Friday, September 24, 2010

வஞ்சித்தும் வாழுவதோ?

பாடவா பிறந்தேன் பறிபோன நிலம் கண்டு
வாடவா விளைந்தேன் வலியின்றி நிலைகெட்டு
ஓடவா இருந்தேன் முழுநாளும் மண்காத்து
தேடவே சுதந்திரமன்றோ பிறந்தேன்

வீழவா பிறந்தேன் வெறும்பாயில் நோயாகி
மாளவா கிடந்தேன் மனங்கொண்ட உரம்செத்து
தாழவா வந்தேன் தனியீழம், தன்னாட்சி
மீளவே உருவாக்க வென்றோ பிறந்தேன்

பணியவா வாழ்ந்தேன் பகையோடு சேர்ந்தாடிக்
குனியவா கொண்டேன் கூடாது தமிழ்மீது
இனி அவா கொண்டே இடர்நீக்கிப் போராடி
துணியவே யன்றோ பிறந்தேன்

பிறப்பே மறந்து பகைவனாம் எதிரியின்
சிறப்பே இரந்து செத்திடும் தமிழவன்
புறத்தே எழுகின்ற பெருவீர மழித்திடும்
குறைவான பிறவி கொள்ளலாமோ?

பகைவனின் கையில் பற்றியோர் கத்தியின்
வகையான பிடியாய்  வாழ்வதைப் பிறர்நோக்கி
நகையான உறவே!  நம்தமிழ் அழிந்திடில்
புகையாகப் போவதுன் வாழ்வே!

ஒன்றாக நின்றோம் ஒருசேரத் தமிழ் பாடி
வென்றே மகிழ்ந்தோம் விளையாடி மண்மீட்டுச்
சென்றே படைத்தோம் செந்தமிழ் ஈழமாம்
என்றோர் சரித்திரம் செயவா!

நஞ்சே எடுத்தோம் நல்லவர் அமுதிட்டு
வஞ்ச மிழைத்தோம் வாழ்வினைப் போக்கிட
அஞ்சிக்கிடப்போம் அடிபற்றி பகைபோடும்
கஞ்சி குடிப்போமென் றானதேனோ?

தமிழ்என்றுகூறத் தாழ்ந்த தலை நிமிராதோ
பழியென்றுகூறப் பாய்ந்து வாள் தூக்காயோ
அழிவென்று கூற அலறி நீ சீறாயோ
இழிவினைக் கண்டுமே இருப்பவன் தமிழோ?

Wednesday, September 22, 2010

கலவரமா இல்லை கொலைவரமா

வெட்டி யடித்தது மின்னல், நிலமதில்
வீசியது சூறைக்காற்று, மழையுடன்
கெட்டி மேளமிடு சத்தமென வானம்
கேட்டபெருமிடிசத்தம், முழங்கிட
வட்டச்சுழல்புயல் காற்றும் இழுவைக்கு
வந்து விழுந்த மரங்கள், இவைகளோ
குட்டி கலவரம் செய்யும் இயற்கையின்
கோலமன்றோ கணநாதா

மெட்டி யணிந்தொரு மங்கை, அவளினைத்
தொட்டிழுத்த மணவாளன், தாலிதனைக்
கட்டியவ ளிடும் கூச்சல், கண்டு கைகள்
கொட்டிச்சிரித்திடும் கூட்டம், சிறுசிறு
குட்டிகளாய் பெற்ற பிள்ளை. குமரிகள்
வட்டமிடும் பலகண்கள் இவைகளும்,
குட்டிக் கலவர மன்றோ இயற்கையின்
கோலமன்றோ கணநாதா

பெட்டி பெட்டியென ஆயிரமாய் பல
வெட்டி விழுந்த பிணங்கள், இவைதனில்
கொட்டிசிவந்த குருதி கண்கள் நீரை
விட்டிருக்கும் சிறுபிள்ளை, உடலினைக்
கட்டி யழும் பலபெண்கள் எங்கும்படை
சுட்டுச் செல்லும்பெருஞ் சத்தம், இவையொரு
குட்டிக்கலவரமென்றோ இயற்கையின்
கோலமென்று சொல்லலாமோ?

ஏறிவிழுந்த மனிதன் துடித்திட
இன்னும் மிதிக்கின்ற மாடு எழுந்திட
தூறிக் கொட்டும் பெருவானம் குளிர்ந்திட
துன்பமிடும் புயல்காற்று நடந்திட
மாறி இடித்திடும் கல்லு விரல்நுனி
மங்குமிருள் மறைபாதை நடுவினில்
சீறிநிற்கு மொருபாம்பு இவையெல்லாம்
சேர்ந்து வரலாமோ நாதா

பள்ளிசெல்லும் சிறுபிள்ளை இறந்திட
பக்கத்திலே விழும்குண்டு, அதிர்ந்திட
துள்ளி விழும்சடலங்கள், துடித்திடத்
துண்டு செய்யும் படைஆட்கள், தீயெடுத்து
கொள்ளியிட எரிஇல்லம், இடிந்திடக்
கூக்குரலிட்ட கணவன், சிரசினை
அள்ளிஎடுத்திடும் கோரம் தமிழர்க்கு
ஆனதும் ஏன் கணநாதா

புட்டவிக்க தின்று போட்ட அடிவாங்கி
பொய்யுரைத்த கவிசொல்லி மதிகெட்டு
சுட்டே யெரித்த நக் கீரன் பழி கொண்டே
செத்தஉடல் எரிசாம்பல் பூசியொரு
நட்ட நடுநிசி தட்டிஉடுக்கையை
நாட்டியமாடும் உனை நம்பி நாங்களும்
கெட்டதுபோதுமினி கொல்லும்நீசரை
கேட்க வாடா கணநாதா!

Tuesday, September 21, 2010

மேகமே ஏன் அழுதாய்?

வட்ட அலையெழுந்து வாவிதனில் கோலங்களை
இட்டு விளையாடி இருக்கும் ஒரு காலையிலே
நெட்டுயர்ந்தோர் ஆலமரம் நீளப்பரந்தகிளை
விட்டே யெழுந்துபுவி வேர்கொண்ட விழுதுகளாம்

அங்கோர் பொய்கைதனில் அலையெழுந்து துள்ளிவர
மங்கிமறைந்தோடும் மீனினங்கள் நீரொழிக்க
பூமுடித்த மங்கையைப் போல்புது அல்லிசூடி
பொய்கை யிளம்மங்கை புன்னகையால் சலசலத்தாள்

ஆலமரக்கிளையில் அமர்ந்து இருபுள்ளினக்கள்
சாலக்கதை பேசி தம்முள்ளே மகிழ்ந்திருக்க
நீலக்கருவானில் நீந்திவந்த மேகமொன்று
ஆழக்கவலை கொண்டு அழுதிட நீர் கொட்டியது.

முகிலே நீ எங்குச் என்றாய் முகம் வாடிப்போனதென்ன
அழுதே துடிப்பதற்கு அர்த்தமென்ன என்றே
பழகிதுணை கொண்ட வான்குருவி ஆண் கேட்க
நிழலைத்தரு முகிலோ நின்று கதை கூறியது

அய்யோ கொடுமைஇது ஆரறிவார் பாரினிலே’
வெய்யோர் வினை முடிக்க வீரத்தமிழ் சாகுதடா
ஔவை வளர்த்த தமிழ் அகத்தியர் காத்த தமிழ்
தெய்வத்திருநால்வர் தேவாரம் இசைத்த தமிழ்

செங்கண் திறந்தாலும் செருக்கழியா தெதிர் நின்று
பங்கம் உரைத்த தமிழ்பாவலரின் வழியினிலே
பொங்குபுற நானூற்றின் போர்வீரம் ஈதன்றோ
என்றே அதிசயித்த இனமொன்று அழியுதடா

வேங்கை போல்பெருவீரம் விளைந்த தமிழர்தனை
தூங்கவிட்டு கொல்லுகிறார் துடிக்க குழி போடுகிறார்
செங்குருதி வழிந்தோடிச் சிறுஆறாய் மாறுதடா
சீறியே எழுந்த இனம் சிதைக்குள்ளே தீயுதடா

தூர இருந்துதலை தெறித்தோடி வருகிறேன்
ஊரைக்கொழுத்தியவ்ர் உயிரோடுகுழிவெட்டி
தாழப்புதைக்கிறார் தலைவெட்டி பார்க்கின்றார்.
ஆழப் பிறந்தவரை அணிதிரண்டு முழு உலகும்

சேரக்கரம் பிடித்து திட்டமிட்டுசதிசெய்து
வாரிக்கால் விழுத்திஒரு வீரச்சிறுவன் தனை
ஈர்பத்து பயில்வான்கள் இழுத்தடித்து கொல்வதென
நேரற்ற செயலொன்று நிகழக் கண்டேன்நான்

ஊரே எரியுதடா உயிரேதும் மீதியில்லை
பேயே பயந்துதோடி பெரும்கோவில் புகுந்ததடா
என்ன கொடூரம் எடுத்துரைக்க வார்த்தையில்லை
அன்ன செயல்ஒன்று அகிலத்தில் கண்டதில்லை

மேகத்தின் சொல்கேட்டு மேனி நடுநடுங்க
நாகத்தின் நஞ்சைப் பாலிட்டு தின்றதென
ஆவி துடித்து அலறி மனம் பதைபதைக்க
ஆண் குருவி நோக்கி பெண் கூறலாயிற்று…

(குருவி)
அய்யோ கொடுமையிது ஆரறிவார் உலகினிலே
குய்யோ முறையோ என்றே தமிழர் கதறியழு
தெங்கள் உயிர் காத்திடுமென் றேழுலகும் கேட்டும்
பொங்கி எழுந்துலகத் தெருஎங்கும் போராடி

வெம்பிஅழுதும் என்? வினை முடித்துப் போனார்கள்
நம்பி ஓர் நாடுவரும் நாம்பிழைப்போம் என்றவரை
நாசப் பெருங் குண்டும் நச்சுவெடி சிதற இட்டு
மோசக் கொலைபுரிய மூச்சடக்கி நின்றாரே

நீதிக்கு வேண்டாம் நியாயம்தனும்வேண்டாம்
பாதி மனம் இரங்கிப் பாவி இவன் மானிடம்தான்
கொத்தாய் குலையாக் கொடுமைசெய்து உயிர்போக்கும்
எத்தேசம் அறியாப் பேரவலம் என்றிரங்கி

ஏனடா நாயே என்றொரு வார்த்தை கொன்றவனைக்
கேட்காமல் நெஞ்சிறுகி கிடந்ததேன் எமனுக்கு
கப்பந்தான் என்றிவரைக் காவு கொடுத்தாரோ?
ஒப்பந்தம் போட்டிந்த ஊர்அள்ளி கொடுத்தாரோ?

வல்லரசு நாடுகளில் வெள்ளம் புயலென்றால்
எல்லா உலகும் இணைந்து அழுவதுவும்
முள்ளிவாய்க்காலோ மொத்தஉயிர் பன்மடங்காய்
நாள் நேரம் திசைகுறித்து நாற்புறமும் அறிவித்து

சொல்லி உயிர் அழிக்கையிலே செய்கோள் பட‌மெடுத்து
ஐநாவின் உள்ளே அடுக்கி வைத்த‌தன்றி
உற்ற உயிர் காக்க ஒருசெயலும் செய்யாமல்
வாழா விருந்ததனால் வாழ்வழிந்து போனாரே

என்றழுதுகண்ணீரை இட்டிருக்க ஆண்குருவி
தன்சோடி தான் பார்த்து தலையோடு தலைசேர்த்து
நொந்தழுது கண்ணீரை நித்தம் விடுவதே
அந்தோ பரிதாபம் அரும்தமிழர் விதியாச்சு

இந்த நிலைவிட்டு இன்றுஅடி முன்வைத்தார்
மண்ணுக்குள் விதையாகி மறைந்தவரின் கனவுகளை
எண்ணிநிறைவேற்ற இவ்வுலகில் புலம்பெயர்ந்த
மண்ணின் தமிழீழ மக்கள் புறப்பட்டார்

போராட்டம் ஓயாது புழுதியெனப்போகாது
ஆறோடும் பாதையிலே அடித்து எதிர் நீச்சலிட்டோர்
நீரோடு சேர்ந்து இனி நீச்சல் அடித்திடுவர்
போய்சேரும்இடமோ சுதந்திர தாயகமே!

Monday, September 20, 2010

அழகான வெண்ணிலவே!

ஆயிரம் தாரகை பூத்த வானமதில்
நீந்திடும் வெண்ணிலவே
ஆடிஅசைந்து நீ போவதெங்கே
அழகான ஒளிநிலவே
ஓடிடும் வான்முகில் பக்கம்வர நீயும்
உள்ளே மறைவதென்ன
ஈழமண்ணில் தமிழ் கொல்லும்கொடுமையை
காணக்கண் கூசியதோ

கையில் குழல்வெடி கத்திஎன தமிழ்
கொல்ல பகைவர் செல்ல
மெய்யில் பயம் கொண்டு மேகம் எடுத்து நீ
உன்னை மறைத்தனையோ
விண்ணில் தலைதெறித்தோடுகிறாய்
அழகானதோர் வெண்ணிலவே
மண்ணில் தமிழர் கதியிழந்தோடிடும்
இன்னிலை தான் உனதோ

மெல்ல நீ தேய்ந்து மெலிந்து பிறையென
ஆவது ஏன் நிலவே
வாழ்வை இழந்துநாம் வாடுவதைக்கண்டு
தேகம் மெலிந்ததுவோ
அன்னை இழந்து தந்தையிழந்து
ஆயிரமாய் சிறுவர்
கண்ணீர் விட்டுமந்த தெய்வம் இரங்கிடக்
காணோம் என் செய்வதடி
 
பால் நிலவில் அன்று தாய் அமுதூட்டநீ
பார்த்து மகிழ்ந்திருந்தாய்
போலஇனி ஒருநாள் இந்தப் பூமியில்
மீண்டும் மலர்ந்திடுமோ?
தாயொரு கூட்டிலும் பிள்ளை தனியவும்
பாவி பிரித்து விட்டான்
நீயதை எண்ணி நெஞ்சம் துடித்தாயோ
நேற்று வரமறந்தாய்

பாயும் கருமுகில் பேயென பார் அங்கே
பக்கம் ஓடி வருது
ஆயினும் வந்தது போல மறுதிசை
ஓடி உனை விடுது
ஈழமண்ணை வந்து மூடும் இருள்முகில்
போக மறுப்பதென்ன
வாழும் மனிதரின் நாடு சுதந்திரம்
ஆட்சி பறித்ததென்ன

ஓடும் நிலவே நீ போய்வரும் வீதியில்
தேசம் இருந்ததென்றால்
வாடும் உறவுகள் காதில் ஒரு மொழி
கூறி ஒளி எறிவாய்
நாடும் உயிர்களும் காக்க எண்ணியிங்கு
நாமும் எழுந்து நின்றோம்
பாடுபடுவோம் பகைகொண்ட நாட்டினை
மீட்டு அரசமைப்போம்

கம்யூட்டர் என் காதலி

உன்னை நினைக்கையிலே மனதில்
ஓடிவரும் இன்பம்
என்ன சுகம் சொல்வேன் கணியே
என்மனத் தாரகையே
வண்ண வடிவெடுத்து எந்தன்
வாழ்வில் புதியதொரு
எண்ணம் குழைத்தவளே என்றும்
என்மலர்த் தாமரையே

உன்னைத்தொடும்போது என்றும்
துள்ளி மலர்ந்து நின்று
வண்ணத்திரை முகத்தில் ஒளியை
வந்திடச் செய்குகிறாய்
சொன்னதெல்லாம் கேட்டு அதனை
செய்து முடிக்கையிலே
உன்னதமாய் மலரும்  செய்கை
உள்ளம் கவருதடி

என்னதான் கேட்டாலும் உடனே
சொல்லி விளக்குகிறாய்
உன்அறிவென்பதென்ன என்றும்
ஊற்றெடுக்கும் நதியோ
வண்ணபடம் வரைந்தால் அழகு
வாரிக் கிடக்குதடி
பண்ணிசை பாடு என்றால் இனிமை
என் செவிக்கின்பமடி

கட்டுக்கடங்காத கதைகள்
எத்தனை சொல்லுகிறாய்
சுட்டி பயல்சிறுமி அவர்க்கும்
சித்திர காதை சொல்வாய்
பட்டுமுகம் உனதை முறைகள்
எத்தனை பார்த்தாலும்
விட்டு சலிப்பதில்லை அதுவே
எத்துணை விந்தையடி

நாட்டின் அரசியலை வீதி
நாற்புறமும் நடக்கும்
வீட்டில் தகராறு கொள்ளை
விருந்துசெய்யும்முறைகள்
சாத்திரம் சோதிடங்கள் எல்லாம்
சட்டென்று ஓடிவந்து
ஊரில் அறியமுன்னே சேதி
காதில் பகருகின்றாய்

எத்துணை வித்தகியாய் இருந்தும்
ஒன்றில் மட்டும் எனக்கு
உன்செயல் கண்டதிலே கோபம்
ஓடி வருகுதடி!
சின்னபயல் முதலா எவரும்
கள்ளத்தனம் புரிந்தால்
சொல்லிக்கொடுப்பதற்கு நாணம்
கொஞ்சமுமில்லையடி

கவிபாட வரம் தா !

கலை காணுமுலகோடு இனிவாழவேண்டும்
கவியான தெனதாசை மகளாக வேண்டும்
தலைவாரி குழல்நீவி தமிழ்மாலைசூட்டி
அவள் பாடுமெழில்கண்டு மனம் தூங்கவேண்டும்

மலைமீது நதிமீதும் அவளோடு சென்றே
இதுதானே அழகென்று இசைபாடவேண்டும்
அலையோடு குளிர்நீரிற் தலை நீட்டு மல்லி
அதன் மேவுமிதழாக இதமாக வேண்டும்

எவர் காணும் பொழுதேனும்  இவளா என்றள்ளித்
தமிழாம் என்கவிதூக்கி முகம் காணவேண்டும்
எழிலா நல்லிசையா அல்லதுகாணும் பொருளா
எதுதானும் உயர்வென்று நிறைகூறவேண்டும்

அழகான நகைசூடி அணியாடை வளைகள்
அலங்கார வகைசெய்து மகிழ்வாதல்போல
வளமான உவமை நல்லெது கையும்மோனை
இதனாலே எழில் செய்து உயர்வாக்கவேண்டும்

தளைசீர் கள்கொடியாக உருவாக்கி ஊஞ்சல்
தனில் ஏற்றி அவளை நான் தாலாட்டவேண்டும்
இமை கொட்டும் விண்மீன்கள் எவைமட்டுமுண்டோ
அது மட்டும் அளவாக கவி காணவேண்டும்

எதுதானும் உனதன்பின் அருளின்றி இறைவா
ஒருபோதும் உருவாகா மனதெண்ணும் கவிதை
எனவே உன் அடிதாழ்ந்து தலை வைத்து இரந்தேன்
கவிபாடி உலகெங்கும் வலம்செல்ல வரம்தா

Sunday, September 19, 2010

இங்கே வரும் கவிதைகள்

கவி இலக்கணம் தெரியாதவன் கவிதை என்று எழுதுகிறான். இவை எப்படி இருக்கும்? பார்க்கப்போவது நீங்கள். நீங்கள்தான் சொல்லவேண்டும். இதோ முதற்கவிதைகவியேதும் அறியேன்
கவிகூற தமிழ் காணும் விதியேதும் அறியேன்
எனதாசை தமிழ்மீது பெருமாசை கொண்டேன்
மனமீது எழுகின்ற உணர்வேது சொல்வேன்

தமிழான தென்றல்
புவிமீது மனமென்னும் மலரான மென்மை
தனை நீவி எழுகின்ற உணர்வான இன்பம்
அதனாலே வருகின்ற மொழிதானே கவிதை

பலமான விதிகள்
அழகான கவியென்னும் சிலையாக்க உளிகள்
வளமான தமிழ்மாலை கோர்கின்ற தளைகள்
அழகான இசையோடு சேர்க்கின்ற தவைகள்

தமிழான அன்னை
கலைஞானம் அறியாத மகனான என்னை
பிறிதாக நினையாமல் ஒருசேர அன்பை
தருகின்ற நிலைபோதும் வேறொன்று இல்லை

எழுதென்று உள்ளம்
இருந்தாளும் தமிழன்னை மொழிகூறு வரையும்
எழுதாமல் என்தேசம் விழிமுன்னே கொள்ளும்
அழிவான துரையாமல் விழிமூடல் செய்யேன்.