Thursday, August 2, 2012

விட்டுக் கிடப்பதோ?

வெட்டிய வெட்டுக்கள் தொட்டவர் செய்கையும்
விட்டு மறந்திடுவாயோ - அன்றிப்
பட்டதை எண்ணிடக் கெட்டவரை யெட்டிச்
சட்டையிற் கைபிடிப்பாயோ
கொட்டிட வெம்புனல் கட்டியும் கைகளைச்
சுட்டெரித்த கண்டும்நீயோ - உந்தன்
முட்டிய நீர்விழி முன்னே அழிந்திடப்
பட்ட விதியென்ப தாமோ

சட்டியை தூக்கியுன் மொட்டைத் தலையதில்
வைத்து ஆடிக் களிப்பாயோ - கையும்
விட்டிடத் தொப்பென வீழும் செயலதை
வெற்றியென்றே கத்துவாயோ
மட்டி மடையனென் றெத்தனை தேசங்கள்
பொட்டுடன் பூவும் வைப்பாரோ - அவர்
வெட்டிபயல் இவன் குட்டலாம் என்றிடச்
சட்டையும் விட்டிழிவாயோ

நட்டமும் போனதும் நாமதெனில் அவை
துட்டுக்குப் பேய் மலிவாமோ - அட
வட்டமேசை போட்டுச் சுற்றியிருப்பவர்
சுட்டபொன்னை நிகர்ப்பாரோ
தட்டை யில்லைவட்டப் பூமிசெய்து அண்டம்
விட்டு சுழல் சத்தியாமோ - ஆக
பொட்டை பொடியனாம் இரட்டை விதம் செய்தாள்
விட்டொரு பேதமுண்டாமோ?

நெட்டைப் பனைக்கிடை வட்டுக்குள்ளே ஒளி
சுட்ட வெயில் வருமாமே - அது
கொட்டும்வெயில் கண்டு சுட்டதெனப் பகை
கொண்டு இருந்தவர் நாமே
சொட்டெனும் புத்தியில் பட்டுறைத்தாற் பிழை
விட்டவர் நாமென்னலாமே -அட
தட்டி மண்ணைக் குந்தல் விட்டு எழு - இனிக்
கெட்டதெல்லாம் போகுமாமே

No comments:

Post a Comment