Saturday, August 11, 2012

உன் அழகில் தொலையும் நான்.



வளைந்த பிறையின்  வடிவொடு நின்றாய்
அலைந்து ஆடும் அழகினில் மயிலாய்
குலைந்த குழலோ குறு வலை போலும்
தொலைந்த மீனும் துடிவிழி யாக

நெரிந்த மனமும் நிகழ்வது சினமும்
விரிந்த கடல்முன் வெறுமையுங் கொண்டு
எரிந்த சுடரும் இறங்கிடும் வேளை
சரிந்த கரையில் சற்றுனைக் கண்டேன்

செறிந்த துயரில்  சிதையுறும் வாழ்வில்
எறிந்த பந்தாய் இனிமைகள் மீட்க
முறிந்த மனதில் மகிழ்வினைக் கூட்ட
அறிந்து தானோ அயலிடை வந்தாய்

எழுந்த அலைகள் இமையென விரியும்
விழுந்து மீண்டும் வியப்புற உயரும்
தழும்பும் நீரும் தாவிடும் நீயும்
அழுந்த மனதில் ஆசையை ஊட்ட

இருகை  நீட்டி இயல்புற ஆடி
விருப்போ டென்னை வீழ்த்தி மகிழ்ந்து
கருகும் மாலை காட்டிய இன்பம்
பருகும் அழகிற் பலவகை நூறாம்

பொறு பொறுவென்னும் அமைதியி னாழம்
பெற நீரலையில் போகுமெம் வேகம்
சிறு தூறல்கள் சேரவுன் மடியில்
மறுகிக் கிடந்தேன் மனதோ மயங்க

பொன்னிற வானம் புதிதோர்காட்சி
தன்னை மறந்து தனிமையில் நானும்
என்னுடை வாழ்வின் இயல்பு துறந்தே
நின்னிடை காணும் நெகிழ்வில் தோற்றேன்

மின்னலில் வானம் மிளிரும் நிலையில்
அன்னமென் றாடும் அலைநீர்க் கரையில்
பொன்னெனும் கூடல் புதுமைப் படகே
உன்சுகம் தன்னில் தொலைந்தேனோ நான்

No comments:

Post a Comment