத்தாள்
உயிரைத் தந்தவள் உடலை வதைத்து
உலகம் சிரிப்பதுஏன்?

சக்தியின் கூறாம் பெண்ணவள் இன்று
சஞ்சலம் கொள்ளுவதேன்
சக்திகள் எல்லாம் சக்தியேஇன்றிச்
செத்து மடிந்திடல் ஏன்
எக்கதியாகும் இப்புவி மாந்தர்
இவளொரு தாயின்றேல்
நிர்க்கதியாய்ஒரு வெற்றிடக் கோளம்
நின்றே சுழலுமன்றோ

பெண்ணே உந்தன் பேரரும்சக்தி
பிறப்பில் இருக்குதம்மா
மண்ணில் இந்த மாபெரும் உண்மை
மறைந்து கிடக்குதம்மா
உன்னை நீயே உணர்ந்து வெகுண்டால்
உலகம்மட்டுமல்ல
விண்ணும்வானும் வியன்தரு அண்டம்
வெடித்துச் சிதறாதோ

அண்ட மனைத்தும் ஆளுவள் சக்தி
அன்னையின் உருவன்றோ
மண்ணில் மானிடம் செய்திடவென்றே
மாதரை வடிவாக்கி
எண்ணிய நல்லோர் இயற்கைவடிவில்
ஈன்றிடும் சக்திதனை
பெண்ணில்உள்ளேவைத்து பேறாய்
பெரிதும் உவந்தளித்தாள்

பெண்ணேயின்றில் பேருலகில்லை
பிறவிகள் ஏதுமில்லை
பெண்ணேயின்றேல் பேச்சும் மூச்சும்
பிழைப்பும் இங்கில்லை
பெண்ணேயின்றில் ஆணும் இல்லை
பெண்ணே அவள்இல்லை
பெண்ணே இன்றில் எதுவுமில்லை
பெரிதோர் காரணியாம்

மாபெரும் சிங்கம்புலியை யானை
மதமெடு விலங்குகளை
யாவரும் காணக் காட்சிநடத்தும்
கட்டிப் போட்டதென
பாவையர் தம்மைபாவிகள் கட்டிப்
பாதகம்செய்வதுண்டு
பூவையர் சக்திபுரிந்து எழுந்தால்
புவியோ தாங்காது

3. சக்தியை வேண்டு!

பெண்ணே உன்னைப் புரிவாய் உன்னில்
பெரிதோர் சக்தியுண்டு
மண்ணில் வெல்லும் மனதும் வல்லமை
மறமும் தீரமுண்டு
உண்மை சத்தியம் உத்தமஎண்ணம்
உயர்வைமனமெடுத்து
கண்முன் வானம் கடந்தோர் சக்தி
கருத்தில் கொண்டுவிடு

உள்ளத்தாலே சக்தியை எண்ணி
ஒருமைப் பட்டுவிடு
உள்ளே உன்னில் மாற்றம் தோன்றும்
ஓங்கும் சக்தியது
தெள்ளத் தெளியும் மனதும் அன்பு
தோன்றும் மகிழ்வூறும்
வெள்ளம் ஆகி வேகம்பெருகி
வியக்கும் வேளைவரும்

பேயின் கையில் உலகம் இன்று
பெண்ணைக் கொல்லுவதும்
தாயைக் இழிந்து தன்னிலை கெட்டுத்
தலை கீழாக்குதடா
மாயதெருவாம் வானக்குழியின்
மாறா சக்தியினை
ஓயாதென்றும் வேண்டிகொள்ளு
உள்ளே வாவென்று

அண்டம் ஆளும் சக்தி உன்னில்
ஆளுமைகொள்ளவர
திண்மை பெருகும் திறனும்கூடும்
தேகம்வலிகொள்ளும்
கண்ணில் ஒளியும் கருத்தில்தெளிவும்
காரியமாற்றுவதில்
விண்ணைப் போன்று வேகம் மாறும்
வியந்து உலகாடும்

உள்ளப் பொறுமை கொண்டவள்சக்தி
ஒருநாள் வெகுண்டெழுந்தால்
வெள்ளம் பெருகி வானம்வெடிக்கும்
வீசும்புயல் காற்று
அள்ளிதின்ன அனலாய்தீயும்
அண்டம்தனிலோடி
சுள்ளித் துகளாய் தூசாய் கரையும்
சுந்தரபூமியிது