Saturday, August 4, 2012

நேரமில்லை



நேரமில்லை என்று சொல்ல நேரமில்லை அன்புதோழ
நீயெழுந்து எல்லைபோடவேண்டும்
ஈரமில்லை என்று நெஞ்சில் காணுகின்றதோ விடுத்து
தூரமில்லைநீ நடக்கவேண்டும்
வீரமில்லை என்றுசோர நேரமில்லை அன்புநண்ப
பாரமில்லை தோள் சுமக்க வேண்டும்
யாருமில்லை தேசம்காக்க நின்னையன்றி!  பார்த்திருக்க
நேரமில்லை வாழ்வெடுக்கவேண்டும்

போருமில்லை பூமியில்லை பூவையோடு ஆணுமில்லை
போரெடுத்த வீரமைந்தரில்லை
யாருமில்லை என்றிருக்க நானுமில்லை என்னறெமக்குள்
வாரிமுள்ளை வீசிசெல்ல வேண்டாம்
வேருமில்லை என்று வெட்டும் கோடரிக்கு கைபிடிக்க
கூடிநிற்பதென்று எண்ணிடாதே
தீருமென்று நீயெழுந்து தேசமண்ணைக் காதலித்துத்
தேவை கொள்ளு தூங்க நேரமில்லை

நேரமில்லை என்று சொல்லி நேரமுள்ளை நீநிறுத்த
நேரம்நிற்பதில்லை அங்குஓடும்
தீரமில்லைச் சாரமில்லை செல்வதற்குப்  பாதையில்லை
சேரவில்லை என்று சாட்டுவிட்டு
தூரமுள்ள வானவில்லைப் போலவண்ணம் காட்டி யுந்தன்
சோருமுள்ளம் நீவிடுத்தல் வேண்டும்
ஓரமில்லை நீயும் அஞ்சி ஓடுமெல்லை வாழ்வு விட்டு
ஓர்மையோடு தேசம் மீட்க வேண்டும்

No comments:

Post a Comment