Friday, August 10, 2012

பித்தனின் பக்தன் யான்!

மந்திர மோமணி மாமகுடம் கொண்ட
மன்னவன் தானுமில்லை -சுடும்
வெந்த வெயிலிடை வீடுமில்லை வெறும்
வெட்டவெளி யிருக்கை -அன்று
வந்து பாட்டிகுழல்  புட்டவிக்கத் தின்று
வைத்தனனாம்   அடியைத்  -  அதைத்
தந்துமுயிர்களைத் தாரணியில் அடி
தாங்கிடச் செய்வன் பிள்ளை

பாம்பை எடுத்தவன் பட்டாடை விட்டுமே
பாதியுடல் மறைத்து - அட
தாம்தும் தரிகட தோமென ஆடியே
துள்ளித் திரிபவன்மேல்
போம் வழியில் ஒரு பித்தன் சுவைத்துபின்
பொல்லாத தூட்டிவிட்ட - அந்த
வேம்பின்  சுவைகொள்ள வீண் உணவை தந்த
வேடனை ஒத்தநிலை

பித்தனைப் போலொரு பக்தனிவனும்   சே,,
பென்னம் பெரிது இல்லை - உள்ளே
சுத்தமென மனம் கொண்டிருப்பின் அதைச்
சொல்லும் உரைப்பதில்லை
கத்தும் மொழியினில் கர்வமில்லை உயிர்
கட்டையில் நிற்பதில்லை - 

செத்தும் விழும்வரை சந்தனம்பூசிநல்
அத்தர் தெளிப்பதில்லை’

நாறும் உடலுக்கு நாயைவிட பெரும்
நல்ல குணங்கள் இல்லை
சோறு கொள்ள வில்லை யாயின் நடந்திடச்
சொட்டும் தகுதியில்லை
ஏறும் உயரம்பொன் னாடை சிங்காசனம்
ஏதும் செழிப்பதில்லை
நீறென்றா கும்வரை வாழும் புழுக்கொண்ட
நீள்குடல் எம்மில் குறை

காலைக் கடன்களில் காணும் காட்சிகண்டு
கண்கள் விழிப்பதில்லை
கோல முகத்தினில் எச்சில் வழிந்திடக்
கொண்ட உணர்வுமில்லை
காலம் முடிந்திடக் காகம் இழுத்துண்ணும்
யாக்கையில் இரத்தம்சதை
நாளும் நாலுபோக நாறும் சதைதன்னில்
நாம் கொள்ளும் வீண்அகந்தை

காலில் விழுந்தவன் எப்பவும் கௌரவம்
கெட்ட மனிதனில்லை
தோலின் நிறம்வெள்ளை தூய்மை கருமையின்
தோற்றம் அழுக்குமில்லை
வேலிபல வைத்த வாழ்வினில் தெய்வமும்
வைத்தது வேறு எல்லை
நாலும் நாலும் அதைக் கூட்ட எட்டுவரும்
நம்ம கணக்குப் பிழை

2 comments:

  1. நல்ல வரிகள்... முடிவில் அருமை... நன்றி...

    ReplyDelete
  2. தங்கள் விலைமதிப்பற்ற பாரட்டுக்களும் , இன்னும் தங்கள் போலும் சான்றோரிடமிருந்து கிடைக்கும்
    பாராட்டு “மாலைகள் தோளில் விழும்போது” நான் துளிர் விட்டு வளர்கிறேன்........நன்றிகள் கோடி.!!

    ReplyDelete