Monday, August 27, 2012

பிடிக்கல்லை


வாழப்பிடிக்கலைடா தம்பி வாழப்பிடிக்கலைடா
வையகமெங்குமே ஓடித்தரங்கெட்டு வாழப் பிடிக்கலைடா
தாழப்பிடிக்கலைடா தம்பி தாங்கும் மனதில்லடா
ஆழக்கடலிலும் நம்பிக்குதிக்கலாம் ஆட்களைஇல்லையடா
ஏழை துடிக்குதடா தம்பி ஏழ்மை பிடிக்கல்லடா - இந்த
ஏய்ப்பவ ரின்னமும் ஏறியிருக்கிற  ஊரைப்பிடிக்கலைடா
கூழைக் குடித்திடலாம் வாழ்வில்  கூனிக்கிடப்பதிலே
கொஞ்சமுள்ளேமனம் கொள்ளுது இன்பமென்றில்லை வருத்தமடா

வாளைப் பிடிக்கலைடா  தம்பி வாலைப் பிடிக்கலைடா இன்னும்
வாழவைக்குந் தெய்வம் காலைப் பிடித்துமே வாழக்கிடைக்கலைடா
மேள மடிக்கவில்லைத் தம்பி மூச்சுநிறுத்தவில்லை - காட்டில்
மேவி அடுக்கியோர் மேடை விறகினிற் பாயை விரித்தாரடா
தோளை யிழக்கலைடா தம்பி தொட்டதிலங்கலைடா உள்ளத்
தூரிகையால் மனவானில்கிறுக்கிடத் தோன்றுது செந்தணலா
வாழைமரத் திலிடா தீயும் மூளப்பெ ருத்திடுமா -எங்கள்
வாடும்மனதுக்கு வாழும்வழிகாட்டும் வண்ணம் எழுந்திடுமா

மீளப் பரந்திடுமா இன்பம் மெல்லத் தழைத்திடுமா - உள்ள
மேக இடிமின்னல் போலும் உணர்வது ஓடித்தணிந்திடுமா
மாளக்கிடந்தவர்கள் கூடு மெல்லத் திறந்திடுமா அந்த
மாவிற் கனிகொள்ளும் கூவும்குயில்களும் ஓடிப்பறந்திடுமா
சோளம்விளைந்த வயல் நிற்கும் சூரன் வெருளியினால்  - அச்சம்
சூழல்தவிர்ந்தொரு வேளை பயமில்லா வாழ்வு கிடைத்திடுமா
வாழப்பிடிக்குமடா இந்த வாழ்வுமினிக்குமடா - இந்த
வையகம் தன்முறைவாழ்வெடுத்தால் மட்டும் வாழப்பிடிக்குமடா!

No comments:

Post a Comment