Monday, July 23, 2012

ஆசையோடு துள்ளி



குருவியாக சிறகடித்து காற்றின் மீதெழுந்து நானும்
குவலயத்தின் மேல் பறக்க வேண்டும்
அருவியாக மாறவேண்டும் அலைகள் பொங்கி ஆடஅங்கு
அணைக ளின்றிப் பாயு  மின்பம் வேண்டும்
வரும் மனத்தின் உணர்வு எந்தன் வாய்மொழிக்கு ஊறு அற்ற
வகையிலான வாழ்வு கொள்ளவேண்டும்
பருகவென்று தமிழினோடு பால்நிலாவில் உண்ணும் சாற்றில்
பாகுவெல்லம் தேன்கலக்க வேண்டும்

வரிசையென்ன முதலிலில்லை கடையில்நிற்கும் போதுமந்த
வாழ்வில் துன்பமற்ற வேளை வேண்டும்
பெரியதென்ற பயம், எதற்கும் பிணியதென்ற பிறவியற்று
பிள்ளையென்று வாழும் வாழ்க்கை வேண்டும்
கருமையோடு பொய்மை தன்னும் கலந்துசொல் சுதந்திரத்தில்
கயவனல்ல கவிஞனாக வேண்டும்,
உரிமையோடு ஏறிவான மோடும் உள்ளம் வேண்டும்நானும்
இறைவனாகக் கவிபடைக்க வேண்டும் 

அருமையாக நடனமாடு மழகுதோகை வடிவுகொண்டு
ஆட வேண்டு மென்று மாட வேண்டும்
கருமைவண்ணக் காகமொன்று கரையுமோசை வேண்டுமங்கு
கருங் குயில் கள்கானம் சொல்ல வேண்டும்
எருமையொன்று நடுவில்நின்று எனைமுறைத்துப்பார்க்க அங்கு
எழுந்து ஓடும் குறுகுறுப்பு வேண்டும்
ஒருமை என்று எதுவும்இல்லை உறவுவேண்டும் இயற்கைதன்னின்
ஒன்றிக் காதல் கொள்ளும் இன்பம் வேண்டும் 

கருகும்வெப்பம் வேண்டும் காற்றின் குளிர்மைதன்னும் வேண்டும்நல்ல
காட்டுமலர்கள் பூத்துப் பொலியவேண்டும்
முருகு மேன்மை தமிழின் மூச்சு முழுதிருக்க வேண்டும் வாழ்வின்
முடிவு தானும் தமிழ் மணக்கக் காணும்
திருகுதாளம் வேண்டும் கண்கள் தெரியும் பாதைமீது வண்ணத்
தூரிகை கொண்டழகு ஓவியங்கள்
வரம்பு தன்னும் மீறும் இன்ப வடிவுகொண்ட பூவின் வண்ணம்
வந்து  இன்பம் என்று ஆக வேண்டும்

**********************

No comments:

Post a Comment