Friday, August 3, 2012

மீண்டும் துளிர்க்கும் மரங்கள்



போவன முகிலும் இருளும் துயிலும்
புலரும் பொழுதினிலே
ஆவன ஒளியும் விழியும் மலரும்
அழகும் காலையிலே
தாவின அணிலும் கிளியும் கனிகள்
தாங்கிய மரங்களிலே
மேவின மகிழ்வும் இனிமை உணர்வும்
மீண்டும் வாழ்வினிலே

தேய்வது பிறையும் அறமும் நீதி
திரிவது மெய்மையென
காய்வது வெயிலில் நனைந்தோர் பொருளும்
கண்களில் நீரெனவும்
ஓய்வது இலதாய் உயிரும் உடலும்
ஒன்றாய் துடித்திருந்தோம்
பாய்வது பகையும் நதியும் குருதி
பலரின் உயிர்களென

ஏனது என்றே எண்ணிச் சோர்ந்து
இருந்தோர் வாழ்வினிலே
போனது பொய்யும் திமிரும் கருமை
புன்மை செயலெனவே
வானது மீதில் தெரிதே ஒளியும்
வருதே வசந்தமென
காணுது மீண்டும் துளிர்கள் வாழ்வுக்
கேங்கும் மரங்களிலே !

********************

No comments:

Post a Comment