Friday, July 20, 2012

கிளியும் நானும் பகுதி 1ம் 2ம் பகுதிகள்

( நீண்ட கவிதை )

1. பாடும் கிளி
ஆடுமிலை யழகும் அந்திவான் செம்மைதனைக்
கூடும் முகில்ஓடக் குருவிகளும் ஆர்ப்பரிக்கத்
தேடும் நிலவெழுந்து தேனாய் ஒளி வார்க்க
பேடுதனை மனதெண்ணிப் பேச்சில் துயரெடுத்து 

தென்னோலை மீதிருந்து தனியே கிளியொன்று
மின்னும் ஓளிநிலவில் மேதினியை இருள்கவர
தன்மனதின் சோகத்தை தழுவிடும் காற்றிடையே
சொன்னவிதம் கண்டேன் சொல்லியதைக் கேள்மின்!
**************************

(கிளி பாடியது) 

சேலைக்குள் மூடிய செங்கரும்பென்றவள்
சேதி யுரைத்திருந்தேன்
மாலையில் பூத்த மலரிவளோ, அல்ல
மஞ்சள் நிலவு என்றேன்
ஆலைக்குள் காணும் அனலிரும்போ எழில்
அள்ளி சிவந்ததென்றேன்
பாலைக்குள் காணும் பசுஞ்சுனையாம் அன்று
பார்த்துளம் காதல் கொண்டேன் 

தோலுக்கு பூசிய சந்தனத்தை ஐயோ
திங்கள் எனப்புகழ்ந்தேன்
காலுக்கு வாய்த்த நடையசைவைத் தோகை
கொண்ட நடனம் என்றேன்
மேலுக்கு மின்னிய பொன்னகைகள் விட
புன்னகை போதுமென்றேன்
ஆலுக்கு கீழ்நின்று அற்புதம் இக்கனி
ஆகா சுவைக்கு தென்றேன் 

வேலுக்குக் ஒத்தவிழி புகழ்ந்தேன் மதி
விற்று பிழைத்திருந்தேன்
பாலுக்கு ஆவலில் பார்த்திருந்த பூனைப்
பக்குவம் கொண்டழிந்தேன்
காலுக்கு மெட்டி அசைந்தவிதம் கண்டு
கற்பனை ஊற்றெடுத்தேன்
நாலுக்கு ஏதுமில்லாதவள் தன்னையே
நாணமின்றி புகழ்ந்தேன் 

மூலைக்குள் வைத்த முழுநிலவோ புவி
மீண்டும் இருள் கொண்டதோ
மாலையிடப் பலிபீட மழைத்தவர்
மாயமென் றானதுவோ
சோலைக்குள் ளேபுயல்சுற்றியதோ உள்ளம்
சோர்ந்து சலித்ததுவே
ஓலையில் கண்டவை கற்பனையோ இவள்
உண்மையில் பெண்ணவளோ? 

******************** 

தூரத்தே நின்று  துயர் கூறும்கிளி பார்த்து
வீரக்கிளியே உன் வாழ்வினிலே கண்டதென்ன
நீரைக் குறுவிழிகள் நேர்வீழு மருவியென
தாரையெனக் கொட்டத் தவித்தழுதல் ஏன் என்றேன் 

ஆக உயர்வானில் அழகனிவன் பறந்தாலும்
போகா இடமெங்கும் புகுந்த மனத்துயராலே
வேக அனலிடையே வீழ்ந்த்புழுவாய் மனது
நோகச் சிறுமை கொண்டேன் நேர்ந்ததென் னறிவீரோ


   கிளியும் நானும்  2. 

     2. காதல் கருவூர்   

துக்கம் குரலடைத்துத்  தோன்றிடச் சிறுகிளியோ
அக்கம் பக்கம் என அயல் பார்த்துத் துடிப்புடனே
திக்குதிசை தெரியாத்  தென்றலென நானலைந்து
சிக்கித்தவித்த கதி சொல்வேன் எனப்பகன்று ,

"பாடிப் பரவசமாய் பார்த்தோரும் கேட்போரும்
நாடி மகிழ்வெய்த நானொன்றும் குயிலல்லத்
தேடிக் கனிதின்று தேகம் வளர்த்தலின்றி
ஆடிக் களிப்புறவும் ஆற்றலுடைத் தல்லேன் யான்

பச்சை நிறம் பார்த்துப்  பாடுங் குயிலை விட
இச்சை வடிவமதை  எடுத்தான் என இயம்பி
உச்‌சப் புகழுமென் இணை பறவையினம் கண்டு
நச்சுக் கர்வமதில்  நானூறிக் கிடந்திட்டேன் 

ஊரில் கண்டதெலாம் உள்ளத்தே கொண்டுகதை
நேரில் பசப்பிடுவேன் நீள்மரத்துக் கிளையிருந்து
பாரிற் பலகுரலில் பக்குவமாய்ப் பேசுமிவன்
சேரில் எவரென்று தெரிந்தே யவர்மொழியில்

கூறி நயமுரைத்துக்  கொண்டதிலே மகிழ்வாகி
ஆறித் திகழும் ஓர் ஆற்றலுடைத்  திருநாளில்
ஏறி வான் பறந்தே எட்டாத்  தொலையுள்ள
சீறிக் கொட்டுமெழில் செல்வம் செழித்துள்ள

நல்ல தோரூர் எண்ணி நான்பறந்த வேளையில்
வல்ல விதியும் வாழ்வின் எனை வெறுத்த
கல்லுள் தேரைக்கும்  உண்ண உணவீயும
அல்லல் அறுத்தாளும் அரனோ எனை வெறுத்து  

போகுமிடம் மாற்றிப்  பூக்கள் மலர்வற்ற
ஆகும் பெரு வேம்பும் அடர்ந்த  முட்புதருடனே
ஏகமுயர் மூங்கில்கள் எழுத்தோர் காடுமென
தாகம் தணி சுனையும் தாமரையும் இல்லாதோர்

பாயும் நதியோடப் பலமீன்கள் துள்ளிவிழ
காயும் நிலம் அருகே கரும்புவயல், தோட்டமுடன்
சாயும் நாணல்களும் சார்ந்தூரும்  அரவமெனப்
போயும் ஒழித்தமரப்  பொந்திடையே கருந்தேளும்

ஆன இடமொன்றை அடைந்தேனாம், அண்டமெனும்
வானத் திடை சுழலும் விந்தையாம்  உலகினிலே
ஏனத் திசைநோக்கி  எனை யிழுத்த தோவிதியும்
மானம் தனையிழக்க மாதவறிழைத் திருந்தேன் " 

கேவிக் கதறியக் கிளியும் நடுநடுங்கி
நாவில் எழுந்தகதை நவின்ற கதை தொடராது
கூவிக் கதறும் நிலை கூடிவிடக் கண்டதனால்
ஆவி துடித்தலறி அமைதிவரை அழட்டுமதில்  

தண்மை மனம் கொள்ளத்  தானாய்த் துயிலுமென
எண்ணி இடம்விட்டு ஏகாந்த மாய் இரவின்
விண்ணும் நிலவொளியும் வீசுமிளங் காற்றிடையே
கண்முன் கிளிஇருக்கக் காலெடுத்து நான் நடந்தேன்

முன்னோர் கால்வைக்க மூடக் கிளியோ உள்
என்னே நினைந்ததனை இசைபடித்த தோஅறியேன்
கன்னம் நீர்வழியக் கரு இருளும் காணுமந்த
முன்னிரவில் கீக் கீ யென் றெண்ணம் இசைத்ததுவாம்


(கிளி பாடியது)

மெல்லிய பஞ்செனும் மேகம் படைத்ததில்
மின்னலை ஏன்கொடுத்தான்
முல்லைசெறி மலர்ப் பந்தலின் மீதிலே
மூடியோர் பாம்பை வைத்தான்
கல்லும் உருகிடும் சேதி கொள்ள எங்கள்
கண்களில் நீர் படைத்தான்
வல்லமை கொண்ட மனங்களிலே கொடும்
வஞ்சனை கோலமிட்டான்

பென்னம் பெரிதென பூமி செய்து அதை
பின்னிச் சுழல வைத்தான்
இன்னுமதில் நடமாடவென மக்கள்
எத்தனையோ படைத்தான்
பொன்னிற் அழகென்னும் மாதர்செய்து ஒரு
போதை விழியில் வைத்தான்
மின்னலென மனம் கொன்றிடக் காதலை
மெல்ல இழையவிட்டான்

சின்னதென பல பூக்கள் செய்து அதில்
தேனை நிரப்பியவன்
தின்னும்சிறு வண்டு தேவை முடிந்ததும்
தென்றலில் ஓடவைத்தான்
இன்னரும் ராகங்கள் தான் படைத்து அதில்
ஏனோ முகாரி வைத்தான்
பொன்னெழில் வண்ணசிலை வடித்து அதைப்
போட்டு உடைக்க வைத்தான்

தண்ணீரில் தாமரை தான்படைத்து மனம்
தாகமெடுக்க வைத்தான்
விண்ணின் கதிருக்கும் வீதி மலருக்கும்
வேடிக்கை காதல் வைத்தான்
மண்ணில் இருப்பது மாயமென்ன? மனம்
மாறும் உணர்வு வைத்தான்
எண்ணி மனங்காவல் கொள்ளவில்லை யெனில்
என்றுமே துன்பம் வைத்தான்

பகுதி 3 ல்தொடரும் ...

No comments:

Post a Comment