Tuesday, July 17, 2012

அவள் கேட்டாள் !

  (அவள் )
விளைந்து நெல்லு அறுவடைக்குக்
வளைந்து நிற்கையில் - அன்று
விரைந்த வந்த வெள்ளம் சேதம் 
விளைத்த தேனையா
குழந்தை யொன்று பிரசவிக்க
காத்திருக்கையில் - உயிர்
கூட்டைவிட்டு பறந்து போன
கிளியென் றாவதா?

(அவன்‌ )
வளைந்து ஓடும் நதியும் வீட்டுள்
வந்து நுழைவதாய் - தேடி
விளைந்த  துன்பம் களைத்த போது
வென்று போனதாம்
இழந்துபோன கதையென் றல்ல
எடுத்த பாடமாம் - இந்த
சுழன்ற பூமி நிலைமை உண்மை
செயல்கள் புரிந்ததாம்

(அவள் )
தெரிந்து நன்மை என்ன இன்று
தெருவில் நாமையா - இந்த
திரியு மெண்ணெய் இழந்த போலும்
தீய்ந்த தீபமாம்
கரியும் சாம்ப லாகி உடலும்
கலந்த மண்ணிலே - என்ன
சொரியும் மலர்கள்  மீண்டும் பூக்கும்
செடிகள் வளருமா

(அவன்‌ )
நரியு மேய்க்கும் காகம் போன்றும்
நாமும் வாழ்ந்த மாம் - என்றும்
உரிமை ஒன்று உள்ளதென்று
உலகம் ஏற்கவும்
தெரியுமுண்மை தெரிந்தபோதும்
திரைகள் மூடின - அன்று
பெரியதான தவறு செய்ய
விதிகள் கூடின

(அவள் )
சரி என்றான விடையைச் சொல்லப்
பிழையைப் போட்டதே - உலகம்
சரி யென்றாக்க கணக்கை மாற்றிச்
சதியும் செய்வதோ
தெரியவில்லை இருளில்பாதை
தவறலாகுமா - பூமி
திரியும்பாதை விலகின் எங்கள்
தேகம் போகுமே

(அவன்‌ )
கருமைகொண்ட விண்ணில் பாதை
காணா தோடியும் - பூமி
தருமம் என்‌ற பாதை ஒன்று
தவறிப் போனதால் ‌
பெருமை பேசும் உலகில் நீதி
பிழைத்துப்  போ னதோ   இந்த
கருமை கண்டு அருகில் சென்று
கரைந்த ழிந்ததமோ

(அவள் )
கறந்த பாலும் மடியில் செல்ல
கூடுமா அய்யா - எங்கள்
இறந்த சொந்தம் இனியும்வாழ
எழுவது மு ண்டா
சிறந்த தென்ற பொய்யில் உண்மை
சிதைந்ததோ செய்ய - இன்னும்
மறந்த துள்ள சிறிதும் போக்கிச்
மகிழ்வரோ சும்மா

(அவன்‌ )
வருந்தி  என்றும் அழுவதெங்கள்
வழமை தானென்று - நாமும்
இருந்து மண்ணைக் குனிந்து கண்டு
இயல்பு தவறினோம்
பருந்து வந்து குஞ்சைக் கவ்விப்
பறக்கும் போதினில் - இன்றும்
விருந்து கொண்டு எதிரிவீட்டில்
விலைகள் பேசுறோம்

ஓருவ ரென்று நீயும்நானும்
உள்ளபோதிலே - எம்மை
கருவில் கொண்ட தமிழென்தாயை
காத்தல் நியதியே!
புரிந்துகொண்டு பாசத்தோடு
கைகள் சேர்த்திடு - இன்றேல்
சரியென்றாகும் வாழ்வு இன்றிச்
சதிகள் வென்றிடும்

1 comment: