Saturday, August 11, 2012

வன மங்கை






ஆனந்த மாமழை தூவிடக் காட்டிடை
ஆடி நடந்துசென்றேன் - உயர்
வானமும் தூவிட பூமழை போலெண்ணி
வேடிக்கை யாய் குதித்தேன்
தான தந்தான வென்றே சுதிகூட்டியே
துள்ளிக் குதித்தவனோ - ஒரு
மானின்விழி கொண்ட மங்கை கண்டே
மருண்டோட வியந்துநின்றேன்

பூமுகம்கொண்டவள் பைந்தமிழ் வாணியோ
பொன்னி நதி,கடலோ -நெடும்
பூமரத்தே கொடி யானதுமல்ல விண்
போகும் நிலவுமல்ல
சாமத்திலேவரும் பேயுமல்ல எந்த
சாகச மோகினியோ- கொடுந்
தீமைசெய் சத்துரு வல்லஎனக் கண்டு
தேவதை யார்நீ என்றேன்

கானகத்தே கனிந் தோர்முகம் என்பதைக்
காணத் திகைத்தவனாம் - அட
ஏனவளோ எனைக்கண்டு அப்பாதையில்
இல்லா தொழிந்து கொண்டாள்
மானின் மருள்விழி யோடு நடந்தவள்
மங்கையைக் கண்டேயவள் - ஏனோ
தானிங்கு பெண்தனி யாய்நடை கொள்வது
தக்கதன் றங்குரைத் தேன்

ஏனிங்கு வந்தனை ஏதினை நாடினை
எங்குன தில்லமென்றேன் அவள்
மேனி மறைத்திடக் கொண்ட  துகிலிடை
மேவும் கறைகள் கண்டேன்
நானிங்கு வாழ வழியொன்று தேடியும்
நாடி நடந்தது வந்தேன் -அதில்
வானரங்கு போலக் கண்டே நினையிங்கு
வேதனை கொண்டே னென்றாள்

போ நங்கையே நீயும் பொய்யுரைத் தாயிது
போலொரு செய்கையுண்டோ -இந்தக்
கானகத்தே விலங்கானது கொண்டிட
காண்பதும் வாழ்க்கை யொன்றோ
நீநடந்தே திரிந்தேகையில் எத்தனை
நெஞ்சைப் பிளக்கவென - கண்டு
நின்னுடை மேனி குறிவைத்தே தாவிடும்
நீசவிலங்கு உண்டாம்

பாரிடை வாழும் மனிதர் களைவிடப்
பாசம் இவைகள் என்றாள் -  அங்கு
வாரிக் கிழித்துடல் வஞ்சமுடைத்தன
வாழ்ந்திடும் நாட்டிலென்றாள்
நேரில் மகாபெரும் நீதிவழிகொண்ட
நேர்மையின் காவலர்கள்  - எந்தன்
பேரில் பகையில்லைஆயினும் தொட்டவர்
பேசாக் கொடுமை செய்தார்

காட்டின் விலங்குகள் கண்ணியமுள்ளன
காமவெறி பிடித்தே - மனம்
போட்டியிட்டுப் பல ஆண்விலங்கும்கூடிப்
பெண்ணைக் கெடுப்பதில்லை
மாட்டி விலங்கிட்டு மாறி மாறிச்சுகம்
மங்கையில் காண்பதில்லை - தம்
பாட்டில் நடக்கும் இப்பாவியை கண்டன
பாய்ந்துயிர் கொள்ளவில்லை

மங்கை யெனக்கிந்த காடு அடைக்கலம்
மாமழை கூதலெல்லாம் - அந்தப்
பங்கை யிடும்சதைப் பாவிவெறியரின்
பார்வைக்கு ஏதுமில்லை
சிங்கம் புலி குளுமாடு கரடிகள்
சேர்ந்து வதைப்பதில்லை - இவை
அங்கம் கிழித்துயிர் கொல்லா துடித்திட
ஆனந்தம் கொள்வதில்லை

தங்கள்  எதிரியென் றாற்சினம் கொண்டிடும்
தாக்கி யழித்துவிடும் -  இது
எங்கும் நடக்கும் இம் மங்கைஉயிர் ஒரு
நாளில் மரணம்வெல்லும்
பொங்குஞ் சினங்கொண்டேன் பூமியில் மாந்தர்கள்
போல இம்மாக்க ளில்லை - நல்ல
மங்கையர் கற்பினைக் காப்பதற்கு இந்த
மாவனம் ஒன்றே துணை!

1 comment:

  1. நாடு எந்தளவு மோசமாகி விட்டது என்பதை அருமையான கவிதை மூலம் உணர்த்தி உள்ளீர்கள்..

    தொடர வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete