Friday, August 3, 2012

வானிலோடும் எண்ணம்

( என் கவிதைகளை வாழ்த்தும் இனிய உள்ளங்களுக்காக)

இன்பமென்று துள்ளிஉள்ளம்
ஏறிமேகம் ஓடுதே
என்ன கண்டு தென்றலோடு
ஏழைநெஞ்சு ஆடுதே
பன் நெடுத்த வானவீதி
பால்நிறத்து வீதியில்
பம்பரத்தை ஒத்தகோளின்
பாதைகண்டு ஓடுதே

சின்ன வான வெள்ளியோடு
சேர்ந்து கண்கள் மின்னின
பொன்னெடுத்த  மேனியோடு
போதை வந்து துள்ளின
என்னவோ நினைத்து விண்ணில்
ஏறு  மந்த சூரியன்
தன்னொளிக்கு தாமரைகொள்
தன்மையென்று ஆகுதே

பண்ணிசைக்கும் பாவலர்தம்
பாடல் தந்த இன்பமும்
கண்ணசைத்து ஆடுந்தோகை
காணும் பெண்கள் நாட்டியம்
உண்ணும் பொன்னிழைத்த கிண்ணம்
ஊற்றும் தேன்கனிச் சுவை
எண்ண மொத்தமாக இன்பம்
இன்று நெஞ்சு காணுதே

வெந்த செம்மை கொள்ளிரும்பை
வேண்டி யாரும் கைக்கொள
முந்தியோர் கரும் இரும்பு
மோதியே  வளைத்திடும்
சந்தணத்தின் தூள்களாக
 சற்று மின்னல்பூக்களும்
வந்துவீழும் அன்புதன்னும்
வாழ்மனத்தை மாற்றிடும்

சொல்லும் வார்த்தைப் பூக்குவித்து
சோலையென்று ஆக்கினேன்
நெல்லெனக் கவிச்சரங்கள்
நட்டு நீரும் பாய்ச்சினேன் 
புல்லென முளைக்குமென்று
போய்விழித்துக் காண்கையில்
சொல்லரும் புகழ் குவித்து
சேர்ந்ததங்கு பொன்னடா!

2 comments:

  1. அருமை வரிகள்...
    தொடர வாழ்த்துக்கள்...

    (திரட்டிகளில் தளத்தை இணைக்கவில்லையா..?)

    ReplyDelete
  2. மீண்டும் மிக்க நன்றிகள்!
    திரட்டிகளில் போடவில்லை.இப்போதே இணைய முயற்சிக்கிறேன்.
    நன்றிகள்!

    ***************

    எனது மின்னஞ்சல்
    kanarama7@gmail.com

    ReplyDelete