Wednesday, August 29, 2012

ஒரு மலரின் ஆற்றாமை (காற்றை விரும்பிய மலர்)


சித்திரமே சிறுமலர்நான் சிரிக்கக் கூடாதா
செவ்விதழ்கள் புன்னகையை விரிக்கக்கூடாதா
எத்தனைநாள் காத்திருந்தேன் இருள் விலகாதா
எழும் கதிரால் முகை வெடித்தே இளமை கொள்ளாதா
சித்தமெல்லாம் உருகமனம் சிலிர்ப்பெடுக்காதா
சேர்ந்தபனி தூறல் தன்னில் செழுமை கொள்ளேனா
சத்தமில்லா தொட்டுமனம் விட்டவன் மீண்டும்
சங்கதியை கேட்டு மணம் கொள்ள வரானா

ஒற்றையென்றே வாழ்ந்துநிதம் உற்றதே துன்பம்
ஓடிவரும் ஆறுகடல் ஒன்றெனக் கூடும்
குற்றமென்ன நானிளைத்தேன் கொண்டவனின்றி
கோலமலர் குற்றுயிராய் வாழ்ந்தது போதும்
வெற்று மனம்கொண்டு நிதம் வீழ்பனி கூதல்
வெள்ளிநிலா பொன்னொளியில் விளைவது துன்பம்
சுற்றிவரச் சென்றவராம் சுந்தரவாசன்
சொந்தமெனை விட்டு மனம் சென்றது எங்கே?

கற்றவரும் மற்றவரும் கண்களில் காணும்
கண்டவுடன் முகம் மலரும் கடுவினைகூடும்
பற்றியெனை கையிழுத்து பக்கத்தில் சேர்கும்
பழியதனால் உருவழியும் பாதகமாகும்
நெற்றியிலே குங்குமமும் சூடுவர் தன்னும்
நீளமெனைக் குழல் முடித்தே நிம்மதிகொள்ளும்
மற்றவரின் வாழ்வுக்கெனை மாண்டிடவைத்தும்
மனிதசுகம் தருமெனை நீ மறந்தனை ஏனோ

புத்தம்புதுவாழ்வுதனும் புழுதியில் போக
புதுமலரே என்றதெலாம்  போயெழில்வாட
நித்தம் சில வண்டு எனச் சுற்றிடக் காணும்
நின்றெனையே கொள்ள எந்தன் நிம்மதி போகும்
சத்தியமே விட்டு அவை தேனுண்ணக் காணும்
சம்பவமும் முடிந்தபின்னே சடுதியில் ஓட்டம்
இத்தனையும் கொள்ளுமிவள் எத்தனைபாடு
இவ்வுலகில் வாழ்வதற்கு ஏனிந்தக்கேடு

கத்துங்குரல் இன்றி மனம் கலங்கிடுவேனோ
காற்றணைந்து காதல் மணம் கொண்டிடுமாமோ
உத்தமனே உன்கரமும் தொட்டபின் நின்னை
உள்ளமதில் வைத்துநிதம் உருகுவளாமே
நத்தையென ஊரும்கணம் நாளென மாறும்
நானழிந்து போகமுதல் நாட்டினி லோடும்
சத்தியமும் மீறியதோர் சந்தணவாசா
சேர்ந்திடலாம் கூடி மணங் கொள்ள நீவாடா

1 comment:

  1. வித்தியாசமான வரிகள்... தொடர வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete