Wednesday, July 11, 2012

விளையாட்டு

        விளையாட்டு

வண்ணக் கலவைகொண்ட மேகம்
வந்தே மறைந்து செல்லும் வெய்யோன்
கண்ணைக் கூசும் ஒளிவெள்ளம்
காற்றில் பறந்து செல்லும் குருவி
விண்ணைக் குனிய வைக்கும் வையம்
விந்தை இவைஇணையும் எல்லை
மண்ணில் மரங்கள் மறைகூட்டம்
மகிழ்வில் இயற்கை விளையாட்டே

பொன்னை உரித்த வண்ண மதியைப்
பின்னால் ஒழித்து வைக்கும் மேகம்
என்னை விடென்று நிலவோடும்
இன்னோர் முகிலும் அதை மோதும்
முன்னே உயர்ந்த பனை மரத்தின்
முகத்துள் மறைந்து விளையாடும்
தன்னை மறந்து பனை ஆடும்
திங்கள் சிரித்து வான் ஓடும்

காலை வரையொளி விண்மீன்கள்
கண்கள் சிமிட்டி விளையாடும்
சோலை மலர்களுடன் வண்டும்
செழித்த பூவின் மணம் கொள்ளும்
மாலைத் தென்றல் மனம்மயக்கும்
மரங்கள் அணைப்பில் கிளுகிளுக்கும்
கோலம் அனைத்தும் விளையாட்டே
கொள்ளும் இயற்கைமகள் குணமே

நீரை உயர்த்திக் கரந் தூக்கி
நிமிர்ந்த கணம் குலைய வீழ்ந்து
பாரைப் பெரிதும் தனதாட்சி
பக்கம் சூழ்ந்து செய்யும் ஆழி
ஊரைப் பார்க்க வரும் ஒருநாள்
உள்ள தனைத்தும் அள்ளி யோடும்
வேரை தறித்த மரம் போலும்
வாழ்வை யழித்து விளையாடும்

தூரக் கனத்த ஒலி உறுமும்
தோன்றும் ஒளி வெடித்து மின்னும்
வாரி யடித்து மழை ஊற்றும்
வந்தே புயலும் அதில்கூடும்
நீரைத் தெளித்து விளயாடும்
நின்றோர் தமைஇழுத்து வீழ்த்தும்
கூரை அழித்து விளையாடிக்
கோலம் கெடுத்த பின்பு போகும்

ஓடித் துரத்தி பிடித்தொருவன்
உள்ளோர் உயிர் பறிக்கும்வேளை
வாடித் துயருறவும் மக்கள்
வருந்தி ஒடும் விளையாட்டு
நாடி நரம்பு களும் அஞ்சி
நடுங்கிப் பதைபதைத்து எங்கும்
தேடித் திரிந் தலைந்து தஞ்சம்
தினமும் காணும் விளையாட்டு!

வேரைத் தமிழ்க் குலத்தின் விழுதை 
வெட்டி யழித்து விளையாட
ஊரைக் கொழுத்தி உயிர்கொல்ல
உடலை நெரித்து புவிகொள்ள
தாரையெனக் குதிக்கும் வெள்ளம்
தரையில் குருதி செல்லும் காட்சி
நேரில் உலகின் விழிகாண
நின்றே இழைக்கும் விளையாட்டோ

ஆவிவிட்டு வெளிஓடும்
ஐயோ என்றலறிச் சாகும்
கூவி அழுத குரல் கேட்கும்
கொல்லும் போது வருமோலம்
நாவில் தமிழ் கதைத்த காலம்
நாட்டைவிடுத்து  உலகோடும்
பாவி இவனும் யமனோடு
பாயும் மறிக்கும் விளையாட்டோ?

No comments:

Post a Comment