Wednesday, April 27, 2011

மைந்தர் உயிரைத் தருவாரோ?

வேழம் விளையதிர் வீறுடை நடையும்
தோளை உயர்த்திய திறனொடு படையும்
ஆழ சமுத்திரம் அகல்விரி வானம்
ஆண்ட நிலம்அதில் அணிதிரள் மைந்தர்
போரை நிகழ்த்திய போதினில் கண்டே
புறமுது கோடிய எதிரிகள் இன்றோ
கோரமு கத்துடன் செய்தவை எல்லாம்
குற்றமெனச் சொலும் குவிஉல கன்றே

ஈழ மகள்இழி நிலைவிழி கண்டோர்
ஏங்கும் மனத்தொடு இடுசுடு தீயாய்
காலைமி தித்தெழு கடுதியில் புயலும்
காக்க நினத்தவர் கருணையில் தாயும்
சோலை மரத்திடை செழுமலர் மென்மை
சேர்ந்தோர் உள்ளம் சார்ந்ததுஎனிலும்
வாழநி னைத்தசு தந்திரம் வேண்டி
வல்லமை கொண்டே வஞ்சகர் களைய

சுற்றும் விரைவெடு சுழல்புவி அண்டம்
உற்ற வெயில்எறி  ஒளிகதிர் நிகரோன்
கொற்றவன் தலைவன் கூறிடச் செய்தே
கைவிர லசைவில் காரியம் ஆற்றும்
வெற்றியைக் கண்டு விசமொடு மனதில்
வீரம ழித்திட விரைந்தவர் வந்தார்
குற்றமிழைத் ததைக் கூடியே அன்று
கொலையை நிறுத்தத்  தவறிய தாலே

மைந்தர் இழந்தோம் மானிடம் சாக
மறவர் குடிகள் மனைகள் அழிந்திடச்
செந்தமிழ் வீரர் சரிந்திட மண்ணில்
சிறியோர் பெண்கள் சிதைந்தே ஒழிய
விந்தைகொள் வீரமு ழக்கமு மிட்ட
வியன் தமிழீழ எல்லை வகுத்தோர்                                  
செந்தணல் தீகொளச் செய்தனர் இன்று
தந்திட எண்ணின் தரவும் உளதோ

மண்ணை, மனிதம் காப்போமென்று
மானம் எண்ணிய மைந்தர் தம்மின்
எண்ணம் புனிதம் ஏற்கா, வலிமை
ஒன்றே யெண்ணிக் கொன்றோர் இன்றோ
கண்கள் நாலாம் காட்சிச் சனலால்
கருத்தே மாறிக் கண்டார் ஆயின்
மண்ணுள் புதைந்த மக்கள் மைந்தர்
மனிதர் உயிரைத் தருவா ருண்டோ

வீர திருவே வேங்கை செல்வர்
வெற்றிப்பபாதை  வெளிச்சவீடு
கோர விலங்கு குவிந்தோர் காட்டின்
குறுகிய வழியில் கொஞ்சம் ஒளியும்
நேரே தெரியும் நிலமை கண்டோம்
நினைவில் தமிழின் நிலத்தின் மீட்பை
விரைந்து காண விரும்பிக் கிடந்தீர்
விடியும் வழியில் வீறுடன் எழுவோம்

Sunday, April 24, 2011

மீட்பீரோ எம்மை?

பாவங்கள் சிலுவையில் சுமந்தவரே இந்தப்
  பாவிகள் பூமியிலே
தேகங்கள் ரத்தமும் சிந்துகிறோம் - எங்கள்
 தேவைகள் அறியீரோ
மேகங்கள் மூடிய புல்வெளியில் -பெரு
  மின்னலும் இடியினிலே
சோகங்கள் கொண்டுமே மேய்ந்துநின்றோம்  நாம்
 சென்றிடும்வழிஅறியோம்

வெட்டுது மின்னலும் வேகமுடன் வந்து
  வீசுது புயலெழுந்து
கொட்டுது மழையும் கூடிவந்து இருள்
  குவிந்தது கண்மறைத்து
வட்டமெனப் பெருவெளியினிலே  -நாம்
   வந்தது ஏனறியோம்
தொட்ட இடங்களில் புற்களில்லை வெறும்
  முட்களே குத்தநின்றோம்

தேகம் இளைத்திட நாம்நடந்தோம் எந்த
 திசையென நாமறியோம்
போக நினைத்தஇப் பூமியிலே - செல்லும்
  பாதையும் நாமிழந்தோம்
வேகு மனத்துடன் துடித்து நின்றோம் -பல
   விலங்குகள் சுற்றி எமை
நோகக் கடித்திடக் கதறுகிறோம் அருள்
    நேசனே  மீட்பீரோ

புல்வெளி இரத்த மென்றாகிடவே இந்த
  பூமியும் சிவந்ததையா
நல்மனம் கொண்டவர் நாம் அழிந்தோம்- நல்
  லுயிர்களும் இழந்தழுதோம்
சொல்வது அறியோம் பலதடவை -நாம்
  சிலுவைகள் சுமந்துவிட்டோம்
வல்லவரே என்றும் நல்லவரே- இனி
  வந்தெமை மீட்பீரோ

கல்லிலும்முள்ளிலும் நடந்துவிட்டோம் -இரு
  கால்களும் நோகுதையா
பல்லுயிர் இழந்துமே பரிதவித்தோம் -இனி
  பட்டது போதுமையா
நல்லவரே எமைக் காத்திடுவீர் -நடு
   வழியினில் கதியிழந்தோம்
செல்ல இப்பூமியில் திக்கறியோம்- ஒரு
   தேசமும் தாருமய்யா !

Thursday, April 21, 2011

விபரீத ஆசைகள்...?

தென்றலுக்கு ஓசைமீது காதல்வந்தது -அது
தேடிவந்து காதில் சொல்லி ஓடிப்போனது
குன்றின்மீது ஆசை கொண்டு மேகம்வந்தது -அது
கொஞ்சி உச்சிமேனி தொட்டு நின்றுபோனது

கண்களுக்கு காட்சிமீது காதல்வந்தது -அது
காணும் யாவும் எண்ணம்கொண்டு கட்டி வைத்தது
மண்ணதற்கு மானம்மீது மோகம் வந்தது -அது
மைந்தர்மீது தன்நினைப்பைத் தூவிவிட்டது

பைந்தமிழ்க்கு பாடல்மீது ஆசைவந்தது -அது
பாடவென்று நல்லிசைத்த வார்த்தை தந்தது
ஐந்தினுக்கு ஒன்றின்மீது ஆசைவந்தது -அது
அனபுகொள்ள அஞ்சுகத்தை தேடிநின்றது

வெண்மதிக்கு பூமி மீது மோகம்வந்தது அது
வீழ்ந்து வெண் ணொளிக்கரத்தை விட்டணைத்தது
தண்ணலைக்கு வெள்ளைமண்ணில் ஆசைவந்தது -அது
தாவிவந்து கரையுருண்டு தாகம்தீர்த்தது

சிந்தனைக்கு ஞானம்மீது காதல் வந்தது -அது
செயலிழந்து மௌனமாக தவம் இருந்தது
செந்தமிழ்க்கு தென்றல் வாழ்வில் ஆசை வந்தது -அது
தேடி நல்சுதந் திரத்தைக் காண நின்றது

வெல்வதற்கு நல்மனங்கள் சேர்ந்துநின்றது -அது
வெல்லும்போது பூமிகண்டு வெலவெலத்தது
கொல்வதற்கு கைகள் யாவும் கூடிவந்தது -அது
கொள்வதற்கு நஞ்சுகொண்ட கூட்டம் வந்தது

விதியினுக்கும் பாவம்செய்ய வேகம்வந்தது -அது
வீடு எங்கும் தீயுமிட்டு வெந்தெரித்தது
கதியுமின்றி ஈழதேசம் கருகிப் போனது -அந்த
காலதேவன் கண்ணிழக்கக் கடமை தோற்றது

இருள்கிடக்க நீதிதானும் எண்ணம்கொண்டது -அது
எதுவுமற்று அமைதி கொண்டு விழிகறுத்தது
அருள்கொடுக்கும் தெய்வம்ஏனோ அமைதியானது -இந்த
அகிலம் விண்ணில் உதிரம்கொட்டச் சிவந்துபோனது.

ஞானத்தைத் தேடி..!

ஞானம் மனம்தேடும் ஒளிதானும் விழிகாணும்வரை
நானும் அலைந்தேனே தினமும்
தானம் தருமங்கள் இவைதானு முதவாதே பிர
தானம் ஒருசேரும் மனமே
வான மதில்நீந்தும் விரிவாழ்வும் இருளாகும் உயிர்
தானும் உனைநீங்கும் பொழுதே
மோனம் கதியாகும் அம்மோட்சம்முடிவாகும் ஒளி
காணும் நீ ஒன்றாகிடவே

கானம்எழும் சோலைதனில் காணும்கிளிதானும் கனி
தேடும், மனந்தானும் அதுபோல்
கூனும் குழிகொள்ளுமிரு கண்ணும் நரைதன்னுமொரு
கோலம் என ஆகும் முதலே
வானம்அதில் ஞானமெனும் தீபம்தனை நாடும் அதை
வாழ்வில் பெறஆசை கொளவே
தேனும் இனிதாகும் உயிர்தேடும் ஒளிவெள்ளம் அது
தேகம் நிலைகொளும் வரையே

விடியு ஒருகாலை விரிவானில் பகலோனும்
வெளிகாணும் மனதோடு எழவே
நொடியில் ஒருசிதறல் என்நினைவில் ஒருபொறியானது
நிகழப் பெருமாற்றம் கண்டேன்
வெடியும் எரிமலையும் எனவிளையும் பெருந்தீயானது
வெள்ளம் என உள்ளே திகழ
கடிதும் பெரிதுலகம் அதை காணா தனைச் சுற்றிபெருங்
கதிரோ னொளிபெறுதே தகுமோ

காணும் சுழல்ஞாலம் அது தேடும் ஒளிவானில்
அதனூடே பெருந்தீயே எரிதே
வீணும் வெளிதேடிக் குணம்மாறிப் பிணமாகும்வரை
வீழ்ந்தே எழுவோமே சரியோ
காணும் மனம்தானும் ஒளிகண்டே யதிற்கூட,வெறுங்
காயம் ஒரு துன்பம்படினும்
பேணும் உயர்ஆன்மா அப் பேராமொளிதன்னில் பெறும்
ஞானம் உனைக் காக்கும் பெரிதே!

Saturday, April 16, 2011

அன்பான நண்பர்களே !

இங்குள்ள கவிதைகள் Flip மின்னூல் வடிவத்தில் காண

www.wix.com/maniosai/kirasaworld

செல்லவும்

கல்லாக இரு, கடவுளே!

சுற்றும் உலகை ஏனோசெய்தாய் சுடரே, இறையொளியே!
கற்றும் ஏதும் காரணமறியேன் கருணை தருமொளியே
வற்றும் குளமாய் வாழ்வும் பாலை வனமாய் திரிவதும் ஏன்?
முற்றும் உண்மைகெட்டே மனிதர் மூச்சை இழப்பதும் ஏன்?

செத்தே பிணமாய் சிறியோர் பெரியோர்சென்றே மறைவதெங்கே?
கத்தும் குரலும் கதறும் அவலம் காணும்மரணமும் ஏன்?
நித்தம் சாவும் ரத்தம் என்றே நித்திலம் காண்பதுமேன்?
பத்தும் பலதும் அறிந்தேன் ஆயின் படைப்பின் இரகசியம் என்?

அன்பேகொண்ட இறைவன் என்றால் அவலம் செய்தது ஏன்?
இன்பம் கொள்ளென் றுலகைசெய்தால் இடையில் வறுமை ஏன்?
வன்மை மென்மை வலிமை எளிமை வகைகள் செய்தது மேன்?
இன்னும் வல்லோர் எளியோர்தம்மை இம்சை செய்வதும் ஏன்?

பச்சை மரங்கள் பழங்கள் குருவி பாடுங் குயிலென்றும்
உச்சிவெயிலோன் எழுமோர் மலையும் உலவும் முகில்வானும்
மச்சம்வாழும் கடலும் அலையும் மகிழ்வின் உருவங்கள்
இச்சேரின்ப உலகில்செய்து இடையில் இருள் தந்தாய்

வெட்டும்போது வீழும் ரத்தம் வேண்டும் பொருளாமோ?
தொட்டே மேனி துவளக் கொல்லத் துடிக்கும் விதம் ஏனோ?
கட்டிக்கதறக் காயம் செய்து கண்கள் மிரளத்தான்
சுட்டுகொல்லும் தேகம்வைத்தாய் சொல்! ஏன் செய்தாயோ?

பெண்ணைக்கட்டிப் பேதைஉடலை பெரிதே இம்சித்து
கண்ணும்காணாக் கொடுமைசெய்தே காமக்கொலை செய்யும்
வண்ணம்படைத்த வானின் பொருளே வழியும் இதுசெய்து
மண்ணில் குரூரம் மனிதம் கொல்லும் மனமும் ஏன்வைத்தாய்?

நீயே மனிதம் செய்தாய் ஆயின் நிகழும் செயல்யாவும்
போயேஅவனைச் சேரும் என்றால் பிழையை யார்செய்தார்?
நாயாய் பேயாய் ஆகும்மனிதன் நல்லோர் கொன்றானால்
தீயே ஞானச்சுடரே தெரிந்தும் தேகம் ஏன் செய்தாய்?

நல்லோர் கொல்லும் வல்லோர் தன்னை நாட்டில்பெரியவனாய்
கல்நேர் மனமும் கயமைகொண்டோர் காவல் புரிஎன்று
எல்லோர்விதியும் செய்யும் இயல்பே இந்தோ ருலகத்தை
சொல்லா விதிகள் சுற்றிநிற்கச் செய்தாய் நீதானே

கல்லா சிறிதோர் கையின் அளவு கொண்டேன் அறிவேதான்
எல்லா உலகின் இயற்பேரருளே இதை நான் அறியேனே
சொல்லா வளமும் வலிமை கொண்டாய் சுற்றும் உலகத்தை
நல்லாய் செய்யாய் என்றால் கோவில் கல்லாயிரு மேலாம்

Friday, April 15, 2011

சக்தியின் சக்தி

தொம்தொம்தன தொம்தொம்தன என்றேபெரு விண்மீதினில்
நின்றே பெரு நடமே இடுவாள்
இம்மேதினிகண் கோடியில் பல்கோடியென் றெம்மேனியை
இங்கே உரு செய்யும் தொழிலும்
செம்மாலையில் அம்மேலையில் சென்றேவிழும் பொன்ஆதவன்
செய்காரியம் கொண்டான் எவரால்?
அம்மாபெரும் செந்தீயெழு பந்தானது விண்மீதினில்
அங்கோடிடச் செய்ததும்  இவளே

வண்டானது செந்தேனையும் உண்டாகிட வைத்தாளவள்
அம்மாருதம் எழுமோர் இதமே
கண்டானதும் ஓர்மாதினில் கண்பார்வையில் இன்காதலை
உண்டாகிடச் செய்வா ளிவளே
பெண்டானவள் வன்பேசினும் முந்தானையில் பின்மோகமும்
கொண்டே நினைவொன்றாய் விடவே
மண்ஆண்டிடும் பொன்வேந்தனும் மைசேர்விழி பின்னேயுலைந்
தன்னோர்மதி கெட்டே யலைவான்

துண்டாடிடும் கூர்வாளதும் சிங்காரியின் கண்பார்வையில்
எங்காகினும் வென்றாய் உளதோ
பெண்ணானவள் மென்மேனியும் சொல்லானதில் தன்ஒர்மமும்
இல்லாயினும் வல்லாளெ னவாம்
கண்டோம் பல சாம்ராஜியம் கண்சாடையில் செவ்வாய்மொழி
கொண்டோர்அசை வொன்றில் அழிய
மன்னோர்களும் பொன்வார்முடி மண்மேல்விழத் தூள்ஆகிடச்
செய்வாளவள் சக்தி பெரிதே!

நெஞ்சில் அவள் எண்ணமெடு நித்தமவள் அன்பைநினை
நம் வாழ்வினில் சக்தி தருவாள்
பஞ்சாகிடும் துன்பங்களும் பட்டானதும் தொட்டானதும்
பற்றும் துயர் விட்டேவிலகும்
வெஞ்சீற்றமும் கொண்டேயவள் வெல்வாள்பகை கொல்வாள் உனை
வேண்டும் வரம் ஈவாள் சுகமே
அஞ்சாதமனம் கொண்டேநிதம் ஆற்றல்தரும் ஊற்றாகிடும்
அன்பாம்பெருவாழ்வும் உயரும்

Saturday, April 9, 2011

பூகம்பம் ஒன்றினைப் பெற்றவளோ இன்று
புன்னகை விட்டுக் கிடந்தனள்
வேகப் புயலொன்றைப் பெற்றவளோ இன்று
விண்ணி லெழுந்து கலந்தனள்
தாகத்தின் ஊற்றினை தந்தவளாம் இன்று
வானதிலேறிக் கரைந்தனள்
யாகத்தின் தீயும் அணைந்ததோ- இன்றது
‘ யாத்திரையோடு முடியுதோ?!

வீரத்தின் சின்னம் விரைந்ததோ- ஒரு
வெள்ளியென விண்ணில் நின்றதோ
சேரத் தலைவனைத் தந்தவள் -பெரும்
சேனை படைகளை கண்டவள்
நேர்மை தன்மானத்தை சொன்னவள் -இன்று
நித்திரைகொண்டனள் நெஞ்சிலே
பாரத்தை தந்துமே சென்றதேன் --இந்தப்
பாவ உலகம் வெறுத்ததோ

பேரை உலககெங்கும் சொன்னவன் -பெரும்
போரில் பகைதனை வென்றவன்
நாரைஉரித்தது போலவே -இந்த
நாட்டின் கொடுமை உரித்தவன்
ஊரையே வெட்டிப் பிரித்திடும் -அந்த
உண்மையில் பூமி பயந்தது
வேரை அழித்திட வந்துமே -புவி
வஞ்சகம செய்தினம் கொன்றது

வீரத்தாயும் இதைக் கண்டனள் -உளம்
விம்மி வெடித்துக் கிடந்தனள்
நேர்மைத் திறமையைப் பெற்றவள் -இந்த
நீசச் செயல்களும் கண்டனள்
தீரத்தைபெற்ற வயிற்றிலே -ஒரு
தீயைக் கட்டிவருந்தினள்
கோரத்தை எப்படிநெஞ்சிலே -ஐயோ
கொண்டு நடந்தனள் தெய்வமே

தேகம் அழிந்திடப் போயிடும் -அந்த
தெய்வமெமை விட்டுப் போகுமோ
ஏகும்வழியிலே நின்றுமே -எங்கள்
ஈர்கரம் கொண்டு வணங்கினோம்
தாயே தலைவனின் அன்னையே- நீயும்
தந்ததுவோ பொற்கலசமே
நாமோ நந்திவன ஆண்டியாய் -என்ன
நாடகமாடி உடைத்தமோ

போனதுதான் திரும்புமோ -அந்த
பொன்னெழில் காலமும் மீளுமோ
நானும் பிழைத்து இருப்பானோ- இந்த
நாடும் நமதென ஆகுமோ
தேனைத் திருநாட்டைக் காப்பமோ -நல்ல
தோள்வலி கொண்டு சுமப்பமோ
ஏனோ கலங்குது நெஞ்சமே -இந்த
ஏழைகளு கினியாரம்மா

கனவு கலைத்தெழுவாய்!

வெட்டிடும் மின்னலும் தொட்டதாய்ப் பூமியில்
வெற்றியும் காண்போம் எழுந்திடடா
பெட்டியில் பாம்பென தொட்டிலில் சேயென
கட்டிக்கிடந்தது போதுமடா
கொட்டிய தேள்களும் குத்திடும்வாள்களும்
கொல்லவும் நீயும் குனிவதுவோ
வட்டி முதலென வாங்கிய முற்றிலும்
தட்டித் திரும்பவும் நீகொடடா

நாடும் நம்தேசமும் நாளும் நலிந்திட
நாய்களும் சூழ்ந்து கிடக்குதடா
போடும் இழிந்தவன் பிச்சைக்கு ஈடென
பூமியின் தூய்மை யழிக்குதடா
காடும் உறங்கிடும் காலம் முடிந்தவர்
கண்களு றங்கிடும் மேடைகளில்
பேடும் தரித்திரப் பேய்களும் மான
மிழிந்த பிறப்புகள் ஆடுதடா

தீயினில் காடுகள் வேகிடும்போதினில்
தென்றல் குளிர்ந்திடப் போவதில்லை
சாயமரங்களை வெட்டியே வீழ்த்திட
சந்தனவாசம் எழுவதில்லை
பேய்கள் பிணங்களைத் தேடியலைகையில்
பூக்களின் வாசம் மணப்பதில்லை
தாயவள் சாம்பலை தன்பெயர் முன்னிலை
போனவன் கும்பிடப்போவதில்லை

கண்களும் மூடியே காணுமி னித்திடும்
காட்சிகள் மாறக் கனவுகளும்
வெண்ணொளிவீதியில் மென்னிளம் பூக்களும்
வீழ்ந்திட வானில்மி தப்பதுவும்
பெண்களும் சூழ்ந்திடப் பேசிமகிழ்ந்து
சிரித்து மலர்களைத் தூவுவதும்
புண்கள் பெருத்துப் பழுத்திடும் வேளையில்
போதும் நிறுத்திப் புறப்படடா!

சக்தி தெய்வம்

சக்தி கொண்டு நீயெழுந்து சுற்றிஆடடா அந்தச்
சக்தி அன்பு தெய்வம் உந்தன் வெற்றியாமடா
சக்தி பூமி பெற்ற துந்தன் அன்னைதானடா அந்த
சக்தி சத்தி யத்தின் அன்பு தேவியாமடா

சக்தி யின்றி நாம் நடந்து செல்லலாகுமா அந்தச்
சக்தி போயின் செத்ததென்று ஆகுமேயடா
சக்தி பெண்ணில் உள்ளதென்று கைகள் கூப்படா-அந்தச்
சக்தி பூமி வருவதில்லை பெண்கள்தானடா

சக்தி உந்தன் அன்னைகூட பெண்ணேதானடா அவள்
சக்தி யாரும் சொல்லிநீயும் தெரிவதாமோடா
சக்தி ஒன்று தார மானல் துச்சமாகுமா அந்தச்
சக்தி மீண்டும் தாயென்றாகும் நெஞ்சில் வையாடா

வீரமைந்தரும் விலை போன சொந்தங்களும்

துடித்தான் துடித்தது விருத்தன்தானோ
தூயதமிழ் வீரத்தின் தோற்றமன்றோ
அடித்தான் அடித்தவனும் அரசர்தூதோ
அடக்குமுறை அரசாளும் அரக்கர்பேயோ
குடித்தான் குடித்ததென்ன நீரைத்தானோ
கொலைசெய்த தமிழ்மைந்தர் குருதியன்றோ
நடித்தான் நடித்ததுமோர் நாட்டுகூத்தோ
நரபலியென்றே தமிழர் வெட்டுங் கூத்தோ

வடித்தசெங் குருதியுடன் விருத்தன் கண்டும்
வாழுநிலை உணராதார் குருடரன்றோ
குடித்த தமிழுயிர்கள்ஓர் கோடி என்றால்
கொன்றவரை குணமுள்ளேன் என்னலாமோ
படித்தசில பிறவிகளும் பலருமின்னும்
பக்கமெது புரியாமல் பகட்டுக்காடி
பிடித்த பிடி விடமாட்டோம் என்றே ஆடி
பெற்றமண் காசுக்கு விற்றல் நன்றோ

அண்ணனவன் தம்பிகளை நம்பித்தானே
ஆழநெடுங் காடுறைந்து அல்லல்பட்டான்
கண்ணிரண்டை நம்பியவர் கையால் குத்தி
காணாதகுருடரென ஆனாரன்றோ
வெண்ணைதான் திரண்டுவரும் நேரம்பார்த்து
விறகென்று வாழை மடல் வைத்தாரன்றோ
மண்ணாகிப் போனதடா மண்ணின்மீட்சி
மனிதனாடா இல்லைநீ மாக்கள்மேலாம்

மாடிமனை வாழுகின்றான் தமிழர்தம்பி
மனம்தானு முயர்ந்திருக்கும் என்றே தூயோன்
கோடிபணம்கொட்டிப் பொன் பார்த்தே நிற்க
கூட்டிமணல் பொன்னென்று கொடுத்தாரன்றோ
தேடிவரும் பகைமுடித்த தீரர்மைந்தர்
செத்தவுடல் மண் அள்ளிப் போட்டாரன்றோ
பேடிகளாய் பிறந்தவைகள் இமயம்போயும்
பெற்றமனம் சாக்கடையின் புழுக்கள்தானே!

சுதந்திரத் தீயை அணைக்குமோ?

நீரள்ளி ஊற்றி நெருப்பை அணைக்கலாம்
நெஞ்சின் சுதந்திர தீயை அணைக்குமோ
வேரள்ளி வெட்டி மரத்தைச் சாய்க்கலாம்
வீரரைக்கொன்று விடுதலைசாயுமோ
ஊருள்ளே தீயிட்டு உயிரோ டெரிக்கலாம்
உள்ளமெடுத்த உறுதி குலையுமோ
கூருள்ள கத்தி கொடியை அறுக்கலாம்
கொண்ட மனத்திடம் கொள்கை அறுக்குமோ

சேறள்ளிப்பூசிச் சுவரைக் கெடுக்கலாம்
சொல்லிடும் பொய்கள் சுதந்திரம் கொல்லுமோ
பூக்கிள்ளிப்போட்டு அழகைக் கெடுக்கலாம்
பொங்குதமிழ் உரம்கிள்ளிக் குறையுமோ
தேனள்ளிக் கூட்டைச் சிதைத்து அழிக்கலாம்
தீந்தமிழ்காக்கும் சிந்தனைபோகுமோ
போரள்ளி ஓரினம்பாதி புதைக்கலாம்
போய்ச்சுதே யென்றுபுற முதுகாவமோ

வீரத்துணிவு கொண்டே நீயும் வென்றிட
மார்பை நிமிர்த்தி மனத்திடம் கொள்ளடா
போரைவிட்டே யொருநீதிவழி கண்டோர்
போகும் திசையினில் காலைப்பதியடா
சாரமெடுத்தெம்மை சக்தியில்லாதாக்கி
ஊரைப்பறித்திட தூங்கிகிடப்பதோ
நேரே எழுந்தவன் நீசச்செயலினை
நீதிமுன்னே நிறுத்தி நீகேளடா

பெற்றவள், நீயும்மக னெனநிற்கையில்
பிச்சையெடுக்கவும் விட்டுக்கிடப்பதோ
நெற்றியில் பொட்டழிந்தே அவள் கண்களில்
சொட்டென நீர்வர சுற்றித்திரிவியோ
உற்றவழி ஒன்று கண்டுநீயும் அவள்
குற்றுயிர் காத்துகொள்ள வருவியோ
விட்டுஅயர்ந்து இவ்வேளைபடுத்திடில்
வீரசரித்திரம் உன்னைப் பழித்திடும்

வீரம் தருவீரோ?

தேசம்காக்கத் தீயை உண்டு தூரப்பறந்த பறவைகளே
நேசம்கண்டு நிலமும்மீட்க நினைவைத் துறந்த வீரர்களே
வாசம் பூக்கும் மலரைபோல வாழ்வில்கருகிப் போனீரோ
பாசத்தாலே கண்ணீர்விட்டுக் பாடிக்கேட்டோம் வாருங்களே

ஊரைதின்று உயிரைத்தின்று உலகத்தட்டில் ஆடுகிறான்
நேரிற்சென்று பாசம் கொண்டோர் நெஞ்சம்போலே பேசுகிறான்
யாரைக் கேட்போம் பாரில் எந்தக் காகம் கூடஎம்துன்பம்
நேரக்காணும்நிலையைப் பார்த்து நெஞ்சம்கரையக் காணோமே

வாரிகொண்டே ஈழம்வந்து வைத்தது போலே அள்ளுகிறான்
பூரிப்போடு கந்தன் கோவில் போயோர் காவடி தூக்குகிறான்
ஆரும் அறியா துறவிச்சிலையொன் றருகில் வைத்தே மீளுகிறான்
கூரைக் கொள்வேல் குமரன்நாளை கோவில் விட்டுபோ என்பான்

போரிற் தீயும் அள்ளிப்போக பின்னால்மிஞ்சிப்போனவரை
வேரிற்கூட வெட்டிச்சாய்த்து விறகாய் தீயும் மூட்டுகிறான்
மாரிக்கென்றே ஈசல்மொய்க்கு மதுபோல் எங்கள்ஈழத்தை
நேரில் மொய்த்து நிலமும்கொண்டு நீருக் கெம்மை தள்ளுகிறான்

ஒன்றை யெண்ணி பத்துகூறும் முன்னே பாதிப் பகைநீக்கி
தென்றல் வந்துசேருமுன்னே தீரர் வந்தே சேர்வீரே
குன்றை போலே கோடிப் படைகள் கூடி முன்னே வந்தாலும்
வென்றே விழியும் மூடும் நேரம் வினைகள் தீர்த்து சிரித்தீரே

கண்ணீர் விட்டுக் கதறிகேட்டோம் காற்றில் போன மைந்தர்களே
விண்ணைக்கீறி வீழும் மின்னல் வேகந்தன்னைத் தாரீரோ
மண்ணை விட்டு மானமிழந்து மறுகித் துயரும் கொண்டோமே
எண்ணக் கணமே எதிரியோடிச் செல்லச் செய்வீர் எப்படியோ?

நன்றே எங்கள் நரம்பில் ஊறும் நஞ்சைத் துரோக நினவுகளை
கொன்றே எங்கள் வெளிறிப்போன குருதி சாயம் நிறம் தேட
ஒன்றே நாங்கள் தமிழே என்று ஓங்கிக் கைகள் உயரத்தான்
தென்றல் நாமும்தீரம் கேட்டோம் தேடிப்புயலும் வாரீரோ

வெட்டும் மின்னல் வேகம் வேண்டும் வீரம் வேண்டும் விளையாடி
கொட்டும் இடியாய் கோரப்பசிகொள் குருதிபேய்கள் தனை ஓட்டி
தட்டும் கைகள் ஓசைஎழமுன் தணலாயாக்கி தரைமீட்கும்
வட்டப்புயலின் விந்தைசொல்லிவாழ்த்தி வீரம் தருவீரோ

Friday, April 8, 2011

சிவ சிவ திருவே! சிவந்தது ஏனோ?

சிவ சிவ என்றோம் சிவந்தன மேனி
பவபவ என்றிடப் பாய்ந்தன படைகள்
நமநம என்றோம் நம்மையழித்தார்
இறைஇறை என்றிட இறந்துமே வீழ்ந்தோம்

கரகர என்றிடக் கரமதில் விலங்கும்
சிரபுர என்றிடச் சிரசதும் நீக்கி
தரதரவென்றுமே தரையிலிழுத்து
கொரகொரவென்றே கொலைகள்புரிந்தார்

தொழுதோம் ஆயின் தொலைந்தன வாழ்வு
அழுதோம் ஆயின் அழிந்தன ஊரே
தழுவும் தமிழின் தந்தையென் இறைவா
எழுதும் விதியில் எதைநீ வைத்தாய்

அரசன் என்றொரு அசுரனை வைத்து
சரமென வீழ்ந்திட சடபுட இடியாய்
பறந்தே வானிற் பாவிகள் சுட்டும்
கருக இரசாயனக் குண்டுகள் வீசி

உருவம் அழித்து அருவமுமாக்கி
பெருவெளிவானில் திரி எனவிட்டோர்
குருபரனே இக் கொடியவர் தன்னை
இருஎனக்கூறி எமை யழித்தாயே

கலகல என்றும் களிப்புறு பெண்கள்
மலை மலையென்று மதமெடு ஆண்கள்
தளதள வென்று தவழ்ந்திடு குழந்தை
அழஅழக் கொன்று அழித்தனர் கண்டீர்

கூடியே சுற்றிக் கொலைப்படை சூழ
ஓடியேசென்று உயிர்தனைக் காக்கும்
குழிகளி லோடிக் குழுமிய மாந்தர்
புழுவாய்த் துடித்தே பேச்சுமழிந்து

இறைவா தொழுதே இருவிழிபார்க்க
உறைந்திடநெஞ்சும் உணர்வுமயக்க
கெஞ்சிய முகமும் கூப்பிய கையும்
வஞ்சகர் கண்டும் நெஞ்சமிரங்கா

மண்ணதைமூடி மானிடம்கொல்ல
விண்ணுறைதேவா வெள்ளிடைமலையில்
எண்ணியதென்ன ஏதும்செய்யாப்
புண்ணியபூமி பெருந்தீ  எரிக்க

விட்டது என்ன? கத்திடும் மழலை
தொட்டணை கொள்ளும் தூயவளன்னை
கட்டிளங்காளை கன்னியர் மூதோர்
ஒட்ட நசுக்க உருளும் வண்டி

வா வா சிவனென் றுனையேவணங்கி
நீயே  கதியென்  றழுதோர் தம்மை
காப்பாயென்றே கைதனைக் கூப்ப
சா! போ! என்றே சாற்றி யிருந்தாய்

பூவாய் உடல்கள்  புதைகுழிமூட
நீயோ கண்டும் நெஞ்சம்மிரங்கி
தீதே செய்தோன் தணலாய் எரிய
தீயைச் சொரிகண் திறவாதேனோ

ஆதிசிவாஉன் அருந்தமி ழென்னில்
அழியும் மொழியைக் காப்பதுவிட்டு
போதி மரத்தடி புத்தன் பார்த்து
புதிதாய் ஞானம் பெற்றனைதானோ

வானம் ஏறும் வெய்யோ னன்ன
மானத் தமிழன் மாண்பும்காத்து
ஈன மனத்து இழியோர் கொட்டம்
தானுமடக்கி தனியொரு பெண்ணே

வீதியில் சென்று விடிவது வரையும்
போதிய நகைகள் பொன்னு மணிந்து
ஊரினைச் சுற்றி உறைவிடம் சேரும்
பேரரும்வாழ்வைப் பெற்றுத் தருவான்!

நீதியைநெஞ்சும் நேர்மையைசெயலும்
நினைவில்தமிழும் கொண்டொரு தலைவன்
பாதியில் விட்டுப் பகலவன்போல
போனதை மீண்டும் புலரச் செய்வாய்

அவனே சக்தி அவனே சுடராம்
அவனே வானம் அவனேமண்ணும்
அவனே கடலும் ஆளுமை கொண்டோன்
அவனேவந்தால் ஆகும் (தமி)ழீழம்

Thursday, April 7, 2011

கணினி என்காதலி - வைரஸ் தாக்கவே...

நேற்று நடந்தது நினைவில்லையே இந்த
 நெஞ்சினில் வேதனையே
தோற்றதுபோல் இந்தவாழ்வினிலே துயர்
 தோன்றுது காரணமேன்
ஆற்றியஎன்மன அனுபவ்ங்கள் நீ
 அழித்ததும் ஏன் விதியே!
வேற்றுமனம் கொண்டு விசமெனவே உனை
  வெற்றிடம் ஆக்கியதேன்?

எத்தனைநாள் உனை இன்பமுடன் தொட்டு
  எடுத்தனன் கைகளிலே
அத்தனையும் உன் அழகு முகத்திரை
  அடைந்திடும் வண்ணங்களே!
எத்தனைஆசையும் கொண்டிருந்தேன் -என்
 எதிரினில் சொர்க்கங்களே
நித்திரையும் விட்டு நித்தமும் உன் -எதிர்
 நிற்கையில் இன்பங்களே

இன்று மட்டும் எனை ஏய்த்ததுஏன்  நீ
இல்லை யென்றாகியதேன்
அன்று சொன்ன பல ஆயிரமாம் கதை
அத்தனை மறந்தது ஏன்?
சென்றதெங்கே என்செந்தமிழின் சுவை
சிந்து மின்இதழ்களிலே
நின்ற கதை பலகவிதைகளும் இன்று
சொல்ல நீ மறந்ததும் ஏன்?

கொடுமையடி நான் கொண்டவை -யாவும்
குறைவின்றிக் கொடுத்துவிடு
தொடுகையிலே நீமறைவினில் வைத்ததை
மறுபடி தந்துவிடு
விடுகதையும் அல்ல வேடிக்கையும் அல்ல
வெளியெனக் காட்டிவிடு
தடுப்பது யார் இந்தத் தரணியில் மீளவும்
தரும் சுகம் தந்துவிடு

Sunday, April 3, 2011

வாழத் தெரியலை..!


மண்ணுழுது விதைவிதைத்தேன் மழையைக் காணல்லே
மல்லிகையை நட்டுவைத்தேன் மலரவேயில்லை
கண்விழித்துக் காண நின்றேன் காட்சி தோன்றலை
காலமெல்லாம் காத்திருந்தும் விடியலே இல்லை

எண்ணெழுதிக் கூட்டவந்தேன் எழுதுகோலில்லை
எழுதிவைத்தார் என்கணக்குப் புரியவேயில்லை
தண்ணலைகள் துள்ளி விழும் தாமரை இலை
தங்கியதோர் நீர்த்துளியாய் தவிக்குதே நிலை

திங்களிலே ஆசைகொண்டேன் தேய்ந் தமாவாசை
தேடிவிளக்கேற்றி வைத்தேன் தென்றல் விடவில்லை
சங்கத்தமிழ் பாட்டெழுத சந்தம் வரவில்லை
சாத்திரமும்கேட்க சொன்னார் சனியன் ஏழரை

தங்கத்திலே தாலிசெய்தேன் தாங்கப் பெண்ணில்லை
தாரணியில் தேடிநின்றேன் தகுந்த தாயில்லை
நங்கை யொன்று கண்டு சொன்னேன் நானும் காதலை
நாணமுடன் காதில் சொன்னாள் நான்கு தாய், பிள்ளை

தெய்வமெண்ணி கோவில்சென்றேன் திறக்கவேயில்லை
தேவஇசை பாடி நின்றேன் தாளும் விலகல்லை
பொய்யெனவே திரும்பிவந்தேன் பேய்கள் விடவில்லை
பேரரசுஆட்சி கண்டேன் பேச மொழியில்லை

என்ன செய்வேன் வந்துவிட்டேன் இந்த உலகிலே
எப்படியோ வாழ்வதென்று இருந்த போதிலே
கண்ணிரண்டும் கட்டி நடுக் காட்டு வழியிலே
காரிருளில் விட்டதுபோல் வாழ்வு புரியல்லே

Saturday, April 2, 2011

சக்தியே! சஞ்சலம் தீர்!

உலவும்காற்றும் உயிரும்கொண்ட உறவைத் தந்தவளே
நிலவும் உள்ளத் துயரைப் போக்கி நிம்மதி தாராயோ
பலதும் மனதில் கொடியாய் தோன்றிப் படரச்செய்பவளே
பாசம் படரும் மனதில் என்றும் பசுமை தாராயோ

வளமும் வாழ்வும் மனிதன்கொண்டே வளரச்செய்பவளே
வந்தேன் உன்னை வணங்கிக் கேட்டேன் வசந்தம் தாராயோ
களமும் கனவும் கையில் இன்று காணோம் எனவாக
காற்றும்கூடப் பகையென்றாகிக் கண்ணீர் சொரியுதடி

தினமும் எண்ணம் கருகித் துன்பம் தெரியும் வாழ்வென்றே
தேனில் விழுந்த தீயோர் நஞ்சாய் தேகம் குலையுதடி
மனமும்கோணி மகிழ்வும்நாணி மாற்றம் வேண்டியொரு
மழையைத் தேடும் கழனிப் பயிராய் மறுகிக்கிடப்பேனோ

உலகின்சக்தி உயிரின் சக்தி ஓளியின் சக்தியெனும்
உள்ளத்திண்மை உள்ளேதருவாய் உள்ளம் இரங்காயோ
பலதும்பாடிக் கவியென்றாக்கும் பண்பைத் தந்தவளே
பாரில் இன்னும் பலநூறெண்ணும் பலமும் தாராயோ

நோயும் பிணியும் நிற்காதெந்தன் நினைவில் மகிழ்வோங்கி
நீயும் சக்தி நிறைவைத் தந்து நெஞ்சில் கவியோங்கி
பாயும்நதியாய் பொங்கும் வெள்ளப் பாங்காய் பலநூறு
பாவும் புனையக் காதில்வந்து பாடிச்செல்லாயோ!

Friday, April 1, 2011

கனிந்துவிடக் கனவு கண்டேன்


நள்ளிரவுநேரம் நான் தூங்கும்வேளை
நல்லதோர் கனவொன்று கண்டேன்
துள்ளிவரும் ஓடை நீரலைகளோடு
தூயதொரு தேசமும் கண்டேன்
வெள்ளியொடு வானில் விளையாடுமேகம்
வெண்ணிலவைக் கண்மறைத்துஓட
அள்ளி மலர்வாசம் அணைகின்ற தென்றல்
அதனோடு சுகம் கண்டு நின்றேன்
 

தெள்ளமுது உண்ணத் தேனிலவைக் கண்டு
தாவென்று கைநீட்டும் பிள்ளை
வெள்ளிமதி நீரில் வீழ்ந்ததென ஓடை
விரல் காட்டி அமுதூட்டும் அன்னை
கொள்ளிஎன ஒளிரும் குறுகுறுத்த விழிகள்
கொண்டசில நங்கையரும் கண்டேன்
எள்ளளவும் அச்சம் இல்லாத பெண்கள்
இள நகைத்துத் தமிழ்பேசக் கேட்டேன்
 
மல்லிகையின் வாசம் மனங்கிறங்கும் நேரம்
மனைகூடி மாதர் துணையோடு
அல்லிமலர் பொய்கை அதனோரம் நின்று
ஆடவரும் கூடிமகிழ்வாகி
துல்லிய வெண்ணொளியில் தூயமனங்காணும்
துயரற்ற வாழ்விருக்கக் கண்டேன்
நல்லிதயங் கொண்டு நல்லவர்கள் வாழ
நாடு மலர்ந்தான விதம் கண்டேன்
 
வல்லபடை யில்லை வாகனங்களில்லை
வார்த்தைகளில் செந்தமிழேயன்றி
கொல்லுமொழி இல்லை கூக்குரல்கள் இல்லை
குறைஉயிரின் மரணஒலி இல்லை
சொல்லரிய துன்பம் தருகின்ற ஓசை
சுற்றியேஇடி வீழும் சத்தம்
மெல்ல உயிர் கொல்லும் மனங்கொண்டபீதி
மற்றுமிவை சற்றேனு மில்லை
 
சந்தணமும் பூவும் சேர்ந்த நறுவாசம்
சுந்தரமென் காற்றோடு வீச
முந்திவிழுந் தெங்கோ முடிகோதும் பெண்கள்
மூட்டியநல் அகில்வாசம் மோந்தேன்
சந்திகளில் ஆண்கள் சலசலத்துஓடி
சதிரோடு வலிகொண்டுமோதி
எந்த உடல்வலிது என்று கைநீட்டி
இளமையின் களிப்பாடக் கண்டேன்
 
பந்தங்களில் தீயும் பக்கமெங்கும் ஒளிரப்
பலகோடி வண்டுகளைப் போல
அந்திதனில் கூடும் அங்காடிமக்கள்
அவர்பேசும் ரீங்காரம் கேட்டேன்
செந்தமிழில்பாடிச் சிறுமியொரு நடனம்
செய்கின்ற எழில்வந்து மேவ
ஐந்தாறு பேதை அவளோடுசேர்ந்து
ஆடலிடும் மயில்நடமும் கண்டேன்
 
(அவள் பாடி ஆடுகிறாள்)
 
வெற்றிவந்து சேர்ந்த தெங்கள் வீரநாட்டிலே -விடி
வெள்ளியும் எழுந்த தெங்கள் ஈழவானிலே
சுற்றிநின்ற சிங்க ளங்கள் சோர்ந்து போனதே -மீண்டும்
சூரியன் கிழக் கெழுந்து சோதியானதே
பற்றிநின்ற பகையும்போ யெம் பாவம்தீர்ந்ததே -நானும்
பாடிஆட வென்று நல்ல வாழ்வு வந்ததே
குற்றமற்ற மாந்தர் கொன்ற காலம் போனதே -ஈழ
கொள்கைவென்று வாழ்வு மீண்டும் கூடிவந்ததே
 
வற்றிபோன வாழ்வி லேவ சந்தம்வீசுதே -நாமும்
வைத்தஇலட் சியங்கள் கொள்சு தந்திரத்தையே
பற்றினோம்ப டைகள் வென்று பாகம் கொண்டோமே -எங்கள்
பாசஅன்னை ஈழம்கொண்ட பாடு யாவுமே
அற்று மீண்டும் அன்பு கொள்ளும் தேசமானதே -இன்ப
அலையும்மேவி மகிழ்விலாடும் அழகுநாளிதே
விற்றுவிட்ட தானஎங்கள் வேதனைகளே -அந்த
வீணர்சிங்க ளத்தர் வாங்கி வைத்தார் பாவமே!
 
(திடுக்குறவைத்தது ஒரு சத்தம்)
 
தட்டிக் குலுக்கிடச் சட்டென ஓசையும்
வெட்டி முழக்கிடக் கேட்டேன்
பட்டென நாலு மனிதர் துரத்திட
பக்கம் வளைந்துமே ஓடி
வட்ட மடித்தொரு வாலிபன் ஓடிட
வந்து பிடித்தனர் சுற்றி
தொட்டு நிறுத்திய வீரர் அவனிடம்
சொல்லுநீ யாரெனக் கேட்டார்
 
வல்லமை கொண்ட அவ் வாலிபனோதன்
வாய்தனில் புன்னகை கொண்டு
சொல்லிக் கொடுத்தவன் என்றெனைச் சொல்லுவர்
சுற்றிய நீரறிவீரே
கொல்ல வெனத்தனும் கொண்டு செல்வீரெனில்
கொஞ்சமும் அச்ச மறியேன்
கல்லெனும் நெஞ்சமும் கொண்டவனாம்இதோ
கைகள் விலங்கிடு மென்றான்
 
சுற்றிய வீரரோ செந்தமிழீழச்
சுதந்திர நாட்டினைக் காவல்
நிற்பவர் என்றுமே கண்டே னதன்பின்னே
நேர்வதில் ஆவலும் கொண்டேன்
சற்றுத் திரும்பிய வீரர் இவனையும்
சந்தை நடுவினில் வைத்து
குற்ற மிழைத்தனன் மக்காள் ஈழமது
கொள்கையில் தண்டியு மென்றார்
 
சட்டெனவே சிலர் கூடியவனையும்
சேலை யணிந்திடச் செய்து
கட்டி நின்றதொரு குட்டிக் கழுதையில்
கயவன் ஏறிடவைத்து
விட்டனர் சுற்றியும் வாஎனக்கூறியே
வேடிக்கை செய்ததன் பின்பு
கொட்டிநகைத்துப்பின் கூட்டம் கலைந்திட
விட்டனர் போகவே வீடு
 
தென்ற லினித்தெழ தேன்மழை பெய்த்திட
தீரமெழுந் துடலெங்கும்
இன்ப மெழுந்திட என்நினைவெங்குமே
எத்தனை மங்கலபோதை
அன்பெனும் ஈழஅரசு மலர்ந்தது
அற்புதமே இனிவாழ்வில்
துன்பமதன் பெரும் எல்லையடைந்தனன்
தோன்றியவேதனை போமாம்
 
செந்தமிழீழமே எங்கணுமே
இனி சாவுகள் ஓலங்களில்லை
சுந்தரி பாவையர் கொண்ட விரோதங்கள்
கூக்குரலு மினிஇல்லை
பைந்தமிழ் வீரரெம் மைந்தர்கள் மேனியும்
செங்குருதி நதியோடும்
அந்த நிலைதனும் போனது ஆகா..!
ஆளுமை கொண்டீழம் கண்டோம்

விந்தை மனோநிலை ரம்மியமானது
மேகம்மறை யிருள்நீங்கி
வெந்து சிறைகளில் வேதனை கண்டவர்
வீடுதிரும்பின ராமே
முந்தி எழுந்திடும் புன்னகைமேவும்
முகங்க ளெதிரினில் கண்டேன்
வந்தனமும் எழ வாழியநீயென
சுந்தரகீதம் இசைத்தேன்