Friday, August 31, 2012

துயரே தினமும்..!

சலசலக்கும் அருவிதரும் சங்கீத ஓசைதனில்
சஞ்சலமே கொள்ளுமனம் சாந்தமுறாதோ
கலகலக்கும் குருவிஇசை காற்றி லெழும்வேளையிலே
காதுவழி சென்றுதுயர் களைந்துவிடாதோ
பலபடித்தும் அறிவதல்ல பட்டவைகள் கற்பதெனும்
பாடமென எண்ணியதை பழகி விடாயோ
குலமழிக்கக் குடியழிக்க குமுறும் கடல்எழுமொருநாள்
கூடிநின்றே தினமழிப்பார் கொடுமைகள் விதியோ?

சிலர் அயலில் சோதியெழும் சில இருட்டுள் தள்ளிவிடும்
செலவிருக்கும் வாழ்விலென்ன சிறிதும்மிஞ்சாதோ
கலவரமும் வாழ்வில்வரும் கலவரமே வாழ்வுஎனில்
காணும்துயர்க்  காட்சிதனை மாற்றுவர் யாரோ
பலர் மலைத்தும்  பலமழிந்தும் பலரலைந்தும் பலரிழந்தும்
பட்டதுயர் மாறவில்லை பாவங்கள் ஏனோ
கலகமதில் கோபுரங்கள்  காணும் மனை தீயழிக்கக்
காப்பவர் யார் நாடகமும் ஒப்பனைதானோ

தலை வரைக்கும் மேலெழுந்து தண்புனலும் மூடுவதாய்
தாவியிடர் ஏறியபின் தன்னிலை யாதோ
மலையளவு துன்பமிடத் மனமுடைய காண் அவலம்
மறுபடியும் மறுபடியும் உயிர்பெறலாமோ
வலைநுழையும் மீன்களென வாரி அவர் கொண்டதெல்லாம்
விதியழிக்கும் கொடுமையென விளைவதுமேனோ
அலைகரங்கள் ஆட்டுவதும் அதிபெரிய கப்பலெனில்
அகம்மலைய உலுப்புவதாம் அதனிலும்பெரிதோ

உலைகொதிக்கும் வாழ்வுதனில் உயிர்கொதியைப் போக்கவென
ஓடுமிடம் எரிமலையின் ஊற்றெனலாமோ
நிலைதளரும் வேளையிலும் நீயிறைவா அன்பு செய்ய
நிகழும் இதம் மகிழ்வுதரும் நிறுத்தியதேனோ
கலைத்தெமையே கூற்றுவனும் கயிறெடுத்தே துரத்துகிறான்
கைப்பிடியில் அகப்படுவர் யார்முதல் தானோ
விலையுங் கொள்ளா வாழ்வுதனில் விலைபெருத்த உயிர்பறிக்க
விடைகொடுப்பர் யாரறியோம் நீயல்ல நானோ


2 comments:

  1. /// தலை வரைக்கும் மேலெழுந்து தண்புனலும் மூடுவதாய்
    தாவியிடர் ஏறியபின் தன்னிலை யாதோ
    மலையளவு துன்பமிடத் மனமுடைய காண் அவலம்
    மறுபடியும் மறுபடியும் உயிர்பெறலாமோ ///

    அருமை...

    ReplyDelete
  2. திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு என்றும் பின் தொடர்ந்து வாழ்த்தும் தங்களுக்கு என் அன்பு வணக்கங்கள்: தங்களுக்கு சூடும் எனது

    வாழ்த்துமாலை


    சொல்லுங்கள் சுவை கொள்ளுங்கள்
    மன அன்புங்கொள் வாழ்த்துக்கள்
    உள்ளங்கள் இனி இன்பங் கொள்ளெனும்
    இச்சைகள் தனைஊட்டும்
    சொல்லுங்கள் சுவை கொண்டெந்தன் மனம்
    என்றுங்கள் உணும் வண்டாய்
    உள்ளின் கள்தனை என்றுங் கொள்மலர்
    என்றுங்கள் மொழிதேடும்

    கன்னங்கள் தனில் செம்மைகள் கொளும்
    கன்னிப் பெண்ணென வானம்
    மின்னும் கல்லெனும் விண்ணின் மீன்களும்
    திங்கள் என் மதிசூழும்
    அன்பென்னுங் களின் வார்த்தைகள் எனை
    ஆகா வானிடை ஏற்றும்
    தென்னங்கள் ளினில்தேங்கும் போதையின்
    வண்ணங்கள் மனம் காணும்

    முதலாவதை இப்படியும் பிரிக்கலாம்

    சொல்லும் ”கள்சுவை” கொள் உங்கள்
    மன அன்புங்கொள் வாழ்த்துக்கள்
    உள்ளம் “கள்ளினிஇன்பம்” கொள் எனும்
    இச்சைகள் தனைஊட்டும்
    சொல்லும் “கள்சுவை” கொண்டெந்தன் மனம்
    என்றும் கள்ளுணும் வண்டாய்
    உள் ”இன்கள்”தனை என்றுங் கொள்மலர்
    என்றும் கள்மொழி தேடும்

    -- அன்புடன் கிரிகாசன்

    ReplyDelete