Thursday, August 2, 2012

அருள் தேவி அளியாயோ

           

திக்கித் திகிலில் தடுமாறித் திசையும் அறியா வேளையிலெம்
பக்கத் திருநீ சிவசக்தி பார்த்துக் கொள்ளாய் பாவிமனம்
சுக்குத் துளாய் சிதறுங்கல் தேங்காயென் றாக்கும் இன்னல்
புக்கும் போதில் பெருவெள்ளம் போலாகாது புறங்காப்பாய்

மக்கட்செல்வம் மன்னரணி மாதர் மனதும் மகிழ்வாக
செக்கச் சிவந்து வானேறிச் செல்லும் சூர்யப் பார்வையிலே
மொக்கைத் திரளை அவிழ்பூவின் மெதுமையென்றே மனமாகி
அக்கம் பக்கம் அன்பொழுக ஆனந்திக்கும் வாழ்வீ யாய்

தக்கத் துணையே இல்லாது  தானே தோன்றி உலகோடு
உக்கித் தூளாய் இரும்பாக்கும் உப்பைக் கொண்டோர் உடலீதில்
சொக்கித் திகழச் சுகந்தேடிச் சொல்லற் கரிதாய் நலிவாகி
கொக்குத் தவமாய் குறுங்காவல்  கொண்டோம் துன்பம்நீக்காயோ

நக்கத் தேனாய் நம்வாழ்வில் நல்லோ ரின்பம் என்றோடி
சக்கைபோடு போட்டுள்ளம் சரியும் வானைப் போலாகி
மக்கென்றாகி மாயைகளில் மருவும் வண்ணம் மடியும் முன்
எக்கொற்றத்தே இருந்தாலும் எழுந்தேவந்து எமைக் காவாய்!


**********

No comments:

Post a Comment